Flash News

Flash News அன்பார்ந்த ஆசிரிய பெருமக்களே! இந்த வலை தளத்தில் தொடக்கப் பள்ளி மாணவர்களுக்கு தேவையான அடிப்படை கணித செயல்பாடுகளுக்கான விளையாட்டுகள் மற்றும் ஆங்கில விளையாட்டுகள் தரப் பட்டுள்ளன. அவற்றைக் கண்டு பள்ளிகளில் செயல்படுத்துமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்...01.07.2014 முதல் அகவிலைப்படி 7% உயருகிறது. ...

Tuesday, 22 July 2014

PG-TRB: தேர்வெழுதிய நாளே வந்துவிட்டது: தேர்வு பட்டியலுக்காக காத்திருக்கும் தேர்வர்கள்...!


முதுகலை பட்டதாரி ஆசிரியர் தேர்வெழுதி ஒராண்டாகியும் இதுவரை இறுதி தேர்வு பட்டியலே வெளியிடாமல் இருப்பது வேதனையிலும் வேதனை...

முதுகலை பட்டதாரி ஆசிரியர் தேர்வின் வரலாறு

09.05.2013
அரசு மேல்நிலைப் பள்ளிகளில், 2,881 முதுகலை ஆசிரியர்களை நியமனம் செய்வதற்கான‌ அறிவிப்பை ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டது.

31.05.2013
முதுகலை பட்டதாரி ஆசிரியர் தேர்வுக்கு 31ம் தேதி விண்ணப்பம் விநியோகிக்கப்பட்டது.

14.06.2013
முதுகலை ஆசிரியர் பணியிட எழுத்து தேர்வுக்கு விண்ணப்பிக்க கடைசிநாள்

07.07.2013
முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் போட்டித் தேர்வுக்கான ஹால் டிக்கெட்டுகள் வெளியிடப்பட்டது. இத்தேர்வுக்கு 1.67 லட்சம்பேர், விண்ணப்பித்தனர்.

21.07.2013
முதுகலை ஆசிரியர் போட்டித் தேர்வு, மாநிலம் முழுவதும், 421மையங்களில் நடந்தது. 1 லட்சத்து 59 ஆயிரத்து 750 பேர்பங்கேற்றனர். 7912 பேர் தேர்வு எழுத வரவில்லை.

29.07.2013
முதுகலை பட்டதாரி ஆசிரியர் போட்டித் தேர்வுக்கான உத்தேச விடைகளை(கீ-ஆன்சர்), ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டது.

07.10.2013
தமிழ் தவிர பிற பாடங்களுக்கான தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டன.

11.10.2013
முதுநிலை பட்டதாரி ஆசிரியர்கள் சான்றிதழ் சரிபார்ப்பிற்கு தேர்ந்தெடுக்கப்பட்டோர் பெயர் பட்டியல் மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு மையங்களின் விவரம் டி.ஆர்.பி இணையதளத்தில் வெளியிடப்பட்டது.

22.10.2013
முதுகலை ஆசிரியர் சான்றிதழ் சரிபார்ப்பு, அக். 22, 23ம் தேதிகளில்,மாநிலம் முழுவதும்,14 இடங்களில் 2,276 பேருக்கு நடந்தது. 

24.10.2013
முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர்ளுக்கான 212 தேர்வர்கள் அடங்கிய கூடுதல் பட்டியலை ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டது.

06.11.2013
முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர்ளுக்கான கூடுதல் சான்றிதழ் சரிபார்ப்பு சென்னையில் நவம்பர் 5, 6-ஆம் தேதிகளில் நடைபெற்றது.

23.12.2013
முதுநிலை பட்டதாரி தமிழ் ஆசிரியர் பணிக்கான தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டன. இதில் 694 பேர் சான்றிதழ் சரிபார்ப்பிற்குஅழைக்கப்பட்டனர்

31.12.2013
முதுகலை தமிழ் பட்டதாரி ஆசிரியர்கள் நியமனத்திற்கான சான்றிதழ் சரிபார்த்தல் 30 மற்றும் 31–ந்தேதிகளில் நடைபெற்றது.

04.01.2014
முதுகலை தமிழ் ஆசிரியர்களின், 605 பேரின் தேர்வு பட்டியலை,ஆசிரியர் தேர்வு வாரியம் (டி.ஆர்.பி.,), வெளியிட்டது.

09.01.2014
முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் திருத்தப்பட்ட தேர்வுப் பட்டியல் வெளியிடப்பட்டது; நீதிமன்ற வழக்குகள் நிலுவையில் உள்ள பாடங்களைத் தவிர்த்து (Except for Botany, History, Commerce, Physics, Chemistry) மீதமுள்ளபாடங்களுக்கான திருத்தப்பட்ட புதிய தேர்வுப் பட்டியல் வெளியிடப்பட்டது.

10.01.2014
தாவரவியல், வரலாறு, வணிகவியல், இயற்பியல், வேதியியல், பாடங்களுக்கான திருத்தப்பட்ட தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டது.

17.01.2014
திருத்தப்பட்ட தேர்வுப் பட்டியலில் புதிதாக இடம்பெற்றுள்ளவர்களுக்காக சான்றிதழ் சரிபார்ப்பு விழுப்புரம் அரசு மகளிர்மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது.

18.02.2014
விலங்கியல், உயிரி வேதியியல் (பையோ கெமிஸ்ட்ரி), மனை அறிவியல் (ஹோம் சயின்ஸ்), புவியியல் மற்றும் உடற்கல்வி இயக்குநர் நிலை–1 ஆகிய 5 பாடங்களுக்கு தேர்வு பட்டியல் வெளியிடப்பட்டது.

21.02.2014
முதுகலை தமிழ் பாடத்திற்கு தேர்வு செய்யப்பட்டுள்ள, 593 பேருக்கு பணிநியமன கலந்தாய்வு நடைபெற்றது. அன்றிலிருந்து ஒரு வாரத்திற்குள் பணியில் சேர வேண்டும் என உத்தரவிடப்பட்டது.

அன்றிலிருந்து இன்றுவரை, மீதமுள்ள‌ 11 பாடங்களுக்கான‌ இறுதி தேர்வு பட்டியல் எப்போது வரும் என்ற கேள்விக்கே விடைதெரியாமல் காத்துக்கொண்டிருக்கின்றனர். 

Thanks To
Mr.Karthik k

ஆசிரியர் நியமனம் குறித்து தெளிவான வெள்ளை அறிக்கை வெளியிடப்பட வேண்டும். - மீனாட்சி சுந்தரம்


கல்வி மானியக் கோரிக்கையில் இடைநிலை ஆசிரியர்கள் அல்லாத 3459 புது ஆசிரியர்கள்மட்டுமே நியமிக்கப்படு வார்கள் என்று அறிவித்து இருப்பது அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. 

