சத்துணவு அமைப்பாளர் பணிக்கான நேர்முக தேர்வில் குளறுபடி நடந்துள்ளதாக தொடர்ந்த வழக்கில் பணியிடத்தை நிரப்ப தடை விதித்து மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
சத்துணவு அமைப்பாளர்
புதுக்கோட்டை மாவட்டம் மணமேல்குடி அருகே உள்ள பொத்தையன்குடியிருப்பு பகுதியை சேர்ந்தவர் சுமதி. இவர், மதுரை ஐகோர்ட்டு கிளையில் தாக்கல் செய்த மனுவில் கூறி இருந்ததாவது:–
புதுக்கோட்டை மாவட்டத்தில் காலியாக உள்ள சத்துணவு அமைப்பாளர் பணியிடங்களை நிரப்ப 10.10.2013 அன்று புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர் அறிவிப்பு வெளியிட்டார். அதன்படி மணமேல்குடி பஞ்சாயத்து யூனியன் நெம்மேலிவயல் தொடக்கப்பள்ளி சத்துணவு அமைப்பாளர் பணிக்கு நான் விண்ணப்பித்து இருந்தேன். இந்த நிலையில் அந்த பணிக்காக கடந்த 28–ந் தேதி நேர்முகத்தேர்வு நடந்துள்ளது. ஆனால், எனக்கு நேர்முக தேர்வுக்கான கடிதம் அனுப்பப்படவில்லை.
மீண்டும் நேர்முகத்தேர்வு
இதுகுறித்து அதிகாரிகளிடம் கேட்ட போது, நான் நிலையூர் தொடக்கப்பள்ளி சத்துணவு அமைப்பாளர் பணிக்கு விண்ணப்பித்துள்ளதாகவும், இதன்காரணமாகவே எனக்கு நேர்முகத் தேர்வுக்கான கடிதம் அனுப்பப்படவில்லை என்றும் தெரிவித்தனர்.
நான் அனுப்பிய விண்ணப்பத்தை வாங்கி பார்த்த போது, அதில் நெம்மேலிவயல் என்று நான் எழுதி இருந்ததை நிலையூர் என்று மாற்றி இருப்பது தெரியவந்தது. எனவே, மீண்டும் நேர்முக தேர்வு நடத்தி நேர்முக தேர்வில் நான் கலந்து கொள்ள வாய்ப்பு அளிக்க உத்தரவிட வேண்டும். அதுவரை நெம்மேலிவயல் பஞ்சாயத்து யூனியன் தொடக்கப்பள்ளியில் சத்துணவு அமைப்பாளர் பணியிடத்தை நிரப்ப தடை விதிக்க வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறப்பட்டு இருந்தது.
நிரப்பக்கூடாது
இந்த மனு நீதிபதி டி.ராஜா முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. மனுதாரர் சார்பில் வக்கீல் எம்.சுரேஷ் ஆஜராகி வாதாடினார். மனுவை விசாரித்த நீதிபதி, இந்த வழக்கில் இறுதி தீர்ப்பு பிறப்பிக்கப்படும் வரை நெம்மேலிவயல் பஞ்சாயத்து யூனியன் தொடக்கப்பள்ளி சத்துணவு அமைப்பாளர் பணியிடத்தை நிரப்பக்கூடாது என்று உத்தரவிட்டார்.
மேலும், இந்த வழக்கு சம்பந்தமாக புதுக்கோட்டை கலெக்டர், மணமேல்குடி வட்டார வளர்ச்சி அதிகாரி ஆகியோர் பதில் அளிக்க நோட்டீசு அனுப்ப உத்தரவிட்டார்.
No comments:
Post a Comment