Flash News

Flash News அன்பார்ந்த ஆசிரிய பெருமக்களே! இந்த வலை தளத்தில் தொடக்கப் பள்ளி மாணவர்களுக்கு தேவையான அடிப்படை கணித செயல்பாடுகளுக்கான விளையாட்டுகள் மற்றும் ஆங்கில விளையாட்டுகள் தரப் பட்டுள்ளன. அவற்றைக் கண்டு பள்ளிகளில் செயல்படுத்துமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்...01.07.2014 முதல் அகவிலைப்படி 7% உயருகிறது. ...

Monday 15 September 2014

அரசு ஊழியர்கள், தங்கள் குழந்தைகளை எங்கு படிக்கவைக்கிறார்கள்? அரசுப் பள்ளியிலா... தனியார் பள்ளியிலா?

அரசு ஊழியர்கள், தங்கள் குழந்தைகளை எங்கு படிக்கவைக்கிறார்கள்? அரசுப் பள்ளியிலா... தனியார் பள்ளியிலா? இந்தக் கேள்விகளுக்கான பதில் நம் அனைவருக்கும் தெரிந்ததுதான். ஆகப் பெரும்பான்மையான அரசு ஊழியர்கள், தங்கள் குழந்தைகளை தனியார் பள்ளிகளில்தான் படிக்கவைக்கிறார்கள். உச்ச அதிகாரப் பொறுப்பில் இருப்பவர்கள் முதல், கடைநிலை ஊழியர்கள் வரையிலும் பொருந்தும் உண்மை இதுதான்.
முக்கியமாக, அதிகபட்ச ஆசிரியர்கள் 'தனியார் பள்ளி’ பட்டியலில்தான் வருவார்கள். மாணவர் சேர்க்கை நடைபெறும் நேரத்தில், தன் மகனை/மகளை எந்தப் பள்ளியில் சேர்ப்பது என்று அரசுப் பள்ளி ஆசிரியர்கள், பள்ளியில் அமர்ந்தே விவாதிப்பார்கள். பெரும்பாலான சமயம் அவர்களின் எண்ணத்தில், பேச்சில் ஒரு தேர்வாகக்கூட அவர்கள் பணியாற்றும் பள்ளி இருக்காது. தான் பணியாற்றும் பள்ளியின் மீதும், தனது பயிற்றுவிக்கும் திறன் மீதும் அவர்கள் கொண்டிருக்கும் மதிப்பு அவ்வளவுதான்.
அரசு ஆசிரியர்களிடம் சாதாரணமாகப் பேச்சுக் கொடுத்துப் பாருங்கள்... 'அரசுப் பள்ளிகள்ல என்ன இல்லை..? சைக்கிள்ல இருந்து லேப்டாப் வரைக்கும் எல்லாம் இலவசமாத் தர்றாங்க. கட்டணம் கிடையாது. முன்ன மாதிரி இல்ல... இப்ப எல்லா ஸ்கூல்லயும் பெரிய பெரிய கட்டடங்கள் கட்டியாச்சு. ஆசிரியர்கள் பிரமாதமா பாடம் நடத்துறாங்க. வேற என்ன வேணும்? பசங்க படிச்சா மட்டும் போதும்’ என்று புகழ்ந்து தள்ளுவார்கள். அப்புறம் என்ன... அத்தனை பிரமாதமான பள்ளியில் தங்கள் பிள்ளைகளைச் சேர்க்கலாமே!
நம்மில் பலர், அத்தகைய காட்சிகளின் சாட்சிகளாக இருந்துள்ளோம். இளம் வயதில், நாம் படித்த பள்ளியில் ஏதோ ஓர் ஆசிரியரின் மகன், மகள் அதே பள்ளியில் படிப்பார்கள். அவர்கள் பள்ளியில் தன் அப்பாவை 'சார்’ என்றும் 'அப்பா’ என்றும் மாற்றி மாற்றி அழைத்துக் குழம்புவார்கள். மற்ற ஆசிரியர்களுக்கு அவர்கள் மீது கூடுதல் கரிசனம் பொங்கும். இவை பழங்கால மசமசப்பான காட்சிதான் எனினும் முற்றாக அழிந்துவிடவில்லை. இப்போதும் பல ஆசிரியர்கள் இப்படி இருக்கிறார்கள். தன் மகள்/மகனுடன் அவர்கள் பள்ளிக்குச் சென்று வருவது அழகு மட்டும் அல்ல... அதுதான் மிடுக்கு; கம்பீரம். தனது திறமை மீது நம்பிக்கை கொண்டவர்கள் அப்படித்தான் செய்வார்கள். தான் சமைக்கும் உணவின் தரம் சிறந்தது என்று உறுதியாக நம்பும் ஹோட்டல் மாஸ்டர், பக்கத்துக் கடையில் சாப்பிட மாட்டார்.
