Flash News

Flash News அன்பார்ந்த ஆசிரிய பெருமக்களே! இந்த வலை தளத்தில் தொடக்கப் பள்ளி மாணவர்களுக்கு தேவையான அடிப்படை கணித செயல்பாடுகளுக்கான விளையாட்டுகள் மற்றும் ஆங்கில விளையாட்டுகள் தரப் பட்டுள்ளன. அவற்றைக் கண்டு பள்ளிகளில் செயல்படுத்துமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்...01.07.2014 முதல் அகவிலைப்படி 7% உயருகிறது. ...

Saturday 24 May 2014

தரமான பள்ளி எது?


தரமான பள்ளி தனியார் பள்ளிதான். அதுவும் அதிகமாக பீஸ் வாங்கும் பள்ளிகள் தான் தரமான பள்ளிகள் மற்றதெல்லாம் யோசி்க்கனும் என்று பேசுவதை பொதுவாக நாம் கேட்கிறோம். அதுமட்டுமல்ல தரங்கெட்டபள்ளிகள் என்றால் முதலில் வருவது அரசு பள்ளிகள் தான். 

அப்படியென்றால் அரசு நடத்துகிற சுமார் 28,000 பள்ளிகள் தரங்கெட்ட பள்ளிகளா? இன்றைக்கு பல்வேறு உயர் பதவிகளில் இருக்கும் அதிகாரிகள் அனைவரும் எந்த பள்ளியில் படித்தவர்கள். இந்த தரங்கெட்ட பள்ளியில் படித்தவர்கள்தானே

இல்லை... இல்லை ... அவர்கள் படிக்கும் போதெல்லாம் தரமாக இருந்தது என்று சொல்கிறீர்களா? அப்படியென்றால் எப்போதிலிருந்து இந்த பள்ளிகள் தரம் கெட்ட பள்ளிகளாக மாறியது என்பதை யாராளும் கூறமுடியுமா?

ஏன் இந்த கேள்வி? எதற்காக? என்று நீங்கள் கேட்பது எனக்கு தெரிகிறது. சமீபத்தில் ஓர் ஆசிரியர் அரங்கில் பேசுகிற வாய்ப்பு கிடைத்தது. அந்த அரங்கில் இருந்த அனைவரும் அரசு பள்ளி ஆசிரியர்கள். அவர்கள் அனைவரும் சொல்லிவைத்தார்போல் அரசு பள்ளிகளில் தரம் இல்லாமல் போய்விட்டது என்று அங்கலாய்த்துக்கொண்டார்கள். அவர்களது பேச்சில் ஒரு விரக்தி தெரிந்தது. இனிமேல் அரசு பள்ளிகளை காப்பாற்ற முடியாது போன்று பேசினார்கள். அரசு பள்ளிகளில் தரம் குறைந்து போனதால் தான் மாணவர் சேர்க்கை குறைந்து கொண்டே வருகிறது. 

எனவே நாம் அரசு பள்ளிகளில் தரத்தை உயர்த்த வேண்டும் என்ற வேண்டு கேட்டுக்கொண்டனர். எனக்கு புரியவில்லை. எது தரம்? ஆசிரியர் பயிற்சியை முறையாக கற்று தேர்ந்தவர்களைத்தான் அரசு பணியமர்த்துகிறது. பல்வேறு சட்ட திட்டங்களுக்கு உட்பட்டுத்தான் அரசு பள்ளி ஆசிரியர்கள் பணி செய்கிறார்கள். போதுமான சம்பளத்தை அரசு கொடுக்கிறது. பொருளாதாரத்தில் எந்த பிரச்சனையும் இல்லை. 

இவர்கள்தவிர வேறு யாரால் தரமான பள்ளியை தரமுடியும். மேலே குறிப்பிட்ட எந்த தகுதியும் இல்லாத, நிரந்தரமற்ற, எந்தவித பயிற்சியும் பெறாத, தனியார் பள்ளிகளில் பணிசெய்யும் ஆசிரியர்களால் எப்படி தரமான கல்வியை தரமுடியும். அப்படி தருகிறார்கள் என்பது ஒரு மாயையே இல்லாமல், வேறு ஒன்றுமில்லை. ஒரு விஷயம் தெரியுமா? எந்த தனியார் பள்ளிகளிலும் தொடர்ந்து பணிசெய்கிற ஆசியர்கள் இல்லை. மூன்று அல்லது நான்கு மாதங்களுக்கு ஒரு ஆசிரியர் மாறுகிற நிலைதான் இருக்கிறது. இப்படிப்பட்ட பள்ளிகளில் படிக்கம் மாணவர்கள் தரமான மாணவர்களா?

