Flash News

Flash News அன்பார்ந்த ஆசிரிய பெருமக்களே! இந்த வலை தளத்தில் தொடக்கப் பள்ளி மாணவர்களுக்கு தேவையான அடிப்படை கணித செயல்பாடுகளுக்கான விளையாட்டுகள் மற்றும் ஆங்கில விளையாட்டுகள் தரப் பட்டுள்ளன. அவற்றைக் கண்டு பள்ளிகளில் செயல்படுத்துமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்...01.07.2014 முதல் அகவிலைப்படி 7% உயருகிறது. ...

Tuesday, 6 May 2014

தனியார் பள்ளிகளுக்கு ரூ.25 கோடி தர தமிழக அரசு முடிவு

நடப்பு கல்வி ஆண்டில், இலவச மற்றும் கட்டாய கல்வி சட்டத்தின் (ஆர்.டி.இ.,) கீழ், தனியார் பள்ளிகளில், 25 சதவீத இட ஒதுக்கீட்டை அமல்படுத்துவதற்கு வசதியாக, தனியார் பள்ளிகளுக்கு, கடந்த ஆண்டு தர வேண்டிய, 25 கோடி ரூபாய் நிலுவை தொகையை, தமிழக அரசே வழங்க முடிவு செய்து உள்ளது.
தனியார் பள்ளிகள்:
ஆர்.டி.இ., சட்டத்தின் கீழ், தனியார் பள்ளிகள், ஆரம்ப நிலை வகுப்பில் (எல்.கே.ஜி., அல்லது முதல் வகுப்பு) உள்ள மொத்த இடங்களில், 25 சதவீதத்தை, ஏழை எளிய சமுதாயத்தில், நலிந்த பிரிவினரின் குழந்தைகளுக்கு அளிக்க வேண்டும். நடப்பு கல்வியாண்டுக்கான (2014 - 15) மாணவர் சேர்க்கை, மும்முரமாக நடந்து வரும் நிலையில், ஆர்.டி.இ., பிரிவு மாணவர் சேர்க்கை மட்டும், எங்கும் நடக்கவில்லை. தனியார் பள்ளிகள், இட ஒதுக்கீட்டு விண்ணப்பம் வழங்கவே மறுத்து வருகின்றன. இந்த இட ஒதுக்கீட்டின் கீழ், கடந்த கல்வி ஆண்டில் சேர்ந்த குழந்தைகளுக்கான கல்வி கட்டணத்தை, தமிழக அரசு, இதுவரை வழங்கவில்லை. இந்த நிதியை, மத்திய அரசு வழங்க வேண்டும் என்பதால், தமிழக அரசு மவுனமாக இருந்து வந்தது. இந்த நிலையில், தமிழ்நாடு நர்சரி, பிரைமரி, மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளிகள் சங்கத்தின் சார்பில், மாநில அளவிலான ஆலோசனை கூட்டம், சென்னையில் நேற்று நடந்தது. கூட்டத்திற்குப் பின், சங்க பொதுச் செயலர் நந்தகுமார், நிருபர்களிடம் கூறுகையில், ''நிலுவைத் தொகையை வழங்க, மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே, நடப்பு கல்வியாண்டில், ஆர்.டி.இ., இட ஒதுக்கீட்டை அமல்படுத்த மாட்டோம்,'' என்றார். தனியார் பள்ளிகளின் இந்த அதிரடி முடிவால், ஆர்.டி.இ., பிரிவின் கீழ் நடக்கும் மாணவர் சேர்க்கையில், திடீர் முட்டுக்கட்டை ஏற்பட்டுள்ளது.
இந்த பிரச்னை குறித்து, கல்வித்துறை வட்டாரம் கூறியதாவது: முதல் முறையாக, கடந்த கல்வியாண்டில், ஆர்.டி.இ., இட ஒதுக்கீட்டின் கீழ், 20 ஆயிரம் மாணவர்கள், தனியார் பள்ளிகளில் சேர்ந்தனர். இதற்கு செலவான, 25 கோடி ரூபாயை, மத்திய அரசு வழங்க வேண்டும். ஆனால், மத்திய அரசு வழங்காமல், காலதாமதம் செய்து வருகிறது.
இட ஒதுக்கீடு:
இனி, புதிய அரசு வந்து தான் வழங்க வேண்டி இருக்கும். அதற்கு, மேலும் சில மாதங்கள் ஆகிவிடும். இதனால், இட ஒதுக்கீட்டின் கீழ் மாணவர் சேர்க்கை நடப்பது நின்றுவிடக் கூடாது என்பதற்காக, தமிழக அரசே, 25 கோடி ரூபாயை வழங்க முடிவு செய்துள்ளது. பின்னர், இத்தொகை, மத்திய அரசிடமிருந்து கேட்டு வாங்கப்படும். இந்த தொகை, விரைவில், தனியார் பள்ளிகளுக்கு வழங்கப்படும். எனவே, எந்த பிரச்னையும் இல்லாமல், 25 சதவீத இட ஒதுக்கீட்டின் கீழ், நடப்பு கல்வியாண்டில் மாணவர் சேர்க்கை நடக்க, அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும். இவ்வாறு, கல்வித்துறை வட்டாரம் தெரிவித்தது.

No comments:

Post a Comment