Flash News

Flash News அன்பார்ந்த ஆசிரிய பெருமக்களே! இந்த வலை தளத்தில் தொடக்கப் பள்ளி மாணவர்களுக்கு தேவையான அடிப்படை கணித செயல்பாடுகளுக்கான விளையாட்டுகள் மற்றும் ஆங்கில விளையாட்டுகள் தரப் பட்டுள்ளன. அவற்றைக் கண்டு பள்ளிகளில் செயல்படுத்துமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்...01.07.2014 முதல் அகவிலைப்படி 7% உயருகிறது. ...

Friday 27 December 2013

வேலைக்கான நேர்முகத்தேர்வில் தமிழ் வழி பிஇ மாணவர்கள் புறக்கணிப்பு


 ‘தமிழ் வழி பிஇ படிச்சீங்களா? அதுக்கு எப்படி வேலை தர முடியும்? ஆங்கில வழி பிஇ படித்தவர்களுக்கே வேலை கிடைப்பதில்  கஷ்டமாக இருக்கு...’என்று நேர்முகத் தேர்வில்  தமிழ்வழி பிஇ  படிக்கும் மாணவர்கள் அவமானப்படுத்தப்பட்டனர். ‘எங்களுக்கு பிளேஸ்மென்ட் இல்லைன்னு சொல்லிட்டாங்க. படிச்சு முடிச்சதும்  எப்படி தான் வேலை கிடை க்குமோ’ என்று மாணவர்கள் குமுறினர். இதனால், தமிழ் வழி இன்ஜினியரிங் முடிக்கும் 1200 பேர் வேலைவாய்ப்பு பெரும் கேள்விக்குறியாக உள்ளது.தமிழகத்தில் முதல்முறையாக தமிழ் வழி இன்ஜினியரிங் படிப்பு கடந்த 2010ம் ஆண்டு அண்ணா பல்கலைக்கழக மற்றும் அதன் உறுப்பு கல்லூரிகளில் தொடங்கப்பட்டது. 

அதைதொடர்ந்து, அப்போதைய திமுக அரசு 30.9. 2010ம் ஆண்டு தமிழ்வழி யில் படிக்கும் இன்ஜினியர்களுக்கு படித்து முடித்த உடன் அரசு வேலை வாய்ப்புகளில் 20 சதவீதம் இடஒதுக்கீடு வழங்கப்படும் என அரசாணை வெளியிட்டது.தமிழ் வழி மூலம் இன்ஜினியரிங் படிப்பில் சேர் ந்து படித்து வரும் 1200 இறுதியாண்டு மாணவர்கள் இன்னும் மூன்று மாதத்தில் இன்ஜினியரிங் படிப்பு முடிக்க உள்ளனர். இவர்கள்தான் தமிழ் வழி மூலம் இன்ஜினியரிங் படிப்பில் சேர்ந்து, முதல் முறையாக படிப்பை முடித்து வெளியே வருகின்றனர். பல்கலைக்கழக கல்லூரிகளில் தனியார் நிறுவனங்கள் நடத்தும் நேர்முகத் தேர்வில் தமிழ் வழி இன்ஜினியரிங் மாணவர்களை தேர்வு செய்வதில்லை. அவர்கள் ஆங்கில வழியில் படிக்கும் மாணவர்களை மட்டுமே நல்ல ஊதியத்தில் தேர்வு செய்யப்படுவதாக புகார் எழுந்துள்ளது.

