Flash News

Flash News அன்பார்ந்த ஆசிரிய பெருமக்களே! இந்த வலை தளத்தில் தொடக்கப் பள்ளி மாணவர்களுக்கு தேவையான அடிப்படை கணித செயல்பாடுகளுக்கான விளையாட்டுகள் மற்றும் ஆங்கில விளையாட்டுகள் தரப் பட்டுள்ளன. அவற்றைக் கண்டு பள்ளிகளில் செயல்படுத்துமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்...01.07.2014 முதல் அகவிலைப்படி 7% உயருகிறது. ...

Friday, 15 November 2013

விடைத்தாள் திருத்தும் பணியில் குளறுபடி: மாணவர்கள் மன உளைச்சல்

பாலிடெக்னிக் கல்லூரிகளில் நடக்கும், அரசு வாரிய தேர்வுகளில், மாணவர்களின் விடைத் தாள்களைத் திருத்தும் பணியில், அனுபவமில்லாத ஆசிரியர்கள் ஈடுபடுவதால், பெரும்பாலான மாணவர்கள் மறு திருத்தலில் தேர்ச்சி பெறும் நிலை உள்ளது. இதனால், பல மாணவர்கள் மன உளைச்சலுக்கு ஆளாகின்றனர்.
தொழில்நுட்ப கல்வி இயக்கத்தின் கீழ், தமிழகத்தில், அரசு மற்றும் அரசு உதவி பெறுபவை உட்பட 479 பாலிடெக்னிக் கல்லூரிகள் உள்ளன. இந்தக் கல்லூரிகளில் பயிலும் அனைத்து மாணவர்களுக்கும், தற்போது வாரிய பொது தேர்வுகள் நடந்து வருகின்றன. இந்தத் தேர்வுகளின் விடைத் தாள்களை திருத்தும் பணி இம்மாத இறுதியில் நடைபெற உள்ளது.
ஒவ்வொரு ஆண்டும் பாலிடெக்னிக் பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானதும் அதிகப்படியான மாணவர்கள், பணம் கட்டி மறு திருத்தலுக்கு மனுச் செய்கின்றனர். மறு திருத்தலுக்குப் பின், பல மாணவர்கள் தேர்வில் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்படுகிறது. அத்துடன் முதலில் குறைவான மதிப்பெண் பெற்ற மாணவர்கள், மறு திருத்தலுக்கு பின் அதிக மதிப்பெண்கள் பெறுவதும் நிகழ்கிறது.
அரசு மற்றும் அரசு உதவி பெறும் பாலிடெக்னிக் கல்லூரிகளில், பணிபுரியும் ஆசிரியர்கள், விடைத்தாள்கள் திருத்தும் பணிக்கும், அதிக அளவில் செல்வதில்லை. அனுபவம் இல்லாத தனியார் பாலிடெக்னிக் கல்லூரி ஆசிரியர்களே ஈடுபடுகின்றனர். அதுவே பிரச்னைக்கு காரணம் என மாணவர்கள் தரப்பில் புகார் தெரிவிக்கப்படுகிறது.
பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு, பாடம் சொல்லிக் கொடுக்கும் ஆசிரியர்கள், பல ஆண்டுகளுக்கு ஒரே விதமான பாடத்தையே நடத்துகின்றனர். ஆனால் பாலிடெக்னிக் கல்லூரிகளில் படிக்கும் மாணவர்களுக்கு, ஒவ்வொரு பருவத்திற்கும் குறைந்தது மூன்று பேப்பர்கள் உள்ளன. இரண்டு மற்றும் மூன்றாம் ஆண்டுகளில் மட்டும், நான்கு பருவத்திற்கும், 12க்கும் அதிகமான பேப்பர்கள் உள்ளன.
இந்த அனைத்து பாடங்களையும், நன்கு தெரிந்த ஆசிரியர்கள் மிக மிகக் குறைவு. தனியார் பாலிடெக்னிக் கல்லூரி ஆசிரியர்கள், அவர்கள் நடத்தும் ஒன்றிரண்டு பாடங்களை மட்டுமே நன்கு தெரிந்திருப்பர். ஆனால், விடைத்தாள்கள் திருத்தும் போது "அனைத்து பாட விடைத் தாள்களையும் திருத்த வேண்டும்" என இவர்களை, கண்காணிப்பாளர்கள் கட்டாயப்படுத்துவதால், கடமைக்குப் பேப்பர்களை திருத்தி மதிப்பெண் போடுகின்றனர்.
அதனால், நன்றாக படிக்கும் மாணவர்களைக் காட்டிலும், சுமாராக படிக்கும் மாணவர்கள் அதிக மதிப்பெண்களை எடுப்பது, நன்றாக படித்த மாணவர்கள் தோல்வி அடைவது என பல குழப்பங்கள் நிகழ்வதாக மாணவர்கள் புகார் தெரிவிக்கின்றனர். எனவே, விடைத்தாள்கள் திருத்தும் பணியில், அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்லூரிகளில் உள்ள அனுபவமிக்க ஆசிரியர்களை ஈடுபடுத்த வேண்டும்.
அப்போதுதான், "தேர்வில் தோல்வி அடைந்து விட்டோமே" என மாணவர்கள் மன உளைச்சலுக்கு ஆளாகி, பின், மறு திருத்தலுக்கு விண்ணப்பிப்பது குறையும் என்பதே, பல மாணவர்களின் கோரிக்கை.

No comments:

Post a Comment