கல்வி உதவித்தொகை வழங்குவதில் மோசடியை தடுக்க, மாணவர்களின் பெயரில், வங்கிக் கணக்கு துவங்கப்பட்ட நிலையில், முதற்கட்டமாக, மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் கல்வி உதவிக்கான விண்ணப்பத்தை, இணைய தளத்தில் விண்ணப்பிக்க வேண்டும் என, உத்தரவிடப்பட்டுள்ளது.
மோசடி:
ஆதிதிராவிடர், பழங்குடியினர் உள்ளிட்ட தகுதி வாய்ந்த மாணவர்களுக்கு, அரசு, கல்வி உதவித்தொகை வழங்கி வருகிறது. இவை, பள்ளி நிர்வாகம் மூலம், மாணவர்களுக்கு வழங்கப்பட்டு வந்தது. இதில், தலைமை ஆசிரியர்கள் மூலமாக கல்வி உதவித்தொகை, பணமாக வழங்கப்பட்டதில், மோசடி நடந்தது. கடந்த, 2012ம் ஆண்டு, நாமக்கல் மாவட்டத்தில், போலியாக, மாணவர்களின் கையெழுத்து போட்டு, கல்வி உதவித்தொகையில், லட்சக்கணக்கான ரூபாய் மோசடி நடந்தது. அதில் சிக்கிய, 77 தலைமை ஆசிரியர்கள், இடைநீக்கம் செய்யப்பட்டனர். இது போன்ற மோசடிகளை தடுக்க, கடந்த கல்வி ஆண்டு முதல், மாணவர்களின் பெயரில் வங்கிக் கணக்கு துவங்கப்பட்டு, கல்வி உதவித்தொகை வழங்கும் திட்டம் துவங்கப்பட்டது.
வங்கி கணக்கு:
மாணவரின் பெயரில் வங்கி கணக்கு துவங்கப்பட்டு, கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டாலும், அதற்காக விண்ணப்பிப்பதில், எவ்வித முறைகேடும் நடக்கக் கூடாது என்பதற்காக, அதுவும், இணைய தளத்தில் விண்ணப்பிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
கல்வி அதிகாரி ஒருவர் கூறியதாவது: ஆதிதிராவிடர், பிற்படுத்தப்பட்டோர் துறை சார்பில் வழங்கப்படும், கல்வி உதவித்தொகைகளில், எவ்வித முறைகேடும் நடக்கக் கூடாது என்பதற்காக, மாணவரின் பெயரில் வங்கிக் கணக்கு துவங்கப்பட்டது. அதன் தொடர்ச்சியாக, முதல்கட்டமாக, பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 மாணவர்கள், உயர்கல்வி மாணவர்கள், கல்வி உதவித்தொகையை பெற, சம்பந்தப்பட்ட தலைமை ஆசிரியர் மூலமாக, தங்களது விவரங்களை, இணைய தளத்தில் விண்ணப்பிக்க வேண்டும். இத்திட்டம், நடப்பு நிதியாண்டில் இருந்து அமல்படுத்த, உயரதிகாரிகள், மற்ற துறை அதிகாரிகளுடன் ஒருங்கிணைந்து செயல்படுத்த உத்தரவிட்டுள்ளனர். அதற்காக, தலைமை ஆசிரியர்களுக்கு பயிற்சி, சம்பந்தப்பட்ட பள்ளிகளுக்கு ரகசிய குறியீடு எண் வழங்கப்பட்டுள்ளது. இவ்வாறு, அவர் கூறினார்.
No comments:
Post a Comment