திருநெல்வேலி அருகே கொங்கநாதன்பாறையில் உள்ள போக்குவரத்து பயிற்சி பாலிடெக்னிக் கல்லூரியில் ஆசிரியர்களாக பணியாற்றும் ஷாகின், மாணிக்கவாசகம் உள்ளிட்ட 7 பேர், ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனு: எங்களது கடமையை சரியாக செய்யவில்லை என்றும், கொடுத்த பணியை செய்யாமல் தவறு செய்ததாக குற்றம் சாட்டி 17(ஏ) மெமோ எங்களுக்கு கொடுக்கப்பட்டது. மாணவர்கள் தேர்ச்சி விகிதம் குறைந்ததாகவும், இதற்கு நாங்கள் தான் பொறுப்பு எனவும் எங்கள் மீது குற்றம்சாட்டப்பட்டது. பாடத்திட்டம் கடினமாக இருந்தது. சரியாக படிக்காத மாணவர்களுக்கு சிறப்பு வகுப்புகள் நடத்தப் பட்டன. அதில் குறிப்பிட்ட அந்த மாணவர்கள் கலந்து கொள்ளவில்லை. எனவே எங்கள் மீதான மெமோவை ரத்து செய்ய வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது. இந்த மனுவை நீதிபதி ஆர்.மகாதேவன் விசாரித்து பிறப்பித்த உத்தரவு: மெமோ பெற்ற ஆசிரியர்கள் பல்வேறு பாடங்களை நடத்தியுள்ளனர். எனவே தேர்ச்சி விகிதம் குறைந்ததற்கு இவர்கள் தான் காரணம் என கருதமுடியாது. 60 சதவீத மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். குற்றச்சாட்டுகள் பொதுவாக உள்ளன. இவர்களது விளக்கத்தையும் கருத்தில் கொள்ளவில்லை. மாணவர்கள் வகுப்பிற்கு வந்தால் மட்டும் போதாது, படிக்கவும் வேண்டும். தேர்ச்சி விகிதம் குறைந்ததற்கான காரணத்தை ஆராயாமல், மெமோ கொடுத்ததை ஏற்க முடியாது. இதற்கு நிர்வாகிகளும்தான் பொறுப்பு. கற்பித்தல் சாதாரண பணி அல்ல. ஆசிரியர்களை தொந்தரவு செய்வது, அவர்களை சோர்வடையச் செய்யும். தேர்ச்சி விகிதம் குறைந்ததற்கு ஆசிரியர்களை பொறுப்பாக்க முடியாது. எனவே இவர்கள் மீதான மெமோ ரத்து செய்யப்படுகிறது. இவ்வாறு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
No comments:
Post a Comment