Flash News

Flash News அன்பார்ந்த ஆசிரிய பெருமக்களே! இந்த வலை தளத்தில் தொடக்கப் பள்ளி மாணவர்களுக்கு தேவையான அடிப்படை கணித செயல்பாடுகளுக்கான விளையாட்டுகள் மற்றும் ஆங்கில விளையாட்டுகள் தரப் பட்டுள்ளன. அவற்றைக் கண்டு பள்ளிகளில் செயல்படுத்துமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்...01.07.2014 முதல் அகவிலைப்படி 7% உயருகிறது. ...

Thursday 26 June 2014

ஆசிரியர் பணியிட மாறுதல் கலந்தாய்வு: வெளிப்படையாக நடத்த உத்தரவு


ஆசிரியர்களுக்கான பணியிட மாறுதல் கலந்தாய்வை வெளிப்படையாக நடத்த பள்ளிக் கல்வித் துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தஞ்சாவூர் மாவட்டம் மதுக்கூர் ஆண்கள் அரசு மேல்நிலைப் பள்ளியில் பட்டதாரி ஆசிரியராக இருந்த வி.வையணன், கலந்தாய்வு மூலம் தூத்துக்குடி மாவட்டம் கடல்குடியில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளிக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டார். கடந்த 2012-ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதுநிலைப் பட்டதாரி ஆசிரியராக (உயிரியல்) பதவி உயர்வு பெறுவதற்கு வையணன் தகுதியானார். இந் நிலையில் 2012-13-ஆம் ஆண்டில் 100 உயர்நிலைப் பள்ளிகளை, மேல்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்தி அரசு உத்தரவிட்டது.

அதில், திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள 4 அரசு மேல்நிலைப் பள்ளிகளில் முதுநிலை பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் (உயிரியல்) காலியாக இருந்தன. அந்தக் காலிப்பணியிடங்கள் கலந்தாய்வின்போது வெளிப்படுத்தப்படவில்லை. அதனால், வையணனுக்கு ராமநாதபுரம் மாவட்டத்துக்கு மாறுதல் வழங்கப்பட்டது.

கலந்தாய்வின் போது திருநெல்வேலி மாவட்டத்தில் காலியாக இருந்த 3 பணியிடங்கள் குறித்து அறிவிக்கவில்லை. அதனால், திருநெல்வேலி சுத்தமல்லி அரசு மேல்நிலைப் பள்ளிக்கு மாற்றம் செய்ய உத்தரவிடக் கோரி வையணன் உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார்.

அதில், அந்தப் பள்ளியில் வேறு யாரையும் பணியமர்த்துவதற்கு உயர் நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்தது. ஆனால், அந்தப் பணியிடம் முன்னதாகவே நிரப்பப்பட்டதாக பள்ளிக் கல்வித் துறை கூறியதையடுத்து, மனுதாரரின் கோரிக்கையை விதிகளுக்குள்பட்டு பரிசீலிக்க வேண்டும் என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

இந் நிலையில், கடந்த ஆண்டு ஜூலை மாதம் 20 மற்றும் 22-ஆம் தேதிகளில் முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் பணியிட மாறுதல் கலந்தாய்வின் போது தூத்துக்குடி மாவட்டம் ராமானுஜம் புதூர் அரசு மேல்நிலைப் பள்ளியிலிருந்த காலிப் பணியிடம் காண்பிக்கப்படவில்லை.

அந்தக் காலியிடத்தை கலந்தாய்வில் காட்டாமலேயே பள்ளிக் கல்வித் துறை நிரப்பியுள்ளது. இந்த உத்தரவை ரத்து செய்து விட்டு, புதிதாக பணியிட மாறுதல் கலந்தாய்வை நடத்த உத்தரவிடுமாறு வையணன் மற்றுமொரு வழக்கைத் தாக்கல் செய்தார்.

இந்த மனு நீதிபதி டி.ஹரிபரந்தாமன் முன்பு விசாரணைக்கு வந்தது. விசாரணையின் போது, மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்குரைஞர், அந்தப் பள்ளியில் ஏற்கெனவே ஒருவர் நியமிக்கப்பட்டு விட்டார். அதனால் அவரை தொந்தரவு செய்ய வேண்டாம் எனத் தெரிவித்தார்.

இதைத் தொடர்ந்து, ஜூன் 24-ஆம் தேதி முதல் நடைபெற்று வரும் கலந்தாய்வில் மனுதாரரை பங்கேற்க அனுமதிக்க வேண்டும். மேலும், இந்தப் பணியிட மாறுதல் கலந்தாய்வை வெளிப்படையாக நடத்த வேண்டும் என நீதிபதி உத்தரவிட்டார்.

No comments:

Post a Comment