Flash News

Flash News அன்பார்ந்த ஆசிரிய பெருமக்களே! இந்த வலை தளத்தில் தொடக்கப் பள்ளி மாணவர்களுக்கு தேவையான அடிப்படை கணித செயல்பாடுகளுக்கான விளையாட்டுகள் மற்றும் ஆங்கில விளையாட்டுகள் தரப் பட்டுள்ளன. அவற்றைக் கண்டு பள்ளிகளில் செயல்படுத்துமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்...01.07.2014 முதல் அகவிலைப்படி 7% உயருகிறது. ...

Saturday, 28 December 2013

தேசிய வருவாய்வழி திறன் தேர்வு : வட்டார அளவில் தேர்வு மையம்

தேசிய வருவாய்வழி மற்றும் திறன் படிப்பு, உதவித்தொகை திட்டத்தில் நடக்க உள்ள, தேர்வில் பங்கேற்கும் மாணவர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க, வட்டார அளவில் தேர்வு மையங்கள் அமைக்கப்பட உள்ளன. மத்திய அரசு, ஆண்டுதோறும், எட்டாம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு, தேசிய அளவில் போட்டி தேர்வை நடத்தி, அதில் தேர்வு பெறும் மாணவ, மாணவியருக்கு, பிளஸ் 2 வரை, நான்கு ஆண்டுகளுக்கு, கல்வி உதவிதொகை வழங்குகிறது. குடும்ப ஆண்டு வருமானம், 1.5 லட்ச ரூபாய்க்குள் உள்ள, எட்டாம் வகுப்பு மாணவர்கள் எழுதலாம். இதில் தேர்ச்சி அடைய, எஸ்.சி.,- எஸ்.டி., மாணவர்கள், 50 சதவீதம்; பிற மாணவர்கள், 55 சதவீதம் மதிப்பெண் பெற வேண்டும். தேர்ச்சி பெற்றவர்களுக்கு, மாதம், 500 ரூபாய் வீதம், நான்கு ஆண்டுகளுக்கு உதவித்தொகை வழங்கப்படுகிறது. இந்த கல்வியாண்டில், பிப்., 22 ல், திறன் தேர்வு நடக்க உள்ளது. இதற்கு, வரும், 28 ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். கடந்த ஆண்டு வரை, மாவட்டத்திற்கு இரண்டு மையங்களே அமைக்கப்பட்டிருந்தன. இந்த ஆண்டு, தேர்வு எழுதும் மாணவர் எண்ணிக்கையை அதிகரிக்க, வட்டார அளவில் தேர்வு மையங்கள் அமைக்கப்பட உள்ளன. தேர்வில் அதிக அளவில் மாணவர்களை பங்கேற்க வைக்க வேண்டும் என, தலைமை ஆசிரியர்களுக்கு, அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

பள்ளிக்கல்வித்துறை நிர்வாக அலுவலர்கள் ஆர்ப்பாட்டம் ஒத்திவைப்பு!

பள்ளிக்கல்வித்துறை நிர்வாக அலுவலர்கள் சங்கம் சார்பில், பள்ளிக்கல்வித்துறை இயக்குநர் அலுவலகத்தில் நேற்று நடப்பதாக இருந்த மாநில அளவிலான ஆர்ப்பாட்டம் அதிகாரிகளின் உறுதிமொழியின் பேரில் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. பள்ளிக்கல்வித்துறை நிர்வாக அலுவலர்கள் சங்கம் சார்பில், மூன்று கட்ட போராட்டங்கள் அறிவிக்கப்பட்டு, கடந்த 11 மற்றும் 13ம் தேதி இரண்டு கட்ட போராட்டங்கள் நிறைவு பெற்றது. நேற்று பள்ளிக்கல்வித்துறை அலுவலகத்தில் நடக்க வேண்டிய மூன்றாம் கட்ட போராட்டம் ஒத்திவைப்பதாக திடீர் அறிவிப்பு வெளியானது.

இதுகுறித்து சங்க மாநிலத்தலைவர் பால்ராஜ் கூறுகையில்,"" இரண்டாம் கட்ட போராட்டத்திற்கு பின், கடந்த 19 மற்றும் 26ம் தேதி கல்வித்துறை அதிகாரிகள் பேச்சுவார்த்தைக்கு அழைத்து பேசினர். இதில், அமைச்சு பணியாளர்களுக்கு இணை இயக்குநர், துணை இயக்குநர் பணியிடங்கள் உருவாக்குவது, இணை இயக்குநர்களுக்கு நேர்முக உதவியாளர் பணியிடங்கள் உருவாக்குதல், ஆறு வருடங்களாக பதவி உயர்வு வழங்கப்படாமல் இருந்த அடிப்படை பணியாளர்களுக்கு பதவி உயர்வு வழங்குதல், அவசர தாபல்களுக்கு போதிய அவகாசம் வழங்குதல் போன்ற கோரிக்கைகளுக்கு உறுதி அளித்துள்ளனர். இதை தொடர்ந்து, மாநில அளவிலான போராட்டத்தை ஒத்திவைத்துள்ளோம்,'' என்றார்.


பணி நிரவலுக்கு பிறகே ஆசிரியர் நியமனம்: தகுதித் தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு, பணியிடம் கிடைப்பதில் சிக்கல்

