திருச்சி மாவட்டத்தில் ஒரு லட்சம் வளர் இளம்பெண்களுக்கு வாழ்க்கை கல்வி கற்றுக்கொடுக்கப்பட்டு வருவதாக கலெக்டர் ஜெயஸ்ரீ முரளிதரன் தெரிவித்தார்.
ஐம்பெரும் விழா
திருச்சி மாவட்டத்தில் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்டத்தின் சார்பில் உலக தாய்ப்பால் வாரவிழா, தேசிய ஊட்டச்சத்து வாரவிழா, உலக கை கழுவும் தினம், உலக அயோடின் தினம் மற்றும் உலக உணவு தினம் ஆகிய ஐம்பெரும் விழா கி.ஆ.பெ.விசுவநாதம் அரசு மருத்துவக் கல்லூரி கூட்ட அரங்கில் நேற்று நடைபெற்றது. மாவட்ட கலெக்டர் ஜெயஸ்ரீ முரளிதரன் தலைமை தாங்கினார்.
இவ்விழாவில் ஆரோக்கியமான குழந்தைகள், மாறுவேடப் போட்டியில் கலந்து கொண்ட அங்கன்வாடி குழந்தைகளுக்கு பரிசுகள் வழங்கி கலெக்டர் ஜெயஸ்ரீ முரளிதரன் பேசியதாவது:-
தாய்ப்பால் கொடுக்கும் பழக்கம் பெண்களிடையே குறைந்து வருகிறது. தாய்ப்பால் குழந்தையின் உரிமையாகும். எல்லாவிதமான சத்துக்களும் தாய்ப்பாலில் உள்ளது. மேலைநாடுகளில் பெண்களிடையே குழந்தை பிறந்த 6 மாத காலம் வரை தாய்ப்பால் கொடுக்க வேண்டும் என்ற விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளது. மூளை மற்றும் உடல் உறுப்புகள் வளர்ச்சிக்கு தாய்ப்பாலுக்கு இணையாக எதுவுமில்லை. இக்காலத்தில் நகர்ப்புறப் பெண்களிடையே சர்வசாதாரணமாக மார்பக புற்றுநோய் உண்டாகிறது. இதற்கு முக்கிய காரணம் வாழ்க்கை முறை மாற்றமும், தாய்ப்பால் கொடுக்காததும் ஆகும். தாய்ப்பால் அளிப்பதால் தாயின் ஆரோக்கியமும், குழந்தையின் ஆரோக்கியமும் நன்றாக இருக்கும்.
வளர் இளம்பெண்களுக்கு கல்வி
தமிழக அரசு வளர் இளம்பெண்களுக்கு வாழ்க்கைமுறைக் கல்வி கற்றுக்கொடுக்க அதிக நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. திருச்சி மாவட்டத்தில் ஒரு லட்சம் வளர் இளம் பெண்களுக்கு வாழ்க்கைக் கல்வி அளிக்கப்பட்டு வருகிறது. இக்கல்வியில் மாதவிடாய் காலத்தில் சுகாதாரத்தை பேணுவது குறித்தும், பால்வினை நோய், எச்.ஐ.வி. பாதுகாப்பு, ஒழுக்கம், கட்டுப்பாடு குறித்த விழிப்புணர்வு அளிக்கப்படுகிறது. இதுதவிர, விலையில்லா சானிடரி நாப்கின் மற்றும் ரத்த சோகையை தடுக்க இரும்புச்சத்து மாத்திரைகள் வழங்கப்படுகிறது.
இவ்வாறு அவர் பேசினார்.
இந்த விழாவில் அனைத்து அங்கன்வாடி மையங்களிலும் தோட்டங்கள் அமைக்கச் செடிகள் மற்றும் காய்கறி விதைகளும் வழங்கப்பட்டது. ஊட்டச்சத்து பற்றாக்குறை உள்ள 10 குழந்தைகளை தத்தெடுத்து 3 மாதகாலத்தில் அவர்களை ஆரோக்கியமான குழந்தைகளுக்கு இணையாக வளர தேவையான ஊட்டச்சத்து மற்றும் உடல் நல உதவிகள் வழங்கிய என்.ஐ.டி. பொறியியல் கல்லூரி மாணவர்களுக்கும் பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்பட்டது. 2011-12, 2012-13 ஆண்டு முடிய சிறப்பாகப் பணியாற்றிய அங்கன்வாடி பணியாளர்களுக்கும், தாமாக முன்வந்து அங்கன்வாடி மையங்களுக்கு அடிப்படை வசதிகள் செய்து கொடுத்த தன்னார்வலர்கள் 16 நபர்களுக்கும் பாராட்டுச் சான்றிதழும் வழங்கப்பட்டது.
மருத்துவக்கல்லூரி முதல்வர் டாக்டர் வள்ளிநாயகம், துணை முதல்வர் டாக்டர் எம்.ஏ. அலீம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment