தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் வெளியிடப்பட்ட பிளஸ் 2 பொதுத் தேர்வு முடிவில் இதுவரை இல்லாத அளவுக்கு சுமார் 91 சதவீதம் மாணவர் வெற்றி பெற்றிருப்பது வரவேற்கத்தக்க விஷயம். இம்முறை பெரும்பாலான ரேங்க்குகளை தென் மாவட்டங்களைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் அள்ளியுள்ளது அடுத்த மகிழ்ச்சியான விஷயம். ஐடி மையங்கள், தொழில்துறையினரின் ஜெர்மனி என்றெல்லாம் போற்றிக் கொள்ளும் வட மாவட்டங்கள் கல்வித்துறையில் பின்தங்கியிருப்பது, இந்த ஆண்டு தேர்வு முடிவிலும் அப்பட்டமாக வெளிப்பட்டுள்ளது. அதாவது, தேர்ச்சி விகிதத்தில் முதல் 10 இடங்களைப் பிடித்த மாவட்டங்களில், ஒன்று கூட வட மாவட்டங்களாக இல்லை. சிறுவர்கள் கூறுவதுபோல கடைசியில் இருந்து வேண்டுமானால் இவை முன்னணியில் உள்ளதாக கூறலாம். உண்மையும் அதுதான். மாவட்டங்களின் ரேங்க் பட்டியலில், கடைசியில் இருந்து பார்த்தால் வட மாவட்டங்கள் அனைத்தும் முண்டியடித்து நிற்கின்றன. இது எஸ்எஸ்எல்சியிலும் கடந்த ஆண்டுகளில் நீண்டிருப்பதுதான் வேதனைதரும் விஷயம்.
தென் மாவட்டங்கள் தேர்ச்சி விகிதம் ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்து வரும் நிலையில், வட மாவட்டங்களில் ஏன் இந்த நிலைமை என்பது அரசுக்குத்தான் வெளிச்சம். இத்தனைக்கும், பின்தங்கிய தென் மாவட்டங்களில் இல்லாத படிப்பு வசதிகள் அனைத்தும் வட மாவட்டங்களில் உள்ளன.
கல்வியில் பின்தங்கியிருக்கும் வட மாவட்டங்கள் ஒரு விஷயத்தில் முன்னணியில் உள்ளது. அதாவது அரசுக்கு லாபம் தரும் டாஸ்மாக் விற்பனையில்தான். குடிமகன்களின் வசதிக்காக எலைட் பார் உள்ளிட்ட வசதிகள் முதன் முதலில் இங்குதான் செய்து தரப்பட்டன. இதனால், வட மாவட்டங்கள், மது விற்பனையில் முன்னணியில் நின்று அரசுக்கு உதவி வருகின்றன.
எந்த ஒரு நாடு கல்வியில் முன் நிற்கிறதோ, அந்த நாடு மற்றவர்களால் பின்பற்றப்படும் என்று மேலைநாட்டு அறிஞர்கள் கூறியுள்ளனர். இந்த விஷயத்தை, இத்தருணத்தில் அரசு கவனத்தில் கொள்ள வேண்டியது மிக அவசியமான ஒன்று. வட மாவட்டங்களில் தேர்ச்சி விகிதம் குறைந்து பின்னுக்கு தள்ளப்பட்டது ஏன் என்பது குறித்து ஆராயப்பட வேண்டும். காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்கள், கட்டிட, ஆய்வக வசதிகள் செய்து தரப்பட்டால், தெற்குடன் வடக்கும் வாழும் என்பதில் ஐயமில்லை. நடவடிக்கை ஆட்சியாளர்கள் கையில்தான் உள்ளது.
No comments:
Post a Comment