Flash News

Flash News அன்பார்ந்த ஆசிரிய பெருமக்களே! இந்த வலை தளத்தில் தொடக்கப் பள்ளி மாணவர்களுக்கு தேவையான அடிப்படை கணித செயல்பாடுகளுக்கான விளையாட்டுகள் மற்றும் ஆங்கில விளையாட்டுகள் தரப் பட்டுள்ளன. அவற்றைக் கண்டு பள்ளிகளில் செயல்படுத்துமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்...01.07.2014 முதல் அகவிலைப்படி 7% உயருகிறது. ...

Thursday, 8 May 2014

நாளை +2 தேர்வு முடிவுகள்: விருதுநகர் மாவட்டம் இந்த ஆண்டிலும் முதலிடத்தை தக்க வைக்குமா?

விருதுநகர் மாவட்டத்தில் பிளஸ்2 தேர்வில் மாணவ, மாணவிகள் நிகழாண்டிலும் அதிகமாக தேர்ச்சி பெற்று முதலிடத்தை தக்க வைக்குமா என ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்களிடையே எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
தமிழகம் முழுவதும் இத்தேர்வு கடந்த மார்ச் 3-ம் தேதி தொடங்கி, தொடர்ந்து 25-ம் தேதி வரையில் நடைபெற்றது. விருதுநகர் மாவட்டத்தில் ஸ்ரீவில்லிபுத்தூர், அருப்புக்கோட்டை, விருதுநகர் ஆகிய கல்வி மாவட்டங்களில் இருந்து மாணவர்கள்-11596 பேரும், மாணவிகள் 12831 பேரும் என மொத்தம் 24427 பேர் பங்கேற்று தேர்வு எழுதினார்கள்.
இத்தேர்வு முடிவுகள் இன்று (வெள்ளிக்கிழமை) வெளியிடப்பட இருக்கிறது. அதற்கான பணிகளில் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலக அலுவலர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இதற்கிடையில் தேர்வு முடிவுகளை மாணவ, மாணவிகளும் ஆர்வமாக எதிர்பார்த்து உள்ளனர். தமிழக அளவில் பிளஸ்2 தேர்வில் விருதுநகர் மாவட்டம் முதலிடத்தை தக்க வைப்பதற்காக தலைமையாசிரியர்கள், ஆசிரியர்கள் ஆகியோர் தீவிர நடவடிக்கை எடுத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
அவ்வகையில் விருதுநகர் மாவட்டம் 1985ல் தொடங்கியது முதல், தொடர்ந்து 28 ஆண்டுகளாக பிளஸ்டூ தேர்வில் மாநில அளவில் முதலிடம் பெற்று வருகிறது. கடந்த 2001-02ல் 94.30 சதவீதம், 2002-03ல் 90.25 சதவீதம், 2003-04ல் 91.74 சதவீதமும், 2004-05ல் 88.96 சதவீதமும், 2005-06ல் 87.87 சதவீதமும், 2006-07ல் 94.37 சதவீதமும், 2007-08ல் 95.87 சதவீதமும், 2008-09ல் 96.14 சதவீதமும், 2009-10ல் 96 சதவீதமும், 2010-11ல் 95.03 சதவீதமும், 2011-12ல் 94.68 சதவீதமும், 2012-13ல் 95.87 சதவீதமும் பெற்றுள்ளன. இதேபோல், நிகழாண்டிலும் முதலிடத்தை தக்க வைக்குமா என ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்களிடையே எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளன.
மாநிலத்தில் முதலிடம் பெறுவதற்காக மாவட்ட நிர்வாகம் என்னென்ன நடவடிக்கை மேற்கொண்டன என்பது குறித்து முதன்மைக் கல்வி அலுவலர் வி.ஜெயக்குமார் கூறியதாவது: நன்றாக படிக்க கூடிய மாணவ, மாணவிகளுக்கு அதிக மதிப்பெண்கள் எடுக்கும் வகையில் சிறப்பு கையேடுகள் வழங்கப்பட்டுள்ளன. ஆசிரியர்கள் எளிதாக புரியும் வகையில் பாடங்களை கற்பிப்பது தொடர்பாக 3 கட்டங்களாக பயிற்சி அளிக்கப்பட்டது. மாணவ, மாணவிகள் வருகை குறைந்த பள்ளிகளின் தலைமையாசிரியர்கள் மூலம் ஆலோசனைகளும், அதேபோல் 100 சதவீதம் தேர்ச்சி குறைந்த பள்ளிகளுக்கு வழிமுறையோடு சனி, ஞாயிறுகளில் பயிற்சியும் அளிக்கப்பட்டன.
நடமாடும் ஆலோசனை மையம் அமைக்கப்பட்டு, ஆலோசகர் மூலம் ஒவ்வொரு பள்ளிக்கும் நேரில் சென்று மாணவர் குறைகளை அறி்ந்து, எந்த மாதிரி பாடங்களை படித்தால் தேர்ச்சி பெற ஆலோசனையும், கற்றலில் பின்தங்கியவர்களுக்கு கம்யூட்டர் புரொஜக்டர் மூலம் பாடங்கள் கற்பிக்கப்பட்டு, மடிக்கணினிகளில் குறுந்தகடுகளை பயன்படுத்தி படிக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டன. இதற்காக ஒவ்வொரு பள்ளியிலும் பட்டதாரி சிறப்பு ஆசிரியர்களை நியமித்து மாலை நேரங்களில் முக்கிய பாடங்களில் பயிற்சி வகுப்பு எடுக்கப்பட்டது. காலாண்டு, அரையாண்டு திருப்புதல் தேர்வுகளில் பெற்ற மதிப்பெண்களின் அடிப்படையில், குறைந்த மதிப்பெண் பெற்றவர்களுக்கு, தேர்ச்சி பெறுவதற்கான முன்மாதிரி பயிற்சியும் அளித்து மாணவ, மாணவிகள் தேர்வுக்கு தயார்படுத்தப்பட்டதாக மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் ஜெயக்குமார் தெரிவித்தார்.

No comments:

Post a Comment