ஊட்டி அருகே கேத்தியில் உள்ள சிஎஸ்ஐ பொறியியல் கல்லூரியில், பிரபல தனியார் சாப்ட்வேர் நிறுவனத்தில் இருந்து வருவதாக கூறி ஒரு கும்பல் கடந்த சில ஆண்டுக்கு முன்பு இன்டர்வியூ நடத்தியுள்ளது. இதில், 12 மாணவர்களை தேர்வு செய்து பணி ஆணை கடிதத்தை கொடுத்துள்ளனர். மேலும் ‘பேக் டோர் இன்டர்வியூÕ நடத்தி முன்னாள் மாணவர்கள் சிலரிடம் முன்னணி நிறுவனத்தில் வேலை வாங்கி தருவதாக கூறி, அதற்கான கடிதமும் கொடுத்து தலா 50 ஆயிரம் வீதம் மூன்று பேரிடம் ஒன்றரை லட்சம் பணம் பெற்றுள்ளது.அந்த கடிதங்களை கொண்டு வேலைக்கு சென்றபோது மோசடி வெளி வந்தது.இதைத் தொடர்ந்து இந்த மோசடி கும்பல் தமிழகம் முழுவதும் கைவரிசை காட்டியது தெரியவந்தது.
பல கல்லூரிகளில் 50க்கும் மேற்பட்ட மாணவர்களிடம் இது போன்று மோசடி கடிதங்கள் கொடுத்து சுமார் 1 கோடியே 50 லட்சம் வரை இந்த கும்பல் பணம் பறித்துள்ளது. இதனை தொடர்ந்து சென்னை, ஊட்டி உட்பட அனைத்து பகுதிகளிலும் போலீசார் வழக்குபதிந்து விசாரணை நடத்தி வந்துள்ளனர்.இந்த மோசடியில் வேலூர் மாவட்டத்தை சேர்ந்த ராகுல் ராய் என்ற சையத் சலாவுதீன்(38) ஈடுபட்டிருப்பது தெரிய வந்துள்ளது.
இவரை, சென்னையில் போலீசார் கைது செய்துள்ளனர். இவரிடம் விசாரணை நடத்தியதில் வட மாநிலங்களை சேர்ந்த 9 பேர் இந்த மோசடியில் ஈடுபட்டது தெரிந்தது. இதைதொடர்ந்து அவரை கைது செய்து போலீசார் புழல் சிறையில் அடைத்துள்ளனர்.
ஊட்டியில் குற்றவியல் பிரிவு இன்ஸ்பெக்டர் ஜான் தலைமையிலான போலீசார் சென்னை சென்று, புழல் சிறையில் இருந்த சையத்சலாவுதீனை கைது செய்து குன்னூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி விசாரணைக்காக நேற்றுமுன்தினம் கஸ்டடியில் எடுத்துள்ளனர். அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தியதில் கேத்தி சிஎஸ்ஐ கல்லூரியில் பிரபல தனியார் நிறுவனத்தின் பேரில், கேம்பஸ் இன்டர்வியூ நடத்தி மோசடியில் ஈடுபட்டதை ஒப்புக் கொண்டுள்ளார்.இதையடுத்து அவரை போலீசார் மீண்டும் சென்னை போலீசாரிடம் ஒப்படைத்தனர். அவர்கள் புழல் சிறையில் அடைத்தனர். வடமாநிலங்களை சேர்ந்த மற்ற 9 பேரை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டு தேடி வருவதாக போலீசார் தெரிவித்தனர்.
No comments:
Post a Comment