கோவை மாவட்டம், மாநில அளவில், தரவரிசை பட்டியலில் முதல் ஐந்து இடங்களை பெறுவதற்கு வாய்ப்புகள் இருந்தும் தேர்வு சமயங்களின் போது, மாணவர்களின், 'ஆப்சென்ட்' எண்ணிக்கை அதிகமாக இருந்ததன் காரணமாக, தேர்ச்சி விகிதம் சரிந்து, ஏழாம் இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளது.
கோவை மாவட்டத்தில், 36 ஆயிரத்து 573 மாணவர்கள் பிளஸ் 2 தேர்வில் பங்கேற்றனர். இதில், 1868 பேர் தோல்வியடைந்துள்ளனர். 94.89 சதவீதம் பெற்று, மாநில தரவரிசை பட்டியலில் ஏழாம் இடத்தை பெற்றுள்ளது. தேர்வில் 'ஆப்சென்ட்' ஆன மாணவர்கள் தோல்வியடைந்தவர்கள் பட்டியலில் சேர்க்க வேண்டும் என்ற நிலையில், தேர்ச்சி விகிதம் சரிந்துள்ளது.கோவை மாவட்டத்தை பொறுத்த வரை, தமிழ் முதல் தாளில் 536 பேர், இரண்டாம் தாளில் 527 பேர், ஆங்கிலத்தேர்வில் 580 பேர், பொருளியல் மற்றும் இயற்பியல் தேர்வுகளில் 565 பேர், கணித பாடத்தில் 253 பேர், வேதியியல் மற்றும் கணக்கு பதிவியியல் பாடங்களில் 640 பேர், உயிரியல், வரலாறு மற்றும் வணிக கணிதம் பாடத்தில் 371 பேர், தேர்வுகளில் பங்கேற்கவில்லை. பெரும்பாலும், தனித்தேர்வர்களே, 'ஆப்சென்ட்' பட்டியலில் இடம் பெற்றுள்ளதாக மாவட்ட கல்வித்துறை அலுவலர்கள் தெரிவித்தனர்.
கோவை மாவட்டத்தில், 1868 பேர் தோல்வியடைந்துள்ளனர். இதில், 40 முதல் 50 சதவீதத்தினர் தேர்வில் பங்கேற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 'ஆப்சென்ட்' ஆன மாணவர்களின் எண்ணிக்கை குறைந்திருந்தால், கட்டாயம் கோவை மாநில அளவில் முதல் ஐந்து இடங்களை எளிதாக பெற்றிருக்கலாம்.முதன்மை கல்வி அதிகாரி ஞானகவுரி கூறுகையில்,''மாணவர்கள் அதிக எண்ணிக்கையில் 'ஆப்சென்ட்' ஆனது, தேர்ச்சி விகித குறைவுக்கு ஓர் காரணம். தனித்தேர்வர்கள் அதிக அளவில் தேர்வில் பங்கேற்கவில்லை. இதேபோல், சில அரசு பள்ளிகளிலும் நீண்ட நாட்கள் பள்ளிக்கு வராத மாணவர்களும் இப்பட்டியலில் இடம்பெற்றிருந்தனர். வரும் ஆண்டுகளில், தேர்ச்சி விகிதம் மேலும் அதிகரிக்கவும், 'ஆப்சென்ட்' ஆன மாணவர்கள் எண்ணிக்கை அதற்கான காரணங்கள் தெளிவாக ஆய்வு செய்து வரும் ஆண்டில் சரிசெய்யப்படும்,'' என்றார்.
No comments:
Post a Comment