ஒரு குடும்பத்துக்கு ஒரு சமையல் எரிவாயு இணைப்பு மட்டுமே வழங்கப்படும் என்று இண்டேன் நிறுவனம் எடுத்த முடிவு சரியானதுதான் என்று சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
இரண்டு இணைப்புகள்
நாகப்பட்டினம் மாவட்டம், திட்டச்சேரியைச்சேர்ந்தவர் ஆர்.முத்துகிருஷ்ணன். இவர், சென்னை ஐகோர்ட்டில் தாக்கல் செய்துள்ள மனுவில், ‘எனக்கு வழங்கப்பட்ட சமையல் எரியவாயு சிலிண்டர் வழங்குவதை இண்டேன் நிறுவனம் கடந்த 2011-ம் ஆண்டு முதல் நிறுத்திவிட்டது. எனவே எனக்கு சிலிண்டர் வழங்க உத்தரவிட வேண்டும்’ என்று கூறியிருந்தார்.
இந்த வழக்கில் இண்டேன் எரிவாயு நிறுவனம் தாக்கல் செய்த பதில் மனுவில், ‘முத்துகிருஷ்ணன் சென்னையில் ஒரு எரிவாயு இணைப்பு பெற்றுள்ளார். அவரது பெயரில் நாகப்பட்டினத்தில் மற்றொரு இணைப்பு பெற்றுள்ளது எங்களுக்கு தெரியவந்தது. அதனால், 2011-ம் ஆண்டு முதல் நாகப்பட்டினத்தில் உள்ள முகவரியில் வழங்கப்பட்ட இணைப்பு ரத்து செய்யப்பட்டது. ஒரு குடும்பத்துக்கு ஒரு எரிவாயு இணைப்புதான் வழங்க முடியும்’ என்று கூறியிருந்தது.
ஒரே வீட்டில்
இதை ஏற்றுக்கொண்ட நீதிபதி, வழக்கை தள்ளுபடி செய்து கடந்த மார்ச் மாதம் உத்தரவிட்டார். இந்த உத்தரவை எதிர்த்து ஐகோர்ட்டில் முத்துகிருஷ்ணன் அப்பீல் செய்தார்.
அதில், ‘ஒரே வீட்டில் இரண்டு எரிவாயு இணைப்பு பெறுவதுதான் இண்டேன் நிறுவன விதிகளின்படி தவறு. ஆனால், நான் சென்னை, நாகப்பட்டினம் ஆகிய 2 வீடுகளில்தான் இணைப்பு பெற்றுள்ளேன்’ என்று கூறியிருந்தார்.
இந்த வழக்கை தலைமை நீதிபதி ராஜேஷ்குமார் அக்ரவால், நீதிபதி எம்.சத்தியநாராயணன் ஆகியோர் விசாரித்தனர்.
குடும்பம்
பின்னர் நீதிபதிகள் அளித்த தீர்ப்பில், ‘கணவன், மனைவி, அவர்களது குழந்தைகள், பெற்றோர் ஆகியோரை கொண்டதுதான் ஒரு குடும்பம் என்றும் இந்த குடும்பத்துக்குத்தான் சமையல் எரிவாயு இணைப்பு வழங்க முடியும் என்று திரவ பெட்ரோலியம் எரிவாயு (எல்.பி.ஜி.) சட்ட விதிகளில் கூறப்பட்டுள்ளது. எனவே மனுதாரரின் இணைப்பை ரத்து செய்தது சரிதான்’ என்று உத்தரவிட்டுள்ளனர்.
No comments:
Post a Comment