 உபரி (சர்பிளஸ்) ஆசிரியர்களை பணி நிரவல் செய்த பிறகே, புதிய ஆசிரியர்களை நியமிக்க, கல்வித்துறை திட்டமிட்டுள்ளது. ஆக.,17, 18 தேதிகளில் நடந்த ஆசிரியர் தகுதித்தேர்வில், 27ஆயிரம் பேர் தேர்ச்சி பெற்றனர். "தேர்ச்சி பெற்றவர்கள், மதிப்பெண் அடிப்படையில், பள்ளிகளில் காலியாக உள்ள 15 ஆயிரம் பணியிடங்களில் நிரப்பப்படுவர்' என, தெரிவிக்கப்பட்டது. இதற்கிடையே, அரசு மற்றும் உதவிபெறும் பள்ளி களில், கூடுதலாக உள்ள ஆசிரியர்களை பணிநிரவல் (ஆசிரியர் இல்லாத இடங்களில், உபரி ஆசிரியர்களை நியமித்தல்) செய்த பிறகு, புதிய ஆசிரியர்களை நியமிக்க, கல்வித்துறை திட்டமிட்டுள்ளது. ஆக.,1 மாணவர்களின் வருகைப்பதிவேடு படி, ஆசிரியர் பணியிடம் நிர்ணயிக்கும் பணி நடந்து வருகிறது. விதிமுறைப்படி, ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை, 30 மாணவர்களுக்கு ஒரு ஆசிரியர்; ஆறு முதல் எட்டாம் வகுப்பு வரை, 35 மாணவர்களுக்கு ஒரு ஆசிரியர்; ஒன்பது, பத்தாம் வகுப்புகளில் 160 மாணவர்களுக்கு, ஐந்து ஆசிரியர்களும் இருக்க வேண்டும். ஆனால், பெரும்பாலான பள்ளிகளில் குறைவான மாணவர்களே வருகின்றனர். இதையடுத்து, உபரி ஆசிரியர்கள் பணிநிரவல் செய்யப்பட உள்ளனர்; பணிநிரவலுக்கு பிறகு, காலிப்பணியிடங்களின் எண்ணிக்கை குறையவாய்ப்பு உள்ளது. இதனால், தகுதித் தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு, பணியிடம் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. 
Click Here

நாளை நடைபெறும் தேசிய தகுதி தேர்வில் பார்வையற்றவர்களுக்கு ‘பிரைலி’ முறை வினாத்தாள் வழங்கவேண்டும் ஐகோர்ட்டு உத்தரவு

விரிவுரையாளர் பணியிடத்துக்கு வருகிற 29–ந் தேதி நடைபெறும் தேசிய தகுதி தேர்வின்போது, பார்வையற்றவர்களுக்கு ‘பிரைலி‘ முறை கேள்வித்தாள்களை வழங்கவேண்டும் என்று பல்கலைக்கழகம் மானியக்குழுவுக்கு சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
சென்னை, அயனாவரத்தை சேர்ந்தவர் மிராண்டா டாம்கின்சன். இவர், சென்னை ஐகோர்ட்டில் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:–
தேசிய தகுதி தேர்வு
நான் எம்.ஏ. சமூகவியல் மற்றும் எம்.ஏ. பொதுநிர்வாகம் ஆகிய படிப்புகளில் முதுகலை பட்டங்கள் பெற்றுள்ளேன். கல்லூரி விரிவுரையாளர் பதவிக்காக பல்கலைக்கழக மானியக்குழு (யூ.ஜி.சி.) நடத்தும் தேசிய தகுதி தேர்வு எழுத உள்ளேன்.
நான் பிறக்கும்போதே, கண் பார்வையில்லாமல், காது சரிவர கேட்காமலும் பிறந்தேன். இதனால், ‘பிரைலி‘ முறையில் தயாரிக்கப்பட்ட கேள்வித்தாள் வழங்கினால், தேர்வு எழுத எனக்கு வசதியாக இருக்கும்.
கடந்த ஜூன் மாதம் தேசிய தகுதி தேர்வினை யூ.ஜி.சி நடத்தியபோது, பிரைலி முறையில் தயாரிக்கப்பட்ட கேள்வித்தாள் வழங்கப்படவில்லை. இதனால், நான் தேர்வு எழுத முடியாத நிலை ஏற்பட்டது.
கண்ணியத்துடன் வாழ ஆசை
இதனால் ‘பிரைலி‘ முறை கேள்வி வழங்கும்படி, யூ.ஜி.சி.க்கு பல முறை மனு அனுப்பியும் எந்த பதிலும் இதுவரை வரவில்லை. தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் விண்ணப்பம் செய்தும், பதில் இல்லை.
கண் பார்வை இல்லாமல், காது சரிவர கேட்காமல் இருந்தாலும், விரிவுரையாளர் பணி செய்து, இந்த சமுதாயத்தில் கண்ணியத்துடன் வாழ விரும்புகிறேன். மேலும், மத்திய சமூக நீதித்துறை கடந்த 26–2–2013 அன்று அலுவலக குறிப்பாணை வெளியிட்டுள்ளது.
அதில், தேர்வின்போது மாற்றுத்திறனாளிகளுக்கு தேவையான பிரைலி முறையில் தேர்வு எழுத வசதி செய்து தரவேண்டும். அவர்களுக்கு தேவையான கூடுதல் நேரத்தையும் வழங்கவேண்டும் உள்ளிட்ட நிபந்தனைகளை பிறப்பித்துள்ளது.
அனைவருக்கும் வழங்கவேண்டும்
எனவே வருகிற டிசம்பர் 29–ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) நடைபெறும் தேசிய தகுதி தேர்வில், பிரைலி முறையில் தயாரிக்கப்பட்ட கேள்வித்தாள்களை எனக்கு வழங்க உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டு இருந்தது.
இந்த வழக்கை அவசர வழக்காக எடுத்து நீதிபதி எஸ்.வைத்தியநாதன் நேற்று விசாரித்தார். பின்னர், நீதிபதி பிறப்பித்த இடைக்கால உத்தரவில் கூறியிருப்பதாவது:–
தேசிய தகுதி தேர்வு வருகிற டிசம்பர் 29–ந் தேதி நடைபெற உள்ளது. இந்த தேர்வில் கலந்துக்கொள்ளும் மனுதாரர் மட்டுமல்லாமல், அவரை போல் பார்வை இழந்தவர்களுக்கு ‘பிரைலி‘ முறையில் தயாரிக்கப்பட்ட கேள்வித்தாளை வழங்கவேண்டும் என்று யூ.ஜி.சி.க்கு உத்தரவிடுகிறேன்.
முடிவு வெளியிடக்கூடாது
இதன் மூலம் மனுதாரர் மற்றும் அவரை போன்ற மாற்றுத்திறனாளிகள் எளிதாக தேர்வு எழுத முடியும். ஒருவேளை இந்த வசதியை யூ.ஜி.சி. அதிகாரிகள் செய்து கொடுக்கவில்லை என்றால், அந்த செயல் தேர்வு எழுதுபவர்கள் மத்தியில் பாகுபாட்டை உருவாக்கும் விதமாக உள்ளது என்று தெளிவாகி விடும்.
மாற்றுத்திறனாளிகளின் கஷ்டங்களை அதிகாரிகள் கருத்தில் எடுத்துக் கொண்டு, அவர்களை இங்கும் அங்கும் அலையவிடாமல் தேவையான உதவிகளை செய்துக்கொடுக்கவேண்டும்.
இந்த வழக்கு இறுதிகட்ட விசாரணைக்காக வருகிற ஜனவரி 20–ந் தேதிக்கு தள்ளிவைக்கிறேன். இந்த வழக்கை விசாரணை பைசல் செய்யும்வரை, தேசிய தகுதி தேர்வின் முடிவுகளை வெளியிடாமல், நிறுத்தி வைக்கவேண்டும்.
இவ்வாறு நீதிபதி கூறியுள்ளார்.

500 நடுநிலைப்பள்ளிகளை தரம் உயர்த்த வேண்டும் இடைநிலை கல்வி இயக்ககம் மத்திய அரசுக்கு பரிந்துரை

500 நடுநிலைப்பள்ளிகளை, உயர்நிலைப்பள்ளிகளாக தரம் உயர்த்த வேண்டும் என்று இடைநிலை கல்வி இயக்ககம் மத்திய அரசுக்கு பரிந்துரை செய்ய உள்ளது.
ரூ.177 கோடி ஒதுக்கீடு
பின்தங்கிய ஒன்றியங்களில் மாதிரி பள்ளிகளை தொடங்கும் மத்திய அரசின் திட்டப்படி, தமிழ்நாட்டில் 44 மாதிரி பள்ளிகள் தொடங்கப்பட்டுள்ளன. அதில் 11 பள்ளிகளுக்கு கட்டிடம் கட்டும் பணி முடிந்துவிட்டது. 7 பள்ளிகளுக்கு கட்டிட பணி முடியும் நிலையில் உள்ளது. 2–வது கட்டமாக 26 பள்ளிகளுக்கும், விடுதிகளுக்கும் கட்டிடம் கட்டப்பட உள்ளது.
இதற்காக மத்திய அரசு கொடுத்த நிதியுடன், கட்டிட செலவு அதிகரித்துள்ளதால் மத்திய அரசு கொடுத்த நிதி போக, தேவைப்படும் எஞ்சிய நிதியையும் தமிழக அரசு ஏற்றுள்ளது. அதன்படி ரூ.177 கோடியே 44 லட்சத்தை முதல்–அமைச்சர் ஜெயலலிதா வழங்கி உள்ளதாக கல்வித்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
500 பள்ளிகளை தரம் உயர்த்த
இடைநிலை கல்வி திட்டத்தின்படி வருகிற கல்வி ஆண்டில் 500 நடுநிலைப்பள்ளிகளை, உயர்நிலைப்பள்ளிகளாக தரம் உயர்த்த வேண்டும் என மத்திய அரசுக்கு பரிந்துரை செய்ய உள்ளோம் என்றும் அவர் கூறினார்.

பிளஸ்2, பத்தாம்வகுப்பு பொதுதேர்வுகளில் முறைகேட்டினை தடுக்க புதிய வியூகம் வகுக்கும் தேர்வுத்துறை

இதுவரையிலான தமிழக கல்வித்துறை வரலாற்றிலேயே இல்லாத அளவில் இம்முறை தேர்வுகளில் முறைகேட்டை தடுக்கும் முயற்சியாக பொதுதேர்வுகளுக்குரிய கண்காணிப்பாளர்கள், பறக்கும்படையினரை பள்ளிக்கல்வி இயக்குநர்கள் நேரடியாக சென்னையில் இருந்தே நியமனம் செய்ய உள்ளனர்.
தமிழநாட்டில் பிளஸ்2 மற்றும் பத்தாம்வகுப்பு தேர்வு முறைகளில் ஆண்டுக்கு ஆண்டு தொடர்ந்து புதிய புதிய மாற்றங்கள் செய்யப்பட்டு வருகிறது. இந்த ஆண்டும் கடந்த ஆண்டு ஏற்பட்ட சிறிய அளவிலான முறைகேடுகள் கூட இல்லாமல் நூற்றுக்கு நூறு சதம் எந்தவித பிரச்சினையும் இல்லாமல் தேர்வுகளை முடிக்க தேர்வுத்துறை திட்டமிட்டுள்ளது.
இதன்படி ஒவ்வொரு தேர்வு அறையிலும் 20 மாணவர்கள் மட்டுமே தேர்வு எழுதப்பட வேண்டும். அதற்கு மேல் எக்காரணத்தை கொண்டும் மாணவர்களை ஒரே அறையில் அனுமதிக்கக்கூடாது. உதாரணமாக ஒரு மையத்தில் 105 மாணவர்கள் தேர்வு எழுதிறார்கள் என்றால் 20, 20 ஆக ஐந்து அறைகளிலும் மீதமுள்ள ஐந்து மாணவர்கள் ஒரு அறையிலும் தேர்வு எழுத அனுமதிக்கப்பட வேண்டும்.
மேலும் தேர்வு அறையின் கண்காணிப்பாளர்கள், பறக்கும்படைக்கு தேர்வு செய்யப்படுவோர் ஆகியோரின் பெயர் விவரங்கள் அந்தந்த மாவட்டங்களில் இருந்து இயக்குநர் அலுவலகம் மூலம் பெறப்பட்டு சென்னையில் இருந்து இயக்குநர்களே யார், எந்த பள்ளி, எந்த அறையின் கண்காணிப்பாளர் என தேர்வு செய்து அனுப்புவார்கள். மேலும் பறக்கும் படைக்கு தேர்வு செய்யப்படும் ஆசிரியர்களின் பெயர்பட்டியலையும் சென்னையில் இருந்து இயக்குநர்களே தேர்வு செய்வார்கள்.
இதுவல்லாது விடைத்தாள் திருத்தும் பணிக்கான ஆசிரியர்களையும் இயக்குநர்களே தேர்வு செய்யஉள்ளனர். விடைத்தாள் திருத்துவோர் பட்டியல் இயக்குநர் அலுவலகத்தில் இருந்து வெளியிடப்படும். அப்பட்டியலில் உள்ள ஆசிரியர்கள் விடைத்தாள் திருத்தும் பணிக்கு கட்டாயமாக செல்ல வேண்டும்.
கடந்த ஆண்டு வரை நடத்தப்பட்ட பொதுத்தேர்வுகளில் இருந்து இம்முறை மிகவும் மாறுபட்டு பொதுத்தேர்வுகள் நடத்தப்படும் எனவும் சிறிய அளவில் கூட முறைகேடுகள் நடக்காவண்ணம் நடைமுறைகள் கடைபிடிக்கப்படும் எனவும் தேர்வுகள் துறை தெரிவித்துள்ளது.

