சிகரெட் மற்றும் புகையிலை பொருட்கள் உபயோகிப்பவர்களுக்கு வேலை வழங்குவது இல்லை என ராஜஸ்தான் அரசின் மின் நிறுவனங்கள் முடிவு செய்துள்ளன. சிகரெட் மற்றும் புகையிலை பொருட்கள் பயன்படுத்துபவர்களுக்கு அரசு வேலை வழங்க வேண்டாம் என மாநில அளவிலான புகையிலை கட்டுப்பாட்டு குழு ராஜஸ்தான் அரசுக்கு கடந்த 2012ல் பரிந்துரை செய்தது. தற்போது இந்த பரிந்துரையை அமல்படுத்த ராஜஸ்தான் மின் நிறுவனங்கள் முடிவு செய்துள்ளன. இது தொடர்பான உத்தரவு விரைவில் வெளியிடப்படவுள்ளது. அரசு வேலைக்கு விண்ணப்பிப்பவர்கள் சிகெரெட் பிடிக்க மாட்டேன், புகையிலை பொருட்கள் எதையும் பயன்படுத்தமாட்டேன் என உறுதிமொழி அளிக்க வேண்டும். ராஜஸ்தான் மின் நிறுவனங்களின் இந்த முடிவை, ஜெய்ப்பூரில் உள்ள இனயா பவுன்டேஷன் என்ற தொண்டு நிறுவனம் வரவேற்றுள்ளது.
இது குறித்து அதன் தலைவர் நிதிஷா சர்மா கூறுகையில், ‘‘புகையிலை பொருட்கள் உபயோகத்தால் ஆண்டுக்கு நூற்றுக்கணக்கான மக்கள் கேன்சர் பாதிப்பால் இறக்கின்றனர். இந்தியாவில் ஆண்களுக்கு ஏற்படும் கேன்சரில் 50 சதவீதமும், பெண்களில் ஏற்படும் கேன்சர் பாதிப்பில் 17 முதல் 20 சதவீதமும் இதனால் ஏற்படுகிறது’’ என்றார்.
No comments:
Post a Comment