Flash News

Flash News அன்பார்ந்த ஆசிரிய பெருமக்களே! இந்த வலை தளத்தில் தொடக்கப் பள்ளி மாணவர்களுக்கு தேவையான அடிப்படை கணித செயல்பாடுகளுக்கான விளையாட்டுகள் மற்றும் ஆங்கில விளையாட்டுகள் தரப் பட்டுள்ளன. அவற்றைக் கண்டு பள்ளிகளில் செயல்படுத்துமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்...01.07.2014 முதல் அகவிலைப்படி 7% உயருகிறது. ...

Tuesday, 23 September 2014

TET வழக்குகள் :டெல்லி உச்சநீதி மன்றத்தில் மேல்முறையீடு செய்யமுடிவு?

ஆசிரியர் தேர்வு வாரியம் பின்பற்றும் 'வெயிட்டேஜ்' முறையை ரத்து செய்ய கோரி பலர்வழக்கு தொடர்ந்தனர். அதேபோல, ஆசிரியர் தகுதி தேர்வில் இடஒதுக்கீடு பிரிவினர்களுக்கு 5 சதவீதம் மதிப்பெண்சலுகை அளித்து தமிழக அரசுபிறப்பித்த உத்தரவை எதிர்த்தும் சிலர் வழக்கு தொடர்ந்தனர்.இந்த வழக்குகளை நீதிபதிகள் சத்தீஷ்குமார் அக்னிகோத்ரி, எம்.எம்.சுந்தரேஷ் ஆகியோர் விசாரித்தனர்
இந்த வழக்கின் தீர்ப்பை நீதிபதிகள் இன்று காலையில் பிறப்பித்தார்கள். அதில் நீதிபதிகள்,இந்த வெயிட்டேஜ் முறையில் அரசின் கொள்கை முடிவு விதி மீறல் இல்லை என்றுநிரூபிக்கப்படவில்லை. எனவே, அரசின் இந்த கொள்கை முடிவில் இந்த கோர்ட்டு தலையிடமுடியாது. வெளியிட்டேஜ் முறையை எதிர்த்து தொடரப்பட்ட வழக்குகளை தள்ளுபடி செய்கிறோம்.
ஆசிரியர் தகுதி தேர்வில் 5 சதவீதம் மதிப்பெண் சலுகை வழங்க அரசுக்கு அதிகாரம்உள்ளதால், இதுதொடர்பாக தாக்கல்செய்துள்ள மனுக்களையும் தள்ளுபடி செய்கிறோம்.இவ்வாறு கூறியுள்ளனர்.
இத் தீர்ப்புக்குறித்து வழக்கு தொடுத்த பாதிக்கப்பட்ட பட்டதாரிகள் வழக்கறிஞர்களுடன் ஆலோசனை நடத்தி டெல்லி உச்சநீதி மன்றத்தில் மேல்முறையீடு செய்யமுடிவெடுத்துள்ளதாக த்கவல்கள் தெரிவிக்கின்றன.

மாணவர்களுக்கு இலவச காலணி வழங்கும் திட்டத்தில் குளறுபடி : 2011 - 12ல் எடுத்த கால் அளவிற்கு இந்த ஆண்டு வினியோகம்

மாணவர்களுக்கு, வழங்கியுள்ள இலவச காலணிகள், பழைய அளவை வைத்து தயாரித்து அனுப்பப்பட்டுள்ளதால், அவை, மாணவர்களுக்குப் பொருந்தாத நிலை ஏற்பட்டுள்ளதாக, ஆசிரியர்கள் கூறுகின்றனர்.அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு, 14 வகையான இலவச திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன.
சீருடையில்ஆரம்பித்து, காலணி, புத்தகப் பை, கணித உபகரணப் பெட்டி, 'லேப்டாப்' மற்றும் மலைப்பிரதேச மாணவர்களுக்கு, கம்பளிச் சட்டை வரை, திட்டம் நீள்கிறது.
இதில், புத்தகப் பையும், காலணியும் ஆண்டுதோறும் வழங்கப்படுவது இல்லை. மூன்று ஆண்டுகளுக்கு ஒரு முறை வழங்கப்படும் என, அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். ஆனால், அரசு பள்ளிகளில், புதிதாக சேரும் மாணவ, மாணவியருக்கு, அனைத்து திட்டங்களும் வழங்கப்படுவதாக, அதிகாரிகள் கூறுகின்றனர்.தமிழக அரசு செயல்படுத்தும், 14 வகை திட்டங்களில், இலவச காலணி வழங்கும் திட்டம் மட்டும் குளறுபடியாக நடந்து வருகிறது.
கடந்த, 2011 - 12ல் திட்டம் அறிவிக்கப்பட்டு, மாணவர்களிடம், கால் அளவு எடுக்கப்பட்டது. 2012 - 13ம் கல்வி ஆண்டில், முதல் முறையாக, 78.82 லட்சம் மாணவர்களுக்கு, 104.15 கோடி செலவில், இலவச காலணிகள் வழங்கப்பட்டன.சரியாக கால் அளவு எடுக்காததால், பொருந்தாத காலணிகளை போட வேண்டிய நிலை, மாணவர்களுக்கு ஏற்பட்டது.இந்நிலையில், இரண்டாவது முறையாக, இந்த ஆண்டு, ஒன்று முதல், 10ம் வகுப்பு வரை பயிலும் 80 லட்சம் மாணவர்களுக்கு, இலவச காலணி வழங்கப்பட உள்ளது.இதற்காக தயாரான காலணிகள், மாவட்டங்களுக்கு அனுப்பப்பட்டு வருகின்றன. 2011 - 12ல் எடுத்த அளவின்படியே, இப்போதும் காலணிகள் வந்திருப்பதை கண்டு, ஆசிரியர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இவை, மாணவர்களுக்கு பொருந்துமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
மேலும், காலணியின் தரமும் சிறப்பாக இல்லை என, குற்றச்சாட்டு எழுந்துள்ளது.இந்நிலையில், 'பள்ளிகளுக்கு அனுப்பப்பட்டுள்ள காலணிகளை, மாணவர்களுக்கு வழங்க வேண்டாம்' என, மாவட்ட கல்வி அதிகாரிகளுக்கு, இலவச திட்டங்களை செயல்படுத்தும், தமிழ்நாடு பாடநூல் கழகம் உத்தரவிட்டு உள்ளது.இது குறித்து, ஆசிரியர் சங்க நிர்வாகி ஒருவர் கூறியதாவது:இலவச சீருடை, பாடப் புத்தகம், நோட்டுப் புத்தகம் ஆகியவை மட்டும், மாணவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளன. தற்போது, காலணிகள் வந்துள்ளன.ஆனால், 'மாணவர்களுக்கு வழங்க வேண்டாம்' என, எங்களுக்கு, மாவட்ட அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர். இதற்கான காரணம் தெரியவில்லை.காலணியின் தரம், உயர்வாக உள்ளது எனக் கூற முடியாது. தனியார் கடையில், 1,000 ரூபாய் கொடுத்து வாங்கும் காலணியே, ஆறு மாதம் தான் வருகிறது. எனவே, அரசு இலவசமாக கொடுக்கும் காலணியின் தரத்தை ஆய்வு செய்ய தேவை இல்லை.
இவ்வாறு, அந்த நிர்வாகி தெரிவித்தார்.