தொடக்கத்தில் 55 ஆயிரம் ஆசிரியர்கள் நியமிக்கப்படுவார்கள் என பள்ளிக் கல்வித்துறை அறிவித்தது. அதைத்தொடர்ந்து வந்த 5 அமைச்சர்கள், ஆசிரியர் நியமனத்தில் பல்வேறு குழப்பமான புள்ளி விவரங்களை அறிவித்தனர்.இப்போது 6வதாக வந்துள்ள அமைச்சர் வீரமணி, கடந்த 3 ஆண்டில் 51 ஆசிரியர் நியமிக்கப்பட்டுள்ளதாகவும், விரைவில் 18 ஆயிரம் ஆசிரியர் நியமிக்கப்பட உள்ளனர் என்றும் அறிவித்தார். ஆனால் பேரவையில் அறிவித்தது வேறு. எனவே ஆசிரியர் நியமனங்கள், நிலை வாரியாக, நிர்வாக வாரியாக மாவட்ட வாரியாக வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும். இல்லை என்றால் போராட் டம் நடத்தப்படும்.

வாட்ஸ் ஆப் வசீகரிப்பால் தூக்கம் தொலைக்கும் இளம் தலைமுறையினர்


செல்போனில் ‘வாட்ஸ் ஆப்’ செயலியைப் பயன்படுத்தி தகவல்களை பரிமாறிக்கொள்ளும் போக்கு அண்மைக்காலங்களில் பல மடங்கு அதிகரித்துள்ளது. குறிப்பாக இரவு நேரங்களில் இளம் வயதினர் வாட்ஸ்-ஆப்-ஐ பயன்படுத்துவது அதிகரித்துள்ளது. இதனால், நூல்களைப் படிக்கும் வழக்கம் அவர்களிடையே குறைந்து வருகிறது.

காலை நேரங்களில் படிப்பு, வேலை என்று இருக்கும் இளைஞர்கள் இரவு நேரங்களில்தான் தங்களது நண்பர்களுடன் தொடர்பு கொள் கின்றனர்.

இன்டர்நெட் வசதி கொண்ட ஸ்மார்ட் போன் இருந்தால், வாட்ஸ் ஆப், வைபர், ஹைக் போன்ற குறுஞ்செய்தி ஆப்-களை (செயலி) சுலபமாக பயன்படுத்த முடியும்.

இந்த ஆப்-களை கைபேசிகளில் பதிவிறக்கம் செய்து கொண்டால், அதன் மூலம் உலகின் எந்த மூலையில் இருப்பவரோடும் இலவசமாக தகவல்களைப் பரிமாறலாம், பேசவும் செய்யலாம். குறுஞ்செய்திகளைத் தவிர புகைப்படங்கள், ஆடியோ, வீடியோ அனுப்பிக் கொள்ளலாம்.

இதனால் செல்போன்களில் எஸ்எம்எஸ் அனுப்பும் வழக்கம் கூட தற்போது பெரிதும் குறைந்துவிட்டது.

பொறியியலில் முதுகலை படிக்கும் கண்ணன் வாட்ஸ் ஆப் குறித்து கூறும்போது, “நாங்கள் வகுப்புகளை முடித்து, நண்பர்களோடு பேசிக்கொள்ள இரவில்தான் நேரம் கிடைக்கிறது.

விடுதியில் பெரும்பாலானோர் வாட்ஸ் ஆப் பயன்படுத்து வதால், அதைப் பயன்படுத்த பெரிதும் எதிர்ப்பு இருப்பதில்லை” என்றார்.

தனியார் மென்பொருள் நிறுவனத்தில் வேலை செய்யும் ப்ரவீணா, “நான் திருச்சியில் படித்து தற்போது பெங்களூரில் வேலை செய்கிறேன். எனது பள்ளி கல்லூரி நண்பர்களுக்காக வாட்ஸ் ஆப் குரூப் வைத்துள்ளோம். அந்த குரூப் ஆரம்பித்த பிறகுதான் நான் அவர்களுடன் தொடர்பில் இருக்க முடிகிறது.

சில நண்பர்கள் வெளி நாடுகளில் இருக்கிறார்கள். எனவே, அனைவரும் ஒன்றாக சேட்டிங் செய்யக் கூடிய நேரம் இரவுதான். ஆனால், என்னால் வாட்ஸ் ஆப் இல்லாமலும் இருக்க முடியும்” என்றார்.

ஆங்கிலத்தில் இளங்கலை படிக்கும் மரியா கூறுகையில், “வாட்ஸ் ஆப் குரூப்-ல் நடந்த விவாதங்களைப் பற்றி, சுவாரஸ்யமான ஸ்டேடஸ் பற்றி தினமும் வகுப்பில் பேசிக் கொள்வோம். எனது கைபேசியை பார்க்கும்போது அதில் குறுஞ்செய்தி எதுவும் வரவில்லை என்றால் சற்று கவலையாக இருக்கும்” என்றார்.

இழப்புகள் அதிகம்: மருத்துவர் கருத்து

இது குறித்து மன நல மருத்துவர் ராமானுஜம் கூறியதாவது:

ஒருவர் தமது முக்கிய பணிகளுக்கும் உறவுகளுக்கும் நேரம் ஒதுக்காமல், ஒரு செயல் அல்லது பொருளுக்கு நேரம் ஒதுக்கினால் அவர் அதற்கு அடிமையாகியுள்ளார் என்று பொருள். அதற்கு செலவழிக்கும் நேரம் கொஞ்சம் கொஞ்சமாக அதிகரித்துக் கொண்டே வரும். அந்த பழக்கத்தால் தமக்கு, இழப்புகள் ஏற்படுகின்றன என்று தெரிந்தும் அது தொடரும். இந்திய இளைஞர்களுள் 5 முதல் 10 சதவீதம் பேர் இன்டர்நெட் பயன்பாட்டுக்கு அடிமையாகி உள்ளனர். தங்கள் பிள்ளைகள் பேஸ்புக்கிலும், இன்டர்நெட்டிலுமே அதிக கவனம் செலுத்துகின்றனர் என பல பெற்றோர் புகார் கூறுகின்றனர். வாட்ஸ் ஆப்-ஐ ஒரு தொடர்பு சாதனமாக மட்டுமே கருத வேண்டும். நண்பர்களோடு நேரில் பேசுவது, நல்ல புத்தகங்களை படிப்பது, உடற்பயிற்சி செய்வது ஆகியவற்றை இளைஞர்கள் வழக்கமாக கொள்ள வேண்டும் என்றார்.

ஒரு ஆசிரியர் எப்படி இருக்க வேண்டும்?


நமது கல்விமுறை 100% தகவல் அளிப்பதாகத்தான் இருக்கிறது. அது ஒரு தூண்டுகோலாக, ஊக்கம் கொடுப்பதாக இல்லை. ஊக்குவிப்பவர் இல்லையென்றால், ஒரு மனிதன் அவனுடைய எல்லைகளைத் தாண்டி உயர முடியாது. வெறும் தகவல் தேவை என்றால், ஓர் ஆசிரியர் சிறந்தவராக இருக்க முடியாது. புத்தகங்களும், இணையத்தளமும் இந்த வேலையை இன்னும் சிறப்பாகச் செய்யும்.

ஓர் ஆசிரியரின் பங்கு, ஒரு மாணவரை கற்கத் தூண்டுவதாக இருக்க வேண்டும். அறிவுக்கான தாகத்தை உருவாக்குவதாக இருக்க வேண்டும். அப்போதுதான் ஆசிரியரின் பங்கில் ஏதாவது பொருள் இருக்கும்.

எந்த வேலை சிறந்தது?


எந்தப் பணமும் வசதியும் தராத மன நிம்மதி மக்கள் தொண்டில் கிடைக்கும். இது அரசாங்கப் பணியில் தான் இயல்பாகச் சாத்தியமாகிறது.
‘அரசாங்க வேலை சிறந்ததா, தனியார் வேலை சிறந்ததா?’ என்று என் பயிலரங்கத்தில் ஒருவர் கேள்வி எழுப்பினார். ‘எது சிறந்தது என்பதைவிட அதை நீங்கள் ஏன் சிறந்ததாகக் கருதுகிறீர்கள் என்று யோசியுங்கள்’ என்றேன். இரு அணிகளாகப் பிரிந்து காரசார விவாதம் நடந்தது.

பணி நிரந்தரம், அனுபவம் சார்ந்த பதவி உயர்வு, சமூகத்தில் மரியாதை, மக்கள் சேவை செய்ய வாய்ப்பு என்று அடுக்கினார்கள் ஒரு புறம். கிம்பளம் வாங்க அதிக வாய்ப்பு என்றும் வெளிப்படையாகக் கூறினார்கள்.

மற்றொரு புறம் திறமைக்கு மதிப்பு, செயலாக்கம் சார்ந்த பதவி உயர்வு, வெளிநாட்டு வேலை வாய்ப்புகள், நிறைய பணி சார்ந்த வசதிகள் என்று தனியார் வேலைதான் சிறந்ததெனத் திட்டவட்டமாகக் கூறினார்கள்.

அரசு வேலைதான் சிறந்தது என்பவர்களைக் கேட்டேன்: ‘உங்களில் எத்தனை பேர் அரசாங்க மருத்துவமனைகளை, அரசாங்கப் பள்ளிகளை, அரசாங்கப் பேருந்துகளை முதல் சாய்ஸ் ஆகத் தேர்ந்தெடுப்பீர்கள்?’ என்று கேட்டேன். சிலர்தான் கைகளைத் தூக்கினார்கள். பாதுகாப்பிற்கு அரசாங்க வேலை, வசதிக்குத் தனியார் சேவை எனும் முரண்பட்ட நிலை பற்றி விவாதித்தோம்.

அதே போல சேவைத் திறன், நவீனம் என்றெல்லாம் பேசிய தனியார் துறை ஆதரவாளர்கள் சில குறிப்பிட்ட சேவைகளில் அரசாங்கச் சேவைகளைத் தேடிப் போவதாகச் சொன்னார்கள். அரசாங்கத் துறைகள் ஏமாற்றாது; ஆனால் தனியார் துறையில் மோசடிகள் அதிகம் என்றார்கள். அதனால்தான் பாரத ஸ்டேட் வங்கியும் எல். ஐ. சியும் இன்னமும் வாடிக்கையாளரின் நம்பிக்கைக்குரிய நிறுவனங்களாக லாபகரமாக இயங்கிவருகின்றன.

அரசாங்க வேலைகள் பற்றிய மயக்கம் இன்னமும் கிராமப் புறங்களில் அதிகம் உள்ளது. ‘என்ன செலவானாலும் பரவாயில்லை. போஸ்டிங் வாங்கணும். யாரையாவது பிடித்து எப்படியாவது வாங்கிவிட்டால் சில வருஷத்துல போட்டதைச் சம்பாதிச்சு எடுத்திடுவான்!’ போன்ற வார்த்தைகளை இன்னமும் அடிக்கடி கேட்கிறோம்.

தனியார் துறைக்கு ஒரு காந்தக் கவர்ச்சி உண்டு. திடீர் வளர்ச்சி இங்கு சாத்தியம். வயது, அனுபவம் என வரிசையில் நின்று பதவி உயர்விற்குக் காத்திருக்க வேண்டாம். திறமைசாலிக்கு என்றும் எதிர்காலம் உண்டு. அசுர வேகத்தில் நிறுவனங்கள் வளர்கின்றன என்றால் அதற்கேற்ப அசுர உழைப்பும் உள்ளது.

தனியார் வேலையில் உள்ள அதீத பணிச்சுமை, அதன் காரணமாக மன உளைச்சல், பாதுகாப்பற்ற தன்மை, ஓய்வு ஊதியம் இல்லாமை போன்றவை இன்னமும் மக்களிடம் அரசாங்க வேலைகள் பரவாயில்லை என்கிற எண்ணத்தை வலுப்பெற வைக்கின்றன.

தமிழ் நாட்டில் பொறியியல் படித்துவிட்டு தேசிய மயமாக்கப்பட்ட வங்கிப் பணிகளுக்கு விண்ணப்பிப் போர் எண்ணிக்கை அதிகமாகி வருகிறது. அது போல அரசாங்க வேலைகள் குறித்த விழிப்புணர்வும் அதிகரித்துவருகிறது.

அதே நேரத்தில் தனியார் மயமாக்கத்தால் தனியார் நிறுவனங்கள் அதிக அளவில் முதலீடுகள் செய்வதால், புதிய வேலை வாய்ப்புகளும் இங்குதான் அதிகம் ஏற்படும்.

