திருச்சி தில்லை நகர் மற்றும் கலெக்டர் அலுவலகம் அருகே உள்ள ஏழாம் சுவை உணவகத்தில் வரும் செப்டம்பர் 5–ந் தேதி ஆசிரியர் தினத்தை முன்னிட்டு அன்று சாப்பிட வரும் ஆசிரியர்களுக்கு இலவசமாக உணவு வழங்க உள்ளது.
இதற்கு முன்னர் நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலின் போது வாக்களித்து விட்டு வரும் வாக்காளர்களுக்கும், பின்னர் அன்னையர் தினத்தன்று அன்னையர்களுக்கும், தந்தையர் தினத்தன்று தந்தையர்களுக்கும் சலுகை விலையில் உணவு வழங்கி சிறப்பித்த ஏழாம் சுவை உணவகத்தார் இந்த முறை ஆசிரியர் தினத்தில் ஆசிரியர்களுக்கு இலவசமாக உணவு வழங்க முடிவு செய்துள்ளனர்.
இதுகுறித்து ஏழாம் சுவை உணவக உரிமையாளர் செந்தில்குமார் கூறியதாவது:–
இந்தியாவின் 2–வது ஜனாதிபதியான டாக்டர் சர்வபள்ளி ராதாகிருஷ்ணனின் பிறந்த தினமான செப்டம்பர் 5–ந்தேதி நாடெங்கும் ஆசிரியர் தினமாக கொண்டாடப்படுகிறது. இவர் திருத்தணியில் ஒரு ஏழைக் குடும்பத்தில் பிறந்தவர். இருபது வயதிலேயே முதுகலை பட்டத்தில் ஆய்வு கட்டுரைகள் எழுதி அவரது ஆசிரியர்களின் பாராட்டைப் பெற்றவர்.
பிறகு பல்வேறு கல்லூரிகளில் பேராசிரியராகவும், கல்லூரி முதல்வராகவும் (இங்கிலாந்து மான் செஸ்டர் கல்லூரி உட்பட) பணியாற்றினார். பின்னாளில் யுனெஸ் கோவில் இந்திய பிரதிநிதியாக பங்கு கொள்ளவும், ரஷ்யாவில் இந்திய தூதராகவும் பணியாற்றினார். அதன் பின்னர் துணை ஜனாதிபதியாகவும், பின்னர் இந்தியாவின் ஜனாதிபதியாகவும் முன்னேறினார். சிறந்த கல்வியாளராகவும், மாணவர்களை உருவாக்குவதில் சிறந்த ஆசிரியராகவும் இருந்ததாலேயே இவரது பிறந்த தினம் இவ்வளவு மரியாதைக்குரியதாக கொண்டாடப்படுகிறது.
இந்த தருணத்தில் என் ஆறாம் அறிவிற்கு கல்வி புகட்டி ஏழாம் சுவை நிர்வாகத்தை உருவாக்க கூர்மை சேர்த்த என் ஆசிரியர்கள், என்னை ஆளாக்கிய பெரம்பலூர் தனலட்சுமி கல்வி நிறுவனங்கள், ரோவர் கல்வி நிறுவனங்கள் மற்றும் அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும், ஆசிரியர்களுக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
ஆசிரியர் தினத்தன்று ஆசிரியர்களை கவுரவிக்கும் விதமாக 5–ந்தேதி காலை 7 மணி முதல் மாலை 7 மணி வரை எங்கள் உணவகத்திற்கு சாப்பிட வரும் ஆசிரியர்கள் அனைவருக்கும் இலவசமாக உணவு வழங்க உள்ளோம். இதற்கு ஆசிரியர் அடையாள அட்டையை அவர்கள் கொண்டு வரவேண்டும். ஆசிரியர்களுக்கு ரூ.60 வரை இலவச உணவு வழங்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
No comments:
Post a Comment