ஆனால் நுணுக்கி, நுணுக்கிப் பேசும் இத்தகைய தர்க்கங்களை ஆசிரியர்கள் காதுகொடுத்துக் கேட்கவும் தயார் இல்லை. அவர்கள் மிகவும் வெளிப்படையாக, 'சார்... நாங்க அரசாங்கப் பள்ளி ஆசிரியர்கள்தான். அரசாங்கம் தர்ற சம்பளம்தான் வாங்குறோம். அதுக்காக எங்க பிள்ளைங்க வாழ்க்கையில ரிஸ்க் எடுக்க முடியாது. அரசுப் பள்ளிகள் எதுவும் சரியா இல்லைங்கிறது எங்களுக்கே தெரியும். நாங்க ஒருத்தர், ரெண்டு பேர் நினைச்சு இதையெல்லாம் மாத்த முடியாது. மொத்தமா மாறுற வரைக்கும் காத்திருக்கவும் முடியாது. அதனால தனியார் பள்ளியில் படிக்க வைக்கிறதைத் தவிர வேற வழி இல்லை’ என்று பேசுகிறார்கள்.
'ஊராமூட்டு’ பிள்ளைகள் என்றால் 'அரசுப் பள்ளிகள் சூப்பர்’ என்பதும், தன் வீட்டுப் பிள்ளைகளுக்கு என்றால், 'அரசுப் பள்ளிகள் உவ்வே’ எனக் குமட்டுவதும் சரியான அணுகுமுறையா?
இன்னோர் ஆசிரியை, இந்த விஷயத்தை மிகவும் பட்டவர்த்தனமாகப் போட்டு உடைத்தார். 'என் பிள்ளைக்கு என்ன தலையெழுத்தா, இந்தப் பாடாவதி கவர்ன்மென்ட் ஸ்கூல்ல படிக்கணும்னு?’ என்றார். அதாவது 'ஏழைகள் படிக்கத்தான் அரசுப் பள்ளிகள். என்னிடம்தான் பணம் இருக்கிறதே, நான் எதற்கு என் பிள்ளையை அங்கு சேர்க்க வேண்டும்?’ என்பது அவரது சீற்றத்தின் அடிப்படை.
வேலை வேண்டும்; அரசாங்க சம்பளம் வேண்டும்; அரசின் அத்தனை சலுகைகளும் வேண்டும். ஆனால், தங்கள் பிள்ளைகளுக்கு அரசுப் பள்ளி மட்டும் வேண்டாம் என்றால், அது சரியான மனநிலையா? இது ஆசிரியர்களுக்கு மட்டும் அல்ல, அனைத்து அரசு ஊழியர்களுக்கும் பொருந்தும். நாம் ஆசிரியர்கள் பற்றி கூடுதலாகப் பேசக் காரணம், கற்பிப்பவர்களே இப்படி இருக்கிறார்களே என்பதால்தான்.
ஆசிரியர் எப்படி தன் பிள்ளை, அரசுப் பள்ளியில் படிப்பதை விரும்புவது இல்லையோ, அதுபோல ஒரு விவசாயி தன் வாரிசு விவசாயத்தில் ஈடுபடுவதை விரும்புவது இல்லை. இரண்டையும் ஒப்பிட முடியுமா? விவசாயம் நொடித்துவிட்டது; லாபம் இல்லை என்பது நமக்குத் தெரிந்த கதை. பெரும் முதலீடு, கடும் உழைப்பு எல்லாம் செலுத்தியும் போட்ட முதல்கூட கிடைப்பது இல்லை. ஆனால், விவசாயத்துக்கு இடையூறாக இருக்கும் காரணிகளைச் சரிசெய்யும் உரிமையோ, வலிமையோ விவசாயிக்கு இல்லை.