அரசாங்கத்திலும் அதிக வேலை வாய்ப்புகள் ஏற்பட சாத்தியம் உள்ளது. ஆனால் அரசாங்கத்தின் தொழில் கொள்கைகள் தனியார் நிறுவனங்களுக்குச் சாதகமாக மாறி வருவதால் தனியார் தரும் வேலை வாய்ப்புகள்தான் பெருகும். இது தவிர பொதுத்துறை நிறுவனங்களிலும் தனியாரின் பங்குகள் அதிகரிப்பதால், தனியார் நிறுவன கலாச்சாரம் எங்கும் பரவிவருவதைக் காணலாம்.

அரசாங்க வேலையா, கார்ப்பரேட் வேலையா என்றால் மத்திய தட்டு மக்கள் தனியாரைத்தான் அதிகம் தேடிப் போகிறார்கள். ‘நாற்பதுக்குள் நன்றாகச் சம்பாதித்துவிட்டுப் பின் ஓய்வு பெற வேண்டும்’ போன்ற எண்ணங்களைப் பல இளைஞர்கள் சொல்லக் கேட்கிறேன். அதற்கு மேல் ஆரோக்கியம் இடம் கொடுக்காது என்று எனக்குச் சொல்லத் தோன்றும்.

லாப நோக்கம், போட்டி மனப்பான்மை, குறுக்கு வழிகளில் நம்பிக்கை, சுய நலம் போன்றவை தனியார் நிறுவனங்களின் விழுமியங்களாக வெளிப்படுகின்றன. காலக்கெடுவிற்குள் எப்படிச் சம்பாதிப்பது என்பதுதான் மனிதர்களுக்கும் நிறுவனங்களுக்கும் குறி. இதற்குச் சில விதிவிலக்குகள் உண்டு. மறுக்கவில்லை.

லஞ்சம், ஏமாற்று வேலை என்பதெல்லாம் இரு பக்கங்களிலும் உண்டு. தனியார் துறையில் மேல் தட்டில் அல்லது சில குறிப்பிட்ட பணிகளில்தான் இவை சாத்தியம். அரசுப் பணியில் கீழ் நிலைவரை கிட்டத்திட்ட எல்லாப் பதவிகளிலும் இவை சாத்தியம்.

ஆனால் நேர்மையான, திறமையான ஆட்கள் எவ்வளவு தடைகள் வந்தாலும் முன்னுக்கு வருகிறார்கள். எங்கு பணி செய்தாலும்.

அரசாங்கப் பணிகளில் நெஞ்சில் உரமும் நேர்மைத் திறனும் கொண்ட ஆட்கள் அமர்ந்தால் நம் தேசம் உலக அரங்கில் தலை நிமிரும்.

எல்லையில் ஆயுதம் ஏந்தி நிற்கும் ராணுவ வீரர்களும், பழங்குடிகள் வாழும் மலைப் பகுதியில் பணியாற்றும் அரசாங்க மருத்துவர்களும், குக்கிராமத்தில் கட்டிட வசதிகூட இல்லாமல் மர நிழலில் போதிக்கும் ஆரம்ப நிலை ஆசிரியர்களும், பேரிடர் காலத்தில் களம் இறங்கிப் பணி புரியும் ஆட்சியாளர்களும்தான் நிஜ நாயகர்கள்!

எந்தப் பணமும் வசதியும் தராத மன நிம்மதி மக்கள் தொண்டில் கிடைக்கும். இது அரசாங்கப் பணியில் தான் இயல்பாகச் சாத்தியமாகிறது. அரசியல் தலையீடு, வசதிக்குறைவு, திறமைக்குத் தேவையான ஊக்குவிப்பு இல்லாமை போன்றவை பெரிய சவால்கள்தான். ஆனால் இவை தாண்ட முடியாத தடைகள் அல்ல.

அரசாங்கப் பணிகள் மீது வேலை தேடுவோரின் கவனம் திரும்ப வேண்டும் என்றால் அரசுத் தேர்வாணையம் போன்ற அமைப்புகள் நியாயமாகத் திறமையின் அடிப்படையில் மட்டுமே இயங்க வேண்டும். தவிர, தனியார் துறையில் உள்ள நல்ல நிர்வாக வழிமுறைகளை அரசாங்கத் துறைகள் பின்பற்றலாம்.

வேலை என்பது நம் பிழைப்பிற்கு மட்டும்தானா? பிறர் துன்பம் துடைக்கக் கிடைத்த வாய்ப்பா?

இந்தக் கேள்விக்கான பதில்தான் உங்கள் வேலை தேடும் பயணத்தின் திசையைத் தீர்மானிக்கும்.

டாக்டர்.ஆர்.கார்த்திகேயன்- தொடர்புக்கு: gemba.karthikeyan@gmail.com

Sunday, 20 July 2014

ஜூலை 20 ஆம் தேதி விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான 'அரசுப்பள்ளி ஆசிரியர்கள்-தனியார் பள்ளி ஆசிரியர்கள்' என்ற தலைப்பிலான 'நீயா? நானா?' நிகழ்ச்சியை இணைய தளம் மூலம் காண...

ஆசிரியர்களுக்கும் ஆடை கட்டுப்பாடு[தலையங்கம்-dailythanthi)


சமீபத்தில் சென்னையில் உள்ள தமிழ்நாடு கிரிக்கெட் சங்க கட்டிடத்துக்குள் வேட்டி அணிந்து வந்தார் என்ற ஒரே காரணத்துக்காக ஐகோர்ட்டு தலைமை நீதிபதிக்கே அனுமதி மறுக்கப்பட்டது. இது பெரிய பிரச்சினையாக உருவெடுத்து சட்டசபையிலும் எதிரொலித்து, இப்போது முதல்–அமைச்சர் ஜெயலலிதாவே நடவடிக்கை எடுக்கும் கட்டத்துக்கு சென்றுவிட்டது. இந்த சம்பவத்துக்கு பிறகு ஆடை கட்டுப்பாடு என்ற வார்த்தை பிரபலமாகிவிட்டது. சில பல பணிகள் நிமித்தம் சீருடை அல்லது ஆடை கட்டுப்பாடு என்பது காலம்காலமாக உலகம் முழுவதும் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. அந்தந்த பணிக்கேற்ப நிர்ணயிக்கப்படும் இந்த ஆடைகளை அணிந்தால்தான் அந்த பணியும் சிறக்கும், அதை ஆற்றுவதற்கும்உறுதுணையாக இருக்கும். மேலும், அந்தந்த பணிக்கேற்ற அடையாளம் நிச்சயம் தேவை. அந்த உடையை அவர்கள் அணிந்துவந்தால்தான் ஒரு தனித்துவம் தெரியும். இந்த உடைகளை அவர்கள் அணிந்து வரும்போது அந்த உத்தியோகத்துக்குரிய ஒரு கம்பீரம் தானாகவே வரும்.

இவ்வாறு சீருடை நிர்ணயிக்கப்படாத பணிகளில், எந்த உடை அணிய வேண்டுமானாலும் அணியலாம், ஆனால், அந்த பதவிக்கேற்ற, பணிக்கேற்ற கவுரவத்துக்கு உகந்த ஆடைகளையே அணியவேண்டும் என்பது
எழுதப்படாத நியதியாக உள்ளது. எங்களுக்கு சீருடை இல்லை என்று சொல்லிக்கொண்டு எந்த உடையை அணிந்துவேண்டுமானாலும் வரலாம் என்ற நடைமுறைதமிழ்நாட்டில் இல்லை. தமிழ்நாட்டில் பிளஸ்–2 வரை அனைத்து பள்ளிக்கூடங்களிலும் படிக்கும் மாணவர்களுக்கு தமிழக அரசே இலவச சீருடைகளை வழங்குகிறது.தனியார் பள்ளிக்கூடங்களிலும் அவர்களே மாணவர்கள் எந்த சீருடை அணிந்து வரவேண்டும் என்று நடைமுறைக்கு கொண்டுவந்துவிடுகிறார்கள். உலகில் பெரும்பாலான நாடுகளில் இத்தகைய சீருடைகள் நடைமுறையில்உள்ளன. ஆனால், கனடா, இத்தாலி, ஸ்பெயின் போன்ற சில நாடுகளில் மட்டும் சீருடையோ, ஆடை கட்டுப்பாடோ இல்லை. அமெரிக்காவில்கூட பெரும்பாலான பள்ளிக்கூடங்களில் சீருடை இல்லை. தேவையில்லாதகட்டுப்பாடுகளை இளம் மாணவப்பருவத்தில் திணிக்கவேண்டிய அவசியம் இல்லை என்ற கருத்து அங்கு இருக்கிறது.

தமிழ்நாட்டிலும் பள்ளிக்கூட படிப்பை முடித்துவிட்டு, கல்லூரிகளுக்குள் நுழைந்தவுடன் யூனிபாரம் அல்லது சீருடை என்று தனியாக இல்லை. ஆனால், பல கல்லூரிகளில் ஆடை கட்டுப்பாடு வைத்திருக்கிறார்கள்.
இப்போது மருத்துவ கல்லூரிகளில் மாணவர்கள் ஜீன்ஸ், டீ சர்ட் அணிந்துவர வேண்டாம், சட்டையை பேண்டுக்குள் இன் பண்ணி, காலில் ஷூ அணியவேண்டும் என்றுகூறப்பட்டுள்ளது. இதுபோல, மாணவிகள் சேலை,சல்வார் கமீஸ் அல்லது சுரிதார் அணிந்து வரவேண்டும், தலைமுடியை கட்டிக்கொண்டு வரவேண்டும், நிறைய நகைகள் போட்டுக்கொண்டோ, பூ வைத்துக்கொண்டோ வரக்கூடாது, மோதிரம் அணியக்கூடாது என்றெல்லாம்
எழுதப்படாத விதிகளாக நடைமுறையில் பின்பற்றப்பட்டு வருகிறது. இதை மருத்துவ கல்லூரி மாணவர்களும் பெருமையோடு ஏற்றுக் கொண்டிருக்கிறார்கள். இங்குமட்டுமல்ல, என்ஜினீயரிங் கல்லூரிகளிலும், வேளாண்மை, கால்நடை மருத்துவம், பாலிடெக்னிக் போன்ற தொழில் கல்லூரிகளிலும், அனைத்து கலைக்கல்லூரிகளிலும் மாணவர்களுக்கு உடை கட்டுப்பாடு இருக்கிறது. ஆனால், ஆசிரியர்களுக்கு உடை கட்டுப்பாடு இல்லாததால், சில பள்ளிக்கூடங்களில் குறிப்பாக கிராமப்புற பள்ளிக்
கூடங்களில் சில ஆசிரியர்கள் மாணவர்களுக்கு தடை விதிக்கப்பட்ட ஆடைகளை சர்வசாதாரணமாக அணிந்துவருகிறார்கள் என்றும், ஆசிரியர் பயிற்சி பள்ளிக்கூடங்களிலும், கல்லூரிகளிலும் ஆசிரியர்களுக்கும், ஆசிரியைகளுக்கும் பல ஆடை கட்டுப்பாடுகள் உண்டு. ஆனால், பணிக்கு சேர்ந்தபிறகு பெரும்பாலானோர் கடைப்பிடித்தாலும், சிலர் கடைபிடிப்பதில்லையே என்றும் கூறுபவர்களால் ஆசிரியர்களுக்கு சீருடை தேவையில்லை, மாறாக அவர்கள் அணியும் ஆடைகளுக்கு
கட்டுப்பாடு வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துவருகிறது. ஆசிரியர்கள் ஆடை அணியும் முறைதான், எதிர்காலத்தில் மாணவர்கள் பின்பற்றவும் வழிவகுக்கும்.

குஜராத் மாநிலத்தில் ஆசிரியர்களுக்கு சீருடைபரிந்துரை செய்யப்பட்டுள்ளது. ஆனால், சீருடை தேவையில்லை, அதற்கு பதிலாக இன்னென்ன ஆடைகளைத்தான் அணியலாம், அதை இந்தெந்த வகையில்தான் அணியலாம், மாணவர்களைவிட வேறுபடுத்தி இருக்கும் வகையில், ஆசிரியர் பணியே அறப்பணி என்றுகூறுவதற்கேற்ற வகையில், அந்த பணியின் கண்ணியத்தை நிலைநாட்டும் வகையில் ஆடை கட்டுப்பாடு கொண்டுவரலாம் என்ற கோரிக்கையை பள்ளிக்கூட கல்வித்துறை பரிசீலிக்க வேண்டும்.

வருமானவரி கணக்கு தாக்கல் செய்ய இறுதிநாள் ஜூலை 31

                

அரசுப்பள்ளிகளில் கணித ஆய்வுக்கூட திட்டம் கனவாய் போனது!அறிவிப்போடு முற்றுப்புள்ளியால் ஏமாற்றம்


அடிப்படை கணித அறிவை மாணவர்களுக்கு செயல்வழியாக கற்பிக்க, அரசு அறிவித்த நடுநிலைப்பள்ளிகளுக்கான கணித ஆய்வுக்கூடத் திட்டம் இரண்டு ஆண்டுகளாக செயல்படுத்தப்படவில்லை. இதனால், திட்டத்தின் நோக்கம் கேள்விக்குறியாகியுள்ளது.
அரசுப்பள்ளிகளில், பயிலும் மாணவர்கள் கணிதப்பாடத்தை மனப்பாடம் செய்து, மதிப்பெண்களை மட்டும் இலக்காக கொண்டு படிப்பதாக ஆய்வுகள் மூலம் தெரியவந்தது. இந்நிலையை மாற்ற, கணிதத்தை செயல்வழியாக கற்பித்து, கணித பாடத்தின் அடிப்படையை மாணவர்கள் புரிந்து கொள்ள கணித ஆய்வுக்கூடம் திட்டத்தை அரசு கடந்த இரண்டு ஆண்டுக்கு முன் அறிவித்தது.