விடைத்தாள் திருத்துவதில் தவறு செய்த ஆசிரியர்களுக்கு மெமோ


கடந்த மார்ச் மாதம் நடந்து முடிந்த பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 தேர்வுகளின் விடைத்தாள் திருத்தும் பணி கடந்த ஏப்ரல் மாதம் நடந்தது. மே மாதம் தேர்வு முடிவுகள் வெளியானது. அதில் பல ஆயிரம் மாணவர்கள் தேர்ச்சி பெறவில்லை. இந்நிலையில் விடைத்தாள் நகல் கேட்டு 40 ஆயிரம் மாணவ மாணவியர் விண்ணப்பித்தனர். பலர் சரியான விடைகள் எழுதியிருந்தும் உரிய மதிப்பெண்கள் வழங்காமல் விட்டது விடைத்தாள் நகல் மூலம் தெரியவந்தது. இதையடுத்து 7 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ மாணவியர் மறு மதிப்பீடு செய்ய வும், மறு கூட்டல் செய்யவும் விண்ணப்பித்தனர். அதில் பல மாணவர்களுக்கு அதிபட்சமாக 10 முதல் 25 மதிப்பெண்கள் கிடைத்தன. 

இந்த பணிகள் நடந்து முடிந்து மாணவர்களுக்கு மதிப்பெண் பட்டியல்கள் ஆகஸ்ட் மாதம்தான் கிடைத்தது. அதற்குள் பொறியியல் மற்றும் மருத்துவ படிப்புக்கான முதற்கட்ட கவுன்சலிங் நடந்து முடிந்தன. இதனால் மேற்கண்ட பிரச்னையில் சிக்கிய மாணவ மாணவியர் பாதிக்கப்பட்டனர்.இதையடுத்து குறிப்பிட்ட சில பாடத் தேர்வுக்கான விடைத்தாள்களை திருத்திய சுமார் 110 ஆசிரியர்களை தேர்வுத்துறை அதிகாரிகள் விசாரணைக்காக சென்னைக்கு அழைத்தனர். 24ம் தேதி 50 ஆசிரியர்கள் தேர்வுத்துறைக்கு வந்தனர். அதைத் தொடர்ந்து நேற்றும் 60 ஆசிரியர்கள் தேர்வுத்துறைக்கு வந்தனர். அவர்களிடம் விசாரணை நடந்தது. 

மாணவர்களின் விடைத்தாள்களை எடுத்து வந்து திருத்திய ஆசிரியர்களிடம் காட்டிய தேர்வுத்துறை அதிகாரிகள் அதில் செய்திருந்த தவறுகளை சுட்டிக் காட்டினர். மேலும் எப்படி இது போன்ற தவறுகள் நடந்தது என்றும் கேள்வி எழுப்பியதுடன் ஆசிரியர்களிடம் எழுதி வாங்கினர். இதையடுத்து மேற்கண்ட 110 ஆசிரியகள் மீது நடவடிக்கை எடுக்க பள்ளிக் கல்வி இயக்குநருக்கு பரிந்துரை செய்கின்றனர். அதன் மீது 17பி மெமோ வழங்கப்படும் என்று பள்ளிக் கல்வி வட்டாரங்கள் தெரிவித்தன.

தொடக்க பள்ளி பட்டதாரிகளுக்கும் பதவி உயர்வு வழங்க வேண்டும்


அனை வருக்கும் கல்வி இயக்க வட்டார வள மையங்களில் பணியாற்றும் 47 மேற்பார்வையாளர்கள், 17 ஆசிரியர் பயிற்றுநர்களும் மேல்நிலை பள்ளிகளில் முதுநிலை ஆசிரியர்களாக  மாறுதல் செய்யப்பட உள்ளனர். மேலும், 1.1.13 தேதியில் வெளியிடப்பட்ட தகுதி வாய்ந்தோர் முன்னுரிமைப் பட்டியலில்  இடம் பெற்றுள்ள பட்டதாரி ஆசிரியர்கள் 897 பேருக்கு பதவி உயர்வு இன்று பதவி உயர்வு வழங்கப்படுகிறது. இதுகுறித்து தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்க தலைவர் தியாகராஜன் கூறியதாவது: தொடக்கப் பள்ளிகளில் கடந்த 2004-2005ம் ஆண்டு முதல் 23,000 பட்டதாரி ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டனர். ஆனால் அவர்களுக்கு இதுவரை பதவி உயர்வு என்பதே வழங்கப்படவில்லை. 

இவர்களில் உயர்நிலை பள்ளிகளில் நியமிக்கப்பட்டவர்கள், ஆதிதிராவிடர் நலத்துறை பள்ளிகளில் நியமிக்கப்பட்ட பட்டதாரி ஆசிரியர்களுக்கு முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர்களாக பதவி உயர்வு வழங்கி வருகின்றனர். ஆனால் தொடக்க பள்ளிகளில் நியமிக்கப்படும் பட்டதாரிகளுக்கு பதவி உயர்வே வழங்கப்படாத நிலை உள்ளது. இதை தவிர்க்க, நேரடி நியமனங்கள் செய்யும் போது, 50 சதவீதத்தில் 25 சதவீதம் பேரை தொடக்க பள்ளி பட்டதாரிகளில் இருந்து எடுத்து பதவி உயர்வு வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இன்று நடக்க உள்ள கவுன்சலிங்கில் எங்களுக்கும் வாய்ப்பு அளிக்க வேண்டும்.

மத்திய இடைநிலை கல்வி திட்டத்துக்கு கூடுதல் நிதி


மத்திய அரசின் சார்பில் கடந்த 2009ம் ஆண்டு மத்திய இடைநிலைக் கல்வி திட்டம் (ஆர்எம்எஸ்ஏ) அனைத்து மாநிலங்களிலும் அறிமுகம் செய்யப்பட்டது. இந்த திட்டத்தின் கீழ், 9ம் வகுப்பு ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிப்பது, மாதிரிப் பள்ளிகளை நிறுவுவது, மாணவியர் விடுதிகள் கட்டுவது உள்ளிட்ட பணிகள் நடக்கிறது.இதற்காக மத்திய அரசு 75 சதவீத நிதியும், மாநில அரசுகள் 25 சதவீத நிதியையும் செலவிட வேண்டும். இதற்காக கடந்த ஆண்டு மத்திய அரசு தனது பங்காக ரூ.510 கோடி வழங்கியது.  அத்துடன் மாநில அரசின் பங்கும் இணைத்து மேற்கண்ட பணிகள் தொடங்கப்பட்டன. மாணவியர் தங்கி படிக்க வசதியாக 11 விடுதிகள் ஜவ்வாது மலை, நீலகிரி மலை, கொல்லிமலை உள்ளிட்ட மலைப் பிரதேசங்களில் கட்டப்படுகின்றன.

விலை ஏற்றம் காரணமாக மாநில அரசு கூடுத லாக ரூ.45 கோடியே 44 லட்சம் ஒதுக்கியுள்ளது.அதேபோல தமிழகத்தில் 44 மாதிரிப் பள்ளிகள் கட்டவும் திட்டமிடப்பட்டது. அதில் இரண்டாம் கட்டமாக 26 மாதிரி பள்ளி கள் கட்டும் பணிகள் கடந்த ஆண்டு தொடங்கியது. விலை ஏற்றம் காரணமாக அந்த பணிகள் நின்றன. இதனால் இப்பணிகளுக்காக தமிழக அரசு கூடுதலாக ரூ.57 கோடியே 23 லட்சம் வழங்கியுள்ளது.இதையடுத்து, ஆர்எம்எஸ்ஏ திட்டத்தின் கீழ் வரும் தரம் உயர்த்தப்பட்ட பள்ளிகளில் 1851 கூடுதல் வகுப்பறைகள் கட்ட மாநில அரசு கூடுதல் நிதியாக ரூ.71 கோடியே 18 லட்சம் வழங்கியுள்ளது.

54 ஆயிரம் அங்கன்வாடிகளுக்கு ரூ.15 கோடியில் கல்வி உபகரணம் - தமிழக அரசு உத்தரவு


தமிழகத்தில் 15 கோடி ரூபாய் செலவில் 54,439 அங்கன்வாடி மையங்களுக்கு கல்வி, விளையாட்டு உபகரணங்கள் வாங்க உத்தரவிடப்பட்டுள்ளது. தமிழகத்தில், 49,499 பிரதான அங்கன்வாடி மையங்கள், 4,940 கிளை அங்கன்வாடி மையங்கள் என 54,439 அங்கன்வாடி மையங்கள் செயல்படுகிறது. இதில் 13 லட்சத்திற்கும் மேற்பட்ட 2 வயது முதல் 6 வயது வரையுள்ள குழந்தைகள் கல்வி கற்கின்றனர். அங்கன்வாடி மையங்களில் குழந்தைகளுக்கு விளையாட்டுடன் செயல் வழி கற்றல் முறையில் கல்வி கற்பிக்கப்படுகிறது. ஆனால் பெரும்பாலான மையங்களில் குழந்தைகள் கல்வி, கற்க எவ்வித உபகரணமும் இல்லை. 

சில மையங்களில் இருந்த உபகரணங்கள் பழுதடைந்து விட்டது. தன்னார்வ அமைப்புகளும் அங்கன்வாடி மையங்களுக்கு போதுமான உதவியை வழங்கவில்லை.இந்நிலையில், தமிழக அரசின் ஒருங்கிணைந்த வளர்ச்சி திட்டத்தின் (ஐ.சி.டி.எஸ்) சார்பில் 15 கோடி ரூபாய் செலவில் குழந்தைகள் விளையாட கல்வி, விளையாட்டு உபகரணங்கள் வாங்க உத்தரவிடப்பட்டுள்ளது. பிப்ரவரி முதல் அங்கன்வாடி களில் விளையாட்டு, கல்வி உபகரணங்கள் வழங்கப்படும். சுமார் 20 லட்சம் கல்வி, விளை யாட்டு உபகரணங்கள் வழங்கப்படவுள்ளது.

இதுபற்றி தமிழக ஒருங்கிணைந்த வளர்ச்சி திட்ட பிரிவு அதிகாரிகள் கூறுகையில், ‘‘மரத்தில் தயாரிக்கப்பட்ட காலணி, விலங்கு, பறவை, மரம், சதுரம், வட்டம், முக்கோணம், அறுங்கோண வடிவிலான விளையாட்டு பொருட்கள், பிளாஸ்டிக்கில் கட்டிடம் கட்டுவதற்கான பொருட்கள், கதை சொல்லும் வகையிலான பொம்மைகள் அடங்கிய அட்டை, படக்கதை புத்தகம் போன்றவை பெறப்படும். அங்கன்வாடிகளின் தரம் உயர்த்தப்பட்டதால் வரும் ஆண்டில் குழந்தைகளின் சேர்க்கை சதவீதம் 10 முதல் 15 சதவீதம் அதிகரிக்கும் வாய்ப்புள்ளது. குழந்தைகளின் கற்றல் திறனை மேம்படுத்த தேவையான திட்டங்கள் தயாரிக்கப்பட்டு வருகிறது‘‘ என்றனர்.