13 ஆயிரம் ஆசிரியர்களுக்கு பணிநியமனம் எப்போது கிடைக்கும்?

                             

Monday, 22 September 2014

ஐஎஸ்ஓ (ISO) தரச் சான்றிதழ் பெற்ற அரசு தொடக்கப் பள்ளி!

பள்ளித் தலைமை ஆசிரியரின் முயற்சியால் கிருஷ்ணகிரி மாவட்டம் கஞ்சனூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி, தனியார் பள்ளிக்கு நிகராக பல்வேறு வசதிகளைப் பெற்று மாணவர்களை கவர்ந்து வருகிறது.
அரசுப் பள்ளிகளில் பயிலும் குழந்தைகளை, தனியார் பள்ளிக்குக் கொண்டு சேர்க்கும் இன்றைய காலகட்டத்தில், தனியார் பள்ளியில் பயிலும் மாணவர்களை, அரசுப் பள்ளியில் கொண்டு சேர்க்கும் அதிசயம் நிகழ்கிறது என்றால், உங்களால் நம்ப முடிகிறதா? அதுவும், தமிழகத்தின் ஒரு மூலையில் உள்ள, ஒரு குக்கிராமத்தில் உள்ள அரசுப் பள்ளியில் இது நடந்துள்ளது. முயன்றால் எதுவும் சாத்தியம்...
ஐந்தாம் வகுப்பு படிக்கும் சத்தியபிரியாவின் தாத்தாவுக்கு செருப்பு தைக்கும் தொழில். பெற்றோருக்கு கூலி வேலை. இருந்தாலும், பள்ளியில் ஓய்வு நேரங்களில், மடிக்கணினியில், ஓவியம் வரைவதில் அதிக ஆர்வம். வீட்டில் மின்சாரம் இல்லாத மேகவண்ணன் படிப்பது, மூன்றாம் வகுப்பு. பள்ளியில் திரையிடப்படும், ஆங்கில பேச்சுப் பயிற்சி வகுப்பு நிகழ்ச்சியில் கலந்துகொள்வதில் மட்டற்ற பிரியம். வீட்டில் உப்பு நீரைப் பருகும் திலகவதி, வகுப்பு நேரங்களில், சுத்திகரிக்கப்பட்ட தண்ணீரை அடிக்கடி குடிப்பதில் விருப்பம். இன்றும் எழுத்துக் கூட்டி படிக்கத் தெரியாத பெற்றோருக்குப் பிறந்த, நான்காம் வகுப்பு வினோதினி, வகுப்புக்கு வந்தவுடன் படிப்பது, ஆங்கில நாளிதழ். மேற்கத்திய, இந்தியப் பாணிக் கழிவறைகள் இரண்டு இருப்பதால், அங்கு படிக்கும் நாகேந்திரனுக்கு சிறுநீர் கழிக்க திறந்தவெளி தேவையில்லை.
மாலையில் ஆம்னி வேனில் வீட்டுக்குச் செல்லும் போது, சக மாணவர்களைப் பார்த்துக் கையசைப்பது, கருணாவுக்கு பெருமிதம். சகலாவதிக்கு சதுரங்க விளையாட்டு; சுரேந்தருக்கு, குழந்தைகள் படிப்பதற்கான புத்தகங்கள். முனுசாமிக்கு, கேரம் போர்டு. இப்படி ஒவ்வொரு மாணவரின் தனித்தனி விருப்பங்களைப் பூர்த்தி செய்வது, இதெல்லாம் பெருநகரங்களில் உள்ள, சி.பி.எஸ்.இ., மெட்ரிக், ஆங்கிலோ-இந்தியன் பள்ளி என நீங்கள் நினைத்திருந்தால், உங்கள் எண்ணங்களை ரப்பர் வைத்து அழித்து விடுங்கள். தமிழகத்தின் வறட்சி மாவட்டமான, கிருஷ்ணகிரி மாவட்டம், மத்தூர் ஒன்றியத்தில் உள்ள கஞ்சனூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளிதான் இது.
மத்தூர் ஒன்றியத்தில் உள்ள, அரசு தொடக்கப் பள்ளிகள், ஒவ்வொன்றாக மூப்பட்டு வரும் நிலையில், இப்பள்ளி மட்டும், தனியார் பள்ளிகளுக்கு இணையாக போட்டி போட்டு வருகிறது. ஒரு நாளைக்கு, நான்கு முறை மட்டுமே அரசுப் பேருந்து வரும் இந்தக் குக்கிராமத்தில், இப்படி ஒரு சாதனை எப்படிச் சாத்தியம் எனப் பொதுமக்களிடம் கேட்டால், அவர்களின் விரல்கள், பள்ளித் தலைமை ஆசிரியர் வீரமணியை நோக்கியே நீள்கின்றன.
2007 வரை, இந்தப் பள்ளியின் நிலைமை தலைகீழ். இம்மாவட்டத்தில், குழந்தைத் திருமணம் அதிகளவு நடப்பதால், பெரும்பாலோர், பெண் குழந்தைகளை பள்ளியில் சேர்ப்பதில்லை. மேலும், அருகில் உள்ள, பெங்களூருக்கு வேலைக்குச் செல்வதால், குழந்தைகளையும் கூட்டிச் செல்வர். அதுமட்டுமின்றி, இங்குள்ள செங்கல் சூளைகளில், குழந்தைகளை வேலைக்கு அமர்த்துவதால், பள்ளிக்கு அனுப்புவதில்லை. மது பழக்கம், அதிகளவில் புழக்கத்தில் இருப்பதால், தங்கள் குழந்தைகள் படிப்பு குறித்து, பொதுவாக தந்தைகளுக்கு எந்த அக்கறையும் இல்லை. இதனால், 30 பேராகக் குறைந்தது, மாணவர்களின் எண்ணிக்கை.
“மாணவர்களின் படிப்பு, பெற்றோர்களின் கைகளில் இருக்கிறது. அதனால், முதலில் பெற்றோர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்பதை உணர்ந்தேன். தினமும், மாலை நேரங்களில், கஞ்சனூர் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளுக்குச் செல்வேன். குழந்தைகள் படிக்க வேண்டிய அவசியத்தை உணர்த்தினேன். ஆரம்பத்தில், அப்பகுதி மக்கள் இப்பிரச்சினையைப் புரிந்துகொண்டதாகக் கூடத் தெரியவில்லை. தொடர்ச்சியாக, விழிப்புணர்வு ஏற்படுத்தியதன் விளைவாக, குழந்தைகளைப் பள்ளிக்கு அனுப்பத் துவங்கினர். அதுதான் என் முதல் வெற்றி” என்கிறார், தொடக்கப் பள்ளியின் தலைமை ஆசிரியர் வீரமணி.
பொதுமக்கள், குழந்தைகளைப் பள்ளிக்கு அனுப்பினாலும், பிரச்சினை வேறொரு வடிவில் காத்திருந்தது. அது பள்ளியின் உள்கட்டமைப்பு பிரச்சினை. மலையடிவாரத்தில் பள்ளியின் இருப்பிடம் அமைந்திருந்ததால், சறுக்கு விளையாட்டு விளையாடும் வகையில், அதன் அமைப்பு இருந்தது. கழிவறை சுத்தமாக இருக்காது. சமையல்கூடம் பக்கம் போனாலே, வாந்தி வரும். பள்ளி வளாகத்தில் சுகாதாரம் என்ற பேச்சுக்கே இடமிருக்காது. எங்கு பார்த்தாலும் குப்பைகள். மேலும், மாலைக்கு மேல் சமூக விரோதிகளின் கூடாரமாகி விடும். பள்ளியின் உள்கட்டமைப்பை வலுப்படுத்தவில்லை என்றால், இருக்கும் மாணவர்களும், பள்ளியை விட்டு நின்று விடுவர் என உணர்ந்த வீரமணி, அனைவருக்கும் கல்வித் திட்டம் மூலம், அனைத்து வசதிகளையும் பெற்றார். முதலில், பள்ளி வளாகத்தில் மண்ணை நிரவி, சமதளப்படுத்தினார். வளாகம் தயார். மற்றவை? தொடக்கப் பள்ளிகளுக்கு, அரசு வழங்கும் அனைத்து வசதிகளையும், போராடிப் பெற்றார். விளைவு, இப்போது, டைல்ஸ் தரை, சுத்தமான ஐந்து கழிவறைகள். பாதுகாப்பான சுற்றுச்சுவர். சூரிய ஒளியின் மூலம் மின்சக்தி பெறும் வசதி. வளாகம் முழுக்க விதவிதமான செடி கொடி, மரங்கள் இத்யாதி இத்யாதி எனப் பெருகியது.