தற்போது வரை இத்திட்டம் முழுமையாக செயல்பாட்டிற்கு வராமல் உள்ளது. திட்டத்திற்கு முதற்கட்டமாக ஒரு மாவட்டத்தில் இரண்டு அரசு நடுநிலைப்பள்ளிகள் வீதம் 64 பள்ளிகள் தேர்வு செய்யப்பட்டன. அரசின் மூலம் 128 லட்ச ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.
அனைத்து மாவட்டங்களிலும் நடுநிலைப்பள்ளிகளில் கணித ஆய்வகக்கூடம் அமைக்க இடவசதி உள்ளதா, பள்ளியின் வளர்ச்சி, மாணவர் எண்ணிக்கை உள்ளிட்ட அனைத்தையும் ஆய்வு செய்து மாவட்டத்திற்கு இரண்டு பள்ளிகள் வீதம் தேர்வு செய்யப்பட்டன. அப்பள்ளி மாணவர்கள் ஆய்வுக்கூடத்தை எதிர்பார்த்து காத்திருந்து ஒரு கல்வியாண்டே முடிந்த நிலையிலும் செயல்பாட்டிற்கு வராததால் ஏமாற்றத்தில் உள்ளனர்.

சென்னை, கோவை உள்ளிட்ட சில மாவட்டங்களில் மட்டுமே தலா இரண்டு பள்ளிகளில், இத்திட்டம் நடப்பு கல்வியாண்டில் செயல்பாட்டிற்கு வந்துள்ளது. திருப்பூர் மாவட்டத்தில் கடந்த ஆண்டே பள்ளிகள் தேர்வு செய்யப்பட்டும், இன்று வரை அப்பள்ளிகளில் ஆய்வுக்கூடத்திட்டம் செயல்பாட்டிற்கு வரவில்லை. அனைத்து மாவட்டங்களிலும் நடப்பு கல்வியாண்டிலாவது முழுமையாக செயல்படுத்த வேண்டும் என மாணவர்கள் எதிர்பார்த்துள்ளனர்.
மாவட்டத்திற்கு இரண்டு பள்ளிகளில் செயல்படுத்தவே காலதாமதமாகும் நிலையில், அனைத்து பள்ளிகளிலும் இத்திட்டம் துவங்குவது சாத்தியமில்லை என்ற கருத்து கல்வியாளர்களிடையே ஏற்பட்டுள்ளது. நடப்பு கல்வியாண்டு துவங்கியும், தேர்வு செய்யப்பட்ட பள்ளிகளுக்கு, இந்த ஆய்வுக்கூடத்தில் எவ்விதமான உபகரணங்கள் அமைக்கப்படும், எவ்வாறு பயிற்சி அளிக்கப்படும் என்பது குறித்தும் தகவல் தெரிவிக்கப்படவில்லை. மேலும் பல பள்ளிகளுக்கு இத்திட்டம் குறித்த விழிப்புணர்வும் இல்லை. மாணவர்கள் பயன்பெறும் வகையில் இத்திட்டம் முழுமையாக அனைத்து பள்ளிகளிலும் செயல்படுமா என்பது கேள்விக்குறியாகவே உள்ளது.

'விரைவில் செயல்படுத்தப்படும்'திருப்பூர் மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர் கரோலின்கூறுகையில், ''திருப்பூர் மாவட்டத்தில் உடுமலைசோமவாரப்பட்டி அரசு நடுநிலைப்பள்ளி மட்டுமேதேர்வு செய்யப்பட்டுள்ளது. இப்பள்ளியில் கணித ஆய்வுக்கூடம் அமைக்க கல்வித்துறைக்கு கருத்துரு அனுப்பப்பட்டுள்ளது. நடப்பு கல்வியாண்டில் ஒவ்வொரு மாவட்டமாக இத்திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. விரைவில் இப்பள்ளியிலும் செயல்படுத்தப்படும்,'' என்றார்.

மாணவர்கள் வராததால் 2 அரசுப்பள்ளிகள் மூடல்


ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை அருகே, மாணவர்கள் வராததால், 2 அரசு தொடக்கப்பள்ளிகள் மூடப்பட்டன.

திருவாடானை ஒன்றியத்தில் உள்ள பல அரசு தொடக்கப்பள்ளிகளில் மாணவ, மாணவிகள் இல்லாததால் பள்ளிகள் மூடப்படுவது தொடர்கிறது. கடந்த மாதம் கிளியூர் பள்ளியும், நேற்று முன்தினம் கீழக்கோட்டை மற்றும் அறிவித்தி ஆகிய 2 கிராமங்களில் உள்ளஅரசு தொடக்கப்பள்ளிகளும் மூடப்பட்டன. ஆங்கில கல்வி மோகத்தாலும், தங்களது குழந்தைகளை வீட்டிலிருந்து வேனில் ஏற்றி சென்று, மாலையில் வீட்டருகே பாதுகாப்பாக இறக்கி விடுவதாலும், பெற்றோர்கள், திருவாடானையில் உள்ள தனியார் பள்ளிகளில் குழந்தைகளை சேர்ப்பதில் ஆர்வம் காட்டுகின்றனர். திருவாடானை உதவிக்கல்வி அலுவலர் வாசுகி கூறியதாவது: தொடர்ந்து மாணவர்கள் வராததால், கீழக்கோட்டை, அறிவித்தி கிராம தொடக்கப் பள்ளிகள் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளன. கீழக்கோட்டை பள்ளி தலைமை ஆசிரியை, தினைக்காத்தான் வயல் பள்ளிக்கும், அறிவித்தி பள்ளி தலைமை ஆசிரியர், வேறு பள்ளிக்கும் இடமாறுதல் பெற்று சென்று விட்டனர். குறைந்தது 20 மாணவர்களாவது சேரும் பட்சத்தில், மீண்டும் பள்ளிகளை திறக்க நடவடிக்கை எடுக்கப்படும். இதுதவிர, 10 குழந்தைகளுக்கு கீழ் படிக்கும் பள்ளிகள் குறித்து கணக்கெடுக்கப்பட்டு வருகிறது, என்றார்.

