Flash News

Flash News அன்பார்ந்த ஆசிரிய பெருமக்களே! இந்த வலை தளத்தில் தொடக்கப் பள்ளி மாணவர்களுக்கு தேவையான அடிப்படை கணித செயல்பாடுகளுக்கான விளையாட்டுகள் மற்றும் ஆங்கில விளையாட்டுகள் தரப் பட்டுள்ளன. அவற்றைக் கண்டு பள்ளிகளில் செயல்படுத்துமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்...01.07.2014 முதல் அகவிலைப்படி 7% உயருகிறது. ...

Friday, 18 July 2014

சென்னையில் அங்கீகாரம் இல்லாமல் செயல்படும் 760 பள்ளிகள்: தமிழக அரசுக்கு நோட்டீஸ்


முறையான அங்கீகாரம் இல்லாமல் சென்னையில் செயல்படும் 760 மழலையர் பள்ளிகளை மூடுவதற்கு உத்தரவிடக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த மனுவுக்கு இரண்டு வாரங்களுக்குள் பதில் அளிக்குமாறு தமிழக அரசு மற்றும் சம்பந்தப்பட்ட பள்ளிகளுக்கு நோட்டீஸ் அனுப்ப நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இது தொடர்பாக வழக்குரைஞர் கே.பாலசுப்ரமணியன் உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த பொதுநல மனு விவரம்: தமிழக அரசின் தொடக்கக் கல்வி இயக்குனரிடம் அனுமதி வாங்கிய பிறகு தான் மழலையர் பள்ளி நடத்த வேண்டும். அதற்கு, தமிழ்நாடு அங்கீகரிக்கப்பட்ட தனியார் பள்ளிகள் சட்டத்தின் கீழ் ஒப்புதல் பெற வேண்டும்.

ஆனால், சென்னையில் செயல்படக் கூடிய 760 பள்ளிகள் அரசின் அனுமதி பெறாமல், சட்டவிரோதமாக செயல்படுகின்றன. இந்தப் பள்ளிகள் பெற்றோர்களிடம் இருந்து அதிக கட்டணம் வசூலிப்பதாகவும் பல குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. 

இது போன்ற பள்ளிகள் ஒப்புதல் பெறுவதற்கு விண்ணப்பிக்காமலேயே பள்ளிகளை நடத்த தொடங்கி விடுகின்றன. அதுவும், தனியாக அல்லது சொந்தமாக அல்லது குத்தகையின் அடிப்படையிலோ இந்தப் பள்ளிகளுக்கு கட்டடங்கள் இல்லை.

கட்டட உறுதிச் சான்றிதழ், தீயணைப்புத் துறையிடமிருந்து பாதுகாப்புச் சான்றிதழ் மற்றும் சுகாதாரச் சான்றிதழ் ஆகியவைகளை இந்தப் பள்ளிகள் பெறவில்லை. மேலும், குழந்தைகள் விளையாடுவதற்கு போதிய இடவசதி இல்லை. பாடங்கள் கற்றுக் கொடுப்பதற்கு போதிய ஆசிரியர்களும் இங்கு இல்லை.

தமிழ்நாடு ஒழுங்குமுறைச் சட்டம் 1973-ன் படி, அனுமதி வாங்குவதற்கு விண்ணப்பிகாமலேயே, கடந்த பல ஆண்டுகளாக இந்தப் பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன.

கட்டண நிர்ணயக்குழு பரிந்துரைத்தக் கட்டணங்களை விட இந்தப் பள்ளிகள் அதிகமான கட்டணங்களை வசூலிக்கின்றன.

எனவே, சட்டவிரோதமாக செயல்படும் 760 பள்ளிகளை மூடுவதற்கு தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும். மேலும், செயல்பட்டு வரும் பள்ளிகளுக்கு இடைக்காலத் தடை விதிக்க வேண்டும் என மனுவில் கோரப்பட்டுள்ளது.

இந்த மனு நீதிபதிகள் என்.பால்வசந்தகுமார், கே.ரவிச்சந்திரபாபு ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு வியாழக்கிழமை (ஜூலை 17) விசாரணைக்கு வந்தது. மனுவுக்கு இரண்டு வாரங்களுக்குள் பதில் அளிக்குமாறு தமிழக அரசு மற்றும் சம்பந்தப்பட்ட பள்ளிகளுக்கு நோட்டீஸ் அனுப்ப நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

No comments:

Post a Comment