தமிழகத்தில் அரசு, அரசு உதவிபெறும் பள்ளிகளில் 12ம் வகுப்பு மாணவ, மாணவியருக்கு தமிழக அரசால் இலவச லேப்டாப் வழங்கப்பட்டு வருகிறது. மேலும் கல்லூரிகளிலும் படிக்கின்ற மாணவ, மாணவியருக்கும் இலவச லேப்டாப் வழங்கும் நடைமுறை இருந்து வருகிறது. இதில், பல மாணவ,மாணவிகளுக்கு லேப்டாப் வழங்கப்படவில்லை. இதனால் அவர்கள் கல்வித்துறை அதிகாரிகள், மாவட்ட கலெக்டர் அலுவலக அதிகாரிகளை சந்தித்து மனு கொடுக்கின்றனர்.
ஆனால், அவர்களுக்கு கொடுக்கப்படும் மதிப்பெண் பட்டியலில் லேப்டாப் வழங்கியதாக பதிவு செய்துவிடுகின்றனர். இதனால் இந்த விஷயத்தில் குளறுபடிகள் நடைபெறுவதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. இதற்கிடையில், நடப்பு கல்வியாண்டிலும் பல்வேறு பள்ளிகளில் சுயநிதி பாட பிரிவு மாணவர்களுக்கு இலவச லேப்டாப் வழங்கப்பட்டுள்ளது. ஆனால் சில பள்ளிகளில் சுயநிதி பிரிவு மாணவர்களுக்கு அவ்வாறு வழங்கவில்லை. இது மாணவர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
இதுதொடர்பாக பாதிக்கப்பட்ட மாணவ, மாணவியர் கூறுகையில், ‘‘எங்களது பிளஸ் 2 மதிப்பெண் பட்டியலில் பின்பக்கத்தில் தமிழக அரசின் லேப்டாப் பெற்றுவிட்டதாக பதிவு செய்துள்ளனர். ஆனால் பின்னர் எங்களுக்கு லேப்டாப் தர மறுக்கின்றனர். வேறு பள்ளிகளில் எங்களை போன்று சுயநிதி பிரிவுகளில் படிக்கின்ற மாணவர்களுக்கு லேப்டாப் வழங்கப்பட்டுள்ளது. எனவே அதிகாரிகள் இதுதொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். அனைத்து மாணவ, மாணவியருக்கும் இலவச லேப்டாப் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்‘‘ என்று தெரிவித்தனர்.
No comments:
Post a Comment