Flash News

Flash News அன்பார்ந்த ஆசிரிய பெருமக்களே! இந்த வலை தளத்தில் தொடக்கப் பள்ளி மாணவர்களுக்கு தேவையான அடிப்படை கணித செயல்பாடுகளுக்கான விளையாட்டுகள் மற்றும் ஆங்கில விளையாட்டுகள் தரப் பட்டுள்ளன. அவற்றைக் கண்டு பள்ளிகளில் செயல்படுத்துமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்...01.07.2014 முதல் அகவிலைப்படி 7% உயருகிறது. ...

Sunday, 20 July 2014

செலவு அல்ல; முதலீடு


ஒரு நாட்டில் படித்தவர்கள் எண்ணிக்கையை வைத்துதான் அதன் வளர்ச்சியானது சிறப்பாக இருக்குமா, மேலும் வளருமா என்பது எல்லாம் கணக்கிடப்படுகிறது. படித்தவர்கள் எண்ணிக்கை உயர, உயர, அரசின் செலவினங்களும் குறையும் என்பதால்தான், கல்வித்துறைக்கு எல்லா அரசுகளும் கணிசமான அளவில் நிதி ஒதுக்கீடு செய்கின்றன. இதே கொள்கையின் அடிப்படையில்தான் நூலகங்களும் ஏற்படுத்தப்பட்டு, அதற்கான புத்தகங்கள் வாங்க நிதி ஒதுக்கீடு செய்யப்படுகிறது. இப்போதுள்ள காலக்கட்டத்தில் இன்டர்நெட் வளர்ந்துவிட்டதால், பல தகவல்கள் அதிலேயே கிடைத்து விடுகின்றன என்று அரசு அதிகாரிகள் தாங்களாகவே ஏசி ரூமில் அமர்ந்து முடிவு எடுத்து விடுகின்றனர். மக்களவையில் கடந்த பிப்ரவரியில், மத்திய அரசு வெளியிட்ட தகவலின்படி, தமிழகத்தில் இன்டர்நெட் உபயோகிப்பாளர்கள் எண்ணிக்கை 1.90 கோடி. அதாவது, இன்னமும் பெரும்பாலானவர்களிடம் இன்டர்நெட் இணைப்பு இல்லை என்பதுதான் குறிப்பிடத்தக்க தகவல்.

இப்படிப்பட்ட சூழ்நிலையில், இன்னமும் கூட அறிவை வளர்க்கும் களஞ்சியங்களாக நூலகங்கள் திகழ்கின்றன. பெருநகரங்களைவிட்டு, அடுத்தகட்ட நகரங்களுக்கு சென்று பார்த்தால் இதன் உண்மை புரியும். எத்தனையோ பேர் பத்திரிகைகள், புத்தகங்கள் வாங்க முடியாத சூழ்நிலையில் உள்ளனர். அவர்களை எல்லாம் கவர்ந்து இழுக்கும் இடமாக நூலகங்கள் இருக்கின்றன. ஆனால், இப்போது நூலகங்களுக்கு வாங்கப்படும் புத்தகங்களின் அளவை தமிழக அரசு குறைத்துள்ளது. உயர் நீதிமன்ற முன்னாள் நீதிபதி சந்துருவும், இதுகுறித்து வேதனை தெரிவித்துள்ளார். ‘நூலகங்களுக்கு புதிதாக புத்தகங்கள் வாங்கப்படவில்லை. அப்படியே வாங்கப்பட்டாலும், பழைய புத்தகத்திற்கு சிறு மாற்றம் செய்து அவைகளும் தவறான செல்வாக்கால் வாங்கப்படுகிறது’ என்று அவர் தெரிவித்துள்ளார்.

ஒரு முன்னாள் நீதிபதியே வேதனை தெரிவிக்கும் அளவுக்கு நூலகங்களின் நிலை மோசமாகியுள்ளது வருத்தத்துக்குரிய விஷயம். புத்தகங்களில் படியும் தூசியானது, கல்வி வளர்ச்சியை தடுத்துவிடும் என்பதை நிதி ஒதுக்கீடு செய்யவும், புத்தகங்களை வாங்கவும் அதிகாரம் படைத்த அதிகாரிகளின் மூளைக்கு எட்டினால், நூலகங்கள் வாழ்வு பெறும். இது செலவு அல்ல; முதலீடு.

No comments:

Post a Comment