ஆசிரியர் தகுதி தேர்வில் இட ஒதுக்கீடு பிரிவினருக்கு மதிப்பெண் தளர்வு வழங்க மறுத்த அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தேசிய ஆதிதிராவிடர் ஆணையம் தெரிவித்துள்ளது. 'ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களில் இட ஒதுக்கீட்டு பிரிவினருக்கு மதிப்பெண் தளர்வு வழங்க வேண்டும்' என்று தமிழகத்தை சேர்ந்த பொதுக் கல்விக்கான மாநில மேடை என்ற அமைப்பினர் தேசிய ஆதி திராவிடர் ஆணையத்திடம் புகார் தெரிவித்து இருந்தனர். அந்த புகாரை பரிசீலித்த தேசிய ஆணையம், பள்ளி கல்வி துறை முதன்மை செயலர், ஆசிரியர் தேர்வு வாரிய தலைவர் ஆகியோருக்கு கடந்த 23ம் தேதி கடிதம் அனுப்பியது.
அதில் கூறியிருப்பதாவது: இடஒதுக்கீட்டு பிரிவினருக்கு ஆசிரியர் தகுதி தேர்வில் மதிப்பெண் தளர்வு வழங்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆனால், அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இடஒதுக்கீட்டு கொள்கையை நடைமுறைப்படுத்த தவறிய அதிகாரிகள் மீது வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும். என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது என்பது பற்றி உடனடியாக தேசிய ஆதி திராவிடர் ஆணைய சென்னை மண்டல அலுவலகத்துக்கு தெரிவிக்க வேண்டும். தவறினால் இந்த புகார் குறித்த விவரத்தை டெல்லியில் உள்ள தலைமை அலுவலகத்துக்கு தெரிவிக்கப்படும். இவ்வாறு அந்த கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.
ஆசிரியர் தேர்வு வாரியம் சான்று சரிபார்ப்பின்போது தேர்ச்சி பெற்றவர்கள் சமர்ப்பித்த பட்ட படிப்பு, பி.எட் படிப்புக்கான சான்றுகளை மட்டுமே சரிபார்க்காமல், பணி நியமனத்துக்கு தேவையான வெயிட்டேஜ் கணக்கிட்டு தரவரிசை தயார் செய்யும் பணியையும் இணைத்தே செய்கிறது. இது விதிகளை மீறும் தவறான நடவடிக்கை. ஆனால் சிபிஎஸ்இ கல்வி வாரியம் தகுதி தேர்வுக்குரிய சான்றுகளை மட்டுமே சரி பார்க்கும் பணியை முறையாக செய்து வருவது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment