ஒரு பெண்ணுக்காக கல்லூரிக்குள் மாணவர்கள் துப்பாக்கி சகிதமாக மோதல்...22 பேர் கைது; சாதிய உணர்வில் மோதிக்கொண்ட சட்டக்கல்லூரி மாணவர்கள் 63 பேர் மீது வழக்கு; ஏ.டி.எம்.,மெஷினில் திருட முயன்ற கல்லூரி மாணவர்கள் 3 பேர் கைது; செயின் பறிப்பில் ஈடுபடும் கல்லூரி மாணவர்கள்; போலீசார் அதிர்ச்சி....இவையெல்லாம், சமீபத்தில் நாளிதழ்களில் வெளியான செய்திகளின் தொகுப்பு; வெளியில் வராத செய்திகள் எத்தனையோ? மதுவுக்கும், கஞ்சாவுக்கும், போதை மருந்துகளுக்கும், ஆபாசப் படங்களுக்கும் அடிமையாகும் பல மாணவர்கள், சமுதாயத்தின் கண்களில் திரைகளைக் கட்டி விட்டு, போடும் ஆட்டம் கொஞ்சமில்லை. என்ன ஆனது இந்த கல்லூரி மாணவர்களுக்கு....?கடந்த ஆண்டில், இலங்கைத்தமிழர் பிரச்னைக்கு தீர்வு காண வலியுறுத்தி, அரசியல் கட்சிகளையெல்லாம் அலற வைத்த அகிம்சைப் போராட்டத்தை முன்னெடுத்த மாணவர்கள் இவர்கள்தானா? புதிய புதிய பொறியியல் கண்டு பிடிப்புகளிலும், பல்வேறு படைப்புகளிலும் அகில இந்தியாவையும் திரும்ப வைக்கும் கோவையின் மாணவ சமுதாயம், ஏன் இப்படி திசை மாறிச் செல்கிறது...கேள்விகள் பல இருக்கலாம்; விடை ஒன்றுதான்...வாழ்க்கை முறை.
பணக்கார மாணவர்கள், பணத்தால் எதையும் வாங்க முடியுமென்று நினைக்கிறார்கள்; ஏழை மாணவர்கள் பலர், பணத்தை அடைய எதையும் செய்யலாம் என்று நினைக்கிறார்கள்; கல்லூரி நிர்வாகங்கள் பலவும், மாணவ, மாணவியரை பணம் காய்க்கும் மரங்களாகவே பார்க்கின்றன; வாழ்வியல், மானுடவியல், சூழலியல், சமூகவியல் சார்ந்த எந்தத் தெளிவான பார்வையும், இன்றைய இளைய தலைமுறையிடம் இல்லை; உலகின் எல்லா விஷயங்களையும், பொருளாதாரப் பார்வையாகவே பார்க்கச் செய்திருப்பதுதான், நமது குடும்பங்கள், கல்வி நிறுவனங்கள், சமூகம் செய்துள்ள ஆகப்பெரிய சாதனை.
மாணவர்களின் வாழ்க்கை முறை மாறிப்போனதற்குக் காரணமென்ன? பெற்றோர்கள் தரும் அதீத சுதந்திரமா?, கல்வி நிறுவனங்களின் கண்காணிப்பின்மையா?, சமுதாயத்தின் தவறான வழி காட்டுதலா? அமுதையும், விஷத்தையும் ஒரே தட்டிலே பரிமாறுகிற தொழில் நுட்ப வளர்ச்சியா? மனம் திறக்கிறார்கள் வாசகர்கள்...
ஒழுக்கம் போற்றப்படுவதில்லை
ஓதிச்சாமி (செல்லப்பம்பாளையம்): சமுதாயத்தில், இளைஞர்களுக்கு நல்ல விஷயங்களை விட தீய விஷயங்களே அதிகமாக கற்பிக்கப்படுகிறது. பள்ளிகளில், வாழ்வியல் பண்புகள் குறித்து சரியாக கற்பிக்கப்படுவதில்லை. சமுதாயத்தில், ஒழுக்கம் நிறைந்தவர்கள் போற்றப்படுவதில்லை. தீய ஒழுக்கம் உள்ளவர்கள் உயர்த்தி பிடிக்கப்படுகின்றனர். இதை பார்க்கும் இளைஞர்களும், தீய வழியில் செல்கின்றனர்.
டிஸ்மிஸ் செய்யணும்
பாலசுப்ரமணியன் (பேரூர், பச்சாபாளையம்): மாணவர்களிடையே வன்முறை ஏற்படும் வகையில் வெளியிலிருந்து தூண்டிவிடுபவர்களை கண்டறிய கல்லூரி நிர்வாகம் தனிக்கண்காணிப்பு குழு அமைத்து தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். டிஸ்மிஸ் போன்ற உறுதியான நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும். அவ்வப்போது பெற்றோர், மாணவர்கள், கல்லூரி நிர்வாகத்தினர் கலந்தாய்வு கூட்டங்களை ஏற்படுத்த வேண்டும்.
அமைதியான சமுதாயம் வேண்டும்
மகேந்திரன் (துடியலூர்): பள்ளிகளில் இருந்த நீதிபோதனை வகுப்புகளை கல்லூரி அளவிலும் வைக்க வேண்டும். அதையும் மீறி தீய செயல்களில் ஈடுபடும் நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க தயங்கக் கூடாது. இதனால் அமைதியான மாணவ சமுதாயம் உருவாகும் என்பதில் சந்தேகமில்லை.
தயக்கம் கூடாது
லட்சுமணசாமி (நரசிம்மநாயக்கன்பாளையம்): மாணவர்களை நல்வழி நடத்த கடுமையான நடவடிக்கைகள் எடுக்க சில கல்லூரி நிர்வாகங்கள் தயக்கம் காட்டுகின்றன. இதனால் மாணவர்கள் தன்னிச்சையான செயல்களில் ஈடுபடுவதால் மாணவ சமுதாயமே பாதிக்கப்படுகிறது. தவறு செய்யும் மாணவர்களின் மீது நடவடிக்கை எடுக்க கல்லூரி நிர்வாகம் தயக்கம் காட்டக்கூடாது.
பொறுமை வேண்டும்
தாமு (நரசிம்மநாயக்கன்பாளையம்): பொதுவாக இக்கால மாணவர்கள் அறிவுத்திறன் மிக்கவர்களாக உள்ளனர். மேலும், அவர்கள் பொறுப்பு உணர்வு மிகுந்தவர்களாக தங்களை மாற்றிக் கொள்ள வேண்டும். பொறுமை, சகிப்புத்தன்மையை கடைபிடிக்க வேண்டும். இளமையின் வேகத்தில் தவறு செய்ய மனம் தூண்டும் போது, அதை கட்டுப்படுத்த பழகி கொள்ள வேண்டும். கல்லூரிகளில் தியானம், யோகா வகுப்புகளை நடத்த வேண்டும்.
தீய நண்பர்களின் சேர்க்கை
வெங்கடகிருஷ்ணன், (மேட்டுப்பாளையம்): கணவன், மனைவி இருவரும் வேலைக்கு சென்று, பணம் சம்பாதிப்பதிலேயே குறிக்கோளாக உள்ளனர். தங்களது குழந்தைகளை கண்டிப்புடன் நல்ல ஒழுக்கமான முறையில் வளர்க்காததால், அவர்களின் வாழ்க்கை திசை மாறுகிறது. டீ குடிக்கச் செல்வது போல், பிராந்திக் கடைக்கு செல்கின்றனர். இது இரண்டாவது காரணமாகும். சமூக சிந்தனையைப் பற்றியும், குடும்பத்தைப் பற்றியும் கண்டுகொள்ளவதில்லை. தீய நண்பர்களுடன் சேர்ந்து, தீயபழக்கத்துக்கு ஆளாகின்றனர்.
நான் தான் "ஹீரோ"
தினேஷ் (மேட்டுப்பாளையம்) : இன்றைய இளைஞர்கள் தன்னை ஒரு "ஹீரோவாக" சித்தரித்து வாழ்கின்றனர். மொபைல் போன், நெட், பேஸ்புக் ஆகியவற்றில் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டு, பணக்காரர் வீட்டுக் குழந்தைகளை போல் மாற்றிக் கொள்கின்றனர். பிறர் மிகைப்படுத்தி பேச வேண்டும் என்பதற்காக, சிறு, சிறு சண்டைகளில் தன்னை ஈடுபடுத்திக் கொள்கின்றனர். வீட்டில் பணத்தை எடுத்து வந்து, தனது காதலிக்கு செலவு செய்யவும், அல்லது நண்பர்களுடன் மது கடைக்கும் செல்கின்றனர். பெற்றோர்களின் வளர்ப்பு சரியில்லாத போது, சமூகம் இந்த தவறுகளை செய்ய வழி வகுக்கிறது.
கஷ்டம் தெரியவேண்டும்
ரவிகுமார் (கோவை): இளம் வயதில் தாங்கள் செய்வதில், நல்லது எது கெட்டது என பகுத்தாய மாணவர்களுக்கு தெரியாது. மாணவர்களை செம்மைப்படுத்துவது பெற்றோர்கள் கையில் உள்ளது. ஆசிரியர்கள் நல்லவற்றை சொல்லித்தர மட்டுமே முடியும். மாணவர்களும் பெற்றோர் படும் கஷ்டத்தை புரிந்து நடக்க வேண்டும்.
பாதை மாறுகிறது
சந்தோஷ் (வெள்ளக்கிணறு): இன்று மாணவர்கள் கெட்டுப்போக பல வழிகள் உள்ளன. புகைபிடித்தல், மது அருந்துதல் உள்ளிட்ட தீய பழக்கங்களுக்கு அடிமையாகி பல மாணவர்கள் தங்களது வாழ்க்கை பாதையை மாற்றிக் கொள்கின்றனர். இதற்கு சட்டங்களும் கடுமையாக இருக்க வேண்டும். ஒவ்வொரு மாணவனும் தங்களது பொறுப்புகளை உணர்ந்து செயல்பட வேண்டும்.
No comments:
Post a Comment