Flash News

Flash News அன்பார்ந்த ஆசிரிய பெருமக்களே! இந்த வலை தளத்தில் தொடக்கப் பள்ளி மாணவர்களுக்கு தேவையான அடிப்படை கணித செயல்பாடுகளுக்கான விளையாட்டுகள் மற்றும் ஆங்கில விளையாட்டுகள் தரப் பட்டுள்ளன. அவற்றைக் கண்டு பள்ளிகளில் செயல்படுத்துமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்...01.07.2014 முதல் அகவிலைப்படி 7% உயருகிறது. ...

Sunday, 1 June 2014

பள்ளி வகுப்பறையில் ஆசிரியர்கள்மொபைல்போன் பயன்படுத்த தடை: மீறினால் ஒழுங்கு நடவடிக்கை

பள்ளி வகுப்பறைகளில் ஆசிரியர்கள் மொபைல்போன் பயன்படுத்தக்கூடாது,''என, மாவட்ட முதன்மைக்கல்வி அதிகாரி ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.அவர் கூறியதாவது:
பாடகால அட்டவணையை ஆசிரியர்கள் சரியாக பின்பற்ற வேண்டும். நவீன கற்பித்தல் சாதனங்களை பயன்படுத்தி, எல்லா மாணவர்களுக்கும் புரியும்படி பாடங்களை நடத்த வேண்டும். ஆசிரியர்கள், பள்ளி வகுப்பறைகளில், மொபைல்போன் பயன்படுத்தக்கூடாது. மீறினால், தமிழ்நாடு அரசுப்பணியாளர் சட்டப்படி, அவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும்.
ஆனால், ஆசிரியர்களின் அறைகளில், மொபைல்போன் பயன்படுத்த தடையில்லை. வகுப்பிற்கு செல்லும்போது, அதை, அங்கேயே அவர்கள், வைத்துவிட்டுச்செல்ல வேண்டும். தலைமையாசிரியர்கள் கண்காணிக்க வேண்டும். பாட குறிப்பேடுகளை சரியாக வைத்திருக்க வேண்டும். அறிவியல், கணிதம், சமூக அறிவியல் ஆசிரியர்கள், மாவட்ட, மாநில, தேசிய, சர்வதேச சமீபத்திய நிகழ்வுகளை தெரிந்து வைத்திருக்க வேண்டும்.
தொடர் மதிப்பீடு தேர்வு தொடர்பான, செய்முறைகளை, பள்ளியில் வைத்தே மாணவர்கள் செய்ய வேண்டும். வீட்டில் வைத்து பெற்றோர் செய்துதரக்கூடாது. அனைத்து வகுப்பறைகளையும் தலைமையாசிரியர்கள் ஆய்வு செய்ய வேண்டும். பெற்றோர் ஆசிரியர் கழக கூட்டத்தை ,சீரான இடைவெளியில் நடத்தி, பள்ளி மேம்பாட்டிற்கு, நடவடிக்கை எடுக்க வேண்டும். 100 சதவீத தேர்ச்சிக்கு உழைக்க வேண்டும். ஆகஸ்ட் வரை, அரசின் பழைய பஸ் பாஸை மாணவர்கள் பயன்படுத்தலாம் என உத்தரவுவந்துள்ளது.
எனவே, சீருடை அணிந்த மாணவர்கள், பாஸ் கொண்டுவராவிட்டாலும், அவர்களை, பஸ்சில் பயணிக்க அனுமதிக்க வேண்டும் என, அரசு பஸ், விருதுநகர் கோட்ட பொதுமேலாளருக்கு கடிதம் எழுதப்பட்டுள்ளது ,என்றார்.

2014-15 ஆம் கல்வியாண்டிற்கான சிறுபான்மையின மாணவ-மாணவிகள் கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பங்கள் வரவேற்கப் படுகின்றன

                        

                             

இன்றைய 01.06.2014 முக்கிய கல்வி செய்திகள்

                                        

                                 




மாணவ, மாணவிகளுக்கு ஜூன் 5ம் தேதி முதல் இரும்புச்சத்து மாத்திரைகள்


வேலூர் மாவட்டத்தில் அனைத்து அரசு பள்ளி மாணவர்களுக்கும் ஜூன் 5ம் தேதி முதல் இரும்புச்சத்து மாத்திரைகள் வழங்கப்படும்’ என்று முதன்மை கல்வி அலுவலர் சுப்பிரமணி தெரிவித்தார்.
மாணவர்கள் ரத்த சோகை, மாணவிகள் பருவம் அடைதல், மாதவிலக்கு மற்றும் மகப்பேற்றின்போது பெண்கள் உடல் ரீதியான பிரச்னைகளை சந்திக்கின்றனர். சோர்வு மற்றும் கவனக்குறைவு போன்ற பிரச்னைகளால் படிப்பிலும் கவனம் குறையும்.
இதனால் வாரம்தோறும் இரும்புச்சத்துள்ள உணவுகளை எடுத்து கொள்வதன் மூலம் இந்த பாதிப்புகள் தவிர்க்கப்படுகிறது. இந்த குறைபாட்டை சரி செய்வதற்காக நகர்புறம் மற்றும் கிராமப்புறங்களில் சுமார் 13 கோடி மாணவர்களுக்கு இந்தாண்டு இரும்பு சத்து மாத்திரைகள் வழங்க அரசு உத்தரவிட்டுள்ளது.
கடந்த ஆண்டில் பெண் குழந்தைகளுக்கு மட்டும் ரத்தசோகை பாதிப்பு இருப்பதாக கணக்கில் கொண்டு இத்திட்டம் பள்ளிகளில் நடைமுறைப்படுத்தப்பட்டது. இந்திய அளவில் வளர் இளம் பருவத்தில் பெண்கள் 56 சதவீதமும், ஆண்கள் 30 சதவீதமும் ரத்த சோகையால் பாதிக்கப்படுகின்றனர்.
இதனால் வரும் கல்வியாண்டில் மாணவர்களுக்கும் இரும்புச்சத்து மாத்திரைகள் வழங்கப்பட உள்ளது. யுனிசெப் மூலம் இத்திட்டத்தை நடப்பு கல்வியாண்டில் செயல்படுத்துகின்றனர். இதுகுறித்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் சுப்பிரமணி கூறியதாவது:
வேலூர் மாவட்டத்தில் 22 ஒன்றியங்களில் 1,628 தொடக்க பள்ளிகளும், 509 நடுநிலை பள்ளிகளும், 197 உயர்நிலை பள்ளிகளும், 208 மேல்நிலை பள்ளிகளும் உள்ளன. இப்பள்ளிகளில் 6ம் வகுப்பு முதல் படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு ஜூன் 5ம் தேதி முதல் இரும்புச்சத்து மாத்திரைகள் வழங்கப்பட உள்ளது என்று தெரிவித்தார்.

பகுதி நேர சிறப்பு ஆசிரியர்களுக்கு பணியிட மாறுதல் உத்தரவு ரத்து திருவண்ணாமலையில் கல்வித்துறை நடவடிக்கை


திருவண்ணாமலை, :அரசு பள்ளிகளில் ஓவியம், இசை, விளையாட்டு போன்றவற்றுக்கான சிறப்பு பாட ஆசிரியர்களை, மாதம் ரூ.5 ஆயிரம் தொகுப்பு ஊதியம் என்ற அடிப்படையில் கடந்த 2012ம் ஆண்டு மாநிலம் முழுவதும் தமிழக அரசு நியமித்தது. அதன்படி, திருவண்ணாமலை மாவட்டத்தில் 944 சிறப்பு ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டு பணிபுரிந்து வருகின்றனர்.
குறைவான ஊதியத்தில் பணிபுரியும் சிறப்பு ஆசிரியர்கள், நீண்ட தொலைவில் உள்ள பள்ளிகளில் பணியமர்த்தப்பட்டதால் சிக்கல் ஏற்பட்டது. எனவே, மனமொத்த மாறுதல், விருப்ப மாறுதல் என்ற அடிப்படையில், அருகாமையில் உள்ள பள்ளிகளுக்கு பெரும்பாலானவர்கள் பணியிட மாறுதல் பெற்றனர். மாற்றுப்பணி என்ற நிபந்தனையுடன் புதிய பணியிடங்களில் கடந்த இரண்டு ஆண்டுகளாக பணிபுரிந்து வந்தனர்.
இந்நிலையில், 2014 -2015ம் கல்வி ஆண்டிற்கான வகுப்புகள் தொடங்கப்படும் வரும் 2ம் தேதியன்று, சிறப்பு ஆசிரியர்கள் அனைவரும் முதலில் பணிநியமனம் செய்யப்பட்ட பள்ளிகளில் பணிக்கு சேர வேண்டும் என கல்வித்துறை அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர். தற்காலிக பணி நியமனம் செய்யப்பட்ட சிறப்பாசிரியர்களுக்கு, பணியிட மாறுதல் வழங்குவதற்கான விதிமுறைகள் இல்லை.
எனவே, ஏற்கனவே தற்காலிகமாக வழங்கப்பட்ட பணியிட மாறுதல் உத்தரவு ரத்து செய்யப்படுகிறது. எனவே, மாறுதல் பெற்று வேறு பள்ளிகளில் பணிபுரிந்த சிறப்பு ஆசிரியர்கள் அனைவரும், பழைய பள்ளிகளில் வரும் 2ம் தேதியன்று பணியில் சேர வேண்டும். அதற்கான அறிக்கையை பள்ளி தலைமை ஆசிரியர்கள் மூலம் மாவட்ட கல்வி அலுவலகத்துக்கு அனுப்பி வைக்க வேண்டும் எனவும் உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரசு அலுவலகங்களின் கோப்புகளை அந்நியர்கள் பராமரிக்க அனுமதிக்கக் கூடாது: உயர்நீதிமன்றம்