இப்போது, அதிக முன்னேற்றம் அடைந்துள்ளது. மாணவர்கள், ஆங்கிலப் பேச்சுப் பயிற்சி பெற தொலைக்காட்சி, ஓவியங்கள் வரைய, மற்ற செய்திகள் தெரிந்துகொள்ள மடிக்கணினி, அனைத்து விதமான விளையாட்டுப் பொருட்கள், குழந்தைகளுக்கு எழுதப்பட்ட புத்தகங்கள். நூலகம் முழுக்க, ‘புதிய தலைமுறை’, ‘புதிய தலைமுறை கல்வி’ வார இதழ்கள், நடுப்பக்க வாசகங்கள். குழந்தைகளுக்கு சொல்வதற்கு, பெரியவர்களுக்காக எழுதப்பட்ட புத்தகங்கள் எனப் பயன்படும் வகையில் நூலகம் அமைக்கப்பட்டுள்ளது. அதனால், இப்பள்ளி, ஐ.எஸ்.ஓ., தரச் சான்றிதழ் பெற்றுள்ளது.
இரண்டாவது ஆண்டாக, இப்பள்ளியில் ஆங்கில வழிக்கல்வி நடந்து வருகிறது. இப்பள்ளியின் பெருமை, அருகில் உள்ள படப்பள்ளி, புதுக்காடு, கயிற்றுக்காரன் கொட்டாய், கூராக்கம்பட்டி, குரும்பர் தெரு உள்ளிட்ட பகுதிகளுக்குப் பரவியதால், மத்தூரிலும், ஊத்தங்கரையிலும் உள்ள தனியார் பள்ளிகளில், தங்கள் குழந்தைகளைச் சேர்த்த பெற்றோர்கள், இப்போது, கஞ்சனூர் பள்ளியை நோக்கி படையெடுத்துக் கொண்டிருக்கின்றனர். தனியார் பள்ளியையே மிஞ்சும் வகையில், உள் கட்டமைப்பு வசதி, செயல்முறைக் கல்வி, போதிய பாதுகாப்பு, பராமரிப்பு போன்றவை இருப்பதால், அருகில் உள்ள கிராமத்தினர், கஞ்சனூர் பள்ளியில் தங்கள் குழந்தைகளைச் சேர்க்க வருகின்றனர். அதனால், மூடப்படும் நிலையில் இருந்த பள்ளியில், இன்று, 150-க்கும் மேற்பட்ட மாணவர்கள், படித்து வருகின்றனர்.
பக்கத்து ஊர்களில் பயிலும், நடுநிலை, உயர்நிலை, மேல் நிலைப் பள்ளி மாணவர்கள், தீய பழக்கங்களுக்கு அடிமையாகி விடக்கூடாது என்பதற்காக, ‘கஞ்சனூர் இளைஞர் நற்பணி மன்றம்’ அமைத்துக் கொடுத்துள்ளார் வீரமணி. இம்மாணவர்கள் மூலம், பெற்றோர்களுக்கு, விழிப்புணர்வு பிரச்சாரம் நடக்கிறது. பள்ளிக்கூடமே இல்லாத ஊரில், தற்போது பட்டதாரி மாணவர்கள் உருவாகி வருகின்றனர். நற்பணி மன்றத்தில் உள்ள அவர்கள், மாலை நேரங்களில், எட்டாம் வகுப்புக்குமேல் பயிலும், அனைத்து மாணவர்களுக்கும் டியூஷன் எடுத்து வருகின்றனர். வீடுகளில் போதுமான வசதி இல்லை என்பதால், இரவு வரை, பள்ளியில் டியூஷன் நடக்கிறது. இக்காரணங்களுக்காக, மாவட்ட அளவில், பள்ளிகளுக்குத் தரப்படும் அனைத்து விருதுகளையும், இப்பள்ளி பெற்றுள்ளது. நூற்றுக்கணக்கான விருதுகளும், கோப்பைகளும், நூலகத்தில் அடுக்கி வைக்கப்பட்டுள்ளன. மாவட்ட அளவில் நடக்கும் பேச்சு, கட்டுரை, குறள் ஒப்புவித்தல் போட்டிகளில், இப்பள்ளி மாணவர்கள் பரிசு பெற்றுள்ளனர்.
மாணவர்களுக்கு மரம் நடும் விருப்பம் வர வேண்டும் என்பதற்காக, ஒவ்வொரு மாணவரையும் ஒரு மரத்தை நடச் செய்து, அதைப் பராமரிக்கும் பொறுப்பு, அவர்களிடமே கொடுக்கப்பட்டுள்ளது. இப்பள்ளியில் உள்ள தனிச் சிறப்பு, மாணவர்களின் பிறந்த நாள் கொண்டாட்டம். பிறந்த நாள் காணும் மாணவருக்கு, ஆசிரியர்களின் சார்பில், கிரீடமும் பரிசுப் பொருளும் வழங்கப்படும். மேலும், அனைத்து மாணவர்களுக்கும் இனிப்பு வழங்கப்படும்.
பள்ளியின் வளர்ச்சியில் பெற்றோர்களும் பங்கு பெற வேண்டும் என்பதற்காக, மாதம் ஒரு முறை, அவர்களின் குழந்தைகள் என்னென்ன படிக்கின்றனர்; அவர்களுக்கு எதில் விருப்பம், அதை எவ்வாறு முன்னேற்றுவது போன்ற பல்வேறு ஆலோசனைகளையும் வழங்குகின்றனர். இதனால், பெற்றோர்களுக்கும், பள்ளிக்குமான நெருக்கம் மேலும் அதிகரிக்கிறது. அதுமட்டுமின்றி, ஒவ்வொரு ஆண்டும் நடக்கும் ஆண்டு விழாவான கல்வித் திருவிழாவில், பெற்றோர்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. இதனால், பள்ளியின் வளர்ச்சியில் பெற்றோர்களும் கை கோர்க்கின்றனர்.
எந்த மாணவர் முகத்திலும் சோர்வு இல்லை; களைப்பு இல்லை; மாலை நேர மணி அடித்தவுடன், பள்ளியை வெறுத்து ஓடும் அவசரம் இல்லை; குறிப்பாக, பள்ளியின் எந்த இடத்திலும் பிரம்பு இல்லை. அந்தப் பள்ளி வளாகம் முழுவதும், சிரிப்பலைகளால் கட்டமைக்கப்பட்டுள்ளது. அது மாணவர்களின் முகத்திலும் எதிரொலிக்கிறது. “நாங்கள் நல்ல சம்பளம்தான் வாங்குறோம். அதுக்கு உண்மையா இருக்கணும்னு முயற்சி பண்றோம். எங்களால, ஒரு சின்ன ஊர்ல மாற்றம் வந்துதுன்னா, அதை விட பெரிய விருது, வேற என்ன இருக்க முடியும் சார்” என்கிறார் வீரமணி.
கஞ்சனூரில் தொடக்கப்பள்ளி மட்டுமே இருப்பதால், உயர்நிலை, மேல் நிலை வகுப்புகள் படிப்பதற்கு, ஊத்தங்கரைக்கும், மத்தூருக்கும் செல்ல வேண்டிய நிர்பந்தத்தில் மாணவர்கள் உள்ளனர். எனவே, இதே ஊரில், நடுநிலைப் பள்ளியாவது அமைக்க வேண்டும் என்பது, அப்பகுதி மக்களின் நெடுநாள் கோரிக்கை. அதுமட்டுமின்றி, இப்போது, 150-க்கும் மேற்பட்ட மாணவர்கள் இருந்தாலும், போதுமான ஆசிரியர்கள் இல்லை. நன்றாகச் செயல்படும் இதுபோன்ற அரசுப் பள்ளிகளை ஊக்குவிக்க அரசு ஏதாவது செய்யுமா?