அரசு பள்ளிகளில் எப்படி தரம் குறைந்து போனது? அதற்கு காரணமாக அரசு ஆசிரியர்கள் முன்வைத்தவை
1. ஆசிரியர் பற்றாகுறை
2. வேலைப் பழு
3. பாடத்திட்ட மாற்றம்

ஆசிரியர்கள் பற்றாக்குறை என்றால் 1985ம் ஆண்டிற்கு முன்பு வரை மிக குறைந்த ஊதியத்தை பெற்றுக்கொண்டும், பஞ்சாயத்து மற்றும் உள்ளாட்சி அமைப்பின்கீழ் பல்வேறு இன்னல்களை அனுபவித்துக்கொண்டும், பல பள்ளிகள் ஓராசிரியரைக் கொண்டும், மரத்தடியிலும், கரும்பலகை இல்லாமலும் பாடம் நடத்திய போது தரமாக இருந்த பள்ளிகள் இன்றைக்கு எப்படி தரம் குறை்நததாக போய்விட்டது. ஆசிரயர் பற்றாக்குறை என்பதும், ஓராசிரியர் மற்றும் ஈராசியர் பள்ளிகள் என்பதும் காலம் காலமாக இருந்து கொண்டுதான் இருந்திருக்கிறது. அதை இன்றைக்கு சொல்லுவதை ஏற்றுக் கொள்ள முடியாது.

மற்றொன்று வேலைப்பழு. இன்றைக்கு ஆசிரியர்களுக்கு ரேசன் கார்டு சரிபார்த்தல், மக்கள் தொகை கண்கெடுப்பு, தேர்தல் பணி என பல பள்ளிகள் கொடுக்கப்படுவதால் பள்ளிகளில் மாணவர்களுக்கு பாடம் நடத்த முடியவில்லை. இதற்காக பெரும்பாலும் பள்ளியை விட்டு வெளியே செல்ல வேண்டியுள்ளது என்று ஆதங்கப்படுகின்றனர். ஆனால் இதற்கு முன்னல் சுமார் 25 ஆண்டுகளுக்கு முன்பெல்லாம் இந்த பணியோடு குடும்பக் கட்டுப்பாடுக்கு ஆள்பிடிக்கும் வேலையும், போலியோ சொட்டு மருந்து கொடுப்பதற்கான பிரச்சாரமும் ஆசிரியர்களால் செய்யப்பட்டது. இவை இரண்டும் இன்றைக்கு சொல்லப்படுகிற கூடுதல் வேலைப்பழுவைக் காட்டிலும் மிக மிக கடினமான பணியாகும். இவற்றையும் செய்துகொண்டுதான் அன்றைய ஆசியர்கள் பணிபுரிந்து வந்துள்ளனர்.

இன்னொன்று பாடத்திட்டம். இன்றைய பாடதிட்டமும் அரசு பள்ளிகளில் தரம் குறைவதற்கான காரணமாக ஆசிரியர்கள் முன்வைக்கின்றனர். காலம் மாறிக்கொண்டே வருகிறது. நாம் 21ம் நூற்றாண்டில் இருக்கின்றோம். இது தகவல் புரட்சி காலம் நீங்கள் சொல்லிக் கொடுக்க வேண்டிய ஒரு விஷயத்தை ஒரு விநாடியில் லட்சம் வழிகளில் தெரிந்துகொள்ள முடியும். அன்றைக்கு புத்தகங்கள் தவிற வேறு வழிகளில் தகவல் கிடைப்பது மிக குறைவு. இன்றைக்கு அப்படி இல்லை. 