முக்கியம் மற்றும் ரகசியமானதாகக் கருதப்படும் அரசு அலுவலகங்களின் கோப்புகள் அல்லது ஆவணங்களை வெளிநபர்கள் அல்லது அந்நியர்கள் பராமரிப்பதற்கு அனுமதிக்கக் கூடாது என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மூன்று மாத ஊதிய உயர்வை நிறுத்தி வைத்து போக்குவரத்து ஆணையர் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்யக் கோரி வாகன ஆய்வாளர் தாக்கல் செய்த மனுவில் உயர்நீதிமன்றம் இவ்வாறு உத்தரவிட்டுள்ளது. 

இது தொடர்பாக கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டம் பிரிவு அலுவலக வாகன ஆய்வாளர் ஏ.ஏ.முத்து உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு விவரம்: கடந்த 2005-ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 28-ஆம் தேதி லஞ்ச ஒழிப்பு மற்றும் கண்காணிப்புத் துறை அதிகாரிகள் மார்த்தாண்டம் பிரிவு வாகன ஆய்வாளர் அலுவலகத்துக்கு திடீரென ஆய்வு செய்தனர்.

அப்போது, மூன்று பெண்கள் உள்பட மொத்தம் ஐந்து வெளியாட்கள் அலுவலகத்தில் பணிபுரிவதையும், அவர்கள் அலுவலக ஆவணங்களை கையாள்வதையும் லஞ்ச ஒழிப்பு அதிகாரிகள் கண்டறிந்தனர்.

அதனால், தமிழக அரசு ஊழியர்களின் நடத்தை விதியைப் பின்பற்றவில்லை எனவும், பணியில் நேர்மை மற்றும் அர்ப்பணிப்புடன் செயல்படவில்லை எனவும் கூறி எனது மூன்று மாத ஊதிய உயர்வை நிறுத்தி வைத்து கடந்த 2012-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 29-ஆம் தேதி போக்குவரத்து ஆணையர் உத்தரவிட்டார்.

லஞ்ச ஒழிப்பு மற்றும் கண்காணிப்பு அதிகாரிகள் திடீரென ஆய்வுக்கு வரும் போது நான் அலுவலகத்தில் இல்லை. மேலும், வெளிநபர்கள் அலுவலகத்தில் இருந்ததும் எனக்குத் தெரியாது. ஏழு ஆண்டுகளுக்குப் பிறகு தாமதமாக துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இது, நான் மண்டல போக்குவரத்து அதிகாரியாக பதவி உயர்வது பெறுவதை இந்தக் குற்றச்சாட்டு தடுக்கும். எனவே, போக்குவரத்து ஆணையர் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என மனுவில் கோரப்பட்டது.

இந்த மனு நீதிபதி எம்.வேணுகோபால் முன்பு விசாரணை நடந்தது. விசாரணைக்குப் பிறகு நீதிபதி பிறப்பித்த உத்தரவு: துறை ரீதியான நடவடிக்கை எடுப்பதற்கு ஏற்பட்ட தாமதத்துக்கான காரணம் திருப்தி அளிப்பதாக உள்ளது. இது போன்ற தாமதம் நிர்வாகத்தில் இயல்பானது தான். குறிப்பாக குற்றம் சாட்டப்பட்டவர் பணியிடை நீக்கம் செய்யப்படவில்லை.

மனுதாரர் மீதான குற்றம் வெளிநபர்கள் அலுவலகத்தில் பணியாற்ற அனுமதித்தது தான். அரசு அலுவலகத்தில் அரசுப் பணியாளர்கள் மட்டும் தான் பணியாற்ற வேண்டும். வெளிநபர்களை அரசு அலுவலகத்தில் அனுமதிக்கக் கூடாது என்பது வழக்கமான ஒரு விஷயம் தான்.

அது, அரசு அலுவலகம் தொடர்பான கோப்புகள் அல்லது ஆவணங்கள் மிகவும் புனிதமானவை எனபதை நினைவுபடுத்துவதற்காகத் தான். அவையனைத்தும் முறையாக பணியமர்த்தப்பட்ட நபர்கள் அல்லது ஊழியர்கள் தான் பராமரிக்க வேண்டும். வெளியாட்கள், அந்நியர்கள் ஆகியோர்களால் பராமரிக்க அனுமதிக்கக் கூடாது. எனவே, இந்த மனு தள்ளுபடி செய்யப்படுகிறது என உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பத்தாம் வகுப்பு மதிப்பெண் சான்று 12ல் வினியோகம்

'பத்தாம் வகுப்பு தேர்வெழுதிய மாணவர்களுக்கு, வரும், 12ம் தேதி, மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்படும்' என, தேர்வுத்துறை இயக்குனர், தேவராஜன் அறிவித்துள்ளார். அவர் நேற்று வெளியிட்ட அறிக்கையில், 'மாணவர்கள், 12ம் தேதி, அவரவர் படித்த பள்ளிகளுக்கு சென்று, மதிப்பெண் சான்றிதழ்களை பெற்றுக் கொள்ளலாம்' என, தெரிவித்துள்ளார். இந்தத் தேர்வை, 10.21 லட்சம் மாணவர்கள் எழுதினர்.

தமிழகம் முழுவதும் நாளை பள்ளிகள் திறப்பு: கடும் வெயிலால், தள்ளிவைக்க வலியுறுத்தல்


பள்ளி கல்வித் துறை அறிவிப்புப்படி, தமிழகம் முழுவதும், நாளை (2ம் தேதி) பள்ளிகள் திறக்கப்படுகின்றன. ஆனால், அக்னி நட்சத்திரம் முடிந்தும், வெயிலின் கொடுமை நீடிப்பதால், பள்ளி திறப்பு தேதியை, 10 நாட்களுக்கு, தள்ளிவைக்க வேண்டும் என, அனைத்து தரப்பினரும் எதிர்பார்க்கின்றனர். பத்தாம் வகுப்பு மாணவர்கள், வெயிலால் பாதிக்கக்கூடாது என, பொது தேர்வு நேரத்தை, ஒரு மணி நேரம் முன்னதாக மாற்றிய தமிழக அரசு, இப்போது, மவுனம் காப்பது ஏன்? என, ஆசிரியர்கள் கேள்வி எழுப்புகின்றனர்.

எந்த மாற்றமும் இல்லை: 
கோடை விடுமுறைக்குப் பின், தமிழகம் முழுவதும், நாளை, 2ம் தேதி, பள்ளிகள் திறக்கப்படும் என, பள்ளிக்கல்வி இயக்குனர், ராமேஸ்வர முருகன், ஏற்கனவே அறிவித்து இருந்தார். கடுமையான வெயில் வாட்டி வதைப்பதை சுட்டிக்காட்டி, பள்ளி திறப்பு தேதியில் மாற்றம் வருமா? என, சில தினங்களுக்கு முன், இயக்குனரிடம், நிருபர்கள் கேட்டதற்கு, எந்த மாற்றமும் இல்லை; அறிவித்தபடி, 2ம் தேதி, அனைத்துப் பள்ளிகளும் திறக்கப்படும் என, இயக்குனர் தெரிவித்தார்.

நாளை பள்ளிகள் திறப்பு: இதுகுறித்து, ஆசிரியர்கள் சிலர் கூறியதாவது:


நாளை பள்ளிகள் திறப்பு: இதுகுறித்து, ஆசிரியர்கள் சிலர் கூறியதாவது:

* பத்தாம் வகுப்பு மாணவர்கள், வெயிலால் பாதிக்கப்பட கூடாது என்பதற்காக, சமீபத்தில் நடந்த பொது தேர்வு நேரத்தை, ஒரு மணி நேரம், முன்னதாக துவங்கும் வகையில், தமிழக அரசு மாற்றம் செய்தது.