ஆரம்ப, நடுநிலை பள்ளிகளில் 64 வகையான பதிவேடுகள்; ஆசிரியர்கள் குமுறல்

அரசு ஆரம்ப, நடுநிலை பள்ளிகளில் 64 வகையான பள்ளி பராமரிப்பு பதிவேடுகளை ஆசிரியர்கள் தங்கள் சொந்த செலவில் வாங்கி வருகின்றனர்.தமிழகத்தில் 36 ஆயிரம் அரசு ஆரம்ப, நடுநிலை பள்ளிகள் உள்ளன. இவற்றில், மாணவர்கள் நலன் கருதி, பாட புத்தகங்கள், நோட்டுகள், சீருடைகள், மதிய உணவு என பல்வேறு நலத்திட்டங்களை, அரசு செயல்படுத்தி வருகிறது. இதே போல், உயர்நிலை, மேல்நிலை பள்ளி மாணவர்களுக்கு லேப்டாப், இலவச சைக்கிள் வழங்கப்படுகின்றன.
தமிழகத்தில் ஆண்டுக்கு 17 ஆயிரம் கோடி ரூபாய் பள்ளி கல்வித்துறை செலவிடுகிறது. ஆனால், அரசு ஆரம்ப, நடுநிலை பள்ளிகளில், பள்ளி பராமரிப்புக்கான பள்ளி பதிவேடு, ஆசிரியர்களுக்கான வருகை பதிவேடு, மாணவர் வருகை பதிவேடு, ஊதிய பதிவேடு, தொடர் மற்றும் முழுமையான மதிப்பீட்டு பதிவேடு, வாசித்தல் திறன் பதிவேடு, பார்வையாளர் பதிவேடு, இலவச பொருள் வழங்கும் பதிவேடு, மாணவர் திறன் பதிவேடு, தணிக்கை பதிவேடு, காலநிலை அட்டவணை என 64 வகையான நோட்டுகளை, பள்ளியின் தலைமை ஆசிரியர்கள் தங்களது சொந்த செலவில் வாங்கி பராமரிக்கின்றனர். மேலும், மாணவர்களுக்கான பாட புத்தகங்கள், சீருடைகளை, ஆண்டுக்கு மூன்று முறை, வாடகை வாகனம் பிடித்து, கொண்டு வரவேண்டியுள்ளது. இதனால் ஆசிரியர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.இது குறித்து தலைமை ஆசிரியர்களிடம் கேட்டபோது, தலைமை ஆசிரியர்களுக்கு வெளியே சொல்ல முடியாத சிரமங்கள் நிறைய உள்ளன. மாவட்ட கல்வி அதிகாரிகள், ஆசிரியர்களுடன் பேச்சு வார்த்தை நடத்தி, குறைகளை கேட்டு, நிவர்த்தி செய்ய அரசு முன்வர வேண்டும், என்றனர்.

தகுதி தேர்வு அறிவிப்புக்காக காத்திருக்கும் ஆசிரியர்கள்

கட்டாயக் கல்வி உரிமை சட்டத்தின்படி ஆசிரியர் தேர்வு வாரியம் சார்பில் நடத்தப்படும் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றால் தான் அரசு பள்ளிகளில் ஆசிரியராக முடியும். மேலும், அரசு நிதி உதவி பெறும் பள்ளிகளில் கடந்த 2009ம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்திற்கு பிறகு பணியில் சேர்ந்தவர்கள் 2016ம் ஆண்டுக்குள் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். இல்லையேல் ஊதியம் வழங்கபடமாட்டது, என அறிவிக்கப்பட்டுள்ளது.
குறைந்தது ஆண்டிற்கு ஒரு முறையாவது ஆசிரியர் தேர்வு வாரியம் சார்பில் தகுதி தேர்வு நடத்தப்பட வேண்டும். ஆனால் இந்த ஆண்டிற்கு இதுவரை தேர்வு குறித்த அறிவிப்பு வெளியாகவில்லை. இதனால் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும் என்ற கட்டாயத்தில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளிகளில் பணிபுரியும் இடை நிலை, பட்டதாரி ஆசிரியர்கள் பி.எட்., முடித்த புதிய பட்டதாரிகள் தகுதி தேர்வு அறிவிப்பிற்காக காத்திருக்கின்றனர்.

TNTET - புதியதாக பணியில் சேர இருக்கும் ஆசிரியர்கள் கிழ்க்கண்டவற்றை தயார் படுத்தி கொள்ளுங்கள்.

1.STATE BANK OF INDIA வங்கியில் கணக்கு தொடங்குங்கள்.
2.PAN Card க்கு apply செய்யுங்கள்.
3.Service Record book வாங்குங்கள்.
4.Medical Fitness Certificate வாங்குங்கள்.
5. சான்றிதழ்களின் உண்மை தன்மை(DEGREE CERTIFICATE GENUINENESS)
பின் உங்களுடைய பள்ளியின் இருப்பிடத்தை தெரிந்து கொள்ளுங்கள்.
தனியாக வேறு மாவட்டத்தில் தங்குபவர்கள் உங்கள் மாவட்ட
நண்பர்களுடன் சேர்ந்து கொள்ளுங்கள்.
குடும்பத்துடன் வேறு மாவட்டத்தில் தங்குபவர்கள் நல்ல வீடாக
பார்த்து கொள்ளுங்கள்.
குடும்பத்துடன் வேறு மாவட்டத்தில் தங்குபவர்கள் Ration Card ,Gas cylinder போன்றவற்றை மாற்றும் வழி முறைகளை தெரிந்து கொள்ளுங்கள்.
வெளி மாவட்டத்தில் பணி செயப்போகிறவர்கள்உதவிக்கு இணையத்தில் காணப்படும் பல்வேறு சங்க பிரிதிநிதிகளின் அலைபேசி எண்ணை தொடர்புக்கொள்ளுங்கள்... பெரும்பான்மையனவர்கள் சங்க பாகுபாடின்றி உங்களுக்கு உதவுவார்கள்...

கசப்புணர்வினை அதிகரித்துவிடக்கூடாது!

ஆனந்த விகடனில் திரு.பாரதி தம்பி எழுப்பியுள்ள விவாதம் நல்லதொரு திசைவழியில் பயணிக்கவேண்டும். மாறாக கசப்புணர்வினை அதிகரித்துவிடக்கூடாது.
1990 களில் அமலாக்கப்பட்ட புதிய பொருளாதாரக் கொள்கை ஆசிரியர் மாணவர் விகிதாச்சாரத்தினை 20 மாணவர்களுக்கு ஒரு ஆசிரியர் என்பதை 40 மாணவர்களுக்கு ஒரு ஆசிரியர் என்று மாற்றியமைக்க காரணமாக இருந்தது. இதே வேளையில் பன்னாட்டு கம்பெனிகளும் இந்தியாவை நோக்கி படையெடுத்துள்ளன. இந்த கம்பெனிகளில் வேலை வேண்டுமானால் எந்த விலைகொடுத்து சான்றிதழ் பெறுகிறோமோ அதற்கேற்ற வேலை என்ற அளவில் கல்வி வியாபாரமாகியுள்ளது. மேலும் தாய்மொழிக் கல்வியை வலியுறுத்தும் பலரும் உயர்கல்வி தாய்மொழியில் வளராதது குறித்து பெரிதும் கவலைப்படுவதாகத் தெரியவில்லை. எரிவதைப் பிடுங்கினால் கொதிப்பது அடங்கும் என்பது போல அரசுப்பள்ளி ஆசிரிய எண்ணிக்கையைக் குறைத்து அரசுப் பள்ளிகள் நம்பிக்கையற்றதாகும் அதே நேரத்தில் தனியார் பள்ளிகளின் சிறந்த கட்டமைப்பு போன்ற தோற்றமும், ஒரிருவர் நுனி நாக்கில் பேசும் ஆங்கிலமும் உலகமய உலகில் பாமரனாக உள்ள அரசுப் பள்ளி ஆசிரியர்களையும் கவர்வதில் வியப்பில்லை. இவற்றுக்கெல்லாம் ஒரே தீர்வு அருகாமைப்பள்ளி. யார் எங்கே வசிக்கிறோமோ அங்கேதான் கல்வி பெற உரிமையுடையவர்கள் என்று கொண்டுவரலாம். ஆனால் இன்றைய சுயநலமிக்க லாபநோக்குள்ள உலகில் எத்தனை பேர் இதனை ஆதரிக்க முன்வருவர்?. ஆசிரியர்களை சகட்டு மேனிக்கு விமரிசிப்பதோடு அரசின் கொள்கைகள் குறித்தும் விமர்சனங்கள் வரவேண்டும். அதுவே நடுநிலையோடு இப்பிரச்சனையை அணுக உதவும். இதுபோன்ற ஒருசார்பு விவாதங்கள் ஆங்காங்கே குறைவான எண்ணிக்கையில் சிறப்பாகச் செயல்படும் ஆசிரியர்களின் செயல்பாடுகளை மேலும் செம்மைப்படுத்துவதாக அமையாது அவர்களையும் செயல்படாதவர்களாக மாற்றிவிடும்

தமிழக பள்ளி பாடப்பொருள் தொடர்பான கணினி சார்பான வளங்கள் தயாரித்தல் பணிமனை பற்றி ஆங்கில நாளேடு வெளியிட்ட செய்தி

                     

கிராமப்புற அரசு பள்ளியில் ஆங்கில உரையாடல்: தனியார் பள்ளிகளுக்கு சவால் விடும் முயற்சி

