Flash News

Flash News அன்பார்ந்த ஆசிரிய பெருமக்களே! இந்த வலை தளத்தில் தொடக்கப் பள்ளி மாணவர்களுக்கு தேவையான அடிப்படை கணித செயல்பாடுகளுக்கான விளையாட்டுகள் மற்றும் ஆங்கில விளையாட்டுகள் தரப் பட்டுள்ளன. அவற்றைக் கண்டு பள்ளிகளில் செயல்படுத்துமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்...01.07.2014 முதல் அகவிலைப்படி 7% உயருகிறது. ...

Saturday, 1 February 2014

கணினி பட்டதாரிகள் ஆசிரியர்கள் கலந்தாய்வு கூட்டம்

கணினி பட்டதாரி ஆசிரியர்கள், தொடர்ந்து பணி வாய்ப்பு இன்றி தவித்து வருகின்றனர். இந்நிலையில், இரண்டு ஆண்டுகளாக, தற்காலிக ஊழியர்களாக பணியாற்றி வரும், ஆசிரியர்களிடையே குழப்பம் நிலவுகிறது. இதையடுத்து, வரும் 2ம் தேதி கலந்தாய்வு கூட்டம் நடத்த முடிவுசெய்துள்ளனர்.
கணினி பட்டதாரி ஆசிரியர்கள், இதுவரை, 175 பேர் மட்டுமே முறையான அரசு வேலை வாய்ப்பு பெற்றுள்ளனர். தற்போது, மாவட்டத்தில், 300 பேர் பி.எட்., பட்டம் பெற்று வேலை வாய்ப்பிற்காக காத்திருக்கின்றனர்.பகுதி நேர ஆசிரியர்களாக, 210 பேர் பணியாற்றி வருகின்றனர். திட்டம் வரும் மார்ச் மாதம் முடிவடையும் நிலையில், இவர்களின் பணி குறித்து, அச்சம் எழுந்துள்ளது. இந்நிலையில், மீண்டும் ஒப்பந்த அடிப்படையில், 4,430 ஆசிரியர்கள் நியமனம் செய்யப்பட உள்ளதாக, பட்டதாரிகளிடையே தகவல் பரவி வருகிறது.
இதனால்,குழப்பத்தில் உள்ள கணினி பட்டதாரி கள் வரும், 2ம் தேதி, ஆர்.கே.பேட்டையில், கலந்தாய்வு கூட்டம் நடத்த முடிவு செய்து உள்ளனர்.இதில், தங்களின் கருத்துக்களை பகிர்ந்துகொள்ளவும். தங்களுக்குள் ஒரு தகவல் பரிமாற்றத்தை மேற்கொள்ளவும் முடிவு செய்துள்ளனர்.

உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகளில் தமிழாசிரியர் பணியிடங்கள் காலி:தேர்ச்சி விகிதம் குறையும் அபாயம்

மாநிலம் முழுவதும் செயல்படும், உயர்நிலை, ல்நிலைப்பள்ளிகளில் முதுகலை மற்றும் பட்டதாரி தமிழாசிரியர்களின் பணியிடங்கள் காலியாக உள்ளது. இதனால், இப்பாடத்தில் தேர்ச்சி விகிதம் குறையும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
தமிழகம் முழுவதும், அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகள் செயல்பட்டு வருகிறது. இதில், ஆறு முதல் ??ம் வகுப்பு வரை செயல்படும் உயர்நிலைப்பள்ளிகளில் பட்டதாரி தமிழாசிரியர்களும், மேல்நிலைப்பள்ளிகளில் முதுகலை பட்டதாரி தமிழாசிரியர் பணியிடங்களும் காலியாக உள்ளது.

இதனால், பொதுத்தேர்வு எழுதும் மாணவர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.கணிதம், அறிவியல் போன்ற பிற பாடங்களுக்கு, பெற்றோர் ஆசிரியர் கழக நிதியிலிருந்து தற்காலிக ஆசிரியர்களை நியமித்துக்கொள்ள மாற்று ஏற்பாடுகள் பள்ளிக்கல்வித்துறையால் செய்யப்பட்டுள்ளது. தமிழ் பாடத்திற்கு, இதுபோன்ற மாற்று ஏற்பாடுகள் ஏதும் செய்யாமல் கல்வித்துறை மெத்தனத்துடன் செயல்பட்டு வருகிறது.தமிழ் மாணவர்களுக்கு படிப்பதற்கு எளிமையாக இருப்பினும், முதல் தாளில் செய்யுள் பகுதியும், இரண்டாம் தாள் முழுவதும் இலக்கணப்பகுதியும் உள்ளது.