* பள்ளி திறப்பு தேதி நெருங்கி விட்ட நிலையில், மாணவர் நலனை கருத்தில் கொண்டு, திறப்பு தேதியை நீட்டிப்பு செய்து அறிவிக்காமல், தமிழக அரசு, மவுனம் காத்து வருவது ஏன்?

* பத்தாம் வகுப்பு மாணவர், வெயிலால் பாதிப்பர் என்றால், நர்சரி மாணவர் முதல், ஆரம்ப, நடுநிலைப் பள்ளிகளில் படிக்கும் சிறுவர், சிறுமியருக்கு, வெயிலால் பாதிப்பு ஏற்படாதா? இதை, கல்வித்துறை அதிகாரிகளும், அரசும் உணராதது ஏன்?

* சி.பி.எஸ்.இ., பள்ளிகள், ஜூன், 9ம் தேதி தான் திறக்கப்படுகின்றன. குறைந்தபட்சம், இந்த தேதிக்காவது மாற்றி வைக்க, கல்வித்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும். 

இவ்வாறு, ஆசிரியர்கள் தெரிவித்தனர்.

DINAMALAR NEWS

தமிழகம் முழுவதும் நாளை பள்ளிகள் திறப்பு: இதுகுறித்து, தமிழ்நாடு நர்சரி, பிரைமரி, மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளிகள் சங்க பொதுச்செயலர், நந்தகுமார் கூறியதாவது:


சிறுவர்கள் எப்படி செல்வர்?

பல மாவட்டங்களில், 100 டிகிரி பாரன்ஹீட்டுக்கும் மேலாக, வெயில் வாட்டி வதைக்கிறது. பெரியவர்களே, பகலில், வெளியில் செல்ல பயந்து, வீட்டில் முடங்கிக் கிடக்கின்றனர். 

சிறுவர்கள், எப்படி, பள்ளிகளுக்கு செல்வர்? 

'பள்ளி திறப்பு தேதியை, 15 நாட்களுக்கு, தள்ளிவைக்க வேண்டும்' என, பள்ளி கல்வித்துறை அமைச்சர், வீரமணி, துறை முதன்மை செயலர், சபிதா ஆகியோரிடம், மனு கொடுத்துள்ளோம். 

பள்ளி திறப்பு தேதியை, ஒரு வாரம் தள்ளி வைப்பதால், பெரிய பாதிப்பு ஏற்படாது. இவ்வாறு, அவர் கூறினார்.

கடந்த சில தினங்களாக வெயில் நிலவரம்

* சென்னையில், கடந்த சில தினங்களாக, 39 டிகிரி செல்சியஸ் (102 டிகிரி பாரன்ஹீட்) முதல், 40 டிகிரி செல்சியஸ் (104.4 டிகிரி பாரன்ஹீட்) வரை பதிவாகியுள்ளது.

* திருவள்ளூர் மாவட்டம், திருத்தணியில், நேற்று முன்தினம் 41 டிகிரி செல்சியஸ் (105.8 டிகிரி பாரன்ஹீட்) வெப்பம் பதிவாகியது.

* திருச்சி, வேலூர், தஞ்சாவூர், மதுரை, தர்மபுரி, சேலம் ஆகிய மாவட்டங்களில், வெப்பம், 100 டிகிரி பாரன்ஹீட்டை ஒட்டியே பதிவாகி வருகிறது. 

இன்னும் சில தினங்களுக்கு, இதே நிலை நீடிக்கும் என தெரிகிறது. 

இதனால், பொது மக்கள் பகல் நேரங்களில் வெளியில் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

வெயிலின் கோரம் தொடர்வதால், பள்ளி திறப்பு தேதியை, 10 நாட்களுக்கு தள்ளிவைக்க வலியுறுத்தல்


தலைநகர் சென்னை உட்பட, பல மாவட்டங்களில், நேற்றும், வெயில் உக்கிரமாக இருந்தது. அக்னி நட்சத்திரம் முடிந்தும், வெயிலின் கோரம் தொடர்வதால், பள்ளி திறப்பு தேதியை, 10 நாட்களுக்கு தள்ளிவைக்க வேண்டும் என, அனைத்து தரப்பினரும் எதிர்பார்க்கின்றனர்.
DINAMALAR

ஏழை இந்து மாணவர்களுக்கு உதவித்தொகை: பொன். ராதாகிருஷ்ணன் உறுதி


ஏழை இந்து மாணவர்களுக்கு, உதவித்தொகை வழங்குவது குறித்து, 2 மாதத்தில் முடிவு செய்யப்படும், என்று மத்திய கனரக தொழில்துறை இணை அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் கூறினார்.

மத்திய அமைச்சராக பொறுப்பேற்ற பின், முதன் முறையாக குமரி மாவட்டம் வந்த அவருக்கு, மாவட்ட எல்லையில், பா.ஜ., சார்பில் அளிக்கப்பட்ட வரவேற்புக்கு நன்றி தெரிவித்து, அவர் பேசியதாவது:குமரி மாவட்டத்தில் பழுதான ரோடுகளை சீரமைப்பது குறித்தும், குளச்சலில் வர்த்தக துறைமுகம் அமைப்பது குறித்தும், மத்திய அமைச்சர் நிதின் கட்காரியிடம் பேசியுள்ளேன். கன்னியாகுமரி - திருவனந்தபுரம் 4 வழி சாலை, கடந்த 10 ஆண்டுகளாக கிடப்பில போடப்பட்டுள்ளது. அதை உடனடியாக துவங்க நடவடிக்கை எடுக்கப்படும்.

தமிழ்நாட்டில் மோசமான நிலையில் உள்ள பொதுத்துறை நிறுவனங்களை மேம்படுத்தி, இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பளிக்க நடவடிக்கை எடுக்கப்படும். தமிழகத்தில் இரட்டை ரயில்பாதை அமைப்பது தொடர்பாக, ரயில்வே அமைச்சர் சதானந்த கவுடாவிடம் பேசியுள்ளேன். ஊருக்கு ராஜாவாக இருந்தாலும், குமரி மாவட்ட மக்களின் சேவகனாக இருந்து பணியாற்றுவேன். இவ்வாறு அவர் கூறினார்.

முன்னதாக அவர் நிருபர்களிடம் கூறியதாவது:ஏழை இந்து மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்குவது தொடர்பாக, அமைச்சர் ஸ்மிருதி ராணியிடம் பேசியுள்ளேன். 2 மாதங்களில் இதற்கான நடவடிக்கை எடுக்கப்படும். தமிழகம் முழுவதும் பா.ஜ., வுக்கு பெரும் எழுச்சி ஏற்பட்டுள்ளது.

வருகிற சட்டசபை தேர்தலிலும், தேசியஜனநாயக கூட்டணி தொடர வேண்டும் என்பது தான் எனது விருப்பம். இந்த கூட்டணி நிச்சயம் ஆட்சியை பிடிக்கும், என்றார்.

சமச்சீர் கல்விக்கு பதிலாக புதுச்சேரி அரசு பள்ளிகளில் சிபிஎஸ்இ பாடதிட்டம் அமல்


புதுச்சேரியில் நடப்பு கல்வியாண்டு முதல் அரசு தொடக்கப் பள்ளிகளில் சிபிஎஸ்இ பாடத்திட்டம் அமல்படுத்தப்பட உள்ளது. புதுச்சேரி அரசு பள்ளிகளில் தற்போது ஆங்கிலம், தமிழ் வழி கல்வி பயிற்றுவிக்கப்பட்டு வருகிறது. புதுச்சேரி மற்றும் காரைக்கால் பிராந்தியங்கள் தமிழக கல்வி வாரியத்துடனும், மாகி கேரள மாநில கல்வி வாரியம், ஏனாம் ஆந்திரா கல்வி வாரியத்துடன் இணைந்துள்ளது. புதுச்சேரியில் கோடை விடுமுறைக்கு பின் வரும் 4ம் தேதி பள்ளிகள் திறக்கப்பட உள்ளன. இந்நிலையில் புதுச்சேரி மாநிலத்தில் நடப்பு கல்வியாண்டு முதல் ஆங்கில வழி துவக்கப்பள்ளிகளில் அதாவது 1ம் வகுப்பு முதல் 5ம் வகுப்பு வரை சமச்சீர் கல்வி திட்டத்திற்கு பதிலாக சிபிஎஸ்இ பாடத்திட்டம் அமல்படுத்தப்படுகிறது. 

இது குறித்து கல்வித்துறை அமைச்சர் தியாகராஜன் கூறியதாவது: புதுச்சேரி மாநிலத்தில் ஆங்கில வழி கல்வியை பெறும் பள்ளிகளில் 1 முதல் 5ம் வகுப்பு வரையிலும், தமிழ் வழி பள்ளிகளில் 1ம் வகுப்பு மட்டும் சிபிஎஸ்இ கல்வி திட்டம் அமல்படுத்தப்படுகிறது. இதன் பின்னர் படிப்படியாக ஒவ்வொரு ஆண்டும் வகுப்புகள் அதிகரிக்கப்படும். இதற்காக ஆசிரியர்களுக்கு சிறப்பு பயிற்சி அளிக்கப்பட உள்ளது’ என்றார். சிபிஎஸ்இ பாடத்திட்டம் என்பதால் இந்தி மொழிப்பாடம் அவசியம் குறித்து கேட்ட போது, அந்தந்த மாநிலத்தில் உள்ள மொழியே மொழி பாடமாக வைத்துக்கொள் ளலாம். புதுச் சேரியில் தமிழ், மலையாளம், தெலுங்கு ஆகியவை மொழிப்பாடமாக இருக்கும். பெற்றோர் விருப்பப்பட் டால் இந்தி உள்ளிட்ட பிற மொழிகளை பாடமாக எடுத்துக்கொள்ளலாம்‘ என்றார்.

பி.எட், எம்.எட் படிப்பு கூடுதல் கட்டணம் வசூலிக்கும் கல்லூரிகள் மீது கடும் நடவடிக்கை


தனியார் கல்வியியல் கல்லூரிகளில் அரசு நிர்ணயித்ததைவிட கூடுதல் கட்டணம் வசூலித்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழக துணைவேந்தர் டாக்டர் விஸ்வநாதன் கூறியுள்ளார். விருத்தாசலம் கொளஞ்சியப்பர் அரசு கலைக்கல்லூரியில் நடைபெற்று வரும் பி.எட், எம்.எட் தேர்வை தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழக துணைவேந்தர் டாக்டர் விஸ்வநாதன் நேற்று காலை ஆய்வு செய்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது: தமிழகம் முழுவதும் அரசு கல்லூரிகள் மற்றும் அரசு நிதி உதவிபெறும் கல்லூரி என 102 மையங்களில் தேர்வு நடந்து வருகிறது. இதில் 15 மையங்களாக பிரிக்கப்பட்டு 8 பேர் கொண்ட குழுவினர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். கேள்வித்தாளில் எந்தவித குழப்பமும் இல்லை.

கல்லூரி முதல்வர், பல்கலைக்கழக ரெப்ரசண்டேடிவ், பறக்கும்படை என மூன்றடுக்கு கண்காணிப்பு உள்ளது. சுமார் 75 ஆயிரம் பேர் எழுதுகின்றனர். சென்ற ஆண்டு தேர்வு எழுதி அரியர் உள்ள மாணவர்கள் 5 ஆயிரம் பேர் தேர்வு எழுதுகின்றனர். கல்வியியல் கல்வியின் தரத்தை உயர்த்த பிஎட் கல்வியை இரண்டு ஆண்டுகளாக மாற்ற தேசிய ஆசிரியர் கல்வியியல் நிறுவனம் (என்சிடிஇ) நடவடிக்கை எடுத்து வருகிறது. இதுகுறித்து வெப்சைட்டில் மாணவர்களின் கருத்து கேட்கப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் கல்வியியல் கல்வி இரண்டாண்டுகளாக மாற்றப்படுமா என்பது தெரியவரும். தனியார் கல்லூரிகளில் அரசு நிர்ணயித்ததை விட கூடுதல் கட்டணம் வசூலித்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் எஸ்சி, எஸ்டி மாணவர்களுக்கு பணம் வாங்க கூடாது என அரசு ஆணையை தமிழக முதல்வர் பிறப்பித்துள்ளார். அவர்களுக்கு ஸ்காலர்ஷிப் முழுவதும் வழங்கப்படும். அப்போதுதான் அவர்களுக்கு உரிய பணத்தை கல்லூரிகள் பெற்றுக்கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

சத்துணவு திட்ட காலி பணியிடங்களில் 100 நாள் வேலை திட்ட தொழிலாளரை பணியமர்த்த ஊழியர்கள் கடும் எதிர்ப்பு


சமூக நலத்துறை சார்பில், தமிழகம் முழுவதும் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் சத்துணவுத் திட்டம் செயல்படுத்த படுகிறது. தமிழகம் முழுவதும் மொத்தம் 65,000 சத்துணவு மையங்கள் உள்ளன. தற்போது 40 ஆயிரம் சத்துணவு அமைப்பாளர்கள் பணியாற்றி வருகின்றனர். 

எனினும், சத்துணவு மையங்களில் பல ஆண்டுகளாக ஊழியர் பற்றாக்குறை இருந்து வருகிறது. பல்வேறு மையங்களில் அமைப்பாளர்கள் இல்லாததால், ஒரே அமைப்பாளர் ஒன்றிக்கும் மேற்பட்ட சத்துணவு மையங்களை கவனித்து வருகிறார். தற்போது பணிபுரிந்து வரும் உதவியாளர்களுக்கு, சமையலாளராக பதவி உயர்வு அளிக்க வேண்டும் என்று சத்துணவு ஊழியர்கள் சங்கம் அரசுக்கு கோரிக்கை வைத்தது. ஆனால், அரசு இதை ஏற்க மறுத்துவிட்டது. இதையடுத்து, இதுசம்பந்தமாக நீதிமன்றத்தில் கடந்த 2012ம் ஆண்டு வழக்கு தொடர்ந்தனர். இதனால், உதவியாளர்களுக்கு பதவி உயர்வு அளிப்பதில் இழுபறி நிலவி வருகிறது. இந்நிலையில், சத்துணவு துறையில் ஏற்பட்டுள்ள காலிப் பணியிடப் பிரச்னையை சரிசெய்ய, மத்திய அரசின் 100 நாள் வேலைத்திட்டத்தில் பணிபுரிபவர்களை, சத்துணவு மையங்களில் பணியமர்த்தும் முயற்சியில் தமிழக அரசு இறங்கியுள்ளதாக தவகல்கள் வெளியாகியுள்ளது. புதிதாக ஆட்களை நியமித்தால், அவர்களுக்கு போனஸ், ஓய்வூதியம், சம்பள உயர்வு உள்ளிட்ட பல சலுகைகள் வழங்க வேண்டியிருக்கும். 

இதனால் அரசுக்கு கூடுதல் நிதிச்சுமை ஏற்படும். 100 நாள் வேலை திட்டத்தில் வேலை செய்து வருபவர்களை, அவர்களின் கல்வி தகுதிக்கேற்ப சத்துணவு மையங்களில் பணியமர்த்தினால், பஞ்சாயத்து சார்பில் ஏற்கனவே அவர்களுக்கு வழங்கப்படும் ஊதியத்தில் இருந்து, ரூ.10 முதல் ரூ.20 வரை கூடுதலாக வழங்கினால் மட்டும் போதும் என்று அதிகாரிகள் நினைக்கின்றனர். இதனால், அவர்களை எளிதாக சத்துணவு மையங்களில் உள்ள பணிகளை செய்ய வைக்கலாம் என்று அரசு நம்புகிறது. ஆனால், தமிழக அரசின் இந்த முயற்சிக்கு ஊழியர்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இதுகுறித்து சத்துணவு ஊழியர் சங்கத்தை சேர்ந்த பழனிச்சாமி கூறியதாவது: கடந்த ஆட்சியில் காலிப் பணியிடங்கள் உடனுக்குடன் பூர்த்தி செய்யப்பட்டன. தற்போது தமிழகம் முழுவதும், சுமார் 15 ஆயிரம் சத்துணவு அமைப்பாளர்கள், 13 ஆயிரம் உதவியாளர்கள் என மொத்தம் 28 ஆயிரம் பணியிடங்கள் காலியாக உள்ளன. 

இந்நிலையில், சத்துணவு துறையில் ஏற்பட்டுள்ள காலிப் பணியிட பிரச்னையை சரிசெய்ய, 100 நாள் வேலைத்திட்டத்தில் உள்ள ஊழியர்களை சத்துணவு மையங்களில் பணியமர்த்த போவதாக எங்களுக்கு தகவல் கிடைத்துள்ளது. இதனால், பதவி உயர்வு வழங்கப்படும் என்று எதிர்பார்த்திருந்த ஆயிரக்கணக்கான ஊழியர்கள் பாதிக்கப்படுவதோடு, எங்களுக்கு கிடைக்க வேண்டிய சலுகைகளும் மறுக்கப்பட வாய்ப்புள்ளது. எனவே, 100 நாள் வேலை திட்ட ஊழியர்களை சத்துணவுத்துறையில் பணியமர்த்தும் முயற்சியை அரசு கைவிட வேண்டும். காலிப் பணியிடங்களை பூர்த்தி செய்ய புதிதாக ஆட்களை நியமிக்க வேண்டும் என்றார்.