Flash News

Flash News அன்பார்ந்த ஆசிரிய பெருமக்களே! இந்த வலை தளத்தில் தொடக்கப் பள்ளி மாணவர்களுக்கு தேவையான அடிப்படை கணித செயல்பாடுகளுக்கான விளையாட்டுகள் மற்றும் ஆங்கில விளையாட்டுகள் தரப் பட்டுள்ளன. அவற்றைக் கண்டு பள்ளிகளில் செயல்படுத்துமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்...01.07.2014 முதல் அகவிலைப்படி 7% உயருகிறது. ...

Sunday 29 December 2013

கட்டண நிர்ணய விசாரணைக்கு ஆஜராகாத 760 தனியார் பள்ளிகள் நிலை என்ன?


தனியார் பள்ளிகளுக்கு 20132016ம் ஆண்டுக்கான கட்டணம் நிர்ணயிப்பது தொடர்பாக நடந்த விசாரணையில் இதுவரை ஆஜராகாத 760 தனியார் பள்ளிகளுக்கு கட்டண கமிட்டி நோட்டீஸ் அனுப்பியுள்ளது.தனியார் பள்ளிகள் கட்டணத்தை முறைப்படுத்த கடந்த 2009ம் ஆண்டு அமைக்கப்பட்ட கட்டண கமிட்டி கடந்த 2010ம் ஆண்டு சுமார் 13 ஆயிரம் பள்ளிகளுக்கு கட்டணத்தை நிர்ணயித்தது. அதில் பல்வேறு சர்ச்சைகள் எழுந்த நிலையில் மீண்டும் நேரடியாக விசாரணை நடத்தப்பட்டு 2013ம் ஆண்டு வரை கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டது. இந்த ஆண்டுடன் கட்டணம் முடிந்த பள்ளிகளுக்கு அடுத்த 3 ஆண்டுகளுக்கான கட்டணம் நிர்ணயிக்க மேற்கண்ட பள்ளிகளுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது. 

அதை தொடர்ந்து கடந்த ஏப்ரல் மாதம் ஒரு கட்டமாகவும், ஆகஸ்ட் மாதம் அடுத்த கட்டமாகவும் விசாரணை நடத்தி 2016ம் ஆண்டு வரை செல்லுபடியாகும் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டது. இந்த விசாரணையில் இதுவரை 11 ஆயிரத்து 126 பள்ளிகள் நேரில் ஆஜராகி அடுத்த 3 ஆண்டுக்கான கட்டணம் வசூலிக்கும்  உத்தரவை பெற்றுள்ளன.ஆனால் 760 பள்ளிகள் இன்னும் கட்டண கமிட்டியில் ஆஜராகவில்லை. இந்த பள்ளிகள் மூடப்பட்டனவா?, அங்கீகாரம் பெறும் பணிகள் நடக்கிறதா?, அல்லது கட்டண கமிட்டிக்கே தெரியாமல் இயங்குகின்றனவா? என்ற சந்தேகம் கட்டண கமிட்டிக்கு எழுந்துள்ளது. இதையடுத்து, மேற்கண்ட 760 பள்ளிகளை 3 பிரிவுகளாக பிரித்து அந்த பள்ளிகளின் பெயரை குறிப்பிட்டு அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கும் கட்டண கமிட்டியின் தலைவர் நீதிபதி சிங்காரவேலு நோட்டீஸ் அனுப்பினார்.

அதில் மேற்கண்ட 760 பள்ளிகளின் உண்மையான நிலை என்ன? அவை இயங்குகிறதா? என்று கேட்டுள்ளார். மேலும் மேற்கண்ட பள்ளிகள் விரைவில் கட்டண கமிட்டியில் நேரில் ஆஜராக வேண்டும். இல்லை என்றால் பள்ளிகளை மூட முதன்மை கல்வி அலுவலர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார். இதுதவிர 760 பள்ளிகளில் மூடப்பட்ட பள்ளிகள் எத்தனை, மீதம் உள்ள பள்ளிகள் எத்தனை என்றும் விளக்கம் கேட்டுள்ளார்.இதையடுத்து 19 மாவட்டங்களில் இருந்து கட்டண கமிட்டிக்கு விவரங்கள் வந்துள்ளன. அதன்படி 115 பள்ளிகள் மூடப்பட்டதாகவும், 126 பள்ளிகளில் அங்கீகாரம் பெறுவது தொடர்பான பணிகள் நடப்பதாகவும் தகவல் கூறியுள்ளனர். இன்னும் 634 பள்ளிகள் குறித்த தகவல்கள் வர வேண்டியுள்ளது.

இதுவரை கட்டணம் நிர்ணயிக்கப்பட்ட 11 ஆயிரத்து 126 பள்ளிகளில் 1.5 சதவீத பள்ளிகள் இந்த கட்டணம் போதாது என்று கூறி நீதி மன்றத்தில் மேல்முறையீடு  செய்துள்ளன. அந்த மேல்முறையீட்டில் உயர் நீதிமன்றம் வழங்கும் உத்தரவை அடிப்படையாக கொண்டு கட்டண கமிட்டி மீண்டும் விசாரணை நடத்தி கட்டணத்தை திருத்த வேண்டிய நிலையும் ஏற்பட்டுள்ளது. இதுபோன்ற பிரச்னைகளை சமாளிக்க ஒரு பள்ளியை ஒருமுறைக்கு மேல் விசாரிப்பதில்லை என்ற முடிவு எடுக்க கட்டண கமிட்டியின் உறுப்பினர்கள் திட்டமிட்டுள்ளனர். இதை கமிட்டி எந்த அளவுக்கு நடைமுறைப்படுத்தும் என்று தெரியவில்லை. 

இது ஒருபுறம் இருக்க, கூடுதல் கட்டணம் வசூலிக்கும் பள்ளிகளை ஒழுங்குபடுத்த வேண்டிய நிலையும் கமிட்டிக்கு ஏற்பட்டுள்ளது. அதனால், கட்டணத்தை  நிர்ணயித்துவிட்டு கமிட்டி சும்மா இருந்து விடாமல் பள்ளிகளுக்கு நேரடியாக சென்று பார்வையிட வேண்டும். கூடுதல் கட்டணம் வசூலிக்கும் பள்ளிகள் மீது கமிட்டியே நேரடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். இதற்கான விதிகளை கட்டண கமிட்டிக்காக உருவாக்கப்பட்ட சட்ட விதிகளில் சேர்க்க வேண்டும் என்று பெற்றோர் எதிர்பார்க்கின்றனர். இவற்றின் மீது அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பெற்றோர் எதிர்பார்க்கின்றனர்.

No comments:

Post a Comment