Flash News

Flash News அன்பார்ந்த ஆசிரிய பெருமக்களே! இந்த வலை தளத்தில் தொடக்கப் பள்ளி மாணவர்களுக்கு தேவையான அடிப்படை கணித செயல்பாடுகளுக்கான விளையாட்டுகள் மற்றும் ஆங்கில விளையாட்டுகள் தரப் பட்டுள்ளன. அவற்றைக் கண்டு பள்ளிகளில் செயல்படுத்துமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்...01.07.2014 முதல் அகவிலைப்படி 7% உயருகிறது. ...

Thursday, 1 May 2014

சமூக அறிவியலை களத்தில் பயின்ற மாணவர்கள்!


திருச்சி சமயபுரம் எஸ்ஆர்வி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 2 பயிலும் 182 மாணவர்கள், தங்களது வெளிக்காற்று உள்ளே வரட்டும் என்ற 7 நாள் தலைமைத்துவப் பயிலரங்கின் பகுதியாக ஒரு கிராமத்துக்குச் சென்று ஆய்வு நடத்தினர்.

திருச்சி - கல்லணைச் சாலையிலுள்ள உத்தமர்சீலியில் இந்த நிகழ்ச்சி நடைபெற்றது. மாநகருக்கு அருகே இருக்கிறதென்று பெயரென்றாலும் அடிப்படை வசதிகள் மிகவும் குறைவே.

3 சமூகத்தினர் வாழும் கிராமம். 60 சதவீதத்துக்கும் அதிகமான வீடுகளில் கழிப்பறை இல்லை. இங்குள்ள அரசுப் பள்ளியில் கடந்த ஆண்டுதான் எஸ்எஸ்எல்சி வகுப்பு தொடங்கப்பட்டுள்ளது. ஓரிரு மாணவர்களே தொடர்ந்து உயர்கல்வி பயில நகருக்கு வந்து கல்லூரிகளில் சேர்ந்துள்ளனர். வாரத்தின் 3 நாள்கள் மட்டுமே செயல்படும் ஒரேயொரு சித்த மருத்துவமனை. கால்நடை மருத்துவமனையும் உண்டு.

வாழை உள்ளிட்ட வேளாண் தொழில்தான் பிரதானம். இதில் விவசாயக் கூலிகளே அதிகம். இப்படிப்பட்ட ஒரு கிராமத்தில் மாணவர்கள் 182 பேர் (இவர்களில் 71 பேர் மாணவிகள்) வீடு வீடாகச் சென்று ஆய்வு நடத்தினர். இந்த ஆய்வை மதுரை சமூக அறிவியல் கல்லூரியின் ஓய்வுபெற்ற பேராசிரியர்கள் ரெங்கராஜன், நாராயண் ராஜா மற்றும் கிழக்குப் பதிப்பகம் பத்ரி சேஷாத்ரியும் ஒருங்கிணைத்தனர்.

வீடு வீடாகச் சென்று திரும்பிய மாணவர்களுடன் அந்த ஊரின் ஊராட்சி மன்றத் தலைவர், கிராம நிர்வாக அலுவலர் உள்ளிட்டோருடன் கலந்துரையாடல் கூட்டமும் நடைபெற்றது.

தொடர்ந்து இந்தக் கள ஆய்வு தொடர்பான கலந்துரையாடல் மாலையில் பள்ளியில் நடைபெற்றது. இதில் கிராமங்களில் பெண்களுக்கான இடம், விவசாயத்தில் கிடைக்கும் வருமானம், மதுபானத்தால் ஏற்படும் பிரச்னைகள் உள்ளிட்ட ஏராளமான தளங்களில் ஆழமான விவாதம் நடைபெற்றதாக பதிப்பாளர் பத்ரி தெரிவித்தார்.

நகர்ப்புற மாணவர்களுக்கு சமூக அறிவியல் குறித்து வகுப்பறைக்கு வெளியேயான ஒரு தெளிவான - நேரடி அறிமுகத்தை இந்த ஒரு நாள் வழங்கியிருக்கிறது என்றும் அவர் குறிப்பிட்டார்.

சாதி, சமயம், அரசியல், திரைப்படம், உணவு முறை, கல்வி, வரலாறு என பல்வேறு தலைப்புகளில் ஒரு வாரம் பயிற்சி நடத்தினாலும், அதிலொரு பிரிவாக கிராமங்களைப் புரிந்து கொள்ளும் நிகழ்ச்சிதான் முத்தாய்ப்பானதாக அமைந்துவிடுகிறது என்கிறார் பள்ளி முதல்வர் க. துளசிதாசன்.

பிளஸ் 1 முடித்து பிளஸ் 2 வகுப்புக்குள் நுழையும் இந்த மாணவர்கள் எதிர்காலத்தில் பொறியாளராக, மருத்துவராக, நிர்வாக அதிகாரியாக வெளிவரப்போகிறார்கள் என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை. ஆனால், அவர்கள் சமூக அக்கறையுள்ளவர்களாக இருக்கப் போகிறார்கள் என்பது மட்டுமே இந்த முகாமின் நோக்கம். வழக்கமான பாடத்திட்டத்தின் ஒரு பகுதியாகவே இதனை நடத்தி வருகிறோம் என்கிறார் முகாமின் ஒருங்கிணைப்பாளர் எழுத்தாளர் ச. தமிழ்ச்செல்வன்.

No comments:

Post a Comment