மெட்ரிக் பள்ளிக்கு இணையாக, கிராமப்புற அரசு பள்ளி மாணவ, மாணவியர், வகுப்பறையில் ஆங்கிலத்தில் மட்டுமே உரையாடல் மேற்கொண்டு வருகின்றனர்.ஈரோடு மாவட்டம், நஞ்சை ஊத்துக்குளி பஞ்.,- சாமிநாதபுரம் புதூரில் யூனியன் நடுநிலை பள்ளி செயல்படுகிறது. 260 பேர் பயில்கின்றனர். கிராமப்புற பள்ளி என்பதால், பெரும்பாலும் விவசாய கூலிகள், தொழிலாளர்களின் குழந்தைகளே, இங்கு படிக்கின்றனர்.
ஒன்று, இரண்டாம் வகுப்பு ஆங்கில மீடியத்தில் தலா, 30 பேரும், ஆறு முதல், எட்டு வகுப்பு வரை, 117 பேர் படிக்கின்றனர். ஆறாம் வகுப்பில் தமிழ், ஆங்கில மீடியம் உள்ளன. ஆறு முதல், எட்டாம் வகுப்பு வரையிலான மாணவ, மாணவியரின் வகுப்பறை உரையாடல் ஆங்கிலத்தில் மட்டுமே உள்ளது.தமிழில் பேச துவங்கினால், சக மாணவ, மாணவியரே, ஆசிரியரிடம் காட்டி கொடுத்து விடுகின்றனர். நன்கு கற்றுணர வேண்டும் என்ற நோக்கில் பேச்சு, எழுத்து, படிப்பதில், அனைத்துமே ஆங்கிலத்தில் மேற்கொள்கின்றனர்.
இதுகுறித்து, பள்ளி ஆங்கில ஆசிரியை செல்வி மணியம்மை கூறியதாவது:மெட்ரிக் பள்ளிக்கு இணையாக, அரசு பள்ளி, மாணவ, மாணவியர் ஆங்கிலம் பேச வைத்துள்ளோம். ஆங்கில அறிவை மேம்படுத்த வேண்டும். அரசு பள்ளிகளிலும் சிறப்பாக கற்பிக்க இயலும் என்பதை, வெளிகாட்டும் விதமான முயற்சி இதுவாகும்.தற்போது படிப்பது, எழுதுவது, பேசுவது, புரிந்து கொள்வது மட்டுமின்றி, ஆசிரியர்கள், சக மாணவ, மாணவியருடன் உரையாடுகின்றனர். துவக்கத்தில் தான், ஆங்கிலம் குறித்த தயக்கம் இருந்தது. மெல்ல, மெல்ல ஓரிரு வார்த்தைகளாக பேச, எழுத, படிக்க துவங்கினர். 2012 முதல் ஆங்கிலம் பிரதானமாக்கப்பட்டது.
இதனால், மாணவர்களிடையே பீதி, தயக்கம் இருந்தது. ஒவ்வொரு மாணவருக்கும் சிறப்பு கவனம் செலுத்தியதால், அவர்களுக்கு தன்னம்பிக்கை ஏற்பட்டுள்ளது. தினமும், உணவு இடைவேளையின் போது, 20 நிமிடம், வகுப்பறையில் தினமும், 10 நிமிடம் ஆங்கிலத்தில் உரையாடுவது, கட்டாயமாக்கப்பட்டுள்ளது.வாரத்தில் குறிப்பிட்ட நாட்களே, ஆங்கில வகுப்புகள் உள்ளன. அவற்றில் முழுமையாக ஆங்கில உச்சரிப்பு மட்டுமே இருக்க வேண்டும் என்பது, துவக்கத்தில் கடைபிடிக்கப்பட்டது. தற்போது மாணவர்களே அதை நடைமுறையாக்கி கொண்டுள்ளனர்.
பதில் அளிக்க தெரியாவிடில், ஆசிரியர்களிடமே விளக்கம் கேட்கின்றனர். ஓரிரு முறை சொல்லி கொடுக்கும் பட்சத்தில், பழக்கி கொள்கின்றனர். ஓரிரு வார்த்தைகள் பேசுபவர், சிறு கதைகள், மொழி பெயர்ப்பு அளிக்கப்படுகிறது. எளிதான வாக்கியம் அடங்கிய கதை புத்தகங்கள், எஸ்.எஸ்.ஏ., சார்பில் மாணவர்களுக்கு வழங்கப்படுகிறது.இதற்காக பள்ளியில், "இங்கிலீஷ் லிட்டரரி கிளப்', 2012ல் துவக்கப்பட்டது. மூன்று மாதங்களுக்கு ஒரு முறை, கிளப் கூடும். அப்போது நாடகம், பாட்டு, பேச்சு, சிறு உரையாடல்களை ஆங்கிலத்தில் மாணவர்கள் மேற்கொள்கின்றனர். ஒன்றாம் முதல், எட்டாம் வகுப்பு வரையிலான மாணவர்கள் கிளப் உறுப்பினர்களாக உள்ளனர்.ஆங்கில பயன்பாடு காரணமாக பயம் நீங்கியுள்ளது. மாறாக ஆங்கிலத்தில் உரையாடுவதை மாணவர்கள் பழக்கப்படுத்தி கொண்டுள்ளனர். கிளப் நிகழ்ச்சிகளில் ஆங்கில திறனை வெளி காட்டலாம் என்ற தன் நம்பிக்கை அவர்களிடையே ஏற்பட்டுள்ளது. 80 சதவீத மாணவர்கள் கிளப் உறுப்பினராக உள்ளனர்.கிளப்பில் கதை, கவிதை, கட்டுரை போட்டி ஆங்கில பயன்பாட்டுக்கு உதவிடுவதாக அமைந்துள்ளது, என்றார்.தனியார் பள்ளிகளுக்கு இணையாக, கிராமப்புற அரசு பள்ளியிலும் மாணவ, மாணவியர் ஆங்கிலத்தில் உரையாட மேற்கொண்டுள்ள முயற்சி, பெற்றோரிடையே வரவேற்பை பெற்றுள்ளது.

பயனுள்ள இணையதள முகவரிகள்!!!

பயனுள்ள இணையதள முகவரிகள்!!!
1. ஆன்லைன் -ல் புகைப்படங்களை அழகாக வெட்டித்தரும் பயனுள்ள தளம்.
HTTP://WWW.CUTMYPIC.COM/
2. வீடியோ விளக்கத்தோடு அசத்தும் இணைய அகராதி.
HTTP://WWW.WORDIA.COM/
3. தமிழில் கணினி செய்திகள்
HTTP://TAMILCOMPUTERTIPS.BLOGSPOT.COM/
4. உங்கள் போடோவை ஓவியமாக மாற்ற ஒரு இலவச மென்பொருள்
HTTP://WWW.FOTOSKETCHER.COM/PORTABLEFOTOSKETCHER.EXE
5. அனைத்து அரிய வீடியோக்களையும் கொடுக்கும் பயனுள்ள தளம்.
http://yttm.tv/
6. ஆங்கிலம் கற்க கைகொடுக்கும் தளம்.
http://classbites.com/
7. தேடல் முடிவுகளை வகை வாரியாக பிரித்து கொடுக்கும் மிகவும் பயனுள்ள தளம்.
http://www.helioid.com
8. தொலைக்காட்சியில் இருந்து வீடியோ பயனுள்ள தளம்.
HTTP://WWW.8ON.TV
9. குழந்தைகள் விரும்பும் கார்டூன் முதல் அத்தனை டி.வி நிகழ்சிகளும் ஒரே இடத்தில் பார்க்க
HTTP://VIDEO.KIDZUI.COM
10. வீடியோ எடிட்டிங் செய்ய உதவும் இலவச மென்பொருள்.
HTTP://WWW.LIGHTWORKSBETA.COM
11. பிறந்தநாள் வாழ்த்து செய்திகளை கொடுக்கும் பிரத்யேகமான தளம்.
HTTP://WWW.FREEBIRTHDAYMESSAGES.COM
12. வலைப்பூவுக்கு அழகான பேக்ரவுண்ட் வடிவமைக்க.
HTTP://BGMAKER.VENTDAVAL.COM
13. வீடியோ மெயில்ஆன்லைன் மூலம் இலவசமாக அனுப்ப.
HTTP://MAILVU.COM
via http://vienarcud.blogspot.com/2011/09/blog-post_5975.html