இதுகுறித்து தமிழ் வழியில் படிக்கும் பொறியியல் மாணவர்கள் கூறியதாவது:அண்ணா பல்கலைக்கழகத்தில் தமிழ் வழியில் இன்ஜினியரிங் பட்டப் படிப்பு இறுதி ஆண்டு படித்து வருகிறோம்.  இன்ஜினியரிங் கல்லூரிகளில் தனியார் நிறுவனங்கள் வந்து நேர்முகத் தேர்வு நடத்துகின்றனர். இந்த தேர்வுகளில் ஆங்கில வழி மாணவர்களை மட்டுமே தனியார் நிறுவனங்கள் நல்ல ஊதியத்திற்கு தேர்வு செய்கின்றனர். ஆனால் தமிழ் வழியில் படித்த எங்களை மட்டும் தேர்வு செய்வதில்லை.இதுகுறித்து தனியார் நிறுவனங்களிடம் கேட்டால் எங்கள் நிறுவனம் வெளிநாட்டு நிறுவனம் இதில் ஆங்கில வழியில் படித்தவர்களை மட்டுமே தேர்வு செய்ய முடியும். உங்களை தேர்வு செய்ய முடியாது என்று கூறுகின்றனர். வேலை கிடைக்காவிட் டால் கூட பரவாயில்லை. நேர்முகத் தேர்வுக்கு வரும் தனியார் நிறுவனங்கள், உங்கள் அப்பா என்ன தொழில் செய்கிறார், காலையில் என்ன சாப்பிட்டீர்கள் என்று கேள்வி கேட்கின்றனர்.

 எங்களுக்கு திறமை இருந்தும் தனியார் நிறுவனங்கள் எங்களை புறக்கணிக்கின்றன. மத்திய அரசு நிறுவனமான பவர் கிரீட் நிறுவனம் கூட இதற்கு விதிவிலக்கு அல்ல. அரசு நிறுவனமே, எங்களுக்கு கிடைக்க வேண்டிய நியாயமான 20 சதவீத இட ஒதுக்கீட்டை பின் பற்ற வில்லை என்றால் யார் பின்பற்றுவார்கள்.இது குறித்து பல்கலைக்கழக நிர்வாகத்திடம் கேட்டால் தனியார் நிறுவனங்கள் தேர்வு முறையில் நாங்கள் தலையிட முடியாது என்று கூறுகின்றனர்.தாய் மொழியில் இன்ஜினியரிங் படித்த எங்களுக்கு வேலை கிடையாது. வெளிநாடுகளில் தாய் மொழியில் படித்தவர்களுக்கு முதலில் வேலை கொடுத்த பின்னர் தான் பிற மொழிகளில் படித்தவர்களுக்கு வேலை வழங்குகின்றனர். இன்னும் மூன்று மாதங்களில் இன்ஜினியரிங் படிப்பை முடிக்க உள்ளோம்.

இதுவரை எங்களுக்கு வேலை வழங்க எந்த தனியார் நிறுவனங்களும் முன் வரவில்லை. அரசு அறிவித்த 20 சதவீதம் ஒதுக்கீட்டில் வேலை வழங்குவது குறித்து இதுவரை தமிழக அரசு எந்த அறிவிப்பும் வெளியிட வில்லை. பல்கலைக்கழகமும் எங்கள் எதிர்காலம் குறித்து எந்த நடவடிக்கையும் எடுக்க வில்லை.எனவே, தமிழ் வழியில் இன்ஜினியரிங் படித்த எங்களை படித்த உடன் நேரடியாக தமிழக அரசு வேலை வழங்குமா? அல்லது தமிழ் நாடு தேர்வாணையம் மூலம் தேர்வு செய்வார் களா என்பது குறித்து தமிழக அரசு எங்களுக்கு உடனே விளக்க வேண்டும். இல்லை என்றால் நாங்கள் அனைவரும் சேர்ந்து போரா ட்டம் நடத்துவோம். நாங்கள்தான் முதல் முறையாக முடித்து வெளியே வருகிறோம். எங்களுக்கு வேலை கிடைத்தால்தான் அடுத்த ஆண்டு மாணவர்கள் தமிழ்வழி கல்வியில் சேருவார்கள். இல்லாவிட்டால் இன்ஜினியரிங் பாடப்பிரிவில் தமிழ் வழிக் கல்வி என்பது காணாமல் போய்விடும்.இவ்வாறு மாணவர்கள் தெரிவித்தனர்.

No comments:

Post a Comment