சிவகங்கையில் குறைவான மாணவர்கள் பயிலும் அரசு பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டது.
தொடக்கக்கல்வித் துறையின்கீழ் செயல்படும் சில அரசு பள்ளிகளில் போதிய ஆசிரியர்கள் இருந்தும், 10 அல்லது அதற்கு குறைவான மாணவ, மாணவிகளே பயிலும் நிலை உள்ளது. இதுபோன்ற பள்ளிகளில் மாணவர் எண்ணிக்கை அதிகரிக்க, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என, தொடக்கக் கல்வித்துறை சார்ந்த டி.இ.ஓ.,க்கள் மற்றும் அனைவருக்கும் கல்வி திட்ட அதிகாரிகளுக்கு பள்ளிக்கல்வித் துறை சமீபத்தில் உத்தரவிட்டுள்ளது.
இதன்படி,சிவகங்கை மாவட்டத்தில் 10 மாணவர் அல்லது அதற்கு குறைவான எண்ணிக்கையிலான இளையான்குடி பகுதியிலுள்ள குறிச்சி, குக்குளம், பரத்திவயல், வாணியங்குடி, சுந்தரனேந்தல், இளமனூர் உள்பட 10 அரசு பள்ளி தலைமை ஆசிரியர்களை நேரில் அழைத்து சிவகங்கையில் ஆலோசனை நடத்தினர். இதில், டி.இ.ஓ., ரவிக்குமார், அனைவருக்கும் கல்வி இயக்க அலுவலர்கள் பங்கேற்றனர்.
நடப்பு கல்வியாண்டில் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரிக்க, கிராமங்களில் விழிப்புணர்வு ஏற்படுத்துவது, இடைநிற்றல் மாணவர்களை அந்தந்த வகுப்புகளில் சேர்க்க நடவடிக்கை எடுப்பது குறித்து தலைமை ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது. டி.இ.ஓ., ரவிக்குமார் கூறுகையில், "முதல் கட்டமாக குறைவான மாணவர்கள் படிக்கும் பள்ளி களில் எண்ணிக்கையை அதிகரிக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும். முடியாத பட்சத்தில் பள்ளிக்கல்வித் துறையின் உத்தரவுபடி, அடுத்த கட்ட முடிவெடுக்கப்படும்" என்றார்.
No comments:
Post a Comment