Flash News

Flash News அன்பார்ந்த ஆசிரிய பெருமக்களே! இந்த வலை தளத்தில் தொடக்கப் பள்ளி மாணவர்களுக்கு தேவையான அடிப்படை கணித செயல்பாடுகளுக்கான விளையாட்டுகள் மற்றும் ஆங்கில விளையாட்டுகள் தரப் பட்டுள்ளன. அவற்றைக் கண்டு பள்ளிகளில் செயல்படுத்துமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்...01.07.2014 முதல் அகவிலைப்படி 7% உயருகிறது. ...

Wednesday, 24 September 2014

தகவல் பெறும் உரிமை சட்டத்தின் கீழ் விண்ணப்பம் செய்பவர்கள், தகவல் கோரும் காரணத்தை கூற தேவை இல்லை


தகவல் பெறும் உரிமை சட்டத்தின் கீழ் விண்ணப்பம் செய்பவர்கள், அந்த தகவல் எந்த காரணத்துக்காக கேட்கப்படுகிறது என்பதை தெரிவிக்க வேண்டும் என்ற தீர்ப்பை சென்னை ஐகோர்ட்டு தாமாக முன்வந்து மாற்றி அமைத்து தீர்ப்பு வழங்கியுள்ளது.
காரணம் தெரிவிக்க வேண்டும்
புதுச்சேரியை சேர்ந்த பி.பாரதி என்பவர் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் கேட்ட தகவல்களை வழங்கும்படி சென்னை ஐகோர்ட்டு நிர்வாகப் பதிவாளருக்கு மத்திய தகவல் உரிமை ஆணையம் உத்தரவிட்டது. இந்த உத்தரவை எதிர்த்து, சென்னை ஐகோர்ட்டில், நிர்வாகப்பதிவாளர் வி.விஜயன் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் என்.பால்வசந்தகுமார், கே.ரவிசந்திரபாபு ஆகியோர் கடந்த 17-ந் தேதி பிறப்பித்த உத்தரவில், ‘தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் விண்ணப்பம் செய்பவர்கள், அந்த தகவல் எதற்காக பெறப்படுகிறது என்ற குறைந்தபட்ச காரணத்தை தெரிவிக்கவேண்டும்’ என்று கூறியிருந்தனர். மேலும், தகவல் பெறும் உரிமை சட்டத்தை தவறான காரணத்துக்கு பயன்படுத்துவதை தடுக்க வேண்டும் என்று கூறி மத்திய தகவல் ஆணையத்தின் உத்தரவை ரத்து செய்து உத்தரவிட்டனர்.
காரணம் தேவையில்லை
இந்த நிலையில், இந்த தீர்ப்பை மறுஆய்வு செய்வதற்கு நீதிபதிகள் தாமாக முன்வந்து முடிவு செய்தனர். பின்னர், அந்த தீர்ப்பை ஆய்வு செய்வதற்காக, வழக்கை மீண்டும் விசாரணைக்கு பட்டியலிடும்படி ஐகோர்ட்டு பதிவுத்துறைக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
இதன்படி, இந்த வழக்கின் தீர்ப்பை மறுஆய்வு செய்து நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது:-
தகவல் பெறும் உரிமை சட்டத்தின் கீழ் தகவல் கேட்டு விண்ணப்பம் செய்பவர்கள், அந்த தகவல் எதற்காக பெறப்படுகிறது என்ற காரணத்தை கூற தேவையில்லை என்று தகவல் பெறும் உரிமை சட்டத்தின் பிரிவு 6(2) கூறுகிறது.
ஆனால், இந்த சட்டப்பிரிவை கவனிக்காமல், கடந்த 17-ந் தேதி நாங்கள் பிறப்பித்த தீர்ப்பில், ‘தகவல் பெறுபவர்கள் எதற்காக அந்த தகவல் பெறப்படுகிறது என்ற குறைந்தபட்ச காரணத்தை கூறவேண்டும்’ என்று குறிப்பிட்டு இருந்தோம்.
நீக்கம்
எங்களது அந்த கருத்து, தகவல் பெறும் உரிமை சட்டத்துக்கு எதிராக உள்ளது. எனவே, எங்களது தீர்ப்பில், தகவல் பெறுபவர், தகவல் எதற்காக பெறப்படுகிறது என்ற காரணத்தை கூறவேண்டும் என்ற வரிகளை ரத்து செய்து, தீர்ப்பை மாற்றி அமைக்கிறோம். இந்த கருத்தை நீக்கிய புதிய தீர்ப்பு நகலை வெளியிடும்படி, ஐகோர்ட்டு பதிவுத்துறைக்கு உத்தரவிடுகிறோம். இவ்வாறு நீதிபதிகள் கூறியுள்ளனர்

No comments:

Post a Comment