Flash News

Flash News அன்பார்ந்த ஆசிரிய பெருமக்களே! இந்த வலை தளத்தில் தொடக்கப் பள்ளி மாணவர்களுக்கு தேவையான அடிப்படை கணித செயல்பாடுகளுக்கான விளையாட்டுகள் மற்றும் ஆங்கில விளையாட்டுகள் தரப் பட்டுள்ளன. அவற்றைக் கண்டு பள்ளிகளில் செயல்படுத்துமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்...01.07.2014 முதல் அகவிலைப்படி 7% உயருகிறது. ...

Tuesday, 15 July 2014

ஆசிரியர் தகுதி தேர்வில் இதுவரை தேர்ச்சி பெற்ற பட்டதாரிகளுக்கு வெயிட்டேஜ் மதிப்பெண் இணையதளத்தில் வெளியீடு


ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்ற பட்டதாரிகளுக்கு வெயிட்டேஜ் மதிப்பெண் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இந்த மதிப்பெண்ணில் சந்தேகம் இருந்தால் அவர்கள் 21-ந் தேதி முதல் 28-ந் தேதி வரை மாவட்டங்களில் நடத்தப்படும் சரிபார்ப்புக்கு செல்லலாம். ஆசிரியர் நியமன பட்டியல் 30-ந் தேதி வெளியிடப்படுகிறது.

ஆசிரியர் தகுதி தேர்வு

ஆசிரியர் தகுதி தேர்வு கடந்த 2012-ம் ஆண்டு 2 முறை நடத்தப்பட்டது. அந்த தேர்வுகளில் தேர்ச்சி பெற்றவர்களில் இருந்து ஆசிரியர் பணிக்கு தேர்வு செய்யப்பட்டோர் தவிர மீதம் உள்ள நபர்களும் தகுதி இருந்தால் ஆசிரியர் பணிக்கு தேர்வு செய்யப்பட உள்ளனர்.

அதுபோல 2013-ம் ஆண்டு நடத்தப்பட்ட ஆசிரியர் தகுதி தேர்வு மற்றும் 2014-ம் ஆண்டு நடத்தப்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கான ஆசிரியர் தகுதி தேர்வு ஆகியவற்றில் தேர்ச்சி பெற்றவர்களும் பணிக்கு தகுதி இருந்தால் தேர்ச்சி பெற உள்ளனர்.

அதாவது 2012 முதல் இதுவரை நடத்தப்பட்ட பட்டதாரிகளுக்கான ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள், அவர்கள் பிளஸ்-2 தேர்வில் பெற்ற மதிப்பெண், பட்டப்படிப்பில் பெற்ற மதிப்பெண், பி.எட். படிப்பில் பெற்ற மதிப்பெண் ஆகியவற்றை கொண்டும் அவர்கள் ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்று எடுத்த மதிப்பெண்ணை கூட்டி அதை 100-க்கு கொண்டு வரப்படுகிறது. 100-க்கு எத்தனை மதிப்பெண் என்று கணக்கிட்டு அதை வெயிட்டேஜ் மதிப்பெண் என்று அழைக்கப்படுகிறது.

வெயிட்டேஜ்மதிப்பெண் வெளியீடு

அந்த வெயிட்டேஜ் மதிப்பெண் ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்தில் நேற்று இரவு வெளியிடப்பட்டுள்ளது. இந்த வெயிட்டேஜ் மதிப்பெண்ணை ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்ற அனைத்து பட்டதாரிகளும் பார்க்கலாம். பார்த்துவிட்டு மதிப்பெண் குறைவாக அல்லது கூடுதலாக இருந்தால் இணையதளத்தில் குறிப்பிட்டுள்ள பள்ளிக்கு குறிப்பிட்டுள்ள தேதிகளில் சென்று சரிபார்க்க வேண்டும். அப்போது எஸ்.எஸ்.எல்.சி மதிப்பெண் பட்டியல், சாதிச்சான்று, பிளஸ்-2 மதிப்பெண் சான்றிதழ், பட்டப்படிப்பில் பெற்ற மதிப்பெண் சான்றிதழ், பி.எட். மதிப்பெண் சான்றிதழ், தமிழ் வழி படித்திருந்தால் (தமிழ் இலக்கியம், ஆங்கிலம் இலக்கியம் படிக்காதவர்கள்) கல்வி நிறுவன தலைவரிடம் இருந்து பட்டப்படிப்பு தமிழ்வழியில் படித்ததற்கான சான்று, மாற்றுத்திறனாளியாக இருந்தால் அதற்கான மருத்துவ குழுவினரிடம் பெற்ற சான்றிதழ் ஆகியவற்றை கொண்டு செல்லவேண்டும். அப்படி வரும்போது ஒரிஜினல் சான்றிதழ்கள், இரு சான்றொப்பம் இட்ட நகல்கள் கொண்டுவர வேண்டும்.

கடைசி வாய்ப்பு

சான்றிதழ் சரிபார்ப்புக்கு ஏற்கனவே வராதவர்களுக்கு கடைசி வாய்ப்பு அளிக்கும் வகையில் சான்றிதழ் சரிபார்த்தல் நடைபெறுகிறது. அந்த தேதியும் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

சான்றிதழ் சரிபார்த்தல் மற்றும் மதிப்பெண் சரிபார்த்தல் 2 அல்லது 3 மாவட்டங்களுக்கு ஒரு பள்ளிக்கூடத்தில் நடைபெறுகிறது.

இதுவரை 11 லட்சத்து 78 ஆயிரத்து 495 பேர் தகுதி தேர்வு எழுதினார்கள். அதில் 52 ஆயிரத்து 631 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

10 ஆயிரத்து 726 பேர் நியமனம்

தேர்ச்சி பெற்றவர்களில் இருந்து 10 ஆயிரத்து 726 ஆசிரியர்கள் நியமிக்கப்பட உள்ளனர்.

இதில் பாடவாரியாக தேர்ச்சி பெறுவோர் விவரம் வருமாறு:-

தமிழ் - 772

ஆங்கிலம் - 2,822

கணிதம் - 911

இயற்பியல் - 605

வேதியியல் - 605

தாவரவியல் - 260

விலங்கியல் - 260

வரலாறு - 3,592

புவியியல் - 899

இந்த வருடம் வரலாறு பாடம் படித்த பட்டதாரிகள் அதிகமாக ஆசிரியர் பணிக்கு தேர்வு செய்யப்படுகிறார்கள். அதுபோல புவியியல் படித்தவர்கள் குறைவாகத்தான் எப்போதும் தேர்ந்து எடுக்கப்படுவார்கள். ஆனால் இந்த முறை 899 பேர் தேர்ந்து எடுக்கப்பட இருக்கிறார்கள்.

30-ந் தேதி பட்டியல் வெளியீடு

இந்த சான்றிதழ் சரிபார்த்தல் மற்றும் வெயிட்டேஜ் மதிப்பெண் சந்தேகம் நிவர்த்தி செய்யப்பட்ட உடன் வருகிற 30-ந் தேதி பி.எட். படித்த பட்டதாரி ஆசிரியர்களை தேர்வு செய்த பட்டியல் வெளியிடப்படுகிறது.

இடைநிலை ஆசிரியர் பணிக்கு தேர்வு செய்யப்படும் முன்பாக அவர்களுக்கும் இதே வாய்ப்பு அளிக்கப்பட உள்ளது. அந்த அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும்.

இந்த தகவலை ஆசிரியர் தேர்வு வாரிய அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

No comments:

Post a Comment