தமிழகம் முழுவதும் பள்ளிகளில் வரும் 2ம் தேதி முதல் 8ம் தேதி வரை ‘மகிழ்ச்சி தரும் வாரம்’ கொண்டாட பள்ளி கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. பள்ளிக் கல்வி இயக்குனகம் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: தமிழகம் முழுவதும் உள்ள பள்ளிகளில் படிக்கும் மாணவர்களிடையே ஈகை மனப்பான்மையை உருவாக்கவும், சக மாணவர்களிடையே அன்புடனும், ஆதரவுடனும், கொடுத்து உதவும் மனப்பாங்குடனும், சமூக ஏற்றத்தாழ்வுகளை மறந்து ஒருவருக்கொருவர் கைகோர்த்து கருத்துகளை பரிமாறிக்கொள்ளும் வகையில் வரும் 2ம் தேதி முதல் 8ம் தேதிவரை அனைத்து பள்ளிகளிலும் ‘மகிழ்ச்சி தரும் வாரம்’ என்ற நிகழ்ச்சியை நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதற்கான உத்தரவுகள் பள்ளி தலைமையாசிரியர்களுக்கும், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கும் பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதன்படி மாணவர்கள் தங்கள் பள்ளி ஆசிரியர்களை பாராட்டும் வகையில் சிறு கட்டுரை வரைதல், ஏழை எளிய மக்களுக்கு தங்களால் இயன்ற பரிசு பொருட்களை கொடுத்து உதவுதல், படிப்பறிவில்லாத மக்களுக்கு இடையே நல்ல கருத்துக்களை பரிமாறி கொள்ளுதல், பொது இடங்களில் வயதில் மூத்தவர்களுக்கு மரியாதை கொடுத்தல், அருகில் உள்ள முதியோர் இல்லத்துக்கு சென்று ஆதரவற்றோர்களிடம் அன்பு செலுத்துதல், பெற்றோர்களுக்கு உதவுதல், போன்ற செயல்களில் ஈடுபடலாம். அனைத்து பள்ளிகளிலும் கொண்டாடப்பட்ட விவரத்தினை பள்ளிக்கல்வி இயக்குநருக்கு தெரிவிக்க வேண்டும்.இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment