ஈரோடு அருகே பள்ளிக்கூடத்திற்கு மாணவ–மாணவிகளை ஏற்றி சென்ற போது விபத்தில் சிக்கிய தனியார் வேனின் மோட்டார் வாகன அனுமதியை (பெர்மிட்) மாவட்ட கலெக்டர் சண்முகம் ரத்து செய்து உள்ளார்.
விபத்து
ஈரோடு திண்டலில் தனியார் மெட்ரிக்குலேசன் பள்ளிக்கூடம் ஒன்று உள்ளது. இந்த பள்ளிக்கூடத்துக்கு பெருந்துறை பகுதியில் இருந்து மாணவ–மாணவிகளை பெருந்துறை கொங்குநகரைச் சேர்ந்த சேகர் என்பவருக்கு சொந்தமான வேனில் தினமும் அழைத்து வருவது வழக்கம். இதைப்போல் கடந்த அக்டோபர் மாதம் 7–ந்தேதி மாணவ–மாணவிகள் 14 பேர் வேனில் பெருந்துறையில் இருந்து பள்ளிக்கூடத்துக்கு வந்து கொண்டு இருந்தனர். இந்த வேனை ஈரோடு நேதாஜி ரோடு பகுதியைச் சேர்ந்த காதர்மொகைதீன்(48) என்பவர் ஓட்டி வந்தார். இந்த வேன் வேப்பம்பாளையம் பிரிவு என்ற இடத்தில் வந்த போது, வேன் ரோட்டைவிட்டு கீழே சென்று அங்கிருந்த மண்மேடுகளின் மேல் ஏறிச்சென்றது. இதில் வேன் கவிழ்ந்தது.
ஓட்டுனர் உரிமம் ரத்து
இந்த விபத்து குறித்த தகவல் கிடைத்ததும், அங்குள்ள கலை அறிவியல் கல்லூரி மாணவர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து, வேனின் நேராக நிறுத்தினார்கள். பின்னே உள்ளே காயத்துடன் இருந்த மாணவ–மாணவிகளை மீட்டனர். இதில் 3 பேர் பலத்த காயம் அடைந்து இருந்தனர். இவர்கள் சிகிச்சைக்காக ஈரோடு அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர். இது குறித்து ஈரோடு தாலுகா போலீசார் வழக்கு பதிவு செய்து, வேன் டிரைவரான காதர்மொகைதீனை கைது செய்து விசாரணை நடத்தினார்கள். இது தொடர்பாக பெருந்துறை வட்டார போக்குவரத்து அதிகாரி வெங்கடேசன் விசாரணை நடத்தினார். அப்போது டிரைவர் காதர்மொகைதீன் குடிபோதையில் இருந்தது தெரியவந்தது. எனவே அவரின் ஓட்டுனர் உரிமத்தை வட்டார போக்குவரத்து அதிகாரி வெங்கடேசன் ரத்து செய்தார்.
வாகன அனுமதி ரத்து
இதைத்தொடர்ந்து பள்ளிக்கூடத்திற்கு மாணவ–மாணவிகளை ஏற்றி சென்ற வேனை குடிபோதையில் இருந்த டிரைவரிடம் இயக்க கொடுத்ததால், அந்த வேனின் பெர்மிட்டை(மோட்டார் வாகன அனுமதி) ரத்து செய்ய வட்டார போக்குவரத்து அதிகாரி வெங்கடேசன், மாவட்ட கலெக்டர் சண்முகத்துக்கு பரிந்துரை செய்தார். இந்த பரிந்துரையை ஏற்ற கலெக்டர் சண்முகம் வேனின் மோட்டார் வாகன அனுமதியை ரத்து செய்ய உத்தரவிட்டார். அதன்படி வேனின் மோட்டார் வாகன அனுமதி ரத்து செய்யப்பட்டது.
No comments:
Post a Comment