தமிழகத்தில் வெளிமாநில குழந்தை தொழிலாளர்கள்: கருத்தரங்கில் தகவல்


தமிழகத்தில் வெளிமாநில குழந்தை தொழிலாளர்கள் தான் அதிகம் உள்ளனர்'', என மதுரையில் தொழிலாளர் துறை சார்பில் நடந்த கருத்தரங்கில் குறிப்பிடப்பட்டது.

குழந்தை தொழிலாளர் ஒழிப்பு, மீட்பு, சட்ட அமலாக்கம் என்னும் தலைப்புகளில் மாநில தொழிலாளர் கல்வி நிலையம் மற்றும் தொழிலாளர் துறை சார்பில் நடந்த கருத்தரங்கில், வி.வி.கிரி தேசிய தொழிலாளர் கல்வி நிலைய பயிற்சியாளர் ஹெலன் பேசியதாவது: தமிழகத்தில் குழந்தை தொழிலாளர்கள் இல்லாத நிலை மாறிவருகிறது. இதற்கு காரணம் மாநில அளவில் நடந்து வரும் நல உதவிகள். குறிப்பாக பள்ளிகளில் இலவச கல்வி, சைக்கிள், லேப்-டாப் என பல உதவிகள் வழங்கப்பட்டு வருகிறது. சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், மதுரை என ஒரு சில மாவட்டங்களில் குழந்தை தொழிலாளர்கள் இருப்பது கண்டறிப்பட்டுள்ளன. இந்த குழந்தைகள் அனைவருமே வடமாநிலங்களை சேர்ந்தவர்கள். இவர்களின் வாழ்வாதாரத்திற்கு தேவையான திட்டங்கள் அவசியமாக உள்ளன, என்றார். தொழிலாளர் இணை ஆணையர் ராஜா தலைமை வகித்தார். தொழில் கல்வி நிலைய இயக்குனர் பாலசுப்பிரமணியன், குழந்தைகள் நலக்குழு தலைவர் ஜிம்ஜேசுதாஸ், பேராசிரியர்கள் ரமேஷ்குமார், அருண்குமார் மற்றும் பலர் பேசினர். தென்மாவட்டங்களை சேர்ந்த தொழிற்சாலை ஆய்வுத்துறை, சட்ட அமலாக்க அலுவலர்கள், தொழில்துறை ஆய்வாளர்கள் பங்கேற்றனர். ஏற்பாடுகளை தொழிலாளர் உதவி ஆணையர் சுப்பிரமணியம் செய்திருந்தார்.

நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலையில் பி.எட்., மாணவர் சேர்க்கை

நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலை பதிவாளர் (பொறுப்பு) தமிழ்ச்செல்வம் தெரிவித்துள்ளதாவது: இப்பல்கலையில் பி.எட்., (2 ஆண்டுகள்) பட்டப் படிப்பில் காலி இடங்களுக்கு, தற்போது மாணவர் சேர்க்கை நடக்கிறது. தகுதியுள்ளோர், www.msuniv.ac.inமூலம் தகவல் அறிக்கை மற்றும் விண்ணப்பங்களை பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். கட்டணமாக ரூ.650க்கு கேட்பு வரைவோலை இணைத்து 31.7.2014க்குள் விண்ணப்பங்கள் அனுப்பி வைக்க வேண்டும்.

பள்ளிகளில் மாணவர்கள் -ஆசிரியர்விகிதாச்சாரத்தை மாற்ற எதிர்பார்ப்பு


மாணவர்களின் எண்ணிக்கை அடிப்படையில், தொடக்க பள்ளிகளில், மாணவர் - ஆசிரியர் விகிதாச்சாரத்தை மாற்றி அமைத்து, கூடுதல் ஆசிரியர்களை நியமிக்க வேண்டும், என்ற எதிர்பார்ப்பு ஆசிரியர்களிடையே எழுந்துள்ளது. தமிழகம் முழுவதும், 23 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொடக்க பள்ளிகள் உள்ளன.50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆசிரியர்களும், 14 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவர்களும் பயின்று வருகின்றனர். இந்த தொடக்க பள்ளிகளில், அனைவருக்கும் இலவச கட்டாய கல்வி சட்டத்தின் படி, 30 மாணவர்களுக்கு ஒரு ஆசிரியர் என்ற விகிதாச்சாரம் கடைபிடிக்கப்படுகிறது.

கிராமங்களிலிருந்து நகரங்களுக்கு குடி பெயர்தல், ஆங்கில மோகம் ஆகியவற்றால், பட்டதாரிகளை உருவாக்கிய தொடக்க பள்ளிகளில் பலவற்றில் மாணவர்கள் எண்ணிக்கை குறைய தொடங்கியது. ஒரு கட்டத்தில், மாணவர்களே வராத நிலையில், பல பள்ளிகள் மூடப்பட்டு வருகின்றன. அடுத்த கட்டமாக 10 மாணவர்களுக்கு குறைவாக உள்ள பள்ளிகள் கணக்கெடுக்கப்பட்டு வருகிறது. 30 மாணவர்களுக்கு ஒரு ஆசிரியர் என்பது நடைமுறையில் இருந்தாலும், 10 மாணவர்களுக்கு குறைவாக உள்ள பள்ளிகளிலும் 2 ஆசிரியர்கள், சத்துணவு அமைப்பாளர், உதவியாளர் பணியாற்றி வருகின்றனர். 50 மாணவர்கள் உள்ள பள்ளியிலும், இதே போன்று இரண்டுஆசிரியர்கள் பணியாற்றி வருகின்றனர்.

இவர்களில் ஒருவர் விடுமுறை எடுத்தால், மற்றவர் அனைத்து மாணவர்களுக்கும் வகுப்பு எடுக்க வேண்டியது உள்ளது. இதனால், விடுமுறையின்றி பணியாற்றும் நிலையில், ஆசிரியர்கள் உள்ளனர். எனவே, அதிக எண்ணிக்கையில் மாணவர்களை சேர்த்து, இயங்கி வரும் தொடக்க பள்ளிகளில், மாணவர் - ஆசிரியர் விகிதாச்சாரம் என்ற அடிப்படையில் இல்லாமல், பள்ளியின் செயல்பாடு, மாணவர்களின் வருகையை கணக்கில் கொண்டு கூடுதல் ஆசிரியர்களை நியமிக்க வேண்டும், என்ற எதிர்பார்ப்பு ஆசிரியர்களிடையே எழுந்துள்ளது.தொடக்க பள்ளி ஆசிரியர் ஒருவர் கூறும்போது: ஒரு சில தலைமை ஆசிரியர்கள், மாணவர்களை அதிக அளவில் சேர்த்து வருகிறோம். 60 மாணவர்களுக்கு மேல் இருந்தால் தான், 3 ஆசிரியர் நியமிக்கப்படுகின்றனர். அதுவரை இரண்டு ஆசிரியர்கள் மட்டுமே பணிபுரிகின்றனர்.
இதனால், ஒருவர் எதிர்பாராத விதமாக விடுப்பு எடுத்தாலும், மற்றவர் அனைத்து மாணவர்களையும் கவனிக்க வேண்டியது உள்ளது. எனவே, இந்த விகிதாச்சாரத்தை மாற்ற வேண்டும், என்றார்.