Friday, 27 December 2013

ஆதார் அட்டை குழப்பங்கள்: செய்ய வேண்டியது என்ன?- அதிகாரிகள் விளக்கம்

 ஆதார் அட்டை கிடைப்பதில் பல குழப்பங்கள் உள்ளன. இது குறித்த செய்தியை ’தி இந்து’ வெளியிட்டிருந்தது. அதனால் ஆதார் அட்டை பெறுவதில் இருக்கும் குழப்பங்களை மக்கள் தொகை கணக்கெடுப்பு அதிகாரிகள் தெளிவு படுத்தி இருக்கின்றனர்.

பதிவேட்டில் விடுபட்டவர்களுக்கு...
 
          2010-ம் ஆண்டு நடைபெற்ற தேசிய மக்கள் தொகை பதிவேட்டில் (என்.பி.ஆர்) பலர் விடுபட்டுள்ளனர். இதனால் வார்டு அலுவலகம், தாலுகா அலுவலகம் என பல இடங்களுக்கு முதியோர்கள் உட்பட
பலர் அலைக்கழிக்கப்படு கின்றனர். இதனை தவிர்த்து என்.பி.ஆர்-ல் தங்கள் பெயர்களை சேர்க்க வேண்டிய வழிமுறைகள் பற்றி அதிகாரிகள் கூறியதாவது:
 
             என்.பி.ஆர்-ல் பெயர்கள் விடுபட்டவர்களுக்கு தற்போது நடக்கும் முகாம்களில் ஆதார் அட்டை பெற புகைப்படம் எடுக்க முடியாது. ஆனால் இரண்டாம் கட்ட முகாம்களில் புகைப்படம் எடுக்கலாம்.

அதற்கு புதிதாக என்.பி.
ஆர்-ல் பதிவு செய்ய வேண்டும். அதற்கான விண்ணப்பங்களை நகரத்தில் இருப்பவர்கள் மண்டல அலுவலகங்களிலும் கிராமங்களில் இருப்பவர்கள் தாலுகா அலுவலகங்களிலும் பெற்றுக் கொள்ளலாம். விண்ணப்பத்தை பூர்த்தி செய்து மண்டல அல்லது தாலுகா அலுவலகத்திலேயே சமர்ப்பித்து அதற்கான சான்றை பெற்றுக் கொள்ள வேண்டும். பதிவு செய்தவர்களின் தகவல்களை வீடுகளுக்கு வந்து அதிகாரிகள் சரி பார்ப்பார்கள். இந்த தகவல்களின் அடிப்படையில் அடுத்த வருடம் நடக்கும் இரண்டாம் கட்ட முகாம்களில் ஆதார் அட்டையை பெற்றுக் கொள்ளலாம்.
சென்னையில் விரிவாக்கப்பட்ட பகுதியில் இருப்பவர்கள் உட்பட அனைவரும் புதிய மாநகராட்சி மண்டல அலுவலகங்களிலேயே விண்ணப்பங்களை பெற்றுக் கொள்ளலாம்.

பதிவுச் சீட்டை தொலைத்தவர்களுக்கு...
என்.பி.ஆர்-ல் பதிவு செய்திருந்தால் ஆதார் அட்டை கிடைக்கும் என்று 2010-ல் அறிவிக்காததால் பலர் கவனக் குறைவாக என்.பி.ஆர். சீட்டை தொலைத்திருக்கலாம். அது குறித்து அதிகாரிகள் கூறியதாவது:
என்.பி.ஆர். சீட்டில் 33 இலக்கம் கொண்ட எண் இருக்கும். அது பதிவு செய்யப்பட்டவர்கள் வசிக்கும் மாநிலம், மாவட்டம், வார்டு ஆகிய தகவல்களை குறிக்கும். எனவே சீட்டை தொலைத்தவர்கள் தங்கள் அக்கம் பக்கத்தில் வசிப்பவர்களின் சீட்டில் உள்ள எண்ணை குறித்து வைத்து மண்டல அலுவலகத்தில் விசாரித்தால் அவர்களது தகவல்களை மீட்க முடியும். அது மட்டுமல்லாமல் மண்டல அலுவலகங்களில் என்.பி.ஆர் சீட்டின் நகல் இருக்க வேண்டும். அதையும் விசாரித்து பெற்றுக் கொள்ளலாம்.

முகவரி மாறியவர்களுக்கு...
என்.பி.ஆர் பதிவு செய்து மூன்று ஆண்டுகள் ஆகிவிட்டதால் பலர் இடம் பெயர்ந்திருக்கின்றனர். இதனால் என்.பி.ஆர். பதிவு செய்யும்போது ஒரு முகவரியிலும் தற்போது வேறு முகவரியிலும் வசிக்கின்றனர். இவர்கள் என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து அதிகாரிகள் கூறியதாவது:
என்.பி.ஆர். பதிவு செய்யும் போது எந்த முகவரியில் இருந்தார்களோ அந்த பகுதியில் நடக்கும் ஆதார் முகாமுக்கு செல்ல வேண்டும். அங்கு என்.பி.ஆர் பதிவேட்டில் தங்களது பெயர்கள் இருக்கின்றனவா என்று சரி பார்த்துக் கொண்ட பிறகு தங்களது புதிய முகவரிக்கான சான்றை அளிக்க வேண்டும். அதன் பிறகு புதிய முகவரியில் ஆதார் அட்டை வழங்கப்படும்.
தாங்கள் முன்பு வசித்த பகுதிக்கு செல்ல இயலாதவர்கள் மண்டல அலுவலகங்களில் புதிதாக பதிவு செய்வதற்கான விண்ணப்பங்களை பெற்றுக் கொள்ளலாம். அப்படி செய்தால் அவர்களுக்கு முதல் கட்ட முகாம்களில் ஆதார் அட்டை பெற முடியாது.
ஆதார் அட்டை பெற்ற பிறகு அதில் உள்ள பெயர், முகவரி, பிறந்த தேதி, தொலைபேசி எண், பாலினம் ஆகிய தகவல்களில் மாற்றம் ஏற்பட்டால் அதனை திருத்திக் கொள்ளலாம்.
திருத்துவதற்கான விண்ணப் பத்தை ஆன்லைன் மூலமாகவோ அஞ்சல் மூலமாகவோ பெற்றுக் கொள்ளலாம். ஆன்லைனிலேயே தங்களது புதிய அடையாளச் சான்று, முகவரி சான்று, மற்றும் பிறந்த தேதிக்கான சான்றை சமர்ப்பிக்கலாம். அல்லது அஞ்சல் மூலம் பெங்களூருவில் இருக்கும் அலுவலகத்துக்கு