இலக்கணம் மற்றும் செய்யுள் பகுதியை ஆசிரியர்களின் ஒத்துழைப்பு இல்லாமல் மாணவர்கள் புரிந்துகொள்வது என்பது இயலாதது. மனப்பாடம் செய்வதும் சிரமம்.தமிழக தமிழாசிரியர் மாநிலத்தலைவர் ஆறுமுகம் கூறுகையில்,''கல்வித்துறை அதிகாரிகளின் மெத்தனத்தால் மட்டுமே தற்போது, உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் தமிழாசிரியர் பணியிடங்கள் காலியாகவுள்ளது. தெளிவான முடிவுகளை மேற்கொள்ளாததால் நீதிமன்ற வழக்குகள் தொடர்ந்து கொண்டே இருக்கின்றது. இந்நிலையில், கடந்த கல்வியாண்டு துவக்கம் முதல் தற்போது வரை ???? தமிழாசிரியர் பணியிடங்கள் காலியாகவே உள்ளது. இதனால், பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களின் தேர்ச்சி விகிதம் தமிழ் பாடத்தால் குறையும் அவலநிலை ஏற்பட்டுள்ளது,'' என்றார்.

திருச்சி பட்டதாரிப் பெண்ணுக்கு ஆசிரியர் பணி வழங்க பரிசீலனை, நீதிமன்றம் உத்தரவு!

ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி அடைந்த மாணவிக்கு ஆசிரியர் பணி வழங்க மறுத்த தேர்வு வாரியத்திற்கு நீதிமன்றம் உத்தரவு.இதுகுறித்து கூறப்படுவதாவது: திருச்சி கிராபோர்டு ரெயில்வே குடியிருப்பு பகுதியை சேர்ந்தவர் சாஜூதாபர்வீன்(வயது 33). இவர், மதுரை ஐகோர்ட்டு கிளையில் தாக்கல் செய்த மனுவில் கூறி இருந்ததாவது:


"நான், பிளஸ்2 முடித்து விட்டு திருச்சி ஜமால் முகமது கல்லூரியில் பி.சி.ஏ பட்டப்படிப்பு படித்தேன். அதன்பின்பு மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் 2005ஆம் ஆண்டு எம்.ஏ ஆங்கில இலக்கியம் படித்தேன். இதன்பின்பு, இந்திராகாந்தி தேசிய திறந்த நிலை பல்கலைக்கழகத்தின் மூலம் 2009ஆம் ஆண்டு பி.எட் முடித்தேன்.

இதன்பின்பு, பி.ஏ ஆங்கில இலக்கியம் படித்தேன். கடந்த 21.7.2013 அன்று ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்திய முதுகலை பட்டதாரி ஆசிரியர் தேர்வில் கலந்து கொண்டேன். 91 மதிப்பெண்கள் பெற்று அந்த தேர்வில் வெற்றி பெற்றேன். பதிவு மூப்புக்காக ஒரு மதிப்பெண் வழங்கப்பட்டது. அதன்பின்பு நடந்த சான்றிதழ் சரிபார்ப்பிலும் கலந்து கொண்டேன்.

இதனால், எனக்கு ஆசிரியர் பணி கிடைக்கும் என்று எதிர்பார்த்து காத்திருந்தேன். ஆனால், எனக்கு ஆசிரியர் பணி வழங்க மறுத்து 22.10.2013 அன்று தேர்வு வாரியம் உத்தரவிட்டது. காரணம் கேட்ட போது, நான் எம்.ஏ படிப்பை முடித்த பின்பு பி.ஏ படித்துள்ளதால் எனக்கு ஆசிரியர் பணி வழங்க முடியாது என்று தெரிவித்தனர்.

நான், ஏற்கனவே அரசு விதித்துள்ள நடைமுறைப்படி பிளஸ்2 படித்து பட்டப்படிப்பை முடித்த பின்பு தான் எம்.ஏ படித்தேன். எனவே, எனக்கு ஆசிரியர் வேலை வழங்க மறுப்பது சரியல்ல. எனவே, எனக்கு ஆசிரியர் பணி வழங்க உத்தரவிட வேண்டும்."

இவ்வாறு மனுவில் கூறப்பட்டு இருந்தது.

இந்த மனு நீதிபதி எம்.எம்.சுந்தரேஷ் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. மனுதாரர் சார்பில் வக்கீல் எஸ்.எம்.ஏ.ஜின்னா ஆஜராகி வாதாடினார். மனுவை விசாரித்த நீதிபதி உத்தரவில் கூறி இருப்பதாவது:

"மனுதாரர் அரசு விதித்துள்ள நடைமுறைப்படி பிளஸ்2 படித்து விட்டு பட்டப்படிப்பை முடித்த பின்பு எம்.ஏ படித்துள்ளார். பட்டப்படிப்பையும், எம்.ஏ படிப்பையும் வெவ்வேறு பாடப்பிரிவில் படித்ததால் எம்.ஏ முடித்த பின்பு எம்.ஏபடிப்புக்கான பாடப்பிரிவில் பி.ஏ படித்துள்ளார். இது தவறு அல்ல. இதற்காக மனுதாரருக்கு ஆசிரியர் பணி வழங்க மறுத்தது சரியல்ல. மனுதாரருக்கு ஆசிரியர் பணி வழங்க ஆசிரியர் தேர்வு வாரியம் பரிசீலிக்க வேண்டும்."