பள்ளிக்கூடங்களில் முதலுதவி பெட்டி, தீயணைப்பு சாதனம் இருக்க வேண்டும்; தலைமை ஆசிரியர்களுக்கு கல்வித்துறை சுற்றறிக்கை


பள்ளிக்கூடங்களில் முதலுதவி பெட்டி, தீயணைப்பு சாதனங்கள் தயார் நிலையில் சரியாக இருக்க வேண்டும் என்று அனைத்து பள்ளிக்கூட தலைமை ஆசிரியர்களுக்கும் பள்ளிக்கல்வி இயக்குனர் வி.சி.ராமேஸ்வர முருகன் சுற்றறிக்கை விடுத்துள்ளார்.

தலைமை ஆசிரியர்களுக்கு சுற்றறிக்கை

தமிழக பள்ளிக்கல்வி முதன்மை செயலாளர் த.சபீதா உத்தரவுபடி பள்ளிக்கல்வி இயக்குனர் வி.சி.ராமேஸ்வர முருகன் அனைத்து பள்ளிக்கூட தலைமை ஆசிரியர்களுக்கும் ஒரு சுற்றறிக்கை அனுப்பி உள்ளார். அதில் கூறியிருப்பதாவது:-

* மழைக்காலங்களில் இடி, மின்னல் ஆகியவற்றின் போது மாணவர்களோ அல்லது ஆசிரியர்களோ மரத்தின் அடியில் நிற்கக்கூடாது என்று அறிவுரை வழங்க வேண்டும்.

* பள்ளிக்கூட வளாகத்தில் உள்ள மதில் சுவர்கள் போதிய அளவுக்கு உயரமாக உள்ளதா என்பதை பார்த்து உயரம் இல்லாவிட்டால் உயரமான அளவுக்கு கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்.

* பள்ளிக்கூடங்களில் கட்டிடங்கள் பாதுகாப்பற்ற நிலையில் இடிந்து விழும் நிலையில் இருந்தால் தகவல் தெரிவித்துவிட்டு அதை பாதுகாப்பாக அகற்ற வேண்டும்.

முதலுதவி பெட்டி

* பள்ளிக்கூடங்களில் மாணவர்கள் அல்லது ஆசிரியர்கள் ஏதாவது கீழே விழுந்தாலோ அல்லது ஏதாவது காயம் ஏற்பட்டாலோ அவர்களுக்கு உடனடியாக முதலுதவி சிகிச்சை அளிக்க வேண்டும். எனவே அனைத்து பள்ளிகளிலும் முதலுதவி செய்யும் வகையில் மருத்துவ பொருட்கள் அடங்கிய முதலுதவி பெட்டி இருக்க வேண்டும்.

* அதுபோல ஏதாவது தீ விபத்து ஏற்பட்டால் தீயணைப்பு படையினர் வருமுன்னதாக உடனடியாக தீயை அணைக்க தீயணைப்பு சாதனங்கள் எப்போதும் தயார் நிலையில் வைத்திருக்கவேண்டும்.

* விளையாட்டு நேரத்தின்போது ஈட்டி எறிதல், குண்டு எறிதல் உள்ளிட்ட பொருட்களை கவனமாக பாதுகாப்பாக கையாள வேண்டும்.

* பள்ளிக்கூடங்களின் அருகில் வேகத்தடை இருக்க வேண்டும். இல்லாவிட்டால் வேகத்தடை அமைக்க ஏற்பாடு செய்ய வேண்டும்.

புதர்களை அகற்ற வேண்டும்

* பள்ளிக்கூடங்கள் அல்லது பள்ளிக்கூடங்களின் அருகில் புதர்கள் ஏதாவது இருந்தால் அவற்றை அகற்ற ஏற்பாடு செய்ய வேண்டும்.

* பள்ளிக்கூட வளாகத்தை சுத்தமாகவும். பாதுகாப்பாகவும் வைத்திருக்க வேண்டும்.

இவ்வாறு அந்த சுற்றறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பள்ளிகளை மூடும் வழக்கில் அரசு பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு


போதிய அடிப்படை வசதிகள் இன்றி, அங்கீகாரமும் இன்றி இயங்கும் பிரீ ஸ்கூல், பிளே ஸ்கூல் போன்ற பள்ளிகளை மூட வேண்டும் என்று தொடரப்பட்ட வழக்கில், தமிழக அரசு பதில் அளிக்க வேண்டும் என, சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை, வில்லிவாக்கத்தை சேர்ந்த வழக்கறிஞர் பாலசுப்ரமணியன், உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு:சென்னையில், பிளே ஸ்கூல், பிரீ ஸ்கூல் என்ற பெயர்களில், 760 பள்ளிகள் முறையான அங்கீகாரம் பெறாமல் இயங்கி வருகின்றன. இந்த பள்ளிகளில், விளையாட்டு மைதானம் இல்லை, ஆசிரியர் பற்றாக்குறை என்று பல பிரச்னைகள் உள்ளன.

இந்த பள்ளிகளில், ஆண்டுக்கு 30 ஆயிரம் ரூபாய் வரை கட்டணம் வசூலிக்கப்படுகிறது; ரசீதும் தருவதில்லை. கல்வித்துறையோ, தொடக்க கல்வி அலுவலர்களோ, முதன்மை, மாவட்ட, கல்வி அலுவலர்களோ கண்டு கொள்ளவில்லை.

பொது நலன் கருதி, இந்த வகை பள்ளிகளை மூட நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு, மனுவில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த மனுவை, நீதிபதிகள் பால் வசந்தகுமார், ரவிச்சந்திரபாபு ஆகியோர் விசாரித்து, பதில் மனு தாக்கல் செய்யுமாறு, கல்வித்துறை செயலர், தொடக்கப்பள்ளிகள் இயக்கக இயக்குனர், சென்னை முதன்மை கல்வி அலுவலர், மாவட்ட கல்வி அலுவலர் மற்றும் பள்ளி நிர்வாகங்களுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டனர்.