எனவே மாணவர்களின் மனம், தேவை, ஆகியவற்றை கருத்தில் கொண்டுதான் பாடத்திட்டம் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. பாரம்பரியமான பாடத்திட்டத்திலிருந்து பல்வேறு கல்வியாளர்களின் போராட்டத்தின் பின்பே பாடத்திட்டத்தில் மாற்றம் ஏற்பட்டது. 2000ங்களில் ”கற்றலில் இனிமை” என்ற வழியில் ஆடல் பாடலுடன் மகிழ்ச்சிகரமான வழிகளில் கல்வியை போதிப்பதற்கான புதிய அணுகுமுறையை அரசு கொண்டு வந்தது.கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு ABL என்கிற செயல் வழிக் கற்றல் என்ற புதிய முறையை அரசு கொண்டு வந்துள்ளது. அதிலும் மாற்றம் செய்து இன்றைக்கு சமச்சீர் கல்வி என்ற புதிய பாடத்திட்டத்தை 2010ல் அறிமுகம் செய்து தற்போது நடைமுறையில் உள்ளது.
இந்த பாடத்திட்டங்களில் இந்த புதிய அணுகுமுறையில் எப்படி தரம் குறைந்தன என்று சொல்ல முடியுமா? எதன் அடிப்படையில் இவைகள் மாணவர்களின் தரத்தை குறைத்துவிட்டன? அதற்கு ஆதாரம் ஏதேனும் உண்டா? ஆசிரியர்களாகிய நீங்கள் இந்த புதிய பாடத்திட்டமும் அணுகுமுறையும் வந்தவுடன் இது குறித்த விவாதமோ ஆய்வோ செய்தீர்களா? இன்னும் கூட ஒரு கேள்வி இருக்கிறது. கற்றலில இனிமை மாறி ABL க் கொண்டு வரும்போது ஏன் கற்றல்இனிமை தி்ட்டத்தை எடுத்தீர்கள் என்று கேட்டதுண்டா? இதையெல்லாம் செய்யாமல் பொத்தாம் பொதுவாக அரசு பள்ளிகளில் மாணவர்களின் தரம் குறைந்து போய்விட்டது என்று சொல்லுவதை என்னவென்று சொல்லுவது.
இந்த பாடத்திட்டங்களில் இந்த புதிய அணுகுமுறையில் எப்படி தரம் குறைந்தன என்று சொல்ல முடியுமா? எதன் அடிப்படையில் இவைகள் மாணவர்களின் தரத்தை குறைத்துவிட்டன? அதற்கு ஆதாரம் ஏதேனும் உண்டா? ஆசிரியர்களாகிய நீங்கள் இந்த புதிய பாடத்திட்டமும் அணுகுமுறையும் வந்தவுடன் இது குறித்த விவாதமோ ஆய்வோ செய்தீர்களா? இன்னும் கூட ஒரு கேள்வி இருக்கிறது. கற்றலில இனிமை மாறி ABL க் கொண்டு வரும்போது ஏன் கற்றல்இனிமை தி்ட்டத்தை எடுத்தீர்கள் என்று கேட்டதுண்டா? இதையெல்லாம் செய்யாமல் பொத்தாம் பொதுவாக அரசு பள்ளிகளில் மாணவர்களின் தரம் குறைந்து போய்விட்டது என்று சொல்லுவதை என்னவென்று சொல்லுவது. உண்மையில் அரசு பள்ளி மாணவர்களின் தரம் குறையவே இல்லை என்பதுதான் உண்மை.

இங்கே தரம் என்று ஆசிரியர்கள் எதைச் சொல்லுகிறார்கள் என்று தெரியவில்லை.
சூ, டை, சீருடை, அடையாள அட்டை அணிந்து பள்ளிக்குச் செல்வதை தரம் என்கிறார்களா?
வீட்டின் வாசலிலேயே பிள்ளைகளை ஏற்றி காலை 8 மணிக்கு ஏற்றி 30 கிலோ மீட்டரை ஒரு மணிநேரம் சுற்றி பள்ளியில் விட்டு விட்டு மாலையில் வீட்டு வாசலில் பிள்ளைளை இறக்கிவிட்டு செல்லும் வேனை தரம் என்கிறார்களா.

மம்மி, டாடி என்று குழந்தைகள் தாய், தந்தையரை சொல்லுவதும், ஆங்கிலத்தில் பாடல் பாடுவதும் தரம் என்கிறார்களா.
அல்லது ஆங்கிலத்தில் பேசுகிறதையும், எழுதுவதையும் தரம் என்கிறார்களா? இதில் எதுவும் பள்ளிகளுக்கான தரத்தை நிர்ணயிப்பது இல்லை.

ஆனால் பொதுவாகவே இன்றைய சமூகத்தில் தனியார் மற்றும் உலகமயமாக்களின் காரணமாக முளைத்துள்ள அதி தீவிர ஆங்கிலம் பேசுவதும், எழுதுவதும் தான் தரம் எனக் கணக்கிடப்பட்டுள்ளது. இத்திறனை மாணவர்கள் அரசு பள்ளியில் மட்டுமல்ல தனியார்பள்ளிகளில் படிக்கின்ற குழந்தைகளுக்கும் கிடையாது.
ஆங்கிலம் எழுதுவதும், பேசுவதும் பள்ளியில் படிப்பதால் மட்டும் வந்துவிடுவதில்லை. அந்த மொழியை அதிகமாக பயன்படுத்துவதன் மூலம் வருவது. இது தேவையின் அடிப்படையில் வளரும் வரும். இதற்கான தேவையே ஏற்படாத அரசு பள்ளிகளில் ஆங்கிலத்தைக்கொண்டு மட்டும் பள்ளியின் தரத்தை நிர்ணயம் செய்வது பார்ப்பது சரியான அணுகுமுறையாகாது. மற்ற எந்த வகையில் அரசுப் பள்ளி தரம் குறைந்ததாக இருக்கிறது என்று பார்த்தோமானால்

1. தமிழை வாசிப்பதில்

2. சிறிய கணிதங்களை போடுவதில் ஏற்படுகிற தடுமாற்றங்கள் மட்டுமே. 

இவை இன்றைக்கு நேற்றைக்கு அல்ல, எல்லாக் காலங்களிலும் எல்லா பள்ளிகளிலும் இருக்கின்ற பிரச்சனைகள் தான். பொதுவாகவே தனியார் பள்ளிகள் ஆகட்டும், அரசு பள்ளிகள் ஆகட்டும் இரண்டு பள்ளிகளிலுமே இந்த தடுமாற்றம் உள்ள மாணவர்கள் இருக்கத்தான் செய்வார்கள். இதில அரசு பள்ளி மாணவர்களின் நிலை உடனடியாக எல்லோருக்கும் தெரிந்து விடும். ஆனால் தனியார்பள்ளியில் படிக்கிற மாணவர்களின் நிலை வெளியே தெரிவது இல்லை. காரணம் மதிப்பெண் அட்டைகளில் அதிக மதி்ப்பெண்ணை இட்டு பணம் கட்டுகிற பெற்றோரை தனியார் பள்ளிகள் திருப்பதி படுத்துகின்றன. இந்த செயலை அரசு பள்ளிகள் செய்வது இல்லை. மேலும் இது போன்ற பிரச்சனைகள் லெகுவாக தீர்க்கக் கூடியதே அதற்கு தேவை நம் ஆசிரியர்கள் தெய்வீகத் தொண்டுள்ளத்தோடும், ஆத்மார்த்தமாகவும், அற்பணிப்பு உணர்வோடும், நம்மை நம்பி வந்துள்ள அந்த ஏழை மாணவனுக்கு தக்கு தெரிந்த அனைத்து வகைகளிலும் அன்போடும், புன்னகையோடும், சலிப்பில்லாமலும், கோபமில்லாமலும், எரிச்சலற்றும் கற்றுக்கொடுக்க வேண்டும். இன்றைக்கும் கூட அரசு பணிகளில் சேருகிறவர்கள் அரசு பள்ளிகளில் படித்தவர்கள் தான் பெரும்பான்மையோர். அரசு பள்ளிதான் மாணவர்களை பலதிறன் படைத்த மாணவர்களை உருவாக்குகிறது. அவர்களிடம்தான் கற்பனைத்திறனும், படைப்பாற்றல் திறனும், சமூக சிந்தனையும், கூட்டுச் செயல்பாடும், தனிமனித திறனும், கைவினைத்திறனும், உற்று நோக்கும் திறனும், புதிய சிந்தனைத்திறனும், தலைமைப்பண்பும் ஒருங்கே உள்ளது. தரமான பள்ளிகள் என்பது நல்ல பலதிறன் மிக்க மாணவர்களை உருவாக்குவதுதான். அது அரசு பள்ளிகளில் மட்டுமே சாத்தியம். மனப்பாடமே தரம் என்று சொல்லும் பள்ளிகளின் தரம் என்பது மாயையே

No comments:

Post a Comment