UIDAI Regional Office
Khanija Bhavan
No. 49, 3rd Floor,
South Wing Race Course Road,
Bangalore – 01.
என்ற முகவரியை எழுதி அனுப்பி வைக்கலாம். அதிகாரிகள் தகவல்களை சரி பார்த்த பிறகு ஆதார் அட்டையில் புது தகவல்கள் ஏற்றப்படும்.
இவ்வாறு அதிகாரிகள் விளக்கம் அளித்துள்ளனர்.

REVISED PG TEACHER PANEL AS ON 01.01.2013 FOR ALL SUBJECTS

பான் கார்டு' பெறுவதற்கு இனி "ஆதார்' தகுந்த ஆவணமாகிறது

பான் கார்டு' பெறுவதற்கு, முகவரி மற்றும் அடையாளத்தை நிரூபிப்பதற்கு, ஆதார் கார்டு தகுந்த ஆவணமாக ஏற்கப்படும் என, வருமான வரித்துறை அறிவித்துள்ளது. வருமான வரி கணக்கு தாக்கல் செய்வதற்கு, "பான்' என்ற நிரந்தர கணக்கு எண், வருமான வரித்துறையால் அளிக்கப்படுகிறது. வருமான வரி கணக்கு தாக்கல் செய்யாதவர்களும், இதை வாங்கி வைத்துக்கொள்ள தடையில்லை.
பான் கார்டு பெறுவதற்கு விண்ணப்பிப்பவர், தன் அடையாளம் மற்றும் முகவரியை உறுதி செய்வதற்கு, தாக்கல் செய்யப்பட வேண்டிய ஆவணங்கள் என்ன என்ன என்பதை, வருமான வரி"த்துறை பட்டியலிட்டுள்ளது. இதில், குடும்ப அட்டை, வாக்காளர் அடையாள அட்டை, ஓட்டுனர் உரிமம் உட்பட, ஆவணங்கள் இடம்பெற்றுள்ளன. இதில், "ஆதார் அடையாள அட்டையும், இனிமேல், முகவரி மற்றும் அடையாளத்தை நிரூபிப்பதற்கான, ஆவணமாக ஏற்கப்படும்' என, மத்திய நேரடி வரிகள் வாரியம், வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் குறிப்பிட்டுள்ளது. ஆதார் அடையாள அட்டையில், 12 இலக்க அடையாள எண் குறிப்பிடப்பட்டு இருக்கும். இதை மத்திய அரசின், "இந்திய தனிப்பட்ட அடையாள ஆணையமைப்பு' வழங்குகிறது. இதை பயன்படுத்தி, 10 இலக்க எண் உள்ள, பான் கார்டு பெற முடியும். சமீபத்தில், ரிசர்வ் பாங்க், வங்கி கணக்கு துவக்குவதற்கு, ஆதார் கார்டு தகுந்த ஆதாரமாக ஏற்கப்படும் என, அறிவித்து இருந்தது.

Click Here

ஆசிரியர்களுக்கான ஊதிய விகித அளவை மாற்றக் கோரி வழக்கு: தமிழ்நாடு அனைத்து ஆசிரியர்கள் சங்கத்தின் பொதுச் செயலாளர் சி.கிப்ஸன் உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு விவரம்

கேந்த்ரிய வித்யாலயா பள்ளி இரண்டாம் நிலை ஆசிரியர்களுக்கு இணையாக மற்ற பள்ளி ஆசிரியர்களுக்கும் ஊதிய விகித அளவை மாற்றக் கோரிய மனுவுக்கு பதில் அளிக்குமாறு அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தமிழ்நாடு அனைத்து ஆசிரியர்கள் சங்கத்தின் பொதுச் செயலாளர் சி.கிப்ஸன் உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு விவரம்: மத்திய அரசின் ஆறாவது ஊதியக் குழுவின்படி இரண்டாம் நிலை ஆசிரியர்களுக்கு ரூ. 5,200 முதல் 20 ஆயிரம் வரை ஊதியம் நிர்ணயிக்கப்பட்டது. இதே சம்பளம், அமைச்சக ஊழியர்களுக்கும் வழங்கப்படுகிறது.
இந்த நிலையில், கேந்த்ரிய வித்யாலயா பள்ளியில் பணிபுரியும் இரண்டாம் நிலை ஆசிரியர்கள் ரூ. 9,300 முதல் 34 ஆயிரம் வரை சம்பளம் பெறுகிறார்கள். இது தொடர்பாக அரசுக்கு மனு அளித்தோம். இதன்படி, ஊதிய முரண்பாடு தொடர்பாக விசாரணை செய்ய ஒரு நபர் குழுவை அசு நியமித்தது.
கடந்த 2010-ஆம் ஆண்டு மார்ச் மாதம் அந்தக் குழு அறிக்கை தாக்கல் செய்தது. அதில், "தமிழகத்தில் கேந்த்ரிய வித்யாலயா பள்ளியின் எண்ணிக்கை மிகவும் குறைவாக (1017) உள்ளது. அதே சமயம், மற்ற பள்ளிகளில் பணிபுரியும் இரண்டாம் நிலை ஆசிரியரிகளின் எண்ணிக்கை 1.16 லட்சமாக உள்ளது. ஊதிய விகிதத்தை மாற்றி அமைத்தால் ஆண்டுக்கு ரூ.668 கோடி சுமை ஏற்படும்' என தெரிவிக்கப்பட்டது. இந்த நிலையில், அமைச்சக ஊழியர்களுக்கான ஊதியம் ரூ.9,300 ஆக மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. ஆனால், இரண்டாம் நிலை ஆசிரியர்களுக்கு அந்த ஊதியம் வழங்கப்படவில்லை. எனவே, இரண்டாம் நிலை ஆசிரியர்களுக்கான ஊதிய விகித அளவை மாற்றி அமைக்க அரசுக்கு உத்தரவிட வேண்டும் என மனுவில் கோரப்பட்டது.
இந்த மனு நீதிபதி ஆர்.சுப்பையா முன்பு விசாரணைக்கு வந்தது. மனுவுக்கு இரண்டு வாரத்துக்குள் பதில் அளிக்குமாறு அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப நீதிபதி உத்தரவிட்டார்.

கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம்: 49 ஆயிரம் மாணவர்களுக்கான கட்டணத்தைத் திருப்பி வழங்குவதில் தாமதம்

கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் தமிழகம் முழுவதும் இந்தக் கல்வியாண்டில் தனியார் பள்ளிகளில் சேர்க்கப்பட்ட 49 ஆயிரத்துக்கும் அதிகமான ஏழை, நலிவடைந்த பிரிவு மாணவர்களுக்கான கல்விக் கட்டணம் இதுவரை திருப்பி வழங்கப்படவில்லை.
அரசு அறிவிப்பின்படி, இந்த மாணவர்களுக்கான முதல் தவணை செப்டம்பர் மாதத்திலேயே வழங்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால், டிசம்பர் மாதம் முடியும் நிலையில் இதுவரை கட்டணத்தை அரசு வழங்கவில்லை என தனியார் பள்ளி நிர்வாகிகள் புகார் தெரிவித்தனர்.
இலவசக் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின்படி, தனியார் பள்ளிகளில் அறிமுக வகுப்புகளில் 25 சதவீதம் ஏழை மற்றும் சமூகரீதியாக நலிவடைந்த மாணவர்கள் சேர்க்கப்பட வேண்டும். இந்த மாணவர்களுக்கான கட்டணத்தை அரசே திருப்பி வழங்கும் என அறிவிக்கப்பட்டது.
இந்த ஒதுக்கீட்டின் கீழ் நடப்புக் கல்வியாண்டில் (2013-14) மெட்ரிக் பள்ளிகளில் 18 ஆயிரம் மாணவர்கள் சேர்க்கப்பட்டனர். தொடக்கக் கல்வித் துறையின் கீழ் செயல்படும் நர்சரி மற்றும் பிரைமரி பள்ளிகள், பள்ளிக் கல்வித் துறையின் கீழ் செயல்படும் தனியார் பள்ளிகள் என அனைத்துப் பள்ளிகளிலும் சேர்த்து மொத்தம் 49 ஆயிரத்துக்கும் அதிகமான மாணவர்கள் சேர்க்கப்பட்டனர்.
தனியார் பள்ளிகளுக்கு கட்டண நிர்ணயக் குழு நிர்ணயித்த கட்டணம் அல்லது அரசுப் பள்ளிகளில் ஒவ்வொரு மாணவருக்கும் ஆகும் செலவு இவற்றில் எது குறைவோ அந்தக் கட்டணத்தை இந்த ஒதுக்கீட்டின் கீழ் சேரும் மாணவர்களுக்காக அரசு திருப்பி வழங்கும் என அறிவிக்கப்பட்டது.
இந்த மாணவர்களுக்கான கல்விக் கட்டணம் செப்டம்பர், ஜனவரி, ஏப்ரல் ஆகிய மாதங்களில் மூன்று தவணைகளாக தனியார் பள்ளிகளுக்கு வழங்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டது.
ஆனால், இதுவரை இந்த மாணவர்களுக்கான கட்டணம் வழங்கப்படவில்லை. இது குறித்து தனியார் பள்ளி நிர்வாகங்கள் அதிருப்தி தெரிவித்துள்ளன.
தமிழ்நாடு நர்சரி, பிரைமரி, மெட்ரிக் மற்றும் மேல்நிலைப் பள்ளிகள் சங்கத்தின் பொதுச்செயலாளர் கே.ஆர்.நந்தகுமார் இது குறித்து கூறியது:
கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் சேர்க்கப்பட்ட மாணவர்களுக்கு இதுவரை அரசு கட்டணத்தைத் திருப்பி வழங்கவில்லை. இந்த ஆண்டுக்கான கட்டணத்தை வழங்கவில்லையென்றால், அடுத்த ஆண்டில் இந்த ஒதுக்கீட்டின் கீழ் மாணவர்களைச் சேர்க்கமாட்டோம் என அவர் தெரிவித்தார்.
இந்தக் கட்டணத்தை மத்திய அரசிடம் இருந்து பெற்று தனியார் பள்ளிகளுக்கு வழங்க பள்ளிக் கல்வித் துறை முயற்சிகளை மேற்கொண்டுள்ளது. சுமார் ரூ.10 கோடிக்கும் அதிகமான தொகையைக் கோரி மத்திய அரசுக்கு அறிக்கையும் அனுப்பப்பட்டுள்ளது.
இது குறித்து பள்ளிக் கல்வித் துறையின் மூத்த அதிகாரி ஒருவர் கூறும்போது, இந்தத் தொகைக்கு மத்திய அரசு ஒப்புதல் வழங்கி அனுமதிக்க வேண்டும். மத்திய அரசு நிதியை வழங்கிய பிறகே, தனியார் பள்ளிகளுக்குக் கட்டணம் திருப்பி வழங்கப்படும். இன்னும் ஓரிரு மாதங்களில் அவர்களுக்கான கட்டணம் வழங்கப்படும் என்றார்.