உடுமலை, குடிமங்கலம் ஒன்றியங்களில் பள்ளி செல்லாக் குழந்தைகளின் எண்ணிக்கை குறைந்துள்ளது அனைவரும் கல்வி இயக்க கணக்கெடுப்பில் தெரியவந்துள்ளது.
மாணவர் எண்ணிக்கை குறைவு காரணமாக, ஏராளமான அரசுப்பள்ளிகள் மூடும் நிலை கடந்த ஆண்டு உருவானது. இதைத்தவிர்க்க பள்ளி கல்வித் துறை ஆங்கில வழிக் கல்வி முறை, வளர்ந்து வரும் பள்ளிகளில் மாணவர்களுக்கு தேவையான நவீன வசதிகள், கம்ப்யூட்டர் வகுப்புகள், மாணவர்களின் தனித் திறன் வளர்க்கும் சிறப்பு பயிற்சிகளுக்கு முக்கியத்துவம் அளிப்பது, கட்டாய இலவசக் கல்வியின் முக்கியத்துவம் குறித்து பெற்றோர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவது போன்ற பல்வேறு முயற்சிகளில் இறங்கியது. இதன் பயனாக மாணவர்கள் எண்ணிக்கை அதிகரித்தது மட்டுமின்றி கிராமப்புறங்களில் உள்ள பள்ளி செல்லாக்குழந்தைகள் எண்ணிக்கை குறைந்துள்ளது. அனைத்து மாவட்டங்களிலும் அனைவருக்கும் கல்வி இயக்க ஆசிரியர் பயிற்றுனர்கள் மற்றும் சிறப்பு ஆசிரியர்கள் பள்ளி செல்லாக் குழந்தைகள் கணக்கெடுப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இம்மாதம் இறுதி வரை கணக்கெடுத்து, அக்குழந்தைகளை 2014- 15 கல்வியாண்டில் பள்ளியில் சேர்ப்பதற்கான ஏற்பாடுகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.இந்நிலையில், உடுமலை மற் றும் சுற்றுப்பகுதிகளில் உள்ள கிராமங்களில் கடந்த ஆண்டைக் காட்டிலும், இந்த ஆண்டு பள்ளி செல்லாக் குழந்தைகளின் எண்ணிக்கை குறைந்துள்ளது, இதனால் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை அதிகரிக்கும் என அரசு பள்ளி ஆசிரியர்கள் எதிர்ப்பார்கின்றனர்உடுமலை, குடிமங்கலம் ஒன்றிய பகுதிகளில் நுாற்றுக்கும் மேற்பட்ட துவக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகள் உள்ளன. இங்கு ஐம்பதிற்கும் மேற்பட்ட கிராமங்களிலிருந்து மாணவர்கள் கல்வி பயிலுகின்றனர்.
தங்களின் பகுதிகளிலிருந்து பள்ளி தொலை துாரமாக இருப்பது, பள்ளிகளில் நவீன வசதிகள், கழிப்பறை வகுப்பறை போன்ற அடிப்படை வசதிகள் இல்லாததது என்னும் காரணங்களால் பெற்றோர்கள் தங்களின் குழந்தைகளை அரசு பள்ளிகளில் சேர்க்க தயக்கம் காட்டி வந்தனர். தற்போது கற்பிக்கும் முறையில் மாற்றம், தமிழ் மட்டுமின்றி ஆங்கில வழியில் கல்வி பயில்வது, தொலை துார மாணவர்களுக்கு வாகன வசதி, போன்றவற்றால் பெற்றோர்கள் குழந்தைகளை அரசு பள்ளிகளில் சேர்க்கவே ஆர்வம் காட்டுகின்றனர். கட்டாய இலவச கல்வி திட்டத்தால், பல கிராமங்களில் பெற்றோர்கள் குழந்தைகளை பள்ளிகளில் சேர்த்துள்ளனர். அனைவருக்கும் கல்வி இயக்க ஆசிரியர் பயிற்றுனர் கூறியதாவது: மாணவர்களுக்கு பள்ளிக்கு வரும் ஈடுப்பாட்டினை அதிகரிப்பது, பெற்றோர்களிடத்து குழந்தைகள் கல்வி கற்பதன் முக்கியத்துவத்தை எடுத்துரைப்பது போன்றவற்றில் உடுமலை மற்றும் குடிமங்கலம் பள்ளிகள் தீவிரமாக செயல்பட்டுள்ளது.மேலும், கட்டாய இலவசக் கல்வியின் முக்கியத்துவம் பற்றி, கடந்த இரண்டு ஆண்டுகளாக பெற்றோர்களுக்கு அனைவருக்கும் கல்வி இயக்கம் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறது. இதையடுத்து, பள்ளிகளில் மாணவர்கள் இடை நிற்றல் குறைந்துள்ளது, மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்தும், பள்ளி செல்லாக் குழந்தைகளின் எண்ணிக்கை குறைந்தும் வருகிறது. இன்னும் ஓரிரு ஆண்டுகளில் பள்ளி செல்லாக் குழந்தைகள் இல்லை என்னும் நிலை உருவாகும்.இவ்வாறு அவர் கூறினார்.
No comments:
Post a Comment