மத்திய அரசு-தனியார் கூட்டு முயற்சியில் சி.பி.எஸ்.இ. பள்ளிகள் தொடங்குவதற்கு தமிழகத்தில் வரவேற்பு இல்லை. இந்த புதிய கூட்டு முயற்சி திட்டத்துக்கு தமிழக அரசும் எதிர்ப்பு தெரிவிக்கும் வாய்ப்பு உள்ளது என்று தெரிய வந்துள்ளது.
மத்திய அரசு -தனியார் கூட்டு முயற்சியில் நாடு முழுவதும் 2,500 சி.பி.எஸ்.இ. பள்ளிகள் தொடங்கப்பட உள்ளன. ஒவ்வொரு மாநிலத்துக்கும் குறிப்பிட்ட எண்ணிக்கையிலான பள்ளிகள் ஒதுக்கப்பட்டுள்ள நிலையில், தமிழ்நாட்டுக்கு 356 பள்ளிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டு இருக்கிறது.
இந்த பள்ளிகளின் உள்கட்ட மைப்புக்காக மத்திய அரசாங்கம் ஆண்டுதோறும் மானிய உதவி வழங்கும். அத்தோடு இந்த பள்ளிகளில் அரசால் ஸ்பான்சர் செய்யப்படும் மாணவர்களுக்கான கல்விக் கட்டணத்தையும் பள்ளி நிர்வாகத்துக்கு வழங்கிவிடும். அரசு ஸ்பான்சர் மாணவர்கள் நீங்கலாக மற்ற பொது மாணவர்களுக்கான கல்விக் கட்டணத்தை பள்ளி நிர்வாகமே இன்றைய நிலைக்கேற்ப நிர்ணயித்து அந்த மாணவர்களிடம் வசூலித்துக்கொள்ளலாம்.
தமிழகத்தில் யாரும் விண்ணப்பிக்கவில்லை
இதுபோன்று தனியாருடன் கூட்டுசேர்ந்து மத்திய அரசு சி.பி.எஸ்.இ. பள்ளிகள் தொடங்குவதற்கு தமிழ்நாட்டில் அரசியல் கட்சி தலைவரும், கல்வியாளர்களும் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்த திட்டத்தினால், தமிழகத்துக்குப் பாதிப்பு இல்லாமல் பார்த்துக்கொள்வோம் என்று முதல்வர் ஜெயலலிதா அறிவித்திருந்தார்.
தமிழகத்தில் முதல்கட்டமாக 41 கூட்டு சி.பி.எஸ்.இ. பள்ளிகள் உள்பட ஒவ்வொரு மாநிலத்திலும் முதல்கட்டமாக தொடங்கப்பட வேண்டிய பள்ளிகளுக்கு விண்ணப்பிக்க மத்திய மனித ஆற்றல் மேம்பாட்டு அமைச்சகம் அறிவிப்பு வெளியிட்டிருந்தது. இதற்கான காலக்கெடு கடந்த அக்டோபர் மாதம் 15-ம் தேதி முடிவடைந்த நிலையில், தமிழகத்தில் இருந்து யாரும் விண்ணப்பிக்கவில்லை.
மத்திய அரசு அறிவிப்பின்படி, அடுத்த ஆண்டு பிப்ரவரியில் விண்ணப்பங்கள் தேர்வு செய்யப்பட்டு ஏப்ரலில் ஒப்பந்தம் கையெழுத்தாக வேண்டும். இதைத் தொடர்ந்து, ஜூன் மாதம் பள்ளிகள் தொடங்கப்படும். இதற்கிடையே, கூட்டு சி.பி.எஸ்.இ. பள்ளிகள் தொடங்குவதற்கு தமிழகத்தில் தனியார் யாரும் முன்வரவில்லை.
மத்திய அரசுடன் கூட்டு முயற்சி என்பதால் நிர்வாகத்தில் பல்வேறு தலையீடுகள் இருக்கும் என்பதால் தனியார் பள்ளி நிர்வாகிகள் யாரும் ஆர்வம் காட்டவில்லை. “இத்தகைய சூழலில், மத்திய அரசு-தனியார் கூட்டு பள்ளிகள் தொடங்குவதற்கு அரசும் எதிர்ப்புதான் தெரிவிக்கும். எனினும் இதுகுறித்து மத்திய அரசுக்கு அதிகாரப்பூர்வமாக தகவல் தெரிவிக்கப்படவில்லை” என்று பள்ளிக்கல்வித் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
No comments:
Post a Comment