தமிழக அரசுப்பள்ளிகள் பற்றிய சிறுமியின் துடுக்கான பேச்சு!

தொடக்க, நடுநிலை கல்வியில் பின் தங்கிய... : ஏமாற்றும் ஆசிரியர்கள் மீது நடவடிக்கை தேவை

பரிதாபம்! : தொடக்க, நடுநிலை கல்வியில் பின் தங்கிய... : ஏமாற்றும் ஆசிரியர்கள் மீது நடவடிக்கை தேவை
தர்மபுரி: தர்மபுரி மாவட்டத்தில், ஆசிரியர்களின் போதிய பங்களிப்பு இல்லாததால், தொடக்க கல்வி, 30வது இடத்திற்கு பின் தங்கியுள்ளது.
தர்மபுரி மாவட்டம், கிராமங்கள் மற்றும் மலைக்கிராமங்கள் அதிகம் கொண்ட மாவட்டம் ஆகும். தமிழக அரசு, தர்மபுரி மாவட்ட மாணவர்களின் நலன் கருதி, 786 தொடக்க பள்ளிகள் மற்றும், 311 நடுநிலைப்பள்ளிகளை துவங்கி, நடத்தி வருகிறது. ஆனால், மாவட்டத்தில் உள்ள, ஒரு சில பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர் மற்றும் ஆசிரியைகள், முழு ஈடுபாடுடன் பணியாற்றமால் உள்ளனர்.
மேலும், தர்மபுரி மாவட்டத்தில் உள்ள அரசு தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகளில் பணியாற்ற, பல ஆசிரியர்கள் ஆர்வம் காட்டவில்லை. குறிப்பாக, கிராமங்கள் மற்றும் மழைக்கிராமங்களில் பணியாற்றி வந்த பல ஆசிரியர்கள், தங்களது செல்வாக்கு மூலம், தாங்கள் விரும்பும் மாவட்டங்களுக்கு, இடமாற்றம் பெற்று வருவது தொடர்கதையாக உள்ளது.

இதனால், தர்மபுரி மாவட்டத்தில், தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகளில் ஆசிரியர் காலி பணியிடங்கள் தொடர்ந்து வருகிறது. மேலும், தர்மபுரி மாவட்டத்திற்கு இடமாறுதலில் வரும் ஆசிரியர்களும், இங்கிருந்து, விரைவில் இடமாற்றம் பெற்றுச் செல்லும் அவலநிலை உள்ளது. இதனால், தர்மபுரி மாவட்டம் தொடக்க கல்வியில், சில ஆண்டுகளாக, தொடர்ந்து பின்தங்கி வருகிறது. குறிப்பாக, சமீபத்தில் பள்ளி கல்வித்துறை சார்பில் நடந்த ஆய்வில், தர்மபுரி மாவட்டம் தொடக்க கல்வியில், 30வது இடத்தை பிடித்துள்ளது. தர்மபுரி மாவட்டம் , சில ஆண்டுகளில், எஸ்.எஸ்.எல்.ஸி., மற்றும் ப்ளஸ் 2 தேர்வில், தேர்ச்சி விகிதத்தில், தொடர்ந்து முன்னேறி வரும் நிலையில், தொடக்க கல்வியில் பின் தங்கி உள்ளது, கல்வி ஆர்வலர்கள் மத்தியில், கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து, கல்வி ஆர்வலர்கள் கூறியதாவது:
தர்மபுரி மாவட்டத்தில், பல்வேறு கிராமங்கள் மற்றும் மலைக்கிராமங்களில் உள்ள தொடக்கப்பள்ளி மற்றும் நடுநிலைப்பள்ளிகளில் பணியாற்றும், பல ஆசிரியர்கள், தாங்கள், பணியாற்றும் பள்ளிக்கு செல்லாத நிலை உள்ளது. மேலும், தர்மபுரி மாவட்டத்தில் பணியாற்றும் பல தொடக்ககல்வி, நடுநிலைப்பள்ளி ஆசிரியர்கள், தனியார் பள்ளிகளில் பங்குதாரர்களாக உள்ளனர். இதனால், அவர்கள், தாங்கள் பணியாற்றும் பள்ளிக்கு செல்லாமல், அப்பகுதியில் உள்ள பட்டதாரிகளுக்கு, 5,000ம் வரை கொடுத்து, மாணவர்களுக்கு பாடம் சொல்லிக் கொடுக்கும் அவல நிலை உள்ளது. பல்வேறு நிர்பந்தம் காரணமாக, இதற்கு, அப்பள்ளிகளில் பணியாற்றும் தலைமை ஆசிரியர்களும், துணைபோகும் அவலநிலை உள்ளது. தர்மபுரி மாவட்டத்தில், முறையாக பள்ளிக்கு செல்லாத, 200 ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுத்துள்ளதாக, கல்வித்துறையினர் தெரிவித்து வருகின்றனர். ஆனால், முறைகேட்டில் ஈடுபடும் ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்க, மாவட்ட மற்றும் மாநில கல்வித்துறை அதிகாரிகள் தயக்கம் காட்டி வருகின்றனர். தர்மபுரி மாவட்டத்தில், தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளி கல்வி தரத்தை மேம்படுத்த, தமிழக அரசு, முறைகேட்டில் ஈடுபடும் ஆசிரியர்கள் மீதும், அவர்களுக்கு துணை செல்பவர்கள் மீதும் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு கூறினர்.

CTET - மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: தமிழகத்தில் 7,000 பேர் எழுதினர்

சி.பி.எஸ்.இ. பள்ளிகளில் பணியாற்றுவதற்கான மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு, நாடு முழுவதும் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. தமிழகத்தில் இந்தத் தேர்வை சுமார் 7 ஆயிரம் பேர் எழுதினர். சென்னையில் 5 மையங்களிலும், மதுரையில் 4 மையங்களிலும், கோவையில் 4 மையங்களிலும் இத்தேர்வு நடைபெற்றது.
காலை 9.30 மணி முதல் 12 மணி வரை இரண்டாம் தாள் தேர்வும், பிற்பகல் 2 மணி முதல் 4.30 மணி வரை முதல் தாள் தேர்வும் நடைபெற்றன.
கேந்திர வித்யாலயப் பள்ளிகள், நவோதயா பள்ளிகள், சி.பி.எஸ்.இ. பாடத்திட்டப் பள்ளிகள் உள்ளிட்டவற்றில் பணியாற்ற மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சிப் பெற்றிருக்க வேண்டும். சி.பி.எஸ்.இ. இந்தத் தேர்வை நடத்துகிறது.
தமிழகத்தில் 7 ஆயிரம் பேர்: நாடு முழுவதும் 900-க்கும் அதிகமான மையங்களில் நடைபெற்ற இந்தத் தேர்வை சுமார் 8 லட்சம் பேர் எழுதினர். சென்னையில் 3,000-க்கும் மேற்பட்டவர்கள் தேர்வு எழுதினர். மதுரையில் 2,214 பேர்களில் 1,878 பேர் தேர்வு எழுதினர். 336 பேர் தேர்வுக்கு வரவில்லை. கோவையில் 1,243 பேர் தேர்வு எழுதினர். 257 பேர் தேர்வுக்கு வரவில்லை. ஆக மொத்தம் தமிழகத்தில் சுமார் 7 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் தேர்வு எழுதினர் என்று சி.பி.எஸ்.இ. அதிகாரிகள் தெரிவித்தனர்.
சென்னையில் இத்தேர்வை எழுதிய திருச்சியைச் சேர்ந்த எம்.மனோஜ்குமார் கூறியது:
முதல் தாள் தேர்வில் தமிழ், ஆங்கிலம், உளவியல், கணிதம், சுற்றுப்புறச் சூழல் ஆகிய பாடங்களிலிருந்து கேட்கப்பட்ட கேள்விகள் எளிமையாக இருந்தன.
இருப்பினும் உளவியல் பாடத்திலிருந்து கேட்கப்பட்ட கேள்விகளுக்கு அதிக நேரம் சிந்தித்து விடையளிப்பதாக இருந்தது. கணிதப் பிரிவில் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு நீண்ட படிகளில் தீர்வு காணப்பட்டு, அதன்பிறகு விடையளிக்கும் வகையில் இருந்ததால் நேரம் போதவில்லை என்றார்.
சென்னை பூந்தமல்லியைச் சேர்ந்த பூஜா கூறியது:
இரண்டாம் தாள் தேர்வில் உளவியல், கணிதம் தொடர்பான கேள்விகளுக்கு விடையளிப்பதில் சிரமமாக இருந்தது. இவை தவிர அனைத்து பாடங்களிலிருந்தும் கேட்கப்பட்ட கேள்விகள் எளிமையாகவே இருந்தது என்று கூறினார்.
அனுமதி மறுப்பு: சென்னை முகப்பேர் டி.ஏ.வி. பள்ளி மையத்தில் தேர்வு எழுத சிலர் தாமதாக வந்ததால் அவர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது.
இதுகுறித்து தேர்வு கூட அதிகாரிகளிடம் கேட்ட போது,"தேர்வு கூட அனுமதிச் சீட்டிலேயே தேர்வுக்கு அரை மணிநேரம் முன்கூட்டியே வர வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் அதனையும் மீறி தாமதாக வந்ததால் அனுமதிக்கவில்லை' என தெரிவித்தனர்.

பள்ளிகளில் அனிமேஷன் வடிவில் பாடம் விரைவில் வருகிறது புதிய திட்டம்

                      

அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில், கடினமான பாடங்களை, அனிமேஷன் வடிவில் திரையிட்டு நடத்த, கல்வித்துறை திட்டமிட்டுள்ளது.

மாணவர்களுக்கு பாடம் கற்பிப்பதில், தற்போது புதிய முயற்சிகளை சில அரசு பள்ளி ஆசிரியர்கள் கையாண்டு வருகின்றனர். பாடங்களை கரும்பலகையில் எழுதி நடத்து வதைக் காட்டிலும், செயல்வழியாக நடத்துவதன் மூலம் மாணவர்கள் எளிதில் புரிந்து கொள்வதாக ஆசிரியர்கள் கூறுகின்றனர். பல பள்ளிகளில் இம்முயற்சி வெற்றி பெற்றுள்ளதாக ஆய்வுகளில் தெரிய வந்துள்ளது.


மாணவர்களுக்கு செயல்வழியாகவும், மனதில் எளிமையாக பாடங்களை பதிய வைப்பதற்கும் கல்வித்துறை சார்பில் ஆசிரியர்களுக்கு பல்வேறு பயிற்சிகள் அளிக்கப் படுகின்றன. செயல் வழியாக நடத்தினாலும், சில பாடங்களில் மாணவர்களின் ஆர்வம் குறைந்தே காணப்படுகிறது. ஆகவே மாணவர்கள் புரிந்து கொள்ள கடினமாக உள்ள இலக்கணம்,
கணிதத்தின் சில பகுதிகளை, அனிமேஷன் முறையில் திரையிட்டு நடத்த, கல்வித்துறை திட்டமிட்டுள்ளது.இத்திட்டத்துக்காக, தகவல் தொழில்நுட்பத்தில் சிறந்து விளங்கும் ஆசிரியர்கள் 120 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். கடினமாக உள்ள பாடங்களை அந்த ஆசிரியர்கள் தேர்வு செய்து, அதற்கேற்ற அனிமேஷன் அசைவுகளை கம்ப்யூட்டர் சர்வரில் பதிவு செய்ய உள்ளனர். இதை பயன்படுத்தி பிற ஆசிரியர்கள் மாணவர்களுக்கு அப்பாடங்களை கற்பிக்க, ஏற்பாடு செய்யப்படுகிறது.
கல்வித்துறை அதிகாரிகள் சிலர் கூறியதாவது:அடிப்படை கல்வி சிறந்ததாக இருந்தால் மட்டுமே, மாணவர்கள் பொதுத்தேர்வு மற்றும் பிற தேர்வுகளை எளிதாக எதிர்கொள்ள முடியும். இதன் அடிப்படையில், மாணவர்களுக்கு கடினமாக உள்ள பாடங்களின் மீது ஆர்வம் உண்டாக்கு வதற்கும், அப்பாடங்களை மாணவர்கள் எளிமையாக கற்றுக் கொள் வதற்கும் அனிமேஷன் பாடமுறை செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. விரைவில், இத்திட்டம் அனைத்து பள்ளி களிலும் நடைமுறைப்படுத்தப்படும்.இவ்வாறு, அவர்கள் கூறினர்.