ஆசிரியர்களின் உதவி உயர்வுக்கான முன்னுரிமை பட்டியலை ஜனவரி முதல் நாளில் இருந்து வெளியிட வேண்டும் என்று ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி கோரிக்கை விடுத்து உள்ளது.
பதவி உயர்வு முன்னுரிமை பட்டியல்
ஊராட்சி ஒன்றிய பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களின் பதவி உயர்வுக்கான முன்னுரிமைப் பட்டியல் ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி முதல் நாளை அடிப்படையாக கொண்டு தயார் செய்து வெளியிடப்பட வேண்டும். இந்த பட்டியல் அந்த ஆண்டு முழுவதும் ஏற்படும் காலிபணியிடங்களுக்கு பதவி உயர்வு வழங்குவதற்கு செல்லத்தக்கதாகும்.
துவக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகளில் பணிபுரியும் இடைநிலை ஆசியர்களுக்கு தனியாகவும், துவக்கப்பள்ளி தலைமை ஆசிரியர், பட்டதாரி ஆசிரியர், நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் ஆகியோருக்கு தனித்தனியாகவும் முன்னுரிமை பட்டியல் தயார் செய்யப்படும். அந்த பட்டியலின் முன்னுரிமைப்படி பதவி உயர்வும் வழங்கப்படும்.
ஆய்வு செய்ய வேண்டும்
அதன்படி ஒவ்வொரு ஒன்றியமும் தனி யூனிட்டாக இருப்பதால், ஒன்றிய அளவில் ஆசிரியர்களின் முன்னுரிமைப் பட்டியல் அந்தந்த உதவித் தொடக்கக் கல்வி அலுவலகங்களில் தயார் செய்யப்படுகிறது. தயார் செய்யப்பட்ட முன்னுரிமைப் பட்டியல் அந்தந்த ஒன்றிய ஆசிரியர்களின் பார்வைக்கு வைக்க வேண்டும்.
ஆசிரியர்களிடம் இருந்து ஆட்சேபனை ஏதும் வந்தால் விதிகளின்படி பரிசீலிக்கப்பட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். பின்பு உதவி தொடக்கக்கல்வி அலுவலகத்தில் இருந்து அனுமதிக்காக மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலகத்துக்கு அனுப்பி வைக்க வேண்டும்.
மாவட்ட தொடக்க கல்வி அலுவலகத்தில் ஒன்றியங்களில் இருந்து பெறப்பட்ட முன்னுரிமைப் பட்டியல்களை ஆய்வு செய்து, மேல்முறையீடு வரப்பெற்றால் முறையாக பரிசீலனை செய்து, குறைகள் இருப்பின் நிவர்த்தி செய்து அனுமதி வழங்கப்பட வேண்டும்.
கலந்தாய்வில் குழப்பங்கள்
நெல்லை மாவட்டத்தில் கடந்த ஆண்டுகளில் ஏப்ரல் மாத இறுதி வரையிலும் பெரும்பாலான ஒன்றியங்களில் முன்னுரிமைப் பட்டியல் தயார் செய்து ஆசிரியர்களின் பார்வைக்கு வைக்கப்படவில்லை. இதனால் ஆசிரியர்கள் தங்களின் முன்னுரிமையைப் பற்றி அறிந்து கொள்ள இயலவில்லை. பட்டியலில் தவறுகள் இருக்கிறதா என்பதையும் காண முடியவதில்லை.
சில சூழ்நிலைகளில் பட்டியலில் தவறுகள் ஏற்படுவதால் கலந்தாய்வு நேரத்தில் தேவையற்ற குழப்பங்கள் ஏற்படுகின்றன. பின்னர் இயக்குனர் கவனத்துக்கு கொண்டு சென்று தீர்வு காணப்படும். அதுவரையில் தற்காலிகமாக பதவி உயர்வு நிறுத்தி வைக்கப்படுகிறது என அறிவிக்கப்படுகிறது.
நடவடிக்கை
இதனால் ஆசிரியர்களுக்கு பதவி உயர்வு கிடைப்பதில் தேவையற்ற காலதாமதங்கள் ஏற்படுகின்றன. களக்காடு, வள்ளியூர் போன்ற ஒன்றியங்களில் மேற்கண்ட சூழ்நிலைகளால் பதவி உயர்வு நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளது.
எனவே மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர், அனைத்து உதவி மற்றும் கூடுதல் உதவி தொடக்கக் கல்வி அலுவலர்களுக்கும் 2014 முன்னுரிமைப் பட்டியலை ஜனவரி முதல் நாள் அன்று வெளியிட அறிவுறுத்தி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் வேண்டுகோள் விடுத்து உள்ளனர்.
No comments:
Post a Comment