மேட்டூர் அணை வறண்டுவிட்டது என்பதற்காக, நம் ஊர் விவசாயிகள் கர்நாடகாவுக்குச் சென்று காவிரியின் மீதிருக்கும் அணையைத் திறக்க முடியுமா? மழை பெய்யவில்லை என்பதால் மேகங்களைக் குத்தி மழை பெய்யச் செய்ய முடியுமா? அவ்வளவு ஏன்... 'விளைச்சல் குறைவு. ஆகவே, ஒரு கிலோ நெல் 250 ரூபாய்’ என ஒரு விவசாயி தானே விலை நிர்ணயம் செய்யத்தான் முடியுமா? வயல் அவருடையது; உழைப்பும் முதலீடும் விளைச்சலும் அவருடையன. ஆனால், விலை சொல்லும் உரிமை விவசாயிக்கு இல்லை. நிர்ணயிக்கும் உரிமை அல்ல... 'என் நெல் கிலோ இன்ன விலை’ என்று சொல்லும் உரிமைகூட இல்லை.
ஆனால், தனியார் பள்ளிகளில் எல்.கே.ஜி-க்கு எவ்வளவு, எட்டாம் வகுப்புக்கு எவ்வளவு என்பதை அந்தப் பள்ளி முதலாளி இறுதி செய்கிறார். அரசின் கட்டண நிர்ணயக் குழு அதை அங்கீகரிக்கிறது. 'குழு நிர்ணயித்த கட்டணம் போதாது’ என்று அவர்கள் விண்ணப்பித்தால் அதிகரித்தும் தரப்படுகிறது. இந்த முறைப்படியான கட்டணம் போக, எந்த ரசீதும் இல்லாமலும் பிடுங்கப்படும் பணம் தனி.
ஆக, ஆசிரியர் - விவசாயி என்ற இந்த ஒப்பீட்டில் தன் தொழிலுக்கு ஏற்படும் இன்னல்களை தனது சொந்த பலத்தால் சரிசெய்யும் சாத்தியம் விவசாயிடம் இல்லை. ஆசிரியர்கள் அப்படி அல்ல. லகான் அவர்களிடம் இருக்கிறது. அக்கறையுள்ள நான்கு ஆசிரியர்கள் ஒன்று சேர்ந்தால், அந்தப் பள்ளியையே தலைகீழாக மாற்ற முடியும். கற்றல், விளையாட்டு, கலைகள், ஒழுக்கம்... என்று அனைத்து அம்சங்களிலும் மாணவர்களை நெறிப்படுத்த முடியும். அதற்குத் தேவையானவை ஆசிரியர்களின் கடின உழைப்பும், நேர்மறை அணுகுமுறையுமே. அதிகபட்ச ஆசிரியர்களிடம் இவை இல்லை என்பதால்தான் இல்லாத, பொல்லாத காரணங்களை முன்வைத்து, தங்களின் சோம்பேறித்தனத்துக்கு முட்டுக்கொடுக்கிறார்கள்.
'அரசு ஊழியர்கள் அனைவரும் தங்கள் பிள்ளைகளை அரசுப் பள்ளியில்தான் சேர்க்க வேண்டும் என்று சட்டம் இயற்ற வேண்டும்’ என்பது நம் ஊரில் எழுப்பப்படும் நீண்ட நாள் கோரிக்கை. 'அரசு வேலை வேண்டுமா... அரசுப் பள்ளியில் பிள்ளையைப் படிக்கவையுங்கள்’ என்று எதிர்த் திசையில் இருந்துகூட இதைச் செயல்படுத்தலாம். இப்படி ஒரு நிபந்தனை விதிப்பது ஜனநாயக மீறல் அல்ல. அதுதான் ஜனநாயகத்தை அனைவருக்கும் சமதரத்தில் பிரித்து அளிக்கும் ஏற்பாடு. அப்படி இல்லாமல் ஓர் ஊரில் பல வகையான பள்ளிகள் இருப்பதும், அதில் பணக்காரப் பள்ளிகள் சொகுசாக வசதியோடு இருப்பதும் அவர்களுக்கு தரமான கல்வி கிடைப்பதும், அரசுப் பள்ளிகள் ஏழைகளுக்காகவே விதிக்கப்பட்டு அதில் தரமற்ற கல்வித் தரப்படுவதுமாக இருந்தால் இதுதான் ஜனநாயக விரோதம். 'காசு உள்ளவனுக்கு எலைட் பார்; காசு இல்லாதவனுக்கு சாதாரண பார்’ எனக் குடிக்கும் இடத்தில் தரம் பிரிப்பதைப்போல, 
பள்ளியையும் பிரிப்பதுதான் ஜனநாயக மரபா?