பள்ளி மாணவர்களிடம் மனித நேயத்தை ஆசிரியர்கள் கற்றுக்கொடுக்க வேண்டும்: கலெக்டர் நந்தகோபால் பேச்சு

பள்ளி மாணவர்களிடம் மனித நேயத்தை ஆசிரியர்கள் கற்றுக்கொடுக்க வேண்டும் என்று, கலெக்டர் நந்தகோபால் கூறினார்.
மனிதநேய வார நிறைவு விழா
வேலூர் மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில் மனிதநேய வார நிறைவு விழா நடந்தது. விழாவில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின்கீழ் இயங்கும் பள்ளிகளில் 2012–2013–ம் ஆண்டில் 10–ம் வகுப்பு, 12–ம் வகுப்பில் மாவட்ட அளவில் முதல் 3 இடங்களை பெற்ற பள்ளி மாணவ– மாணவிகளுக்கு கலெக்டர் நந்தகோபால் பரிசுகள் வழங்கி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:–
மனிதநேய வார விழா ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 24–ந் தேதி முதல் 30–ந் தேதி வரை நடத்தப்பட்டு வருகிறது. இந்த விழா நடத்துவதன் காரணம் அனைத்து மாணவர்களும் சாதி, மதம் வேறுபாடு இன்றி ஒன்றாக கலந்து கொள்ள வேண்டும் என்பதற்காகத்தான். மனித நேயம் என்றால் என்ன என்று முதலில் தெரிந்து கொள்ள வேண்டும். எல்லா மக்களும் ஒற்றுமையுடன், சாதி வேறுபாடு இல்லாமல் துன்பம் வரும்போது ஒருவருக்கு ஒருவர் உதவி செய்வதே ஆகும். வரலாற்றில் சாதி இல்லாமல் சிறப்பாக மக்கள் வாழ்ந்து வந்துள்ளனர்.
நாகரீக மாற்றம்
பண்டைய காலத்தில் மக்கள் குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை என 5 வகை நிலங்களாக பிரித்து அதன் அடிப்படையில் வழிபாடு நடத்தி வாழ்ந்து வந்தனர். தற்போது நாகரீக மாற்றத்தால் சாதி, மதம், மொழி என்ற அடிப்படையில் வாழ்ந்து வருகிறார்கள்.
ஒடுக்கப்பட்டோர் மற்றும் தாழ்த்தப்பட்டோருக்காக உழைத்தவர் அம்பேத்கர். பல திட்டங்களை உருவாக்கியவர். அவரது வாழ்க்கை வரலாற்றை மாணவர்கள் படித்தால் உற்சாகத்தை கொடுக்கும். தன் சொந்த முயற்சியால் இந்திய சட்ட வரைவு குழுவிற்கு தலைமை தாங்கினார். ஒருவர் எப்படி வாழவேண்டும் என்பதற்கு முன் உதாரணமாக திகழ்ந்தவர் அம்பேத்கர்.
கற்றுக் கொடுக்க வேண்டும்
காந்திக்கும், தமிழ்நாட்டிற்கும் நெருங்கிய தொடர்பு உண்டு. காந்தி தமிழ் மக்களை பார்த்துதான் உயர்ரக ஆடைகளை இனி அணிய மாட்டேன் என்று உறுதி எடுத்துக் கொண்டார். பெரியார் இட ஒதுக்கீடு கொள்கையை வகுத்தார். அதன்படிதான் அரசு வேலையில் நாம் வேலை செய்கிறோம்.
ஆசிரியர்கள், பள்ளி மாணவர்களுக்கு மனிதநேயம், மாண்பு, வரலாற்றை கற்றுக் கொடுக்க வேண்டும். நாட்டிற்காக தலைவர்கள் எப்படியெல்லாம் உழைத்தார்கள் என்பதை தெரிந்து கொள்ள வேண்டும். இரக்கத்திற்கும், மனிதநேயத்திற்கும் வேறுபாடு உள்ளது. மனித நேயம் என்ற பெயரில் நாம் ஏமாறக்கூடாது. இந்தியா உலகத்திலேயே மக்கள் தொகையில் 2–வது இடம் வகிக்கிறது. அதிக எண்ணிக்கையில் ராணுவ வீரர்களைக் கொண்ட மிகப்பெரிய நாடு. ஆனால் இங்குதான் மதம், சாதி, உட்பிரிவுகள் அதிகமாக காணப்படுகிறது. இதை நாம் உணர்ந்து பார்க்க வேண்டும்.
உறுதி ஏற்பீர்
மாணவர்களாகிய நீங்கள் வரலாற்றையும், வரலாற்று தலைவர்களின் தியாகத்தையும் அறிந்து கொண்டு இந்த மனிதநேய விழாவில் தீண்டாமை ஒழித்திட உறுதி ஏற்று வாழ்ந்திட வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.

துப்புரவு தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு கல்வி உதவித்தொகை: கலெக்டர் அர்ச்சனா பட்நாயக் தகவல்

கோவை மாவட்ட துப்புரவு தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு கல்வி உதவித்தொகை வழங்கப்பட உள்ளது என்று கலெக்டர் அர்ச்சனா பட்நாயக் தெரிவித்து உள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்தி அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது:–
துப்புரவு தொழிலாளர்கள்
மத்திய அரசின் கல்வி உதவித்தொகை வழங்கும் திட்டத்தின் கீழ், துப்புரவு தொழிலாளர்கள், குப்பை பொறுக்குபவர்கள், தோல் பதனிடுபவர்கள் உள்ளிட்ட தொழில் செய்பவர்களின் குழந்தைகளுக்கு, அதாவது 1–ம் வகுப்பு முதல் எஸ்.எஸ்.எல்.சி. வரை படிப்பவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்கப்பட உள்ளது.இதற்கு சாதி, மதம் குடும்ப வருமானம் என்று எந்தவித வேறுபாடும் கிடையாது. இந்த தொழிலாளர்களின் குடும்பத்தில் உள்ள அனைத்து குழந்தைகளுக்கும் கல்வி உதவித்தொகை வழங்கப்படும்.
கல்வி உதவித்தொகை
தங்களது பிள்ளைகளுக்கு கல்வி உதவித்தொகை பெற விரும்பும் தொழிலாளர்கள் சம்பந்தப்பட்ட தொழில் நிறுவன அதிகாரியிடம் இருந்து சான்று பெற்று, கிராமப்புறங்களில் வசிப்பவர்கள் என்றால் கிராம நிர்வாக அலுவலரிடம் சமர்ப்பித்து, சான்றிதழ் பெற்று விண்ணப்பிக்க வேண்டும்.
மாநகர் மற்றும் நகர்புறங்களில் வசிப்பவர்கள் என்றால் சுகாதார ஆய்வாளர்களிடம் இருந்து சான்றிதழ் பெற்று விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பங்களை மேல்நிலை மற்றும் உயர்நிலை பள்ளிகளில் படிப்பவர்கள், அந்தந்த பள்ளிகளில் தலைமை ஆசிரியர்கள் மூலமாக அனுப்ப வேண்டும். இதேபோல் ஆரம்ப மற்றும் நடுநிலை பள்ளிகளில் படிப்பவர்கள் தங்களது விண்ணப்பங்களை உதவி தொடக்கக்கல்வி அலுவலர்கள் மூலமாக அனுப்பி வைக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

கடத்தி திருமணம் செய்ததாக புகார்: ‘மைனர்’ பெண் என்பதற்கு பள்ளி சான்று தகுதியானது மதுரை ஐகோர்ட்டு உத்தரவு

‘மைனர்’ பெண்ணை கடத்தி திருமணம் செய்ததாக கூறிய புகாரில் ‘மைனர்’ என்பதற்கு பள்ளி மாற்று சான்றிதழ் தகுதியானது என மதுரை ஐகோர்ட்டு கிளை உத்தரவிட்டது.
மதுரை மேலுரை சேர்ந்தவர் தினேஷ். மதுரை ஐகோர்ட்டு கிளையில் தாக்கல் செய்துள்ள ஆட்கொணர்வு மனுவில் கூறி இருந்ததாவது:–
காதல் திருமணம்
நானும் திருநேல்வேலி மாவட்டம் களக்காடு பகுதியை சேர்ந்த முப்பிடாதி என்பவரின் மகள் அனிதாவும் காதலித்து வந்தோம். எங்களது காதலுக்கு அனிதாவின் தந்தை எதிர்ப்பு தெரிவித்து அனிதாவை வீட்டில் அடைத்து வைத்திருந்தார்.
அங்கு இருந்து தப்பித்து எங்கள் வீட்டிற்கு அனிதா வந்தார். எங்கள் ஊர் தலைவர்கள் முன்னிலையில் திருமணம் நடந்தது. இந்நிலையில் அனிதாவின் தந்தை முப்பிடாதி எனது மகள் மைனர். அவரை நான் கடத்திச் சென்றாக போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.
இதன்பேரில் போலீசார் என் மீது வழக்குப்பதிவு செய்து எனது மனைவி அனிதாவை அழைத்து சென்றனர். அனிதா தந்தையுடன் போக மறுத்ததால் பாளையங்கோட்டை காப்பகத்தில் சேர்க்கப்பட்டார். எனது மனைவியை சட்ட விரோதமாக அடைத்து வைத்துள்ளனர். எனது மனைவி அனிதா மேஜர் என்பதால் அவரது விருப்பத்தின்படி என்னுடன் செல்ல அனுமதித்து உத்தரவிட வேண்டும் என கூறியிருந்தார்.
பள்ளி மாற்று சான்றிதழ்
இந்த மனு நீதிபதிகள் தமிழ்வாணன், ரவி முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. மனுதாரர் சார்பில் அனிதா மேஜர் என சான்றிதழ் அளித்தார். இதில் பெண்ணின் தந்தை தாக்கல் செய்த பள்ளி மாற்று சான்றிதழ் அங்கீகரிக்கப்பட்டது. பள்ளி மாற்று சான்றிதழ் தான் வயது தீர்மானிக்க தகுதியானது. அனிதா மைனர் பெண் தான். எனவே மனுதாரர் செய்த திருமணத்தை அங்கீகரிக்க முடியாது. உரிய வயதை எட்டிய பிறகு அவர் விரும்பினால் மனுதாரர் கூட செல்லாம். பெற்றோருடன் செல்ல மறுப்பதால் அதுவரை தொடர்ந்து காப்பகத்தில் இருக்கலாம் என்று நீதிபதிகள் தெரிவித்தனர். மேலும் இந்த வழக்கை விசாரணையை ஏப்ரல் 16–ந் தேதிக்கு ஒத்தி வைத்து உத்தரவிட்டனர்.

பொதுத்தேர்வு எண்கள் வரிசையில் மாற்றம்: முறைகேடு தடுக்க கல்வித்துறை புது முயற்சி

பொதுத்தேர்வில், மாணவர்களுக்கு வழங்கப்படும் எண்கள் வரிசையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது; இதனால், காப்பியடித்தல், விடைத்தாள் மாற்றுவது போன்ற முறைகேடு தடுக்கப்படும்,'' என, முதன்மை கல்வி அலுவலர் ஆனந்தி தெரிவித்தார்.திருப்பூர் மாவட்டத்தில், பிளஸ் 2 மாணவ, மாணவியருக்கான செய்முறை (பிராக்டிகல்) தேர்வு, வரும் 6ம் தேதி துவங்குகிறது. இதுகுறித்த ஆலோசனை கூட்டம், திருப்பூர் விவேகானந்தா வித்யாலயா பள்ளியில் நேற்று நடந்தது.

முதன்மை கல்வி அலுவலர் ஆனந்தி தலைமை வகித்து பேசியதாவது:வரும் 6ம் தேதி செய்முறை தேர்வுகளை துவக்கி, 20ம் தேதிக்குள் முடிக்க வேண்டும். எவ்வித புகாருக்கும் இடமளிக்காமல், தேர்வை சிறப்பாக நடத்த வேண்டும். மாணவர்களுக்கு எவ்வித இடையூறும் ஏற்படாத வகையில், முன்னேற்பாடுகளை பள்ளி நிர்வாகம் செய்திருக்க வேண்டும். காலையில் ஒரு பிரிவு, மதியம் ஒரு பிரிவு என்ற அடிப்படையில், செய்முறை தேர்வை நடத்த வேண்டும்.

வரும் பொதுத்தேர்வில், செய்முறை மற்றும் பாடத்தேர்வில், தேர்வு வரிசை எண்களில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. ஒரே பள்ளியை சேர்ந்த மாணவர்களுக்கு, ஒரே இலக்க அடிப்படையில் எண்கள் வரிசையாக வரும்போது, ஒரே பள்ளி மாணவ, மாணவியர் அடுத்தடுத்து அமர்ந்து தேர்வு எழுதுகின்றனர். காப்பியடிப்பது, விடைத்தாள் மாற்றுவது போன்ற முறைகேடு நடக்கிறது. இதை தவிர்க்கும் வகையில், இம்முறை வரிசை எண்களில் மாற்றம் கொண்டு வரப்பட்டுள்ளது. ஒரு பகுதியில் உள்ள ஐந்து அல்லது ஆறு பள்ளிகளை கலந்து, வரிசை எண்கள் உருவாக்கப்பட்டுள்ளன. இதனால், ஒரே பள்ளியை சேர்ந்த மாணவர்கள் வரிசையாக அமர வாய்ப்பின்றி, பல பள்ளிகளை சேர்ந்த மாணவர்கள் கலந்து அமர்ந்து தேர்வு எழுதுவர். அறிமுகமற்ற மாணவர்கள் அடுத்தடுத்து அமரும்போது, முறைகேடு தடுக்கப்படும்.இவ்வாறு, அவர் பேசினார்.

1,000 மெகாவாட் பற்றாக்குறை : மீண்டும் மின்தடை அமல்

தமிழகத்தில் நேற்று, 1,000 மெகாவாட் அளவிற்கு, மின் பற்றாக்குறை ஏற்பட்டதால், சென்னை உள்ளிட்ட, பல இடங்களில், மீண்டும் மின்தடை அமல்படுத்தப்பட்டது. அனல்மின் நிலையங்களில், மின் உற்பத்தி குறைந்ததால், நேற்று, மொத்த மின் உற்பத்தி, 11,410 மெகாவாட்டாக குறைந்தது. அதேசமயம், மின் தேவை, 12,410 மெகாவாட்டாக இருந்ததால், 1,000 மெகாவாட் மின் பற்றாக்குறை ஏற்பட்டது.

வேகாத சத்துணவு; மாணவர்கள் உடல் நிலை பாதிப்பு : பள்ளியை முற்றுகையிட்ட பெற்றோர்


கரூர் அருகே, அரசு துவக்கப் பள்ளியில் வழங்கப்பட்ட, வேகாத சத்துணவால், மாணவர்கள், வாந்தி மற்றும் வயிற்று வலியால் அவதிப்பட்டனர். அதிர்ச்சியடைந்த பெற்றோர், பள்ளியை முற்றுகையிட்டதால், பரபரப்பு நிலவியது. கரூர் மாவட்டம், நெரூர் வடபாகம் ஊராட்சி, ஒத்தக்கடை அரசு துவக்கப் பள்ளியில், 40க்கும் மேற்பட்ட, மாணவ, மாணவியர் படித்து வருகின்றனர். நேற்று காலை, பள்ளிக்கு வந்த, 10க்கும் மேற்பட்ட, மாணவ, மாணவியர், வாந்தி மற்றும் வயிறு வலியால் அவதிப்பட்டனர். சிலர், தலை சுற்றுவதாக கூறி, வகுப்பறையிலேயே படுத்து கொண்டனர். தகவலறிந்த பெற்றோர், பள்ளியில் குவிந்தனர்.

அவர்கள் கூறியதாவது: சில நாட்களாக, பள்ளியில் இருந்து, வீட்டுக்கு வரும் குழந்தைகள், இரவு சாப்பிடுவதில்லை. காரணம் கேட்டால், வயிற்று வலி என்றனர். நேற்று, வீட்டுக்கு வந்த குழந்தைகள், உடல்நிலை சரியில்லை என, கூறி தூங்கி விட்டனர். இன்று காலை (நேற்று), சோர்வாகவே, பள்ளிக்குச் சென்றனர். சத்துணவு, சரியாக சமைக்காததால், மாணவர்களின் உடல்நிலை பாதித்துள்ளது. சத்துணவை தயார் செய்தவர்கள் மீது, நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு, அவர்கள் கூறினர்.

பள்ளி மாணவர்கள் கூறுகையில், "முட்டை உள்ளிட்ட, உணவு பொருட்களை, சரியாக, வேக வைக்காமல் தருகின்றனர். வேகவில்லை என்று சொன்னால், திட்டுகின்றனர்' என்றனர். அனைவருக்கும் கல்வி இயக்கம் அலுவலர், தமிழ்செல்வி, கரூர் வட்டார வளர்ச்சி அலுவலர், அன்பு செல்வன் ஆகியோர், பள்ளியில், ஆய்வு நடத்தினர். பின், "108' ஆம்புலன்ஸ் மூலம், பாதிக்கப்பட்ட, மாணவ, மாணவியர், கரூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். 

மாணவியருக்கு ஆபாச படம் காட்டிய "சில்மிஷ' ஆசிரியர் ஓட்டம்


 பள்ளி மாணவியருக்கு, ஆபாச படம் காட்டி, சில்மிஷம் செய்த, கணித ஆசிரியருக்கு, பொதுமக்கள், தர்ம அடி கொடுத்தனர். தப்பி ஓடி, தலைமறைவான அவரை, போலீசார் தேடி வருகின்றனர்.
வேலூர் மாவட்டம், வாணியம்பாடி அடுத்த, புதூரில், அரசு நிதி உதவி பெறும் தனியார் மேல் நிலைப் பள்ளி உள்ளது. இங்கு, கணித ஆசிரியராக கோபி, 31, என்பவர், பணியாற்றி வருகிறார். கடந்த, 28ம் தேதி, ஆசிரியர் கோபி, அதே பள்ளியில் பணியாற்றும் உடற் கல்வி ஆசிரியர் ஜானிடம், ஏழாம் வகுப்பு மாணவியர் சிலரை, தன் வீட்டுக்கு வந்து, கணித பாடத்தில் சந்தேகம் கேட்டுச் செல்லும்படி கூறியுள்ளார். 
மேலும், தான் கொடுத்த, 10 சி.டி.,க்களை, மாணவியரிடம் கொடுத்து அனுப்பும் படியும் கூறியுள்ளார். ஜான் கொடுத்த சி.டி.,களுடன், ஐந்து மாணவியர், கோபி வீட்டுக்கு, அன்று மாலை சென்றுள்ளனர். அவர்களிடம் இருந்த, சி.டி.,க்களை வாங்கிய, கோபி, "டிவி' யில் போட்டுள்ளார். அதில், ஆபாச பாடம் ஓடியதை கண்ட மாணவியர், அதிர்ச்சி அடைந்து, வீட்டில் இருந்து, வெளியே ஓட முயன்றுள்ளனர். வீட்டு கதவை மூடிய கோபி, மாணவியரிடம் சில்மிஷத்தில் ஈடுபட்டுள்ளார். இது குறித்து, மாணவியர், 30ம் தேதி, பெற்றோரிடம் தெரிவித்துள்ளனர். அதிர்ச்சி அடைந்த பெற்றோர், ஊர் பொதுமக்களுடன், ஆசிரியர் கோபி மீது நடவடிக்கை எடுக்க கோரி, பள்ளியை நேற்று முற்றுகையிட்டனர். அப்போது, பள்ளிக்கு வந்த, ஆசிரியர் கோபிக்கு தர்ம அடி கொடுத்தனர். அங்கிருந்து அவர், தப்பியோடினார். போலீசார், பொதுமக்களிடம் பேச்சு நடத்தினர்; உடன்பாடு ஏற்படவில்லை. தப்பியோடிய கோபியை, கைது செய்தால் தான், கலைந்து செல்வோம் எனக் கூறி, தொடர்ந்து, பள்ளியை, பொதுமக்கள் முற்றுகையிட்டனர். போலீசார், தடியடி நடத்தி, கூட்டத்தை கலைத்தனர். போலீசார் மற்றும் கல்வி அதிகாரிகள் விசாரிக்கின்றனர். 

