ஆசிரியர் தகுதி தேர்வின் முடிவினை வெளியிட தடை விதிக்க முடியாது என்று சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
சென்னை ஐகோர்ட்டில், வக்கீல் எம்.பழனிமுத்து தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது:-
இடஒதுக்கீடு
தேசிய ஆசிரியர் கல்வி கவுன்சில் வெளியிட்ட அறிவிக்கையின் அடிப்படையில், தமிழகத்தில் காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப, ஆசிரியர் தேர்வு வாரியம் தகுதி தேர்வு நடத்தி வருகிறது.
இந்த தகுதி தேர்வு, இடஒதுக்கீடு முறையை பின்பற்றாமல் நடத்தப்படுகிறது. ஆனால் ஆந்திரா உள்ளிட்ட 14 மாநிலங்களில், ஆசிரியர் தகுதி தேர்வில் இடஒதுக்கீடு பின்பற்றப்படுகிறது.
எனவே தமிழகத்திலும் இடஒதுக்கீட்டு முறையை பின்பற்றும்படி தமிழக அரசுக்கு உத்தரவிடவேண்டும். இவ்வாறு அதில் கூறியிருந்தார்.
தடை விதிக்க வேண்டும்
இந்த வழக்கிற்கு பதில் மனு தாக்கல் செய்த ஆசிரியர் தேர்வு வாரியம், ‘தகுதியான, திறமையான ஆசிரியர்களை தேர்வு செய்யவேண்டும் என்பதற்காக தகுதி தேர்வில் இடஒதுக்கீட்டு முறையை பின்பற்றப்படவில்லை. இதுகுறித்து தமிழக அரசு கொள்கை முடிவு எடுத்துள்ளது’ என்று கூறியிருந்தது.
இந்த நிலையில் இந்த வழக்கு தலைமை நீதிபதி ராஜேஷ்குமார் அக்ரவால், நீதிபதி எம்.சத்தியநாராயணன் ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது.
அப்போது, மனுதாரர் பழனிமுத்து ஆஜராகி, ‘கடந்த ஆகஸ்டு மாதம் நடந்து முடிந்த ஆசிரியர் தகுதி தேர்வின் விடைத்தாள்களை திருத்தும் பணி முடிந்துவிட்டது. தேர்வின் முடிவினை, ஆசிரியர் தேர்வு வாரியம் விரைவில் அறிவிக்க உள்ளது. இதற்கு தடை விதிக்க வேண்டும்’ என்று வாதம் செய்தார்.
இறுதி தீர்ப்பு
இதை ஏற்க மறுத்த நீதிபதிகள், ‘இந்த மனுக்கள் மீதான விசாரணையை நவம்பர் 18-ந்தேதிக்கு தள்ளிவைக்கிறோம். அதேநேரம், ஆசிரியர் தகுதி தேர்வு முடிவுகள், அதைத்தொடர்ந்து நடைபெறும் பணி நியமனம் ஆகியவை இந்த வழக்கின் இறுதி தீர்ப்புக்கு கட்டுப்பட்டது’ என்று உத்தரவிட்டனர்.
No comments:
Post a Comment