மாணவர் சிறப்பு பஸ்களை முறைப்படுத்தும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக, மாணவிகளுக்கென பிரத்யேகமான பஸ்களை இயக்குவது என, முடிவு செய்யப்பட்டுள்ளது. பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு, மாணவ மாணவிகள் சிரமமின்றி செல்வதற்கு வசதியாக, மாணவர் சிறப்பு பஸ் திட்டத்தை, அரசு செயல்படுத்தி வருகிறது.
இந்த திட்டத்தின் கீழ், புதுச்சேரியில், 46 பஸ்களும், காரைக்காலில் 13 பஸ்களும் இயக்கப்படுகின்றன. தினசரி, 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள், சிறப்பு பஸ்களில் பயணம் செய்கின்றனர். பஸ் வசதி அதிகம் இல்லாத கிராமங்களில் வசிக்கும் மாணவ மாணவகள், சரியான நேரத்தில், எந்தவித சிரமமும் இல்லாமல் பள்ளி, கல்லூரிகளுக்கு வந்து செல்வதற்கு, மாணவர் சிறப்பு பஸ்கள் மிகுந்த உதவியாக உள்ளன.
இந்த பஸ்களில், மாணவ மாணவிகள் எந்த இடத்தில் ஏறி, எந்த இடத்தில் இறங்கினாலும், ஒரே ஒரு ரூபாய் மட்டுமே, கட்டணமாக வசூலிக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.
இதற்கிடையில், பல வழித் தடங்களில், மாணவர் சிறப்பு பஸ்கள் குறித்த நேரத்தில் வருவதில்லை, வெளியாட்கள் பயணம் செய்கின்றனர் என புகார்கள் எழுந்தது.சிறப்பு பஸ்களை கண்காணித்து, அவற்றை முறைப்படுத்துவதற்காக, "போக்குவரத்து கண்காணிப்பு பிரிவு' என்ற பிரத்யேக பிரிவு, பள்ளிக் கல்வி இயக்குனரகத்தில் துவக்கப்பட உள்ளது.
இந்த திட்டத்துக்கான, ஒருங்கிணைப்பு அதிகாரியாக, துணை இயக்குனர் (தொடக்கக் கல்வி) நியமிக்கப்பட்டுள்ளார். மேலும், மாணவர் சிறப்பு பஸ்களை இயக்குவது தொடர்பாக, விரிவான வழிகாட்டுதல்கள் அடங்கிய, அரசாணையும் வெளியிடப்பட்டுள்ளது.புதுச்சேரி பகுதியில், 55 சிறப்பு பஸ்களுக்கும், காரைக்கால் பகுதியில், 15 சிறப்பு பஸ்களுக்கும் அனுமதி தரப்பட்டுள்ளது. ஆனால், புதுச்சேரியில்-46 , காரைக்காலில்-13 என, மொத்தம், 59 பஸ்கள் மட்டுமே இயக்கப்படுகின்றன.
அனுமதிக்கப்பட்ட, 70 பஸ்களையும் முழுமையாக இயக்குவதுஎன முடிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், மாணவர் சிறப்பு பஸ் வழித்தடங்களில், தேவைகளுக்கேற்ப, பல்வேறு மாற்றங்களை செய்யவும் திட்டமிடப்பட்டுள்ளது. மேலும், ஈவ் டீசிங் உள்ளிட்ட பிரச்னைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், மாணவிகளுக்கென, பிரத்யேக பஸ்களை இயக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த பஸ்சில், பள்ளிகளில் படிக்கும் மாணவிகளும், கல்லூரிகளில் படிக்கும் மாணவிகளும் பயணம் செய்யலாம். இதுமட்டுமல்லாமல், அனைத்து வழித் தடங்களிலும் சோதனை நடத்தி, தவறுகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது. பள்ளிக் கல்வி இயக்குனரின் ஒப்புதலுக்கு பின், இந்த அதிரடி மாற்றங்கள் அமலுக்கு வருகிறது.
No comments:
Post a Comment