அங்கீகாரம் புதுப்பிக்காத தனியார் நர்ஸரி பள்ளிக்கு அதிகாரிகள் சீல் வைத்தனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து மாணவர்கள், பெற்றோர் சாலை மறியலில் ஈடுபட்டதால், பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
கண்ணமங்கலம் அடுத்த சந்தவாசல் கிராமத்தில், "லிட்டில் ஸ்டார்" மழலையர் மற்றும் தொடக்கப்பள்ளி இயங்கி வருகிறது. இங்கு 120 மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். பள்ளியை தேசிங்கு என்பவர் கடந்த ஐந்து ஆண்டாக நடத்தி வருகிறார். பொருளாதார நெருக்கடியால் வாசுகி சவுந்தர்ராஜன் என்பவருக்கு பள்ளியை குத்தகைக்கு விட்டிருந்தார்.
கடந்த ஜூன் மாதத்தோடு இப்பள்ளி அங்கீகாரம் முடிந்த நிலையில் அதை புதுப்பிக்காமல் வேறு பெயரில் தேசிங்கு நர்ஸிரி பிரைமரி ஸ்கூல் என்ற பெயரில் அதன் நிர்வாகி பள்ளியை தொடர்ந்து நடத்தினார்.
திருவண்ணாமலை மாவட்ட தொடக்க கல்வி அலுவலர் கணேசனுக்கு புகார்கள் சென்றன, அதன் பேரில், கணேசன், உதவி தொடக்க கல்வி அதிகாரி பவானி மற்றும் சந்தவாசல் போலீஸார் நேற்று முன்தினம் பள்ளிக்கு சீல் வைக்க சென்றனர்.
அப்போது, பெற்றோர்கள் மற்றும் மாணவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்ததால் வேறு வழியின்றி அதிகாரிகள் திரும்பினர். பின்னர் திருவண்ணாமலை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் பொன் அருண்பிரசாத் உத்தரவின்பேரில், கல்வி அதிகாரிகள் போலீஸார் உதவியுடன் மீண்டும் அந்த பள்ளிக்கு சென்று சீல் வைத்தனர்.
அதிர்ச்சி அடைந்த மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் படவேடு - சந்தவாசல் ரோட்டில் நேற்று முன்தினம் மாலை திடீர் மறியலில் ஈடுபட்டனர். இதனால், அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. தகவலறிந்து சம்பவ இடம் சென்ற சந்தவாசல் போலீஸார் பிரச்னை குறித்து பள்ளி நிர்வாகியிடம் பேசி முடிவு செய்து கொள்ளுங்கள். மறியல் செய்ய கூடாது. கலைந்து செல்லுங்கள் என மறியலில் ஈடுபட்டவர்களை எச்சரித்து, அங்கிருந்து அனுப்பி வைத்தனர்.
No comments:
Post a Comment