கல்விதிட்டத்தில் பல்வேறு முரண்பாடுகள் இருப்பதால் தனியார் பள்ளிகளில் 25 சதவீத மாணவர்களுக்கான இட ஒதுக்கீடு வழங்க முடியாது என்று அனைத்து மெட்ரிக்குலேஷன் பள்ளிகளின் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. மெட்ரிக்குலேஷன் பள்ளிகளின் சங்கங்களின் கூட்டமைப்பின் கூட்டம் சென்னையில் நேற்று நடந்தது. தனியார் பள்ளிகளுக்கு அரசு வழங்க வேண்டிய அங்கீகாரம் உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் இந்த கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. இறுதியில் அனைத்து மெட்ரிக்குலேஷன் சங்கங்களின் கூட்டமைப்பின் செயலாளர் நந்தகுமார் கூறியதாவது: மத்திய அரசு கொண்டு வந்த இலவச கட்டாய கல்வி திட்டத்தை தனியார் பள்ளிகளில் அமல்படுத்த முடியாது. அந்த சட்டத்தில் கூறப்பட்டுள்ள பல்வேறு அம்சங்கள் தனியார் பள்ளிகளை பாதிப்பதாக இருக்கிறது. அந்த சட்டத்தை முறைப்படுத்தினால் தான் இந்த ஆண்டு மாணவர்களை சேர்க்க முடியும். நர்சரி, பிரைமரி பள்ளிகளில் ஒவ்வொரு வகுப்பிலும் 5 பிரிவுகளுக்கு மேல் தொடங்க கூடாது என்று பள்ளிக் கல்வித்துறை கூறுகிறது. மாணவர்களின் எண்ணிக்கையும் அதிகரிக்க கூடாது என்று கட்டுப்பாடுகளை விதிக்கின்றனர். ஆனால் அரசுப் பள்ளிகளில் அதிகமாக சேர்க்கின்றனர்.
அதேபோல எங்களுக்கும் விதிவிலக்கு அளிக்க வேண்டும். சென்னை மாவட்டத்தில் தனியார் பள்ளிகளின் வாகனங்களுக்கு பர்மிட் கொடுப்பதில் பல குழப்பங்கள் இருக்கின்றன. குறிப்பாக சென்னையில் சில இடங்கள் காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் வருகின்றன. அந்த பகுதிகளில் இயங்கும் பள்ளிகளின் வாகனங்களுக்கு பர்மிட் கொடுக்கும் போது சென்னை மாவட்டத்தை கணக்கில் எடுத்துக் கொண்டு பர்மிட் வழங்குகின்றனர். அதை மாற்றி அந்தந்த மாவட்ட நிலவரங்களுக்கு ஏற்ப பர்மிட் வழங்க வேண்டும். அங்கீகாரம் வழங்குவதிலும் கெடுபிடிகளை காட்டுகின்றனர். இதனால் 1000 பள்ளிகள் அங்கீகாரம் புதுப்பிக்க முடியாமல் உள்ளன. பள்ளிகளின் இடப் பிரச்னையை காரணம் காட்டி ஏற்கெனவே வழங்கிய அங்கிகாரத்தை கூட புதுப்பிக்க மறுக்கின்றனர். அங்கீகாரம் தொடர்ந்து வழங்க வேண்டும். பள்ளி வாகனங்களுக்கு 4 முறை எப்சி வாங்க வேண்டும். வெவ்வேறு அதிகாரிகள் பார்த்து ஆய்வு செய்ய வேண்டும் என்று கூறுகின்றனர். இதை மாற்றி முறையாக எப்சி வழங்க வேண்டும்.
அரசுப் பள்ளிகளில் ஆங்கில வழிக் கல்வி கொண்டு வந்துள்ளனர். ஆனால் தனியார் பள்ளிகளில் ஆங்கில வழிக் கல்வி நடத்த புத்தகங்கள் வழங்க மறுகின்றனர். மேலும் அரசுப் பள்ளிகளில் சமச்சீர் கல்வி முறையை கொண்டு வந்துவிட்டு செயல்வழிக்கற்றல் முறையை நடத்துகின்றனர். அதே நேரத்தில் தனியார் பள்ளிகளில் சமச்சீர் கல்வி நடத்த வேண்டும் என்று கட்டாயப்படுத்துகின்றனர். இலவச கட்டாய கல்விசட்டத்தில் கூறப்பட்டுள்ள இயலாதவர்களுக்கு 25 சதவீத இடம் ஒதுக்க வேண்டும் என்று பள்ளிக் கல்வித்துறை கூறுகிறது. ஆனால் தனியார் பள்ளிகளுக்கான சலுகைகளை தர மறுக்கின்றனர். அதனால் இந்த ஆண்டு மாணவர் சேர்க்கை நடத்த முடியாது. 25 சதவீத இட ஒதுக்கீடும் வழங்க முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம். இவ்வாறு நந்தகுமார் தெரிவித்தார்.
No comments:
Post a Comment