பிளஸ்-2 தேர்வு மதிப்பெண் அடிப்படையில் தான் மருத்துவபடிப்பான எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ்., மற்றும் நர்சிங், பிஸியோ தெரபி உள்ளிட்ட மருத்துவம் சார்ந்த படிப்புகள், பி.இ., பி.டெக்., உள்ளிட்ட என்ஜினீயரிங் படிப்புகள், கால்நடை மருத்துவப்படிப்புகள், கலை அறிவியல் படிப்புகள் உள்ளிட்ட எந்த படிப்புகளிலும் சேர முடியும்.
எனவே எப்போது பிளஸ்-2 தேர்வு முடிவு வரும் என்று பிளஸ்-2 தேர்வு எழுதிய மாணவ-மாணவிகள் காத்திருக்கிறார்கள். தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் பிளஸ்-2 தேர்வு கடந்த மார்ச் மாதம் 3-ந்தேதி முதல் மார்ச் 25-ந்தேதி வரை நடைபெற்றது. தேர்வு முடிந்த உடன் விடைத்தாள்கள் திருத்தும் பணி தமிழ்நாடு முழுவதும் உள்ள கல்வி மாவட்டங்களில் ஆசிரியர்களை கொண்டு நடைபெற்றது.
வழக்கமாக தென்மாவட்ட விடைத்தாள்கள் வடமாவட்டங்களுக்கும், வடமாவட்ட விடைத்தாள்கள் தென்மாவட்டங்களுக்கும் அனுப்பப்படும். ஆனால் கடந்த வருடம் விடைத்தாள்கள் ரெயிலில் கொண்டு செல்லும்போது அவை ரெயில்வே தண்டவாளத்தில் விழுந்து சேதம் அடைந்து பிரச்சினை ஏற்பட்டது.
இதன் காரணமாக, இந்த வருடம் பாதுகாப்பு கருதி, அருகே உள்ள மாவட்டங்களில் விடைத்தாள்கள் மதிப்பீடு செய்யப்பட்டது. விடைத்தாள் திருத்தும் பணி முடிவடைந்து விட்டது. விடைத்தாளில் போடப்பட்டுள்ள மதிப்பெண்கள் டேட்டா சென்டருக்கு அனுப்பி வைக்கப்பட்டு மாணவர்கள் வாரியாக மதிப்பெண்கள் கம்ப்யூட்டர் மூலம் பதிவு செய்யப்பட்டது.
தற்போது மதிப்பெண்கள் சரியாக பதிவு செய்யப்பட்டுள்ளதா? என்று மீண்டும் ஆய்வு செய்யப்பட்டு அந்த பணியும் முடிந்துவிட்டது. தேர்வு முடிவு தயாராக உள்ளது. முடிவு நாளை(வெள்ளிக்கிழமை) காலை 10 மணிக்கு சென்னை நுங்கம்பாக்கம் கல்லூரி சாலையில் உள்ள டி.பி.ஐ. வளாகத்தில் உள்ள அரசு தேர்வுகள் இயக்குனரகத்தில்,
இயக்குனர் கு.தேவராஜனால் வெளியிடப்பட உள்ளது. முடிவை வெளியிட அவருக்கு உறுதுணையாக இணை இயக்குனர்கள் ராஜ ராஜேஸ்வரி, ராமராஜன் ஆகியோர் உள்ளனர்.
No comments:
Post a Comment