:நெய்வேலியில் பள்ளி மாணவர்கள் போதைக்கு அடிமையாகி சீரழியும் நிலை ஏற்பட்டுள்ளது.நெய்வேலியில் என்.எல்.சி., நிறுவனத்தின் ஆதரவுடன் 30க்கும் மேற்பட்ட பள்ளிகள் செயல்படுகிறது. நெய்வேலி நகரம் மட்டுமின்றி ”ற்றியுள்ள பெரும்பாலான கிராமப்புற மாணவ, மாணவிகளும் நெய்வேலி பள்ளிகளில் படித்து வருகின்றனர்.இவர்களில் ஒரு சில மாணவர்கள் புத்தகப் பையிலேயே "சரக்கு' பாட்டில்களை எடுத்துவரும் அவலம் அதிகரித்துள்ளது. போதாக்குறைக்கு கஞ்சா பழக்கமும் தொற்றிக் கொண்டுள்ளது.
பள்ளிக்கு வரும்போதே டாஸ்மாக்கில் மது பாட்டில்கள் வாங்கி முந்திரிதோப்பில் வைத்து குடித்து விட்டு மாலை பள்ளி விடும்நேரத்திற்கு வீட்டிற்குச் செல்லும் மாணவர்களும் உள்ளனர்.சில தினங்களுக்கு முன் பள்ளி மாணவர் ஒருவர் மது குடித்தும் போதை ஏறாததால் கூடுதலாக கஞ்சா வாங்கி அடித்ததில் போதை தலைக்கேறி, தனது உடல் முழுவதும் கத்தியால் வெட்டிக் கொண்டு ரத்தம் சொட்ட வீட்டிலேயே தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்ட அதிர்ச்சியான சம்பவமும் நடந்துள்ளது. இது குறித்து போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.
இத்துடன் பள்ளியிலேயே மொபைல்போன்களில் ஆபாச படம் பார்க்கும் சம்பவமும் அதிகரித்துள்ளது.போதை பழக்கத்திற்கு அடிமையாகிவிட்ட மாணவர்கள் மது குடிக்க பணம் கிடைக்காத நிலையில், நகரில் வாக்கிங் செல்லும் பெண்களிடம் செயினை அறுத்துச் செல்கின்றனர்.இதுபற்றி நெய்வேலி டி.எஸ்.பி., உமா விக்னேஷ்வரி கூறுகையில், மாணவர்கள் இதுபோன்ற செயல்களில் ஈடுபடுவது வேதனையாக உள்ளது.
சமீபத்தில் சிதம்பரம் மற்றும் பெரம்பலூர் இன்ஜினியரிங் கல்லூரி மாணவர்கள் இது போன்ற குற்றச் செயல்களில் ஈடுபட்டதை கண்டுபிடித்து கைது செய்துள்ளோம்.பெற்றோர்களும் தங்களது பிள்ளைகளின் அன்றாட நடவடிக்கைகளை கவனிக்க வேண்டும். அவர்களுக்கு பணம், சொத்து சேர்ப்பதில் செலுத்தும் கவனத்தை விடவும், அவர்களது எதிர்காலத்தை பாதுகாக்க வேண்டியது மிகவும் அவசியமாகும்.முதலில் பெற்றோர்கள் அவர்களிடம் இருக்கும் தீய பழக்கங்களை விட்டொழித்தால் தான் பிள்ளைகள் மீது கவனம் செலுத்த முடியும்' என்றார்.
No comments:
Post a Comment