மாதந்தோறும், ஒவ்வொரு வீட்டிற்கும், தலா, ஒரு லட்சம் ரூபாய்க்கு மேல் வருமானம்: மாதம் ரூ.1.5 கோடி சம்பாதிக்கும் கிராமம்

சத்தீஸ்கரில், ஒரு கிராமத்தை சேர்ந்தவர்கள், பசு மாடுகள் வளர்த்து, பால் பண்ணை தொழிலின் மூலம், ஆண்டுக்கு, 1.5 கோடி ரூபாய் சம்பாதிக்கின்றனர்.

பா.ஜ.,வைச் சேர்ந்த, முதல்வர், ரமண் சிங் தலைமையிலான சத்தீஸ்கர் மாநிலத்தில் உள்ளது, கோத்ரபாதா கிராமம். எட்டாண்டுகளுக்கு முன், இக்கிராம மக்களின் விவசாய நிலங்கள், ஏதோ ஒரு காரணத்தால், மாநில அரசால் கையகப்படுத்தப்பட்டது.இதனால், வேலைஇழந்த அக்கிராமத்தினருக்கு, இழப்பீடு வழங்கப்பட்டது. அந்தத் தொகையை வைத்து, கறவை மாடுகள் வாங்கிய கிராம மக்கள், பால் உற்பத்தியில் அபரிமிதமான வளர்ச்சி அடைந்துள்ளனர்.

அந்த கிராமத்தில், 200 வீடுகள் உள்ளன. ஒவ்வொரு வீட்டிலும், 75 - 100 பசு மாடுகள் இருக்கின்றன. தினமும், 12 ஆயிரம் லிட்டர் பால் இங்கு உற்பத்தியாகிறது. இதன் மூலம், மாதத்திற்கு, 1.5 கோடி ரூபாய் வருமானம் கிடைக்கிறது.மாதந்தோறும், ஒவ்வொரு வீட்டிற்கும், தலா, ஒரு லட்சம் ரூபாய்க்கு மேல் வருமானம் வருவதால், இந்த கிராமம், செல்வச் செழிப்பில் உள்ளது. இங்கு கிடைக்கும் பாலை, 'அமுல்' போன்ற முன்னணி நிறுவனங்கள், முன்பணம் செலுத்தி வாங்கிச் செல்கின்றன.
Click Here

மதிய உணவு இடைவேளை நேரத்தை அதிகம் செலவழிப்பவர் மீது நடவடிக்கை

மதிய உணவு இடைவேளை நேரத்தை அதிகம் செலவழிப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்,'' என, உத்தர பிரதேச முதல்வர், அகிலேஷ் யாதவ் எச்சரித்துள்ளார். உத்தர பிரதேசத்தில், மதிய உணவு நேர இடைவேளையில், அதிகாரிகள் பலர் வீட்டுக்கு சென்று விடுவதாக, புகார் வந்தது. இது குறித்து, உ.பி., பொதுப்பணித் துறை அமைச்சர், சிவபால் யாதவ் குறிப்பிடுகையில், ""உணவு நேர இடைவேளையில், அதிகாரிகள் வீட்டுக்குச் செல்வதை அனுமதிக்க முடியாது; மீறி செல்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்,'' என்றார். இது குறித்து, உ.பி., முதல்வர், அகிலேஷ் யாதவ் குறிப்பிடுகையில், ""மதிய உணவு இடைவேளை நேரத்தை அதிகம் செலவழிப்பவர்கள், பணியில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்படுவர்,'' என்றார். 

அரசு பணி நியமனத்தில் தாமதம் ஏன்? : டி.என்.பி.எஸ்.சி., தலைவர் விளக்கம்

அரசு பணியிடங்களை நிரப்புவதில், தாமதம் ஏற்படுவது ஏன்' என, தேர்வாணையத் தலைவர் நவநீதகிருஷ்ணன் விளக்கமளித்து உள்ளார். மதுரை, அமெரிக்கன் கல்லூரியில், மாணவர்களுக்கு, வேலைவாய்ப்புக்கான, வழிகாட்டுதல் குறித்த, கருத்தரங்கு நடந்தது. இதில், தமிழ்நாடு பணியாளர் தேர்வாணையத் தலைவர், நவநீதகிருஷ்ணன் பேசியதாவது: போட்டி என்பது, இன்று, உலக அளவில் ஏற்பட்டுள்ளது. கல்வி கற்ற பின், நல்ல வேலையை பெற்றால் தான், நம்மை உயர்த்திக் கொள்ள முடியும். தற்போது, தனியார் நிறுவனங்களில், குறிப்பாக, "சாப்ட்வேர்' கம்பெனிகளில் வேலைவாய்ப்பு குறைந்து விட்டது. அங்கு, பணிவாய்ப்பில் ஸ்திரத்தன்மை இல்லை. ஆனால், அரசு பணியில், பொது மக்களுக்கு சேவையாற்றி, சமுதாயத்தை உயர்த்த முடியும். டி.என்.பி.எஸ்.சி., குரூப் 4 தேர்வில், 5,566 பணியிடங்களுக்கு, 13 லட்சம் பேர் பங்கேற்றனர். விடைத்தாள்கள் திருத்தும் பணிகள், இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. விரைவில், முடிவுகள் வெளியிடப்படும். பயிற்சியும், முயற்சியும் இருந்தால், ஒருவர் வெற்றி பெறுவதை, யாரும் தடுக்க முடியாது. டி.என்.பி.எஸ்.சி., தேர்வில், எழுத்துத் தேர்வு, 87.75 சதவீதம், நேர்முகத் தேர்வுக்கு, 12.25 சதவீதம் மதிப்பெண் வழங்கப்படுகிறது. எழுத்துத் தேர்வை, நன்கு எழுதினாலே பயப்படத் தேவையில்லை. சில சமயங்களில், பணி நியமனம், தாமதமாவதாக குறை கூறுகின்றனர். விண்ணப்பங்களில், தேர்வர்களின் விவரங்கள் சரியாக இருந்தால், தேர்வு முடிவுகளை விரைவாக அறிவிக்கலாம். பெரும்பாலும், தேர்வர்களின் விவரங்கள், சரியாக இல்லாததே, தாமதத்திற்கு காரணமாகிறது. இவ்வாறு, அவர் பேசினார். 

அரசு பொது தேர்வு குறித்து இன்று தலைமை ஆசிரியர்களுக்கு பயிற்சி


 பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 மாணவர்களுக்கு, அரசு பொது தேர்வு, அடுத்த மாதம் துவங்க உள்ளது. இதில், மாணவர்கள் தேர்வு எழுத, எதிர் கொள்ள வேண்டிய முறைகள் குறித்து, இன்று, அனைத்து உயர்நிலை, மேல்நிலை பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு, பயிற்சி வழங்கப்பட உள்ளது.
தமிழகத்தில், பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 அரசு பொது தேர்வில், 8. 50 லட்சம் மாணவர்கள் எழுதுகின்றனர். பத்தாம் வகுப்பிற்கு மார்ச் 26 ல் துவங்கி, ஏப்.,9 ல் முடிகிறது. பிளஸ் 2 விற்கு மார்ச் 3 ல் துவங்கி, 25 ல் முடிகிறது. இவர்களுக்கான செய்முறை தேர்வு, பிப்.,10 ல் முதல் 25 ல் முடிகிறது.
பொது தேர்வில் மாணவர்கள், விடைத்தாள் பேப்பரை மாற்றி, "பிட்' அடிப்பதை தடுக்க, 40 பக்கம் கொண்ட "மெயின் சீட்' மட்டுமே கொடுக்க, கல்வி துறை ஏற்பாடு செய்துள்ளது. இதுபோல், விடைத்தாள் மெயின் சீட்டில் , மாணவரின் போட்டோ, ரகசிய குறியீட்டு எண், பார் கோடு எண் கொடுக்க உள்ளனர்.
மாணவர்கள் தேர்வு எழுதும் முறை குறித்து, பள்ளி கல்வி இயக்குனர் ராமேஸ்வர முருகன், அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள், உதவியாளர்களுக்கு, கருத்துரை வழங்கி உள்ளார். இதை, இன்று, அனைத்து உயர்நிலை, மேல்நிலை பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு, அந்தந்த கல்வி மாவட்டத்தில் கூட்டம் நடத்தி ,எடுத்து கூற உள்ளனர். இதை தொடர்ந்து, தேர்வு குறித்த விளக்கங்களை,மாணவர்களுக்கு தலைமை ஆசிரியர்கள் விளக்க உள்ளனர்.

இரட்டைப்பட்டம் வழக்கின் இறுதி தீர்ப்பு வருகிற 5.2.2013 - புதன்கிழமை சென்னை உயர்நீதி மன்றம் முதல் அமர்வில் வரும் என எதிபார்க்கப்படுகிறது

தமிழகத்தில் அனைவராலும் எதிர்பார்க்கப்படும் இரட்டைப்பட்டம் வழக்கின் இறுதி தீர்ப்பு வருகிற 5.2.2013 - புதன்கிழமை சென்னை உயர்நீதி மன்றம் முதல் அமர்வில் வரும் என எதிபார்க்கப்படுகிறது. இச்செய்தி நம்பகமான நபர்களால் நம்மிடம் தெரிவிக்கப்பட்டது. இத்தேதியில் மாற்றம் எதுவும் இருக்க வாய்ப்பில்லை. நல்ல செய்தி வெளியாக நாம் வாழ்த்துகிறோம்.