தமிழகத்தில், 76 சதவீத பகுதிகளில், நிலத்தடி நீர்மட்டத்தின் அளவு குறைந்துள்ளது. நீரில் உப்பின் அளவும் அதிகரித்துள்ளது, ஆய்வில் தெரியவந்துள்ளது.
மழை நீர், நிலத்துக்குள் புகுந்து அங்குள்ள பாறைகளின் மேல் படிகிறது. பல அடுக்கு பாறைகளில் தேங்கியிருக்கும் நீர், பள்ளமான இடத்தை நோக்கி ஓடும். இதை நிலத்தடி நீரோட்டம் என்பர். அடிமட்ட பாறைகள், சரிவான பூமிப்பரப்பின் கடைசி பகுதியின், தரையின் மேல் மட்டத்திற்கு வந்து விடுவதால், அங்கே நிலத்தடி நீர் கசிந்து, ஒன்று சேர்ந்து ஊற்றாக வெளிவருகிறது. இந்த ஊற்று நீர் சேர்ந்து தான், அருவியாக, ஓடையாக, ஆறாகவும் மாறுகிறது.
முன்பு"கமலையில்' மாடுகள் பூட்டி நீர் இறைத்த நிலையில், மின்சார மோட்டார்கள் பெருகின. பூமிக்கடியில், 20 அடியில் இருந்த நீர், 40 அடிக்கு கீழ் போனது. ஆழ்குழாய் கிணறு வர ஆரம்பித்த பின், இதன் போக்கே மாறியது.
50 அடி...100 அடி... என இருந்த நிலத்தடி நீர்மட்டம், தற்போது 500, 1000 அடிவரை சென்று விட்டது. இந்த நீரை வணிக நோக்கத்திற்கு மெல்ல, மெல்ல பயன்படுத்த தொடங்கினர். இதன் விளைவாக நிலத்தடி நீர் குறைந்ததோடு மட்டுமல்லாமல், அதில் உள்ள உப்பின் தன்மையும் அதிகரித்து வருவதாக ஆய்வில் தெரியவந்துள்ளது.
சமீபத்தில், மத்திய நில நீர் வாரியம் வெளியிட்ட தகவலில், இந்தியாவில் அதிகபட்சமாக, தமிழகத்தில் 76 சதவீத பகுதிகளில், நிலத்தடி நீர்மட்டம் குறைந்துள்ளது தெரியவந்துள்ளது. இப்பகுதியில் உள்ள நீரில், உப்பின் அளவும் அதிகரித்துள்ளது.
நிலத்தடி நீரில் உப்பின் அளவை, இ.சி., (எலக்ட்ரோ கனெக்டிவிட்டி) என கூறுகின்றனர். கடல் நீரில், இதன் அளவு 10 ஆயிரமாக உள்ளது. நல்ல நீரில், இதன் அளவு, 300 முதல் 500க்குள் இருக்கலாம். அப்போது தான் குடிக்க முடியும்.
காரைக்குடியில் 10 ஆண்டுக்கு முன், இதன் அளவு, 200 முதல் 400 ஆக இருந்தது; தற்போது, 700 ஆக உயர்ந்துள்ளது. ராமநாதபுரத்தில் 2,000, தூத்துக்குடி உள்ளிட்ட தொழிற்சாலைகள் நிறைந்த பகுதிகளில், 3,000 வரையும் உள்ளது.
இதனால், சுண்ணாம்பு சத்து தன்மை அதிகரித்து, நீரை பயன்படுத்த முடியாத நிலை ஏற்படும். இவற்றை பாதுகாத்து, நீரின் அளவை சுரண்டாமல் தடுப்பதற்காக, தமிழக அரசு சார்பில், மூன்று நில நீர் மண்டலங்களும், 9 கோட்டங்களும், இதன் கீழ் உப கோட்டங்களும் செயல்படுகின்றன.
வணிக நோக்கத்துக்காக, நிலத்தடி நீரை பயன்படுத்தும் முன், இங்கு கட்டாயம் சான்றிதழ் பெற வேண்டும். ஆனால், பெரும்பாலானோர் இங்கு சான்றிதழ் வாங்காமல், தண்ணீர் சுத்திகரிப்பு ஆலை, வணிக நிறுவனங்களை அமைக்கின்றனர்.
மத்திய நில நீர் கோட்டத்தில் பணிபுரியும், அனைவரும் நிலவியாளர்களே. ஆனால், தமிழ்நாட்டில், நில நீர் கோட்டத்தில், அப்படி இல்லை. நிலவியாளர்கள் பெயரளவில் செயல்படுகின்றனர். நிலத்தடி நீரை, அனுமதியின்றி சுரண்டுபவர்கள் மீது, இவர்களால் நடவடிக்கை எடுக்க முடிவதில்லை. இதனால், நிலத்தடி நீரை சுரண்டுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
காரைக்குடி பகுதியில் மட்டும், 10க்கும் மேற்பட்ட தண்ணீர் தொழிற்சாலைகள், அனுமதியின்றி இயங்கி வருகின்றன. வீடுகளில் ஆழ்குழாய் போட்டும், தண்ணீரை விற்று வருகின்றனர்.
ராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகர் மாவட்டங்களுக்கு, நிலநீர் கோட்டம் இருந்தும், இங்குள்ள அதிகாரிகளால் எந்த நடவடிக்கையும் எடுக்க முடிவதில்லை. இங்கேயே, இப்படி என்றால், மற்ற மாவட்டங்களில், நிலை அதோ கதிதான்.
நிலத்தடி நீரை காப்பாற்றும் வகையில், நிலத்தடி நீர் கோட்ட அதிகாரிகளுக்கு, அதிக அளவில் அதிகாரம் கொடுக்க வேண்டும்; நிலத்தடி நீரை சுரண்டுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு, சமூக ஆர்வலர்களிடையே எழுந்துள்ளது.
No comments:
Post a Comment