Flash News

Flash News அன்பார்ந்த ஆசிரிய பெருமக்களே! இந்த வலை தளத்தில் தொடக்கப் பள்ளி மாணவர்களுக்கு தேவையான அடிப்படை கணித செயல்பாடுகளுக்கான விளையாட்டுகள் மற்றும் ஆங்கில விளையாட்டுகள் தரப் பட்டுள்ளன. அவற்றைக் கண்டு பள்ளிகளில் செயல்படுத்துமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்...01.07.2014 முதல் அகவிலைப்படி 7% உயருகிறது. ...

Tuesday 24 June 2014

திருச்சியில் தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கான கலந்தாய்வில் காலிப்பணியிடத்தை மறைத்ததாக புகார்: ஆசிரியர்கள் உள்ளிருப்பு போராட்டம்

                               

திருச்சியில் தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் பணியிட மாறுதல் கலந்தாய்வில் காலிப்பணியிடம் மறைக்கப்பட்டதாக புகார் கூறி ஆசிரியர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கலந்தாய்வு
திருச்சி மாவட்டத்தில் தொடக்கப்பள்ளி, நடுநிலைப்பள்ளி ஆசிரியர்களுக்கான பணியிட மாறுதல் மற்றும் பணி நிரவலுக்கான கலந்தாய்வு மேலப்புதூர் புனித அன்னாள் மேல்நிலைப்பள்ளியில் கடந்த 17–ந் தேதி தொடங்கியது. இதுவரை நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள், பட்டதாரி ஆசிரியர்களுக்கான கலந்தாய்வு நடந்து முடிந்துள்ளது.

நேற்று காலை தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் பணியிட மாறுதலுக்கான கலந்தாய்வும், பிற்பகலில் இடைநிலை ஆசிரியர்கள், தலைமை ஆசிரியர்களாக பதவி உயர்வுக்கான கலந்தாய்வு நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இதையடுத்து கலந்தாய்வில் கலந்து கொள்வதற்காக தலைமை ஆசிரியர்கள், இடைநிலை ஆசிரியர்கள் நேற்று காலை குவிந்தனர். காலையில் தலைமை ஆசிரியர்கள் பணியிட மாறுதலுக்கான கலந்தாய்வில் மொத்தம் 13 ஒன்றியத்தில் 20 இடங்களுக்கு நடந்தது. இதில் 18 பணியிடங்கள் நிரப்பப்பட்டன.

உள்ளிருப்பு போராட்டம்
இந்நிலையில் முசிறி ஒன்றியத்தில் காமட்சிப்பட்டி பள்ளி, நடராஜநகர் பள்ளி ஆகிய 2 இடம் காலியிடமாக அறிவிக்கப்பட்டது. இதில் காமாட்சிப்பட்டி தொடக்கப்பள்ளி பணியிடம் கலந்தாய்வில் மறைக்கப்பட்டு, மணலிஅய்த்தான்பட்டி பள்ளியில் காலியிடம் இருப்பதாக நேற்று அதிகாரிகள் அறிவித்ததாக தலைமை ஆசிரியர்கள் குற்றம்சாட்டினர்.

மணலிஅய்த்தான்பட்டியில் தலைமை ஆசிரியர் ஒருவர் பணியாற்றி வருகிற போது, அந்த இடத்தை காலியிடமாக திடீரென அறிவிக்கப்பட்டதற்கு தொடக்கப்பள்ளி ஆசிரியர்கள் சங்கத்தினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும் கலந்தாய்வு நடந்த வகுப்பு அறை முன்பு அமர்ந்து உள்ளிருப்பு போராட்டம் நடத்தினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இது குறித்து தகவல் அறிந்த மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி செல்வக்குமார் விரைந்து வந்து போராட்டம் நடத்தியவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். மாவட்ட தொடக்க கல்வி அலுவலர் (பொறுப்பு) செல்வன் உடன் இருந்தார்.

தடுத்து நிறுத்தம்
அப்போது காமாட்சிப்பட்டி தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் பணியிடத்தை கலந்தாய்வில் நிரப்ப வேண்டும் என்றும் ஆசிரியர்கள் கோரிக்கை வைத்தனர். ஆனால் அந்த பணியிடம் நிர்வாக காரணங்களுக்காக நிறுத்தி வைக்கப்பட்டிருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இதற்கு ஆசிரியர்கள் சம்மதிக்கவில்லை.

முசிறி ஒன்றியத்தில் 2 இடமும் நிரப்பப்படாமல் விட்டு வைத்து விட்டு அடுத்த கட்டமாக இடைநிலை ஆசிரியர்கள், தலைமை ஆசிரியர்களாக பதவி உயர்வுக்கான கலந்தாய்வு நடத்த அதிகாரிகள் தெரிவிக்கப்பட்டது. ஆனால் அதற்கும் ஆசிரியர்கள் சம்மதிக்கவில்லை. தொடர்ந்து வகுப்பறையில் உள்ளே அமர்ந்து போராட்டம் நடத்தினர். மேலும் இடைநிலை ஆசிரியர்களை பதவி உயர்வுக்கான கலந்தாய்வில் கலந்து கொள்ள விடாமல் தடுத்து நிறுத்தினர்.

பதவி உயர்வுக்கான கலந்தாய்வு
இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்ததும் கண்டோன்மெண்ட் போலீசார் விரைந்து வந்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். இதையடுத்து தலைமை ஆசிரியர்கள் பணியிட மாறுதலில் 2 இடங்களை நிரப்பப்படாமல் விட்டு, விட்டு இடைநிலை ஆசிரியர்கள், தலைமை ஆசிரியர்களாக பதவி உயர்வுக்கான கலந்தாய்வு நடந்தது. போராட்டம் நடத்தியவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் கலந்தாய்வு நடந்த பள்ளியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

மேல்நிலைப்பள்ளி முதுகலை ஆசிரியர்களுக்கு கலந்தாய்வு
திருச்சி மாவட்டத்தில் மேல்நிலைப்பள்ளி முதுகலை ஆசிரியர்கள் பணியிட மாறுதலுக்கான கலந்தாய்வு பாலக்கரை சையது முர்துசா அரசு மேல்நிலைப்பள்ளியில் நேற்று நடந்தது. கலந்தாய்வில் கலந்து கொள்வதற்காக 200–க்கும் மேற்பட்ட முதுகலை ஆசிரியர்கள் நேற்று காலை குவிந்தனர். மொத்தம் 70 இடங்களில் 41 பேர் விரும்பிய இடங்களை தேர்வு செய்தனர். இதற்கான ஆணைகளை மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி செல்வகுமார் வழங்கினார். தொடர்ந்து இன்று (செவ்வாய்க்கிழமை) முதுகலை ஆசிரியர்கள், மாவட்டம் விட்டு மாவட்டம் மாறுதலுக்கான கலந்தாய்வு நடக்கிறது.

No comments:

Post a Comment