Flash News

Flash News அன்பார்ந்த ஆசிரிய பெருமக்களே! இந்த வலை தளத்தில் தொடக்கப் பள்ளி மாணவர்களுக்கு தேவையான அடிப்படை கணித செயல்பாடுகளுக்கான விளையாட்டுகள் மற்றும் ஆங்கில விளையாட்டுகள் தரப் பட்டுள்ளன. அவற்றைக் கண்டு பள்ளிகளில் செயல்படுத்துமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்...01.07.2014 முதல் அகவிலைப்படி 7% உயருகிறது. ...

Wednesday, 16 July 2014

கவுன்சலிங்கில் உத்தரவு வழங்கியும் பயனில்லை இடமாறுதல் பெற்ற பள்ளியில் வேறொரு ஆசிரியர் நியமனம்


மதுரை, பீ.பீ.குளம், சேக்கிழார் தெருவை சேர்ந்தவர் சங்கீதா. ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்திருந்த மனு:சிவகங்கை மாவட்டம் புழுதிப்பட்டி அரசு உயர்நிலைப்பள்ளியில் பட்டதாரி ஆசிரியராக (கணிதம்) 2008ம் ஆண்டு முதல் பணியாற்றி வருகிறேன். வயதான தாய், நோய் தாக்கமுள்ள குழந்தை ஆகியோரை உடன் இருந்து கவனிக்க வேண்டி இருந்தது. இதனால் மதுரை, திருப்பாலை அரசு உயர்நிலைப்பள்ளியில் புதிதாக துவக்கப்பட்ட பட்டதாரி கணித ஆசிரியர் பணியிடத்திற்கு மாற்றம் செய்ய கோரினேன்.

இதன்படி 24.7.2012ல் மதுரையில் நடந்த ஆசிரியர்களுக்கான கவுன்சலிங்கில் என்னை திருப்பாலை பள்ளிக்கு மாற்றி உத்தரவிடப்பட்டது. இந்த உத்தரவு நகல் சிவகங்கை மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிக்கு (சிஇஓ) கிடைக்காததால் என்னை அங்கிருந்து விடுவிக்கவில்லை. ஆனால் 22.8.2012 வரை மாறுதல் செய்யப்பட்ட திருப்பாலை பள்ளியில் நான் பணியில் சேரவில்லை எனக்கூறி அந்த இடத்திற்கு திருச்சி மாவட்டத்திலிருந்து கிரிஜா என்பவரை மாற்றி உத்தரவிட்டுள்ளனர்.

கவுன்சலிங் உத்தரவை அதிகாரிகள் மதிக்கவில்லை. தினசரி 4 மணிநேரம் பயணிப்பதில் சிரமம் உள்ளது. எனவே என்னை கவுன்சலிங் உத்தரவுப்படி திருப்பாலை பள்ளிக்கு மாற்றி உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது. இந்த மனு நேற்று நீதிபதி நாகமுத்து முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. நீதிமன்ற புறக்கணிப்பு போராட்டம் நடப்பதால் மனுதாரரின் வக்கீல் ஆஜராகவில்லை. இதனால் ஆசிரியை சங்கீதா நீதிபதி முன் ஆஜராகி வாதாடினார். சிஇஓ நேரில் ஆஜராக நீதிபதி உத்தரவிட் டார். இதைத் தொடர்ந்து சிஇஓ ஆஞ்சலோ இருதயசாமி நீதிபதி முன் ஆஜராகி விளக்கமளித்தார்.

மனுவை விசாரித்த நீதிபதி, மனுதாரர் குறிப்பிடும் புகார் உண்மையென தெரியவந்தால் நீதிமன்றம் கடும் நடவடிக்கையை எடுக்கும். லஞ்ச ஒழிப்புத்துறையின் விசாரணைக்கு உத்தரவிட வேண்டிய நிலை வரும். இந்த ஆசிரியைக்கு பணி மாறுதல் வழங்கப்பட்டது, தற்போதைய நிலை, மனுமீது மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கை ஆகியவை குறித்து மேலதிகாரிகளுடன் கலந்து ஆலோசித்து நாளை (இன்று) நீதிமன்றத்தில் ஆஜராகி முழு அறிக்கையை அளிக்க வேண்டும் என உத்தரவிட்டார்.

பெண்கள் அழக்கூடாது
வழக்கு விசாரணையில் நேரில் ஆஜராகிய ஆசிரியை சங்கீதா, நீதிபதி முன் கண்ணீர் விட்டு அழுதார். அப்போது பேசிய நீதிபதி, நீதிக்காக போராடிய கண்ணகி மதுரையை எரித்தார். எனவே பெண்கள் எதற்கும் அழக்கூடாது. போராட வேண்டும். அதுவும் ஆசிரியையாக இருப்பவர் அழக்கூடாது என்றார்.

No comments:

Post a Comment