Flash News

Flash News அன்பார்ந்த ஆசிரிய பெருமக்களே! இந்த வலை தளத்தில் தொடக்கப் பள்ளி மாணவர்களுக்கு தேவையான அடிப்படை கணித செயல்பாடுகளுக்கான விளையாட்டுகள் மற்றும் ஆங்கில விளையாட்டுகள் தரப் பட்டுள்ளன. அவற்றைக் கண்டு பள்ளிகளில் செயல்படுத்துமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்...01.07.2014 முதல் அகவிலைப்படி 7% உயருகிறது. ...

Tuesday 25 February 2014

கல்வித்துறை பணியாளர்கள் கூட்டுறவு சிக்கன நாணய சங்கத்தில் நிதி முறைகேடு: சங்க நிர்வாகம் கூண்டோடு கலைப்பு

புதுக்கோட்டையிலுள் கல்வித்துறை பணியாளர்கள் கூட்டுறவு சிக்கன நாணய சங்கத்தில் கடன் வழங்கியதில் ரூ. 9 லட்சம் வரை முறைகேடு நடந்துள்ளதாக எழுந்த புகார் தொடர்பாக கடந்த 5 மாதங்களாக நடைபெற்று வந்த   விசாரணைக்குப்பின் தேர்ந்தெடுக்கப்பட்ட சங்க நிர்வாகத்தை கூட்டுறவுத்துறை இணை பதிவாளர்  கலைக்கப்படுவதாக உத்தரவிட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
புதுக்கோட்டை புதிய பேருந்துநிலையப்பகுதியில் தமிழ்நாடு அரசு கல்வித்துறை பணியாளர்கள் கூட்டுறவு சிக்கன நாணய சங்கம் இயங்கி வருகிறது. இதில் கல்வித்துறையைச் சேர்ந்த ஆசிரியர்கள் மற்றும் ஊழியர் உள்பட 800 -க்கும் மேல்பட்டோர் உறுப்பினர்களாக உள்ளனர்.
இந்நிலையில், கடந்த சில மாதங்களுக்கு முன் நடத்தப்பட்ட கூட்டுறவு சங்கத்தேர்தல் மூலம் இச்சங்கத்துக்கு தலைவர், துணைத்தலைவர் மற்றும் இயக்குநர்கள் என 11 பேர் தேர்வு செய்யப்பட்டனர். அதில் தலைவராக எம். மாரிமுத்து பொறுப்பேற்றார். இதையடுத்து காசோலை கையாளும் அதிகாரம் சங்கச்செயலர் மணிராஜிடமிருந்து தலைவருக்கு மாறியது. இந்நிலையில், சுமார் ரூ. 200 கோடி வரை வரவு செலவு நடைபெற்று வந்த நிலையில், கடந்த நிதியாண்டில் சுமார் ரூ. 30 லட்சம் வரை லாபம் கிடைத்தது.
இந்தச்சூழ்நிலையில், சங்கத்தின் முறையான அனுமதியின்றி உறுப்பினர்களாக உள்ள சில ஆசிரியர்களுக்குத் தெரியாமல் அவர்களது பெயரைப் பயன்படுத்தி சுமார் ரூ. 9 லட்சம் வரை கடன் வழங்கியதாக கணக்கு காட்டப்பட்டதாம். மேலும், கூட்டுறவுத்துறையின் உரிய அனுமதியின்றி தற்காலிக எழுத்தர்கள் நியமனம் செய்யப்பட்டனர். இது குறித்து சங்க உறுப்பினர்கள் கூட்டுறவுத்துறை அதிகாரிகளுக்கு புகார் தெரிவித்தனர். இதையடுத்து, சரக துணை பதிவாளர் அமுதா இந்தப்புகார்கள் குறித்து சட்டப்பூர்வ விசாரணை நடத்த உத்தரவிட்டார். இதைத்தொடர்ந்து கள அலுவலர் ராமச்சந்திரன் விசாரணை நடத்தி கடந்த மாதம் அறிக்கை அளித்தார்.
அதில்,கூட்டுறவு சங்கத்தில் நிதி முறைகேடு நடந்தது குறித்து போதிய ஆதாரங்களுடன் தெரிவிக்கப்பட்டருந்தது. இதையடுத்து கல்வித்துறை பணியாளர்கள் கூட்டுறவு சிக்கன நாணய சங்கத்தை கலைக்கப்படுவதாக  கூட்டுறவு சங்கங்களின் இணைபதிவாளர் கே.வி.எஸ். குமார் திங்கள்கிழமை உத்தரவிட்டார்.
இது குறித்து கே.வி.எஸ். குமார் மேலும்  கூறியதாவது: 
கல்வித்துறை பணியாளர் கூட்டுறவு சிக்கன நாணய சங்கத்தில் ரூ. 9 லட்சம் வரைமுறைகேடு நடைபெற்றதாக வந்த புகாரின் பேரில் விதி-81 -ல் படி விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது. இதையடுத்து முறைகேடு செய்த தொகையை திருப்பி செலுத்தினர். எனினும், சங்கம் முடக்கப்பட்டதால் அதன் உறுப்பினர்கள் கடனுதவி பெறாத நிலை ஏற்பட்டது. இதையடுத்து சங்க உறுப்பினர்கள் 7 பேர் தங்களது பதவியை ராஜினாமா செய்ததையடுத்து,  போதிய கோரமில்லாமல் செயல்படாத நிலை ஏற்பட்டது. இதையடுத்து துணை பதிவாளர் சிறப்புக்கூட்டம் நடத்தி  சங்கத்தை கலைப்பது என தீர்மானித்தனர். இதன் மூலம் அதில் இருந்த நிர்வாகிகள் இனிமேல் எந்த பதவிக்கு வரமுடியாது. இந்நிலையில் திங்கள்கிழமை கூட்டுறவு சட்ட விதிகளின்படி கலைத்து சங்கத்துக்கு நிர்வாக அலுவலர் நியமிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்..
கூட்டுறவுத்துறையில் தேர்தலுக்குப்பின் புதிய நிர்வாகம் பொறுப்பேற்று சங்கத்தை நடத்தி வந்த  நிலையில், முறைகேடு புகாரால் கலைக்கப்பட்டுள்ளது கல்வித்துறையினரிடையே அதிர்ச்சியை ஏற்பட்டுத்தியுள்ளது. 

No comments:

Post a Comment