ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு பணி நியமனம் வழங்குவது தொடர்பாக கூடுதல் பணியிடங்களை ஆசிரியர் தேர்வு வாரியம் இணைய தளத்தில் வெளியிட்டுள்ளது.
ஆசிரியர் தகுதித் தேர்வு எழுதிய பட்டதாரி ஆசிரியர்கள் தெரிவுப் பட்டியல் கடந்த 14ம் தேதி வெளியிடப்பட்டது. வெயிட்டேஜ் மதிப்பெண் போட்டதில் ஏதாவது ஆட்சேபணை இருந்தால் அது குறித்து பட்டதாரி ஆசிரியர்கள் நேரில் ஆஜராகி தெரிவிக்க கால அவகாசம் வழங்கப்பட்டது.
இதைத் தொடர்ந்து பள்ளிக் கல்வித்துறை, தொடக்கக் கல்வித்துறை ஆகிய இரண்டிலும் 10,726 காலிப் பணியிடங்கள் நிரப்பப்படும் என்றும் ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்து இருந்தது.
தற்போது, பள்ளிக் கல்வித்துறை இயக்குநர், தொடக்கக் கல்வி இயக்குநர் ஆகியோர் கொடுத்த பட்டியலின் படி கூடுதல் பணியிடங்கள் இருப்பது தெரியவந்துள்ளது. இதை ஆசிரியர் தேர்வு வாரியம் தனது இணைய தளத்தில் நேற்று வெளியிட்டது.
இதன்படி பள்ளிக் கல்வித்துறையில் ஆங்கிலம் 43, கணக்கு 82, இயற்பியல் 55, வேதியியல் 55, தாவரவியல் 24, விலங்கியல் 24, வரலாறு 67, புவியியல் 17 இடங்கள் கூடுதலாக உள்ளன.
தொடக்க கல்வித்துறையில் இயற்பியல் 47, வேதியியல் 47, தாவரவியல் 24, விலங்கியல் 23 இடங்கள் கூடுதலாக உள்ளன.
புதிய பட்டதாரி ஆசிரியர்கள் நியமனம் செய்யும் போது மேற்கண்ட கூடுதல் இடங்களும் நிரப்பப்படும் என்று ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.
No comments:
Post a Comment