ஐரோப்பிய நாடுகள் பலவற்றில் 'அருகாமைப் பள்ளி’ என்கிற முறை அமலில் இருக்கிறது. ஒரு குறிப்பிட்ட பகுதியில் வசிக்கும் மக்கள் அதே பகுதியில் உள்ள குறிப்பிட்ட பள்ளியில்தான் குழந்தைகளைச் சேர்க்க வேண்டும். அமைச்சரின் குழந்தையாக இருந்தாலும், கடைநிலைத் தொழிலாளியின் குழந்தையாக இருந்தாலும் அந்தப் பள்ளியில்தான் படித்தாக வேண்டும். 'நல்ல ஸ்கூல்’ என்று 50 கி.மீ-க்கு அந்தப் பக்கம் உள்ள பள்ளியில் சேர்க்க முடியாது. இந்த முறையின்படி எல்லாப் பள்ளிகளிலும் எல்லா வர்க்கத்துக் குழந்தைகளும் படிப்பார்கள். இதனால் சமதரம் உள்ள கல்வி உறுதிப்படுத்தப்படுகிறது. முக்கியமாக அதிகாரிகள் வீட்டுப் பிள்ளையும் அதே அரசுப் பள்ளியில்தான் படிப்பார்கள் என்பதால், பள்ளியின் தரம் உத்தரவாதப்படுத்தப்படும். இந்த முறையை அரசு கொண்டுவருகிறதோ இல்லையோ... நம் மக்கள், தங்கள் பிள்ளை படிக்கும் பள்ளிக்கு அருகில் வீடு பிடித்துக் குடியேறி, அருகாமைப் பள்ளி என்ற கருத்தாக்கத்துக்குப் புதிய அருஞ்சொற்பொருள் எழுதுகிறார்கள்.
இவை அனைத்தையும் மீறி அரசுப் பள்ளியில் பிள்ளைகளைச் சேர்க்கும் பெற்றோரை உறவுகளும் நண்பர்களும் ஏதோ குற்றம் செய்தவர்களைப்போல பார்க்கிறார்கள். தன் தலைமுறைக்கு துரோகம் இழைப்பவர்கள்போல அவச்சொல்லுக்கு ஆளாக்கப்படுகிறார்கள். கொள்கை அளவில் தனியார் பள்ளிகள் வேண்டாம் என்று முடிவு எடுத்து அரசுப் பள்ளிகளை நாடுவோரை, 'உங்க கொள்கைக்காக பிள்ளையோட எதிர்காலத்தை பணயம் வைக்காதீங்க’ என்கிறார்கள். என்றால் குழந்தைகளின் நிகழ்காலத்தை தனியார் பள்ளிகளில் பணயம் வைக்கலாமா? இதைப் பற்றி கேட்டால், 'இப்ப கஷ்டப்பட்டாதான் எதிர்காலம் நல்லா இருக்கும்’ என்று ஆரூடம் சொல்வார்களே தவிர, நேரடிப் பதில் கிடைக்காது!
இதுபோன்ற தடைகளைத் தகர்த்து தன் பிள்ளையை அரசுப் பள்ளிகளில் சேர்க்க பெற்றோருக்குப் பெரிய மன உறுதி தேவைப்படுகிறது. அப்படி தன் மகனை அரசுப் பள்ளியில் சேர்த்துள்ள விருத்தாசலத்தைச் சேர்ந்த ஒரு வழக்கறிஞரிடம் பேசியபோது, '' 'நீங்க ஒரு வக்கீலா இருந்தும் உங்க பிள்ளையை அரசுப் பள்ளியில் சேர்த்திருப்பது பெரிய விஷயம் சார்’னு அடிக்கடி என்கிட்ட பலர் சொல்றாங்க. கிட்டத்தட்ட என்னைத் தியாகிபோல ஃபீல் பண்ணவைக்கிறாங்க. ஆனா, அதே அரசுப் பள்ளியில் தொழிலாளிகளின் பிள்ளைகளும் படிக்கிறாங்க. அந்தத் தொழிலாளர்களை யாரும் தியாகிகள்னு சொல்றது இல்லை'' என்றார். ஏனென்றால், இங்கு தியாகத்தின் அளவுகோல்கள் மாறிவிட்டன. தியாகம் என்பது இருப்பதை இழப்பது; சுயநலத்தைத் துறப்பது; பொதுநலனை முன்வைத்து இழப்புகளைச் சந்திப்பது. ஆனால், இப்போது திருட்டுத்தனம் செய்யாமல் இருப்பதே தியாகம் என்று ஆகிவிட்டது. ஒரு போலீஸ்காரர் லஞ்சம் வாங்காமல் இருந்தால், அது போற்றுதலுக்கு உரிய பண்பு. அரசியல்வாதி ஊழல் செய்யாமல் இருந்தால், அது ஆச்சர்யப்படவைக்கும் செய்தி. ஏனென்றால், லஞ்சம் வாங்கவும், கொள்ளை அடிக்கவும் வாய்ப்புகள் அவர்களிடம் இருந்தும் அதைப் பயன்படுத்தாமல் இருக்கிறார்களே... ஆகவே அது தியாகம் ஆகிவிடுகிறது!

No comments:

Post a Comment