வட மாவட்டங்களின் கல்வி வளர்ச்சிக்காவும் அரசுப் பள்ளிகளில் கல்வியின் தரத்தை உயர்த்தவும் சிறப்புத் திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என்று தமிழக அரசுக்கு பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கோரிக்கை விடுத்துள்ளார்.
இது குறித்து சனிக்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கை:
பிளஸ் 2 பொதுத்தேர்வில் தமிழகம் - புதுச்சேரியில் 90.60 சதவீத மாணவ, மாணவிகள் தேர்ச்சி பெற்றிருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரையில் மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த மாணவி சுஷாந்தி 1,193 மதிப்பெண்கள் பெற்று மாநில அளவில் முதலிடம் பிடித்திருப்பது நாம் பெருமைப்பட வேண்டிய விஷயமாகும். தேர்ச்சி விகிதத்தில் முதல் 10 இடங்களில், வட தமிழகத்தைச் சேர்ந்த மாவட்டங்கள் இடம்பெறவில்லை.
ஆனால் கடைசி 11 இடங்களில் உள்ள திருவண்ணாமலை, அரியலூர், கடலூர், வேலூர், விழுப்புரம், காஞ்சிபுரம், திருவள்ளூர், கிருஷ்ணகிரி ஆகிய 8 மாவட்டங்கள் வட தமிழகத்தைச் சேர்ந்தவை. சென்னை மாநகருடன் இணைந்த திருவள்ளூரும் காஞ்சிபுரமும் 23 மற்றும் 24-ஆவது இடங்களில் உள்ளன.
இந்த நிலையை மாற்றி வட மாவட்டங்களில் கல்வி வளர்ச்சியை ஏற்படுத்த திராவிடக் கட்சிகளின் ஆட்சிகள், ஆக்கப்பூர்வமான எந்த நடவடிக்கையையும் எடுக்கவில்லை.
அரசுப் பள்ளிகளில் இருக்கும் ஆசிரியர் பற்றாக்குறைதான் இதற்கு முக்கியக் காரணமாகும்.
தனியார் கல்லூரிகளை விட அரசுக் கல்லூரிகள் அனைத்துத் துறைகளிலும் சிறந்து விளங்கும்போது, அரசுப் பள்ளிகளின் தரத்தை உயர்த்த எது தடையாக உள்ளது எனத் தெரியவில்லை. வட மாவட்டங்களின் கல்வி வளர்ச்சிக்காவும் அரசுப் பள்ளிகளின் தரத்தை உயர்த்தவும் தமிழக அரசு சிறப்புத் திட்டத்தை தயாரித்து செயல்படுத்த வேண்டும் என ராமதாஸ் கேட்டுக் கொண்டுள்ளார்
No comments:
Post a Comment