Flash News

Flash News அன்பார்ந்த ஆசிரிய பெருமக்களே! இந்த வலை தளத்தில் தொடக்கப் பள்ளி மாணவர்களுக்கு தேவையான அடிப்படை கணித செயல்பாடுகளுக்கான விளையாட்டுகள் மற்றும் ஆங்கில விளையாட்டுகள் தரப் பட்டுள்ளன. அவற்றைக் கண்டு பள்ளிகளில் செயல்படுத்துமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்...01.07.2014 முதல் அகவிலைப்படி 7% உயருகிறது. ...

Sunday 29 June 2014

மன உளைச்சலுக்கு இலக்காகும் மாணவ, மாணவிகள்


பொதுத் தேர்வுகளில் மாநில அளவில் சிறப்பிடம் பெறும் தனியார் பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவிகள் பல்வேறு காரணங்களால் தற்கொலை செய்து கொள்ளும் நிகழ்வுகள் தொடர்ந்து அரங்கேறி வருகின்றன.

அதிக மதிப்பெண்கள் பெற வைக்கும் நோக்கில் மாணவர்களை மன உளைச்சலுக்கு ஆளாக்கும் பள்ளி நிர்வாகங்களின் செயல்பாடுகளை கல்வித் துறை அதிகாரிகள் கண்காணித்து நடவடிக்கை எடுத்தால் மட்டுமே, இதுபோன்ற நிகழ்வுகள் எதிர்காலங்களில் அரங்கேறாமல் தடுக்க முடியும் என்கின்றனர் கல்வியாளர்கள்.

மாநில அளவில் சிறப்பிடம் பெற வேண்டும் என்பதற்காகவே, பத்தாம் வகுப்பு , பிளஸ் 2 மாணவ, மாணவிகளுக்கு அதிக அளவிலான கட்டுப்பாடுகளை தனியார் பள்ளிகள் விதிக்கின்றன.

மாநில அளவில் சிறப்பிடம் பெறும் பள்ளிகளில் படித்தால் மட்டுமே அதிக மதிப்பெண்கள் பெற்று மருத்துவம் அல்லது முன்னணி பொறியியல் கல்லூரிகளில் இடம் கிடைக்கும் என்ற நோக்கில் தனியார் பள்ளிகள் கொடுக்கும் எல்லாவிதமான நெருக்கடி, மன உளைச்சலைத் தாங்கிக் கொண்டு தங்களது பிள்ளைகளை தனியார் பள்ளி விடுதிகளில் பெற்றோர்கள் விட்டுவிடுகின்றனர்.

இதுபோன்ற காரணங்களால், உலக நடப்பை முழுமையாகத் தெரிந்து கொள்ள இயலாத வயதில் உள்ள இந்த மாணவ, மாணவிகளின் பள்ளி நிர்வாகத்தால் தங்களுக்கு ஏற்படும் மன உளைச்சலைக்கூட சக மாணவர்களிடம் சொல்ல முடியாமல் மனதுக்குள் பூட்டி வைக்கின்றனர். இதுபோன்ற மன இறுக்கம் தற்கொலை முடிவுக்கு மாணவர்களை ஆளாக்கி விடுவதாக உளவியலாளர்கள் கூறுகின்றனர்.

எதைப் பற்றியும் கவலை கொள்ளாமல், எப்படியாவது மாநில அளவில் சிறப்பிடம் பெற வேண்டும் என்ற முனைப்பை மட்டும் கையில் எடுக்கும் தனியார் பள்ளிகள், மாணவ, மாணவிகளுக்கு பல்வேறு நெருக்குதலைக் கொடுக்கின்றன. இதன் விளைவால், கடந்தாண்டில் மட்டும் நாமக்கல் மாவட்டத்தில் தனியார் பள்ளிகளைச் சேர்ந்த ஒரு மாணவி , 4 மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டனர். இந்தச் சம்பவங்கள் பெற்றோர்களிடம் அப்போது கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. எனினும், பிள்ளைகளின் எதிர்காலம் கருதி சில நாள்களில் அடங்கிப் போயின.

இந்த விவகாரத்தைத் தொடர்ந்து, தனியார் பள்ளிகளின் நடவடிக்கைகள் கண்காணிக்கப்படும் என அறிவித்த மாவட்ட நிர்வாகமும் , கல்வித் துறையும் அதன்பிறகு கண்டுகொண்டதாகத் தெரியவில்லை.

இதுபோன்ற நிகழ்வுகளுக்கு பள்ளி நிர்வாகம் மீது பெரியளவில் நடவடிக்கை பாயாததன் விளைவால், தொடர்ந்து மாணவர்களுக்கு மன உளைச்சல் தரும் நிகழ்வுகள் பல பள்ளிகளில் அரங்கேறியும், வெளிச்சத்துக்கு வராமல் மூடி மறைக்கப்பட்டு விடுவதாகப் புகார் எழுந்துள்ளது.

இந்த நிலையில், நிகழாண்டில் பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 வகுப்பில் மாநில அளவில் சிறப்பிடம் பெற்று மற்ற மாவட்டத்தினரை திரும்பிப் பார்க்கச் செய்த தமிழகத்தின் பின்தங்கிய மாவட்டமான தருமபுரியைச் சேர்ந்த தனியார் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் மன உளைச்சல் உள்ளிட்ட காரணங்களால் அடுத்தடுத்து இரு மாணவிகள் தற்கொலைக்கு முயன்றதில், ஒருவர் உயிரிழந்தார்.

பெற்றோர்களை பேரதிர்ச்சிக்கு உள்ளாக்கிய இந்தச் சம்பவத்தின் உண்மை நிலையை முழுமையாக அறியும் முயற்சியில் மாவட்ட நிர்வாகமும், கல்வித் துறையும் முனைப்புக் காட்டாமல் இதுவரையில் மெளனம் காப்பது பல்வேறு சந்தேகங்களைக் கிளப்புகின்றன.

எனவே, இந்த விவகாரத்தில் பாரபட்சத்துக்கு இடமளிக்காமல் அதிகாரிகள் நடுநிலையுடன் செயல்பட்டால் மட்டுமே வரும்காலங்களில் இதுபோன்ற மனித உயிரிழப்பைத் தடுக்க முடியும் என்கின்றனர் கல்வியாளர்கள்.

மேலும், இன்றைய மாணவ சமுதாயம் மருத்துவம், பொறியியல் தவிர மற்ற எந்தத் துறையை எடுத்துப் படித்தாலும் அதில் ஆர்வமும், அர்ப்பணிப்பு உணர்வும் இருந்தால் இந்த உலகில் வெற்றியாளனாக நிச்சயம் வலம் வரலாம் என்பதை, கல்வித் துறை அதிகாரிகள் பெற்றோருக்கும், மாணவ சமுதாயத்துக்கும் தெளிவுபடுத்தி விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டியது காலத்தின் கட்டாயமாகும்.

No